3.
பாலியல் வன்முறை
சாதி மதம் குருதி
இந்த உலகிலேயே அதிகம்
கவலை கொண்ட மனிதராக
கடவுளை  மாற்றி விட்டீர்கள்
என்ன தான் நீங்களே படைத்தவரென்றாலும்
அவருக்கும் இதயமென்று ஒன்று இருக்குமில்லையா?
ஹிட்லர்களும் நாஜிக்களும்
சுல்தான்களும் செங்கிஸ்கான்களும்
காதைக்கொடுங்கள் அவர்களும் இவர்களும்
வாட்களும் வேட்களும் கொடியும் தோரணங்களும்
இராமபானம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா
ஏழேழு கடலைத்தாண்டி
ஏழேழு பனையைத்துளைத்து
பிறகு குறிபார்த்து
வாலிக்களை சாய்த்து
ஆனால் கூனிக்களிடம் தோற்று
அட சம்புகா  உன்னைப்பற்றி
பிறிதொருமுறை பேசுகிறேன்
இப்பொழுது நம் தேவை
நம் கடவுளை கவலையற்ற மனிதராக்குவது தான்
குறைந்த பட்சம் ஒரு தலைபட்ச சார்பற்றவராக
என்ன தான் நாம் படைத்தவரென்றாலும்
வெளியே அனுப்பிய பிறகு
வீடு வந்து சேரும் வரை அவர் உலகம்
அவருடையது தானே?
4.
பரிச்சயமற்ற பிறிதொரு நிலவு
தேவாலய மணிச்சத்தத்தின் ஊடாக
உதித்துக்கொண்டிருக்கிறது
இந்த முன்னிரவு
புன்மைகள்  சிதறும் மனதை
நீ கழுவிப் போ
ஒளியின் தீர்த்தமே!
தாரகை கூட்டத்தில் நானொரு தாரகையாகி  ஒளிந்து கொள்கிறேன்
சிறிது நேரம்
முதுமைகள் சுமந்துவரும் காலம்
திரும்பி போகட்டும் சூன்யத்திற்கே
 விரல்களாடு விரல்களை
கோர்த்துக்கொள்வோம் சகியே
இன்னும் சற்று நேரத்தில் இவைகள்
மழை மேகமாக பொழியப்  போகின்றன
இருந்திருந்தார் போல்  வீசும்
இந்த தென்றலும் கூட
நம்மை கனிய வைப்பதற்கு வந்ததுதான்
வா இரணங்களின் திடமாய் உருக்கொண்டுவிட்ட வாழ்வை
இயற்கையின்முன்னிலையில்
 உள்ங்கையில் ஏந்துவோம்
ஈரக்காற்று பட்டு
அது கற்பூரம் போல்
கரைந்து போகட்டும்