Thanges Poems | தங்கேஸ் கவிதைகள்

1.வெய்யில் காலம்

உதிரும் பூக்களைப்போல சிறகு சுருக்கி
வெய்யிலை சுவாசித்துக்கொண்டிருக்கிறது
வேப்பமரத்தில்கரையும் கருங்காகம்

தொண்டை தண்ணீர் வற்றிப் போன மனிதர்கள்
எதிரே வரும் வாகனங்களை சபிக்கிறார்கள்
காரணமற்று

தூக்கிட்டுத் தொங்க
மனிதர்கள் கிடைக்காமல்
தங்களையே தூக்கிட்டுத்
தொங்குகின்றன
கோடைகால மின்விசிறிகள்

காவிரி மேலாண்மை வாரியம்
நியூட்ரினோ ஸ்டெர்லைட்
இத்தனையும் தாண்டி
ஐபிஎல்லையும்
சினிக்கூத்துகளையும்
லஜ்ஜையின்றி தழுவும்
தமிழ் வளர்க்கும் ஊடகங்கள்
ஒரு புறம்

ஊரின் எல்லைகளில்
கட்டுக்கடங்காத வெள்ளம் பாயும்
டாஸ் மாக்குகளில் மறுபுறம்

எங்கும் எதிலும் கலந்து கொள்ளாத
அமர இடமில்லாத யாருக்கும்
மூன்றாவது கண் முளைத்துவிடுகிறது
சட்டென்று

தொடுதிரையை சுரண்டிய விநாடி
எல்லையில்லா கருங்குழிக்குள்
இழுத்துப் போகிறது
ஒரு ஜீ பூம்பா பூதம்

ஒளியாண்டுகள் பயணத்தில்
திரும்ப வராத தொலைவிற்கு

 

2.காலம்

பிணைந்து கிடக்கும் சொற்களுக்குள்
உன் மூச்சுக்காற்றையே
அனுமதிக்க மறுக்கிறது மனது

பின்னிப் பின்னி இழையோட்டி
நெய்து முடிக்கப்பட்ட கவிதை
உன்னுடையதுதான் என்றாலும்
அதன் தாய்மை என்னிடம் தானே?

விரல் பிடித்து நடந்த காலங்களை நினைக்கையில்
ஒரு முழுவட்டமடித்து
இன்று பறக்கப்பழகிய பட்டாம் பூச்சியாய்
என் உள்ளங்கையில் உட்கார்ந்து கொண்டு
படபடக்கிறது பிரபஞ்சம்

காலம் மிகச்சிறிய நாய்க்குட்டியாகி
நானழைக்காமலே என் பின்னே
ஓடிவந்து கொண்டிருக்கிறது

இரைச்சலற்ற அருவியிலிருந்து மேலெழும்
நீராவிப்புகை வெளியெங்கும்
சித்திரம் தீட்டிக்கொண்டே மறைந்து போகும் நேரம்

சட்டென்று கண்களை மூடிக்கொள்கிறேன்

3.மாசற்ற புன்னகை

ஒரு மாசற்ற புன்னகைக்கு
நான் உலகத்தையே
தந்துவிடுவேன்
ஆனால் அது என்னுடையதில்லை

நீ என்னுடைய பிரத்யேகமான
உலகத்தை கேட்டாலும்
காட்டுவதற்கு ஒன்றுமில்லை
வாசலில் பூத்துக் கிடக்கும்
கொத்து மஞ்சள் அரளிப் பூக்களும்
அதில் தேனெடுக்கும்
கருநீல தேன் சிட்டுக்களையும் தவிர

நான் நிலவை காட்ட நினைக்கலாம்தான்
ஆனால் நினைக்கும் போதே
அது
மேகத்திற்குள் மறைந்து விடும்
சரி ஒரு கள்ளமற்ற புன்னகையை
காட்சிப்படுத்தலாமென்றால்
அது ஒளியாண்டுகளுக்கும் அப்பால்
புதையுண்டு கிடக்கிறது

என் கடவுளோ உள்ளே வருவதும்
வெளியேறுவதுமாக
கண்ணாமூச்சி
ஆடிக்கொண்டிருக்கிறார்

வேண்டுமானால்
அதிகாலைப் பனித்துளியைப் போல
சற்றும் மாசடையாத
எனதிந்த நிகழ்காலத்தை
அப்படியே உன்னிடம்
தந்து விடலாம்
ஆனால் அதுவும் கூட
உன் நினைவில்
புனிதப்படுத்தப்பட்டது தான்

4

சிறகு விரித்த பட்டாம் பூச்சியே
பறக்க மறந்து போகிறாய்
வானம் தத்தளிக்கிறது
உன் இறகுகளுக்கும் கீழே

இன்னொரு வண்ணத்துப் பூச்சியை
கனவு காணும் நேரமா இது?
முகத்தோடு முகம் முகர்ந்ததும்
முத்தம் தேனாக இனிக்கிறது

நட்சத்திரங்களின் போலித்தனங்களை நாம் மறக்கலாம்
அவைகள் ஒளிக் கிறுக்கல்கள்
தண்ணீரில் எழுதும் நீர் பூச்சிகள் தான் அசல் கவிஞர்கள்

நதிக்குள் ஒரு கல் சமாதி கொள்கிறது.
மனதில் இன்னொன்று

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *