தங்கேஸ் கவிதைகள்
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

 

 

 

1.கிராமியப் பாடல்

பொருள் : தனிமை

பல்லவி

ஆத்துத் தண்ணிய அள்ளி அள்ளி கைவலிக்குது
கிணத்துக்குள்ள நெலவு கிடந்து
நீச்சடிக்குது

குளம் குட்டை எல்லாமே
குறட்டை விடுகுது
கொஞ்ச நேரம் ராத்திரியும்
கண்ணசருது

ஆனாலும் ஆனாலும்
நான் உறங்கவில்லை
மானே என் மானே
உன் மனசு இரங்கவில்லை

( ஆத்து தண்ணிய )

சரணம் 1

நெத்தி சுடும் போது
கை வச்சுப் பார்ப்ப

நிமிசத்துக்கு நூறு தரம்
வேர்க்குதான்னு கேப்ப

இப்ப உசிரு சுடும் போது -.
காணலியே உன்னை

ஒரு பொட்டுத் தூக்கமில்லை
மூடலியே கண்ணை

பச்சரிசி இங்க
ஊற வச்சுக் கிடக்கு

அடுப்பு மேல வெறும் உலைதான்
கொதிச்சிகிட்டே இருக்கு

( ஆத்து தண்ணிய )

சரணம் 2

புத்தி கெட்ட மனசு
சுத்தி சுத்தி வருமே

லச்சை கெட்ட ஆட்டுக்குட்டி
கத்தி கத்தி விழுமே

இப்ப நட்ட நடு ராத்திரி
பால்போல அடிக்குது

கெட்ட கெட்ட சொப்பனம்தான்
தேள் போல கடிக்குது

என் மூச்சுக்காத்தில் நீயும்
காதவச்சு கேளு.

அது உன் பேரைச்
சொல்லலைன்னா
நான் உசிரில்லாத ஆளு

( ஆத்து தண்ணிய )

 

2.என் இனிய கடவுளே
நீ குழைத்து விளையாடும்
களிமண் பொம்மையிலிருந்து
ஒரு தீற்றலை எனக்கும் பூசிவிடு
பச்சை களி மண்ணின் கர்ப்பவாசம்
எனக்குள் ஆழமாக இறங்குகிறதா
என்று பார்க்கலாம்
என் மீது வளர்ந்து கொண்டிருக்கும்
பாறையியின் செதில்கள்
கொஞ்சம் உடைகிறதா
 என்று  பார்க்கலாம்
என்னால் வறண்டு போன நதி
கொஞ்சம் துளிர்விடுகிறதா
என்று பார்க்கலாம்
பட்டுப் போன சருகுகள்
என்னிடம் ஒருமுறை
 கடைசி முத்தம்
கேட்கிறதா என்று பார்க்கலாம்
சோறெடுக்க வந்த காக்கை
தோள்களின் ஓரம்
உரசி செல்கின்றதா என்று
பார்க்கலாம்
இவைகள் எதுவுமே நிகழவில்லையென்றால்
வா இருவரும் சேர்ந்து
புதியதொரு கடவுளை படைக்கலாம்
தங்கேஸ்

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *