இரத்த நீர்வீழ்ச்சி (Blood Falls) இது இரத்த நீர்வீழ்ச்சி அல்லது குருதிக் கொட்டும் நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறத- Yercaud Elango - https://bookday.in/

 இரத்த நீர்வீழ்ச்சி (Blood Falls)

 இரத்த நீர்வீழ்ச்சி (Blood Falls)

                                                                                      – ஏற்காடு இளங்கோ


     அண்டார்டிகா ஆய்வுப் பயணம் ராபர்ட் பால்கன் ஸ்காட்  என்பவர் தலைமையில் 1911 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. இந்தப் பயணத்தில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த புவியியலாளர் தாமஸ் கிரிஃபித் டெய்லர் (Thamas Griffith Taylor) என்பவரும் இடம் பெற்றிருந்தார். இவர் கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு, பனிப்பாறை, ஆறு மற்றும் நீர்வீழ்ச்சி ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். முதன் முதலில் இவர் கண்டுபிடித்ததால் டெய்லர் பள்ளத்தாக்கு, டெய்லர் பனிப்பாறை மற்றும் டெய்லர் நீர்வீழ்ச்சி எனப் பெயரிடப்பட்டது.

 

 இரத்த நீர்வீழ்ச்சி (Blood Falls) இது இரத்த நீர்வீழ்ச்சி அல்லது குருதிக் கொட்டும் நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறத- Yercaud Elango - https://bookday.in/ 

    டெய்லர் என்ற பனிப்பாறையில் இருந்து ஒரு பிரகாசமான சிவப்பு நதி உருவாவதை இவர் கண்டார். அது ஐந்து  அடுக்கு நீர்வீழ்ச்சியாக, பனி மூடிய போனி (Bonney) என்ற ஏரியில் மெதுவாக கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சி சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. வெண்பனி சூழ்ந்த இடத்தில் நீர்வீழ்ச்சி சிவப்பாக இருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியின்  சிறப்பே அதன் நிறம்தான்.


     இது கருஞ்சிவப்பு நிறத்தில் இரத்தம் போல் காட்சி தருகிறது. ஆகவே இது இரத்த நீர்வீழ்ச்சி (Blood Falls) அல்லது குருதிக் கொட்டும் நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்த நிறத்திற்கு காரணம் சிவப்புப் பாசி என டெய்லர் கூறினார். ஆனால் அவர் ஆய்வுக்கான மாதிரிகளைச் சேகரிக்க முடியவில்லை. 92 ஆண்டுகளுக்குப் பிறகு 2003 ஆம் ஆண்டில் ஸ்பெக்ட்ரோமீட்டரைப் பயன்படுத்தி நீரின் வேதியல் கலவையை ஆய்வு செய்தனர். நீர்வீழ்ச்சியில் இரும்பு ஆக்சைடு நிறைந்துள்ளது என ஆராய்ச்சி காட்டியது. பனிப்பாறையின் விரிசலில் இருந்து நீர் வெளிப்படும் போது இரும்பு ஆக்சைடு காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து இரத்தம் தோய்ந்த கருஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது.

 

 இரத்த நீர்வீழ்ச்சி (Blood Falls) இது இரத்த நீர்வீழ்ச்சி அல்லது குருதிக் கொட்டும் நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறத- Yercaud Elango - https://bookday.in/    

இரத்த நீர்வீழ்ச்சியின் நீர் உப்பு தன்மைக் கொண்டது. 2017 ஆம் ஆண்டில் ரேடார் மூலம் ஆய்வு செய்த போது 1300 அடி ஆழத்தில் உப்பு ஏரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 5 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இது பனியால் மூடப்பட்ட போதிலும் இந்த ஏரியின் நீர் உறையவில்லை. இது பண்டைய காலத்து கடல் நீராகும். இதன் உப்பளவு கடல் நீரை விட மூன்று மடங்கு அதிகம். மேலும் இதில் பழங்கால இரும்பும் நிறைந்துள்ளது.


     இந்த பண்டைய நீரில் 17 வகையான பாக்டீரியாக்களும் உள்ளன. இவை ஒளி, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாத நீரில் உள்ள சல்பேட் மற்றும் இரும்பை உடைத்து ஆற்றலைப் பெற்று உயிர் வாழ்கின்றன. இந்த இரத்த நீர்வீழ்ச்சியைக் காண்பது எளிதல்ல. மக்முர்டோ உலர் பள்ளத்தாக்கு (McMurdo Dry Valley) அருகில் உள்ள அண்டார்டிகா ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் அல்லது ரோஸ் கடலுக்கு வருகை தரும் பயணக் கப்பல்கள் மூலம் மட்டுமே இந்த இடத்திற்குச் செல்ல முடியும்.

 

கட்டுரையாளர் : 

 – ஏற்காடு இளங்கோ

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Show 1 Comment

1 Comment

  1. அருள்

    அருமையான பதிவு. அன்பும் நன்றிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *