கடலும் கிழவனும் (Kadalum Kizhavanum) – நூல் அறிமுகம்
ஆசிரியர் பற்றி:
வளைகுடா நீரோடையில் ஒரு பிரம்மாண்ட மார்லின் மீனுடன் போராடும் ஒரு வயதான மீனவனை மையப்படுத்திய இக்கதையானது “The Old Man and the Sea” என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் . ஆங்கிலத்தில் “எர்னெஸ்ட் ஹெம்மிங்வே” என்பவரால் எழுதப்பட்ட இந்த புத்தகம் 1953-ல் புனைவுக்கான புலிட்சர் விருதை பெற்றதோடு, 1954- ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
தமிழில் இதை எழுதியவர் ச.து.சு.யோகியார். மொழிபெயர்ப்பு நூல் என்று எண்ணும் அளவுக்கு இடமளிக்காமல் மொழி பெயர்த்துள்ளார். பேஸ் பால் , இன்னும் சில விளையாட்டு வீரர்கள் பெயர்களைத் தவிர நம்மூர் செம்படவர்களுக்கும் இவர்களுக்கும் வேறொரு வித்தியாசம் தோன்றாத அளவில் கதை நகர்கிறது.
நூல் பற்றி:
துணையின்றி முதுமையில் வாழும் கூடவே வறுமையில் வாழும் ஒரு செம்படவனின் நெஞ்சுரமிக்க கதை. உண்மையில் இப்படி ஒரு தன்னம்பிக்கை மனோபாவம், அதுவும் இந்த நிலையில் வாழக்கூடிய ஒரு மனிதனுக்கு இருக்குமா என்று சிந்திக்க வைக்கிறது. வாழ்வை வெறுத்த போராட்டமாக மூன்று நாள் கடலில் தத்தளிக்கும் காட்சிகள் சாந்தயகா மேல் நன்மதிப்பையும் உருவாக்குகிறது. மனம் சோர்வடையும் நேரம் எல்லாம் இந்த மீனவனை நினைத்துக் கொண்டால் போதும் தானாகவே நெஞ்சில் உத்வேகம் பிறக்கும்.
ஒரு முறை இந்த கதையை வாசித்தால் எந்த ஒரு யூடியூப் காணொளிகளிலும் உங்களை உத்வேகப்படுத்த யாருடைய தன்னம்பிக்கை பேச்சும் தேவைப்படாது. அப்படி என்னதான் செய்தான் இந்த வயோதிகன் என்று நீங்கள் சிந்திக்கின்றீர்கள் தானே…?
ஒன்றா.. இரண்டா.. அவன் தந்த தன்னம்பிக்கை வார்த்தைகள், செயல்கள். வாருங்கள் ஒன்று இரண்டை பார்ப்போம்.
பனை ஓலையால் செய்யப்பட்ட வீடு அதில் நீர் மொண்டு குடிக்க கூட பானை இல்லை. கட்டிக்கொள்ள ஒரே ஒரு கந்தல் துணி. படுத்துறங்க அவ்வப்போது கிடைக்கும் செய்தித்தாள். போட்டுக்கொள்ள கிழிந்து இணைத்துக் கோர்க்கப்பட்ட ஒரு சட்டை. மீன்பிடிக்க ஒரு படகு , அதை வலிப்பதற்கு தேவையான துடுப்பு, கயிற்றுச் சுருணை, குத்தீட்டி, எறிவலை, ஒட்டுப் போட்ட பாய்த் துணி, வளைச்சுருள். இதைவிட ஒரு செம்படவனுக்கு என்ன தேவை இருக்கப் போகிறது என்று நினைக்கின்றீர்களா..?
இருக்கிறது . அவனுக்கு மிகவும் பிடித்த விளையாட்டான பேஸ் பாலைக் கேட்பதற்கு ஒரு ரேடியோ இல்லை . கைக்கு உதவியாக வயிற்றுக்கு நேரத்துக்கு சோறு போடும் மனையாள் இல்லை . மீன்பிடிக்க செல்வதற்கு துணையாக இறந்து போன அவன் மகன் இல்லை. இப்படி எல்லாம் அவனுக்கு பல இல்லை என்றாலும் அவனிடம் அதிகமாக இருந்தது ஒன்றே ஒன்று . அது தன்னம்பிக்கை . கூடவே கிழவனை அதிகமாக விரும்பும் ஒரு பையன்.
அதிர்ஷட தேவதை தன் பக்கம் இல்லை என எப்போதாவது நினைத்தாலும் என்றாவது ஒருநாள் தான் ஒரு பெரிய மீனைப் பிடிப்பேன் என்று கனவு காண்கிறார். தன் மேல் யாரும் அனுதாபம் கொள்ளக்கூடாது என்பதிலும் , தான் யாரிடமும் சென்று இரவல் கேட்கக்கூடாது என்பதிலும் அவரின் கர்வம் தெரிகிறது. கிழவனை பாதுகாக்கும் இயேசுநாதராக அந்த சிறுவன் வம்பு பேசிக்கொண்டு கிழவனுக்கு பசியாற்றும் போதெல்லாம் பெறாத மகனாகவே தென்படுகிறான்.
எந்த மனிதனும் இந்த உலகில் தனிமையில் இல்லை என்பதை மூன்று நாள் கடலில் தத்தளிக்கும் போது வானத்தில் தெரியும் மேகக் கூட்டங்கள் , கடலில் தெரியும் பிற உயிரினங்கள் , பறந்து செல்லும் பறவை இனங்கள் என்று ஒவ்வொன்றோடும் உரையாடி தன் தனிமையை போக்கும் கிழவனால் அறிய முடிகிறது. கடல் மீது பறக்கும் எல்லா பறவைகளுக்கும் இரை கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆனால் அவைகளின் வாழ்க்கை எத்தனை ரணம் என்பதையும், வானில் தெரியும் நட்சத்திரங்கள் கடல் வழி பிரயாணத்துக்கு எப்படி உதவுகிறது என்பதையும் அறிய முடிகிறது.
கிழவனின் இத்தனை வருட கால மீன்பிடி அனுபவங்கள் அவன் கடல் வாழ் உயிரினங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் கூறும் விஷயங்களில் தெளிவாக, சோர்ந்து போகும் நேரம் எல்லாம் தன் மனதுக்கு தானே பேசி உத்வேகம் ஏற்றிக்கொண்டு , உற்சாகம் மூட்டிக்கொண்டு தூண்டிலில் மாட்டிய மீனை கரை சேர்த்தே ஆவேன் என்று முயலும் ஒவ்வொரு நிமிடமும் கதையின் பரபரப்பை நம்மால் உணர முடிகிறது.
இந்த கதையின் வில்லன்கள் கடலில் வாழும் பேய்ச்சுறா மீன்கள் என்றாலும் கதாநாயகன் “ஒன் மேன் ஆர்மி” என்று சொல்லப்படும் அத்தனை பலம் வாய்ந்த கிழவன் தான். சுருணை மீன்கள் பற்றிய குட்டி மீன் பிடி கதை மைனாவை நினைவுபடுத்தியது. எதுவுமே இல்லாத இந்த கிழவனால் இத்தனை சாத்தியம் என்றால் , ஒன்று இரண்டு வசதிகளில்லாத நம்மால் எதுவும் சாத்தியம் என்பதும், நம் மீது நாம் நம்பிக்கை வைக்கவில்லையெனில் நம்மால் எதையும் செய்ய முடியாது என்பதையும் இக்கதை நமக்கு சொல்கிறது.
தனித்து கடலில் விடப்பட்ட இல்லையில்லை விரும்பி நடுக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற கிழவனை பிக் பாஸ் வீட்டுக்குள் மூன்று நாட்கள் வைத்து கண்காணிப்பது போல் கடலில் கிழவனை நான் கண்டேன்.
புத்தகம் கைவசம் இல்லை என்றாலும் பரவாயில்லை தமிழக அரசின் ஆறாம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் கதை உள்ளது. வாசித்து விடுங்கள்.
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர்: கடலும் கிழவனும்
ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெம்மிங்வே
தமிழில்: ச.து.சு.யோகியார்
பக்கங்கள்: 96
விலை : 100
பதிப்பகம்: ரிதம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/kadalum-kilavanum/
நூல் அறிமுகம் எழுதியவர் :
✍️பா விமலா தேவி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.