Music Life Series Of Cinema Music (Ullam Isaithathu Mella) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல - எஸ் வி வேணுகோபாலன் 



உள்ளம் இசைத்தது மெல்ல …..

கடந்த வாரக் கட்டுரை, உண்மையில் ஜுர வேகத்தில் எழுதியதுதான். இசையெனும் காய்ச்சல் மட்டுமல்ல, வேகமாக என்னுள் பரவிக் கொண்டிருந்த காய்ச்சல் அது. டிசம்பர் கடைசியில் எழுதி முடித்து, கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்ட அன்று எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நிபுணர் ஒருவரை சந்தித்து, பரிசோதனைகளுக்குப் பிறகு, வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க அவர் சான்றிதழ் வழங்கியதும், மருத்துவமனை வாசத்திற்குத் தயாராகக் கட்டி எடுத்துச் சென்ற மூட்டைகளோடு வீடு திரும்பினேன். அப்புறம் செய்த உடனடி பணிகளில் ஒன்று தான், இசை வாழ்க்கை கட்டுரையை எல்லோருக்கும் பகிர்ந்து கொண்டது.

எந்தக் களைப்பும் இல்லாதிருக்கச் செய்துவிட்டது 5 நாள் தனியறைத் தனிமை. வாசிப்பும், இசையும், அலைபேசியிலேயே எழுதிக் கொண்டிருந்த கவிதைகள் சிலவும், பகிர்வுகளும் நிற்கவில்லை. மடிக்கணினி மட்டும் தான் அறைக்குள் குடியேறவில்லை.

கவிஞர் காமகோடியன் மறைவுச் செய்தி, தனிமைப்பட்டிருந்த அப்படியான நாள் ஒன்றில் வந்தது. எங்கள் தெருவிலேயே குடியிருந்த அருமையான மனிதர், சிறந்த பாடலாசிரியர், மெல்லிசை மன்னரோடு நெருக்கமாக உடனிருந்தவர், ஏராளமான பக்திப் பாடல்கள் அவருக்கு இயற்றி அளித்தவர். இளைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் எழுதிக் கொடுத்திருப்பவர். மிக எளிமையான மனிதர். இந்தக் கொடுந்தொற்றுச் சூழலில் நேரில் சென்று மரியாதை செலுத்த இயலாமல் போனது. அவரது நூல் வெளியீட்டு நிகழ்வில் பார்த்த இடத்தில் வாய்த்த அரிய அறிமுகத்தில் கோவில்பட்டி அன்பர் முத்துராமலிங்கம் என்பவரோடு கிடைத்த நட்புக்காகவும் காமகோடியன் அவர்களுக்கு அன்புக்கடன் பட்டிருக்கிறேன்.

அறிஞனாயிரு, கவிஞனாயிரு…..ஆயிரம் கோடிக்கு அதிபனாயிரு, வீரனாயிரு, சூரனாயிரு…..என்னவாக இருந்தாலும், மனிதனாயிரு என்று அமையும் அவரது இசைப்பாடலை, எம் எஸ் வி இசையமைத்து வாய்ப்புள்ள மேடைகளில், நிகழ்ச்சிகளில் எல்லாம் பாடிக் கொண்டே இருந்தார் என்பதை அடிக்கடி சொல்வார் காமகோடியன்.

அவரோடு பாபுஜி அவர்கள் தொலைபேசியில் நடத்தியுள்ள அருமையான உரையாடல், யூ டியூபில் தற்செயலாகக் கிடைத்தது, அவரது நூல் வெளியீடு நிகழ்ந்ததற்குப் பிறகான நேர்காணல் அது. தன்னைக் கொஞ்சமும் முன்னிறுத்தாமல், எம் எஸ் வி அவர்கள் பால் அத்தனை அன்பும், மரியாதையும் பொங்க வார்த்தைக்கு வார்த்தை கவிஞர் கொண்டாடிப் பேசுவதைக் கண்ணீர் மல்கித் தான் கேட்க முடிந்தது.

இந்த உரையாடலில், இசை மேதை நௌஷத் மீது எம் எஸ் வி கொண்டிருந்த பக்தியை, அவர் விஸ்வநாதன் பால் காட்டிய மதிப்பை எல்லாம் பதிவு செய்திருக்கிறார் காமகோடியன். திறமைகளுக்கு அப்பால் எளிய மனிதராக இருந்த மெல்லிசை மன்னரின் பேரன்பில் கால் நூற்றாண்டுக் காலம் திளைத்த அனுபவங்களைக் கிஞ்சிற்றும் செருக்கின்றி ஒரு குழந்தை போல் அவர் பேசுகிறார்.

குழந்தை என்றதும், மலையாள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றில் பெரிய பாடகருக்கு சமமாக எந்த அச்சமும் இன்றி ஒரு சிறுமி மழலைக் குரலில் துணிச்சலாக இணைந்து பாடும் பதிவை அவசியம் குறிப்பிட வேண்டும்.

சந்திரமுகி படத்தில் இடம் பெற்ற யுக பாரதி அவர்களது ‘கொஞ்ச நேரம் கொஞ்சம் நேரம்’ பாடல் வித்யாசாகர் இசையமைப்பில் விளைந்த மிகவும் இனிமையான மெல்லிசைப் பாடல். மது பாலகிருஷ்ணன், ஆஷா பான்ஸ்லே அத்தனை சிறப்பாகப் பாடி இருப்பார்கள். ஆஷாவின் குரலே குழந்தைமைப் பண்போடு இழைந்தோடும். மேக்னா (எத்தனை வயது, ஏழு?) என்கிற அந்த அழகு குட்டிச் செல்லம், ஏட்டிக்குப் போட்டி சரிக்கு சரி பேச்சும் கொடுத்து, மது பாலகிருஷ்ணன் அவர்களோடு இணைந்து இந்தப் பாடலை அருமையாகப் பாடுவதைக் கேட்கையில் அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=TS-8pvbGnus

சரணத்தின் இடையே வரும் ஹம்மிங் உள்பட, தாளக்கட்டு பிசகாமல், எங்கே எப்போது குரல் எடுக்கவேண்டுமோ, எங்கே மூச்சு எடுத்துக் கொண்டு அடுத்த சொல்லை அழகாகப் பாட வேண்டுமோ, எங்கே ஆண் பாடகருக்கு வழிவிட்டு அடுத்து எங்கே தான் இணைந்து தொடர வேண்டுமோ அத்தனையும் சுத்தம்…அழகு !

இதெல்லாம் வெறும் பயிற்சியில் வந்து விடுவதில்லை. இசை, ஒரு கணித வரையறைக்குள் வலம்வந்தால் மட்டும் நிறைவு பெற்று விடுவதில்லை. பாடலின் பாவமும், அதில் தோய்ந்த உள்ளமும் தான் இசையாகிறது.

பாடல் மட்டுமின்றி, அசராமல் யாரோடும் பேச்சு தொடுத்துப் பின்னி எடுக்கும் மேக்னா நிகழ்ச்சிகள், யூ டியூபில் கொட்டிக் குவிந்திருக்கின்றன. மிகப் பெரிய பாடகர்கள், இசை அமைப்பாளர்கள், மோகன் லால் போன்ற மூத்த கலைஞர்கள் யார் வந்து அமர்ந்தாலும் சரிக்கு சரி பேசும் இந்தச் சிறுமி பாடிய தமிழ்ப் பாடல் வேறொன்று சிக்காதா என்று பார்க்கையில், எதிர்பாராத முத்து கிடைத்தது.

சந்திரபாபு, ஜமுனா ராணி இருவரும் மரகதம் படத்திற்காக அபாரமாக இசைத்த பாடல் அது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத சிறுவன் ரிச்சு, சிறுமி மேக்னா இந்தப் பாடலை அத்தனை கனஜோராகப் பாடியது, எத்தனை சாகா வரம் பெற்றது அந்தப் பாடல் என்று உணர்த்துகிறது. உலகில் வேறெதையும் விட இசைப்பாடல் தான் இந்தக் குழந்தைகளுக்கு அத்தனை உயிரானதாகத் தோன்றும் போல் தெரிந்தது. இந்த ஆனந்தம் அவர்களுக்கு நீடிக்க வேண்டும், போட்டிகள், இலக்குகள், பெற்றோர் எதிர்பார்ப்புகள் எல்லாம் குழந்தைகளிடமிருந்து அவர்களது நிகழ் காலத்தையும் பறித்து, எதிர்காலத்தையும் சிக்கலாக்கி விடக் கூடாது என்று அடிக்கடி தோன்றும்.

இசையோடு இன்னுமின்னும் கலந்து கரைந்து கொள்பவர்களுக்கு நிறைய கேள்விகளும் எழுகின்றன. ‘ஒரே மாதிரி கதைக்காட்சி தான் வெவ்வேறு படங்களிலும் இயக்குநர்கள் சொல்லிப் பாடலுக்கு உங்களிடம் கேட்பார்கள், எப்படி வெவ்வேறு ட்யூன் உங்களால் கொடுக்க முடிகிறது?’ என்ற கேள்வியை இளையராஜா அவர்களிடம் திரும்பத் திரும்பப் பலரும் கேட்கின்றனர்.

எல்லாப் படைப்பாளிகளுக்குமான கேள்வி தான் அது. அந்தப் புள்ளியை அறிவியலாளர் ஹைசன்பர்க், நிச்சயமற்ற கோட்பாட்டில் தொட்டார். அதைத் தான் பின்னர் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் இன்னும் விவரித்தார். புத்தர் அதைத் தான் க்ஷணிக தத்துவம் என்று உலகுக்கு விளக்கினார். ஓடிக்கொண்டிருக்கும் ஓடை நீரில் ஒரு கையள்ளிப் பருகிய நீரை மீண்டும் அங்கிருந்து எடுக்க முடியாது என்றார் கௌதமர். அந்த இடத்தில் இப்போது ஓடி வருவது வேறு நீர், முன்பு எடுத்த நீர் இப்போது கடந்து கொண்டிருப்பது வேறு இடம் என்றும் விளக்கினார்.

அப்படியான நிகழ்வில் பிறந்து விடுகிறது அந்த கணத்திற்குரிய இசை. வேறொரு கணத்தில் அது வேறாகவே பிறக்கிறது, அந்தப் பிறிதொரு கணத்திற்கான இசை அது. இந்த அதிசயம் தான் பாடல்களை நெருக்கமாக அணுகும்போது அத்தனை பூரிப்பு அடைய வைக்கிறது.

அற்புதமான இசை அமைப்பாளர் வி குமார் அவர்களுக்கு, ‘ஒரு நாள் யாரோ…..’ என்ற பாடலுக்கான இசை எப்போது எந்த கணத்தில் உருவாகி இருந்திருக்கும் ! பி சுசீலாவுக்கும், கவிஞர் வாலிக்கும், படத்தில் தோன்றிய ஜெயலலிதாவுக்கும் மிகப் பெரிய புகழைத் தேடித் தந்த அமர்க்களமான பாடல். (ஆனால், மேஜர் சந்திரகாந்த படத்தில் தனக்கான பாத்திரம் பெரிய அளவில் அமையாது போனதில் வெறுத்துப் போன ஜெயலலிதா பின்னர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது).

தன்னை நம்பி ஓர் ஆணிடம் ஒப்புக் கொடுத்து அவன் காதலை நம்பி குதூகலத்தில் இருக்கும் ஒரு பெண், சகோதரன் முன்னிலையில் பாடும் பாடல் காட்சி அது. அவள் உணர்த்த விரும்பும் நுட்பமான செய்திகளை அத்தனை அநாயாசமாக அந்தப் பாடலில் கொணர்ந்திருப்பார் வாலி.

ஒரு முன்னோட்டம் கொடுத்துத் தான் பல்லவியைத் தொடங்க வைக்கிறார் குமார், அந்த இசைத் துளிகளில் சேகரமாகும் உணர்வின் விளிம்பில் புல்லாங்குழலின் சிலிர்ப்பில், சுசீலா அபாரமாக முன்னெடுக்கிறார், ‘ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ…’ என்று. ‘கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி’ என்ற வரியை வசீகர அடுக்குகளில் இசைக்கிறார். இதில் நெஞ்சுக்குள் தாளம் என்பது, ஒரு பருவப் பெண்ணின் துள்ளாட்டத்தையும், பதட்டத்தையும் இடத்திற்கேற்ப உருவகப்படுத்தும் இடத்திலேயே வாலி மின்னுகிறார்.

‘உள்ளம் விழித்தது மெல்ல…அந்தப் பாடலின் பாதையில் செல்ல’ என்கிற முதல் சரணத்தை அசாத்திய குரலில் பாடுகிறார் சுசீலா. பாடலின் பாதை என்று வாலி சுட்டுவது, அந்தப் பெண் நம்பி நடந்து போயிருக்கும் வழியையும் தான். ‘மெல்லத் திறந்தது கதவு….என்னை வாவெனச் சொன்னது உறவு’ என்பது விவரிப்புக்கு அப்பாற்பட்ட கவித்துவத்தில் எழுதப் பட்டிருக்கும் அடுத்த கட்டம். ‘நில்லடி என்றது நாணம், விட்டுச் செல்லடி என்றது ஆசை’ என்ற வரி, அவள், தனது தாபத்திற்கு ஆட்பட்டுப் போன கதையைக் கூறி விடுகிறது. ஆனால், அதை அவளது அந்த நேரத்துக் கொண்டாட்ட மனநிலையில் தான் இசைத்திருப்பார் சுசீலா.

இரண்டாம் சரணம், உடலியல் மாற்றங்களைக் காதலின் நிமித்தம் போல வெளிப்படுத்தினாலும், படக்கதையைத் தொடர்வோருக்கு உரிய பொருளில் கொண்டு சேர்த்து விடுகிறது. ‘செக்கச் சிவந்தன விழிகள்…கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்…’ என்ற அடிகளை அபாரமான பாவத்தில் கொண்டு வந்திருப்பார் சுசீலா. அடுத்து, ‘இமை பிரிந்தது உறக்கம் நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்’ என்பதில் உறக்கம் என்பதில் வலுவாக அழுத்தமும், மயக்கம் என்பதில் ஒயிலான கிறக்கமும் ஒலிக்கும் அவரது குரலில். . ‘உன்னிடம் சொல்லிட நினைக்கும் மனம் உண்மையை மூடி மறைக்கும்’ என்ற வரி, படத்தின் மீதிக் கதைக்கான களத்தை அமைந்துவிடுகிறது.

பல்லவியை நிறைவு செய்கையில் இன்னும் கூடுதல் ஒயிலாகக் கொண்டு வந்து முடிப்பார் சுசீலா.

வானொலியில் பாடுகிறார் என்ற உணர்வை ஏற்படுத்த நாகேஷ் தனது சீடனோடு சேர்ந்து உருவாக்கும் இசையமைப்பின் கற்பனை காட்சியில் கூடுதல் சுவாரசியம் ஏற்படுத்தும். ஆனாலும், பாடலின் சோக இழை நெஞ்சில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கும்.

காலங்களைக் கடந்து வாழும் இசை என்பது, இந்தப் பாடலை, சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா மேடையில் இசைத்திருக்கும் காணொளிப் பதிவை, பல லட்சம் பேர் பார்த்திருப்பதில் வெளிப்படுகிறது.

எழுத்தில், குரலில், மெட்டில் இணைந்து பொழிகிறது இசை. இங்கிருந்தே அது எடுக்கப்படுகிறது. வேறெங்கிருந்தோ பொழிவதில்லை இசை, மழையைப் போலவே! அதன் இன்பம் அடுத்தடுத்து எடுத்துச் செல்லப்படுவதில் மேலும் கூடிக் கொண்டே செல்கிறது. நவில் தொறும் நூல் நயம் என்றார் வள்ளுவர். நுகர் தொறும் இசை நயம் தான்!

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்”
  1. அற்புதமான மனிதர். அவரைப் பற்றி எழுதும் எஸ் வி சிறப்பாக பாடல்களை பதிந்து அழகாக ஆகியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *