9. காதுக்குள்ளே ஒரு உலா

பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளைப் பற்றிய தேடலைத் துவங்கிய அந்த நிமிடத்திலிருந்தே எனக்குள்ளே காதுகளைப் பற்றி மிக நுட்பமாக தெரிந்து கொள்கிற ஆர்வமும் ஆசையும் ஒருசேர அதிகமாகிக் கொண்டே செல்வதை நன்றாகவே உணர முடிகிறது. காவிரிக் கரையோரத்தில் குடியிருக்கும் மக்களுக்கு படித்துறைக் கரையில் அமர்ந்து பிரவாகமெடுத்து ஓடுகிற காவிரியின் வேகத்தைப் பார்த்துப் பரவசமடைவதும் குளித்துக் கும்மாளமிடுவதும் ஏனையோர்களைப் போல அப்படியொன்றும் ஆச்சரியமாய் இருக்கப் போவதில்லை. அதைப் போலவேதான் நாமும் இதுநாள் வரையிலும் கருவிலிருந்தே நம்மோடு ஒரு ஒட்டுறுப்பைப் போல தலைக்கு இருபுறமுமாக தொடுக்கிக் கொண்டே வருகிற காதுகளைப் பற்றிய அக்கறையோ அதீத கவனமோ செலுத்தியதேயில்லை என்றே தோன்றுகிறது.

திருவிழாக்கால தெருக்களில் ஆடியசைந்தபடி வருகிற யானையைப் பார்க்கிற போதே உள்ளுக்குள் பரவசமாகவும் குதூகலமாகவும் இருக்கும். அதன் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கிற தும்பிக்கையும் கூடவே முன்னும் பின்னுமாக காதுகளை அசைத்தபடி தனக்குத் தானே சாமரம் வீசியபடி பவனி வருகிற யானையைப் பார்க்கும் போதே நமக்கு அச்சமாகவும் அதே சமயம் பிரமிப்பாகவும் இருக்கும். இப்போதெல்லாம் காதுகளைப் பற்றிய ஞாபகம் வருகிற போதெல்லாம் ஏனோ யானையின் சொளவு போன்ற காதுகள் தான் நினைவிற்கு வருகின்றன. யானைகளுக்கெல்லாம் இவ்வளவு பெரிய காதுகள் இருக்கிறதே, அப்படியென்றால் அந்த அளவிற்கு யானைகளுக்கு சப்தமாக கேட்குமா அல்லது காதுகளின் அளவை வைத்துத்தான் கேட்கும் திறனும் இருக்குமா? நமக்கெல்லாம் இம்மியளவு காதுதானே இருக்கிறது, அப்படியென்றால் மனிதர்களுக்கு மற்ற விலங்குகளைவிட குறைவாகத்தான் கேட்குமோ? இப்படியெல்லாம் நான் பள்ளிப் பருவத்தில் யோசித்துப் பார்த்துக் குழம்பியிருக்கிறேன்.

african-elephant-elephant-bull-elephant.jpg

மழைக்கால விடியலின் போது சாரல்பட்டு துளிர்த்துக் கொண்டிருந்த ஜன்னலுக்கு வெளியே பூனில் குருவிகள் நின்று தன் முகத்தைப் பார்த்து தானே கண்ணாடியில் கொத்திக் கொண்டிருந்தன. கண்களுக்குப் புலப்படும்படியாக நம்மைப் போன்ற காதுகள் ஏதுமற்ற பூனில் குருவிகளைப் பார்க்கும் போது ஒருவேளை கேட்பதற்கு காதுகள் வெளியே துருத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையோ என்ற சந்தேகமும் ஏனோ அப்போது வரவே செய்தது. ஜன்னலுக்கருகே நகர்ந்து செல்கிற காலடியோசையைக் கேட்ட அடுத்த நிமிடத்தில் பட்டென்று பறந்து போய் வாகை மரத்தின் கிளைகளுக்குள்ளாக மறைந்து அமர்ந்து கொண்டது. நம் தலைக்கு வெளியே துருத்திக் கொண்டிருக்கிற காதுமடல் மட்டுமே நாம் நினைப்பது போல் காதுகள் அல்ல என்று புரிவதற்கே பல காலம் தேவையாயிருந்தது.

7.Jungle-Babbler.jpg

குருவிகளுக்குக்கூட கண்களுக்குப் பின்னே ஆழ்துளை கிணறு போல ஒரு துளை கேட்பதற்காக இருக்கிறது. ஆனால் ஊர்ந்தபடி நளினமாக நடனமாடிக் கொண்டே செல்கிற பாம்பிற்கு அதுவும்கூட இல்லையே! ஆனாலும் ஆள் நடமாடுகிற சப்தங்கள் கேட்டு விருட்டென்று ஓடி புதருக்குள்ளாக மறைந்து கொள்கிறது. அது எப்படி? இப்படியாக பால்ய காலத்தில் எழுகிற சந்தேகங்களையும் அது பற்றிய ஆச்சரியமூட்டுகிற அற்புதங்களையும் நான் மருத்துவக் கல்லூரியில் சென்றுதான் விரிவாகக் கற்றுக் கொள்ள முடிந்தது.

என்னவோ இப்போதெல்லாம் காதுகள் மீதே பித்துப் பிடித்தாற் போல இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் கண்ணைப் பார்க்காமல் காதைப் பார்த்துப் பேசவே கண்கள் அலைகின்றன. ஏனோ ஒவ்வொருவரின் காதுகள் மட்டுமே அறிந்த ஒருசில ரகசியம் போல ஒவ்வொரு காதிற்குமான ரகசியங்களையெல்லாம் மனம் இப்போது அறியத் துவங்கியிருக்கிறது. குழந்தைகளின் காதுகளைப் பார்த்து அவர்களுடைய நிஜத்தின் நிறம் இதுதான் என்று கணிக்கிறவர்களை இப்போது நான் மிகக் கவனமாகப் பார்க்கின்றேன். கண், மூக்கு போல காதுகளும் யாரைப் போல இருக்கிறது என்று அம்மாவையும் அப்பாவையும் நான் திரும்பித் திரும்பி பார்த்தபடி இருக்கிறேன்.

காதுகளில் தான் எத்தனை எத்தனை வகையறாக்கள்??? கம்மல் குத்தின காதுகள், கடுக்கண் போட்ட காதுகள், வைரக்கல் பதித்த அணிகலன் போலான காதுகளெங்கும் வட்டமிட்டு கற்கள் பதித்த காதுகள், தண்டட்டி அணிந்த பாட்டியின் காதுகள், ஹெட்செட் மாட்டிய ஹைடெக் காதுகள், பென்சிலை சுமக்கும் தச்சன் காதுகள், கண்ணாடியைச் சுமக்கும் பள்ளிக்கூடக் காதுகள், இப்போது காது கேட்கும் மிஷின் மாட்டிய பிஞ்சுக் காதுகள்.. இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ..!

கண்ணாடியில் முகம் பார்க்கிற போதுகூட ஏனோ கூடுதலாக காதுகளையே உற்றுப் பார்க்கத் துவங்கியிருக்கிறேன். காதுகள் நன்றாக இருக்கிறதா? மூக்கும் முழியும் போல காதுகளும் எடுப்பாக இருக்கிறதா? ஒருவரும் இப்படிக் கேட்டதாக ஞாபகமில்லை. காதுகளைத் தொட்டுத் தடவி வருடிக் கொடுத்தடியே இருப்பதற்கு ஏனோ மிகவும் பிடித்திருக்கிறது. கன்னுக்குட்டியின் கழுத்தை வருடிக் கொடுப்பதைப்போல காது மடலை நுனிவிரல்களால் தடவித் தடவிப் பார்க்கிறேன். சோறு வெந்துவிட்டதா என்று அம்மா பார்ப்பதுபோல.. பச்சரிசியை பக்குவமாக இடித்துப் புடைத்து பாட்டி பதம் பார்ப்பதுபோல..

காதுகளை எப்போதாவது மிக நெருக்கமாக பார்த்திருக்கிறோமே? நெருங்கிப் பார்த்தால் எப்படி இருக்கும்? என்ன தோன்றும்? முக அழகைக் காட்டிலும் எவர் கவனத்திலும் விழாதபடி ஓரமாய் ஒரு நாணம் கொண்ட பெண் போல ஒதுங்கியிருக்கிற காதுகளையே இப்போதெல்லாம் அளவுக்கு அதிகமாக பிடிக்கிறது. காதுகளை சுருள் முடி கோர்வையால் கோதிவிடுகிற பெண்களே கூடுதலாக கவனத்தில் வந்து விழுகிறார்கள். புத்தன் சிலையைக் காண்பவர் மௌனமாய் சிரிக்கிற புன்னகையை கவனித்துப் பார்த்தபடி இருக்கிறார்கள். நானோ தும்பிக்கை போன்று இருபுறமும் நீண்டிருக்கிற காதுகளையே உற்று உற்றுப் பார்த்தபடி இருக்கிறேன். புத்தரின் புன்னகைக்கு ஈடாக அவருடைய காதுகளுக்கும் அதே வசீகரம் இருக்கத் தானே செய்கிறது!

கடற்கரையோரமாய் அலையில் ஒதுங்கியபடி குப்புற விழுந்து கிடக்கிற சிப்பிகளை புரட்டிப் பார்த்தால் இருக்குமே வெள்ளி வெள்ளியாய், அழகிய ஓவியம் போல வளைவு வளைவாய், அப்படியிருக்கும் நம் காதுகள். இன்னும் அருகே சென்று பார்த்தால் 4-டி ஸ்கேன் வழியே கருப்பையில் படுத்திருக்கிற குழந்தையைப் பார்ப்பது போலவே கவர்ச்சியாய் இருக்கிறது. காதுக்குள் கருப்பை குழந்தை! காதுகளை ரசிக்க நாம் ஏன் மறந்துபோனோம்??

unnamed.jpg

 

வில்லைப் போல விரைத்தபடி இருக்கிற காதுகளை இழுத்துப் பிடித்து விளையாடுவதுண்டு. எப்படி இழுத்துப் பிடித்து ஒடித்து மடக்கி சுருட்டினாலும் காதுகள் மீண்டும் பழைய படியே வந்துவிடுகின்றன. ஆசிரியர் நாக்கைத் துருத்தியபடி இழுத்து இழுத்து கண்டிக்கிற போது எங்கே நம் காதுகளும் நீண்டுவிடுமோ என்று பயந்த நாட்கள் இன்றும் சிரிப்பாய் நினைவில் இருக்கிறது. காதுகள் வளராதா? புத்தகத்தினுள் வைத்த மயிலிறகு போல காதுகளும் வளராதோ? ஒருவேளை நம் காதுகளும் கருவிலிருந்து இப்போதுவரை யார் யாரோ பேசியதைக் கேட்டுக் கேட்டுத்தான் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறதா? அப்படியென்றால் காது கேளாத குழந்தைகளின் காதுகள்!

இப்படியாக காதுகளைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டும், பேசிக் கொண்டும், வருகிறவர் போகிறவர்களின் காதுகளையே எப்போதும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டும் இருக்கிற ஒரு மருத்துவனை எவரேனும் கண்டால் நிச்சயமாக ஒரு பைத்தியக்காரனாகத்தான் இருக்க முடியும் என்கிற முடிவிற்கு அவர்களும் வந்துவிடுவார்கள். இதையே சிந்தித்து சிந்தித்து அதுவே ஒரு நோயாக நானும்கூட ஒரு மனநோயாளியாக மாறுவதைப் போலத்தான் என்னுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் இருப்பதாகவே எனக்கும் தோன்றுகிறது.

முதலாமாண்டு மருத்துவப் படிப்பில் உடற்கூறியல் அதாவது அனாடமி (ANATOMY) என்றொரு பிரிவு உண்டு. அனாடமி புத்தகத்தில் தான் முதன் முதலாக எனது காதுகளைப் பற்றி கட்டி வைத்திருந்த அத்தனை கோட்டைகளும் தகர்ந்து போயின. அதுநாள் வரையிலும் பிறரது முகத்திலும் கண்ணாடியிலுமாக பார்த்து இரசித்த காதுகளை இறந்த பிரேதத்திலிருந்து அறுத்துப் பார்த்துப் படிக்கத் துவங்கிய பின் ஏனோ காதுகளைப் பற்றிய அத்தனை வசீகரங்களும் காணாமல் கரைந்து போயின.

பள்ளிக் காலத்தில் காதுகளென்பது மூக்குக் கண்ணாடியை மாட்டி வைக்கப் பயன்படும் உறுப்பு அல்லது தவறு செய்துவிட்டால் ஆசிரியர் நாக்கைத் துருத்திக் கொண்டு காதைத் திருக உதவும் தண்டனைக் கருவி என்பதாகவே மனதில் பதிந்திருந்தது. ஆனால் பள்ளிப்பாடத்தில் விளக்கப்பட்ட பாடத்தை விடவும் மருத்துவக் கல்லூரியின் அனாடமி பாடப் புத்தகத்தில் விளக்கப்பட்ட காதுகள் பற்றிய விவரணைகள் யாவும் மூளைக்குள்ளே பல திறப்புகளை உண்டு பண்ணியது. காதுகள் துருத்திக் கொண்டிருக்கிற தோல் பகுதியிலிருந்து நீண்டபடி இன்னும் நீளமாக மண்டை ஓட்டிற்குள் துளை போட்டபடி செல்வதைப் போன்ற வரைபடங்கள் யாவும் காதுகளைப் பற்றிய இன்னொரு உலகத்திற்குள் அழைத்துச் செல்வதாய் இருந்தது.

ear-anatomy.jpg

 

அப்படியென்றால் வெளியே துருத்திக் கொண்டிருக்கிற காதுகள் மட்டுமே கேட்கும் உறுப்பல்ல என்கிற முதல் கொட்டு நச்சென்று அப்போது மண்டையில் விழுந்தது. அதாவது ரேசன் கடைகளில் மண்ணெண்ணையை சிந்தாமல் சிதறாமல் ஊற்றுவதற்காக பயன்படுத்தப்படுகிற புனல் போன்ற உறுப்பாக மட்டும்தான் காதுமடலோ நம்மிடையே செயல்படுகிறது. அதுவோ நம் தலைக்கு இருபுறங்களிலுமாக 180 டிகிரி கோணத்தில் இருந்து கொண்டு அதாவது வலது பக்கமென்றால் வலது பகுதி காதும், இடது பக்கமென்றால் இடது பக்க காதும் சப்தங்களை உள்வாங்கிக் கொண்டு அதை சிந்தாமல் சிதறாமல் துளையின் வழியே மண்டையோட்டிற்குள் இருக்கிற காதின் முக்கியமான உள்பகுதிக்கு அனுப்புகிற வேலையைத்தான் அது செய்கிறது. அதனால் தான் யானையும் அவ்வளவு பெரிய காதுமடலின் வழியாக சப்தத்தை காடுகளிலிருந்து உள்வாங்கிக் கேட்டுக் கொள்கிறது. அதேபோல காதுமடல் இல்லாமலேகூட குருவிகளாலும் கேட்க முடிகிறது. ஆம், புனல் இல்லாமலே கூட மண்ணெண்ணெய் ஊற்ற முடியும்தானே!

அப்படியென்றால் காது என்றால் எவ்வளவு நீளமாக இருக்கும்? இந்த காதில் அடித்தால் அந்தப் பக்க காதின் வழியே இரத்தம் வருமா? ஒருவேளை இரண்டு காதுகளும் மண்டைக்குள்ளே ஓரிடத்திலே சந்தித்துக் கொள்கின்றனவா? இப்படியான சந்தேகங்களெல்லாம் எனக்கும் பள்ளி மாணவனாக இருக்கிற காலங்களில் இருக்கவே செய்தது. ஆனால் வெளியே தெரிகிற காது துளையிலிருந்து வெறுமனே மூன்று சென்டிமீட்டர் தூரத்திற்குள்தான் காதுகளின் மொத்த பாகங்களுமே நீண்டிருக்கும். அதாவது ஆறு செ.மீ நீளமுடைய காது குடையப் பயன்படுத்துகிற குச்சியின் பாதி நீளம் வரைக்கும்தான் அதன் அளவே இருக்கும். அதற்கு மேலே உள்காதிலிருந்து புறப்படுகிற நரம்புகள்தான் தடித்த மண்டையோட்டுக்குள்ளாக பயணித்து கேட்கும் திறனை உள்ளடக்கிய பக்கவாட்டு மூளையின் முக்கிய பாகத்திற்குள் செல்கிறது. அப்படி மூளைக்குள்ளே சந்திக்கிற நரம்புகள் வழியேதான் நமது கேட்டல் நிகழ்வே நடக்கிறது. அதனால் காதுகள் இரண்டும் சந்தித்துக் கொள்ளும் அளவிற்கு நீளமானதாகவெல்லாம் இல்லை என்பதே அப்போது தான் புரியத் துவங்கியது.

அதே முதலாமாண்டு பாடத்தில் உடல் இயக்கவியல் (PHYSIOLOGY) அதாவது உடல் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றிய பாடப் புத்தகமும் இருக்கும். அந்த புத்தகத்தைப் படித்த பிறகுதான் காதுகள் இன்னும் எத்தகைய அதிசயக்கத்தக்க நுட்பமான வேலைகளையெல்லாம் செய்கிறது, அதைப்போய் நாம் காதுகளில் எதையோ ஊற்றுகிறோம், குச்சியை, கோழி இறகுகளை, ஊக்குகளை வைத்து சுத்தம் செய்கிறோம் என்று எவ்வளவு அலட்சியமாக கையாண்டு கொண்டு இருக்கிறோம் என்று கவலையாக இருந்தது. அன்றாடம் நாம் குளித்து துவட்டுகையில்கூட காதுகளுக்கென்று தனியே நாம் மெனக்கெடுவதில்லையே!

நம்மை யாராவது கண்ணத்தில் அறைந்தால் தான் காதுக்குள் இருக்கிற சவ்வு என்கிற விஷயமே நமக்கு நினைவிற்கு வருகிறது. வெளிச்சத்தைப் பாய்ச்சி காதுகளை கீழும் பக்கவாட்டிலுமாக நுட்பமாகப் பிடித்திழுத்து கண்களால் உற்று நோக்குகிற போது மட்டுமே பார்க்கக் கூடிய காது சவ்வுகளைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது என்னமோ சொற்பமானதுதான். அதாவது வெளியே இருந்து வருகிற சத்தத்தை புனல் போன்று இருக்கிற காதுமடல் உள்வாங்கிக் கொண்டு அதன் சின்னஞ்சிறிய காது குழாயின் வழியே அனுப்பி அவற்றை மிகச் சரியாக காது சவ்வின் மேலே குறிப்பிட்ட புள்ளியில் விழுமாறு செய்கிறது. அப்படி காதுக்குள்ளே கோணலாக சாய்ந்தபடி இருக்கும் அந்த சவ்வுமே வெளியே இருந்து வருகிற ஒவ்வொரு சப்தத்திற்கும் ஏற்ப நுட்பமாக அதிருகிறது. இந்த அற்புதமான வெளிர் நிறத்திலான சவ்வானது கேட்கிற சப்தங்களையெல்லாம் முதன்முதலாக அதிர்வுகளாக உருமாற்றம் செய்கிற அதாவது மொழிபெயர்ப்பு செய்கிற வேலையை மிகக் கவனமாகச் செய்கிறது

ear physiology.png

இன்னும் கச்சிதமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒலியை அதிர்வுகளாக மாற்றுவது. அதாவது நாம் தொலைபேசியின் சப்தத்தை அதிர்வு ஏற்படும்படியாக மாற்றி வைத்துக் கொள்கிறோமே அதைப்போல. ஒருவர் பேசுவதைக் கேட்கிற போது ஜன்னல் காற்று, மின்விசிறி ஓடும் சப்தம் இப்படி தேவைப்படாத சப்தங்களும் காதுக்குள்ளே வருமல்லவா. அவற்றையெல்லாம் வடிகட்டி தேவையான சப்தங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை மட்டும் இன்னும் சப்தமாக மண்டைக்குள் நன்றாக உறைக்கும் படியாக அனுப்புகிற வேலையைத்தான் காதின் நடுப்பகுதி செய்கின்றன.

கடலில் ஓடம் செல்லுகிற போது காற்றுக்கு ஏற்ப பாய்மரம் புஷ்.. புஷ்.. என்று உப்பி உப்பி தளருவதைப் போலத்தான் நம்முடைய காது சவ்வும் மிகமிக மெல்லியதாக அதிர்ந்து அசைந்து ஒவ்வொரு சப்தங்களுக்கு ஏற்ப மிகக் கச்சிதமாக மொழிபெயர்க்கிற வேலையைச் செய்கிறது. அத்தோடு சவ்வுக்கு தொடர்புடைய சில குட்டி குட்டியான எலும்புகளும் அதற்கு ஒத்தாசை புரிகின்றன. இப்படியாக ஒலியை அதிர்வுகளாக மாற்றுகிற சவ்வுக்கு அடுத்ததாக இருக்கிற நேர்த்தியான பெட்டி போன்ற காதின் ஒரு பகுதியைத்தான் மருத்துவத் துறையில் இரண்டாவது அல்லது நடுப்பகுதி என்று அழைக்கிறார்கள். காதுமடலையும் காது குழாயையும் உள்ளடக்கிய பகுதியை காதின் வெளிப்பகுதியாக அதாவது முதல் பகுதியாக கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.

இப்போதிருந்து கவனமாக தவளைகளை நன்றாக உற்றுப் பார்க்கத் துவங்கினால் அதற்கு வெளிக்காது இல்லாமல் வெறுமனே சவ்விலிருந்து துவங்குகிற நடுக்காதுகள் மட்டும் இருப்பதைக் கண்டு கொள்ள முடியும். இனிமேல் எப்போதாவது தவளைகளைக் காண நேரிட்டால் அதன் காதுகளையும் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். அதன் சவ்வுகளோ தவளைக்கு யாரோ வைத்த ஸ்டிக்கர் பொட்டு போல சிறு வட்டமாய் அழகாய் இருக்கும்

5-31-10-male-green-frog-img_0268.jpg

இறுதியாக இவ்வாறு வெளியே இருந்து வந்து அதிர்வாக மாற்றப்பட்ட சப்தங்களானது மேற்கொண்டு உள்ளே நகரும் போதுதான் காதின் உள்பகுதியை அதாவது மூன்றாம் பகுதியை சந்திக்கிறது. காது கேட்டலில் மிகவும் முக்கியமான பகுதியே இதுதான். உலகின் அதிசயங்களைவிடவும் மிக அற்புதமானதும் ஆச்சரியமானதும்கூட. ஒரு பேட்டரியைப் போல அதிநுட்மானது. இங்கேதான் அந்த அதிர்வுகளெல்லாம் மின்னலைகளாக அதாவது மின்சாரமாக மாற்றப்படுகிறது. ஒவ்வொரு சப்தங்களுக்கும் ஏற்ப இங்கு தயாரிக்கப்படுகிற மின்சார சிக்னலை எடுத்துக் கொண்டுதான் அதன் நரம்பு வயர்கள் மூளைக்குச் சென்று சுற்றிலும் என்ன சப்தம் கேட்கிறது என்கிற கேட்டலின் அற்புதத்தை நிகழ்த்துகிறது. ஆனால் பாம்புகளுக்கோ இந்த வெளிக்காது நடுக்காது சமாச்சாரங்களெல்லாம் இல்லாமல் வெறுமனே உள்காது மட்டுமே தான் இருக்கிறது. அதாவது அதிர்வுகளை உணருகிற பாம்பின் தலைப்பகுதியிலிருந்து சப்தங்கள் நேரடியாக மண்டையோட்டின் எலும்புகளின் வழியே உள்காதிற்குள் நுழைந்து அதன் கேட்டல் நிகழ்வு நடந்தேறுகிறது.

snake-653644_1920.jpg

காதுகள் பற்றிய பாடப் புத்தகத்தை திறந்து பார்த்துக் கொண்டு அதன் வெளிக்காது, நடுக்காது, உள்காது பற்றிய சமாச்சாரங்களை வாசித்துக் கொண்டிருக்கும் போதே இதெல்லாம் இந்த படிக்காத பெற்றோர்களுக்குத் தேவைதானா? இதை அவர்கள் புரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? இதனால் அவர்களுக்கு என்ன பயன் வந்துவிடப் போகிறது? என்கிற கேள்விகளும் மனதில் எழாமல் இல்லை. ஆனால் இதையெல்லாம் விளங்கிக் கொள்ளாமல் நான் எப்படி ஒரு சிறந்த மருத்துவராக ஆகிவிட முடியாதோ, அதேபோல காதுகளைப் பற்றிய அடிப்படையான விசயங்களைப் புரிந்து கொள்ளாமல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைக்கு என்ன பிரச்சனை, எங்கே பிரச்சனை, எதனால் தன் பிள்ளைக்கு காது கேட்காமல் போனது, காது கேட்காததுதான் பிரச்சனையென்றால் அவனால் ஏன் பேச முயவில்லை, கேட்பதற்கும் பேசுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்களாலும் விடைகளைக் காண முடியாதே! இந்த விடைகளை நோக்கி பெற்றோர்களை நகர்த்தாமல் அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி, அந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற சிகிச்சையைப் பற்றி அவர்களுக்கு உணர வைக்கவும் முடியாது.

பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நான் எதைப் பற்றி முக்கியமாக புரிய வைக்க வேண்டும் என்பதில் மட்டும் நான் இப்போது கவனம் செலுத்தியாக வேண்டும். காது கேளாமல் இருப்பது தான் பிரச்சனை என்றால் காதுமடல், சவ்வு, உள்காது, நரம்புகள் மற்றும் மூளை வரை இருக்கிற இந்த கேட்பதற்கான பாதையில் எது பாதிக்கப்பட்டாலும் அது அவர்களை காது கேளாதவர்களாக ஆக்கிவிடக்கூடும்தான். ஆனால் பிறவியிலேயே பாதிக்கப்படுகிற இக்குழந்தைகளுக்கு அப்படி என்ன தான் தீரக்க முடியாத பிரச்சனை என்பதை நான் முக்கியமாக அவர்களுக்கு விளக்கியாக வேண்டும்.

அதாவது காதுகளில் அழுக்கு படிந்திருப்பது, சவ்வில் ஓட்டை விழுவது, நடுக்காதில் கிருமித்தொற்றாகி வெளியே சீழ் வடிவது போன்ற காரணங்களையெல்லாம் உடனே மருந்துகள் ஊசிகளைக் கொண்டு சரிசெய்து விடுகிறபோது பிறவிக் குறைபாடுகளெல்லாம் ஏன் மருந்துகளையும் ஊசிகளையும் வைத்தே சரிசெய்துவிட முடியாதா என்கிற கேள்விக்கு ஒரு மருத்துவராக நான் பதில் சொல்லியாக வேண்டும் தானே!

தொடரும்..

முந்தைய தொடர்களை படிக்க: 

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 6 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *