இன்று ஒருபக்கம் சுலபமாகவும் மறுபக்கம் பதட்டத்துடனும் பேசப்படுவதால் லெஸ்பியன் என்பதோ, ஹோமோ என்பதோ நேற்று முந்தாநாள் துவங்கியிருக்கும் என்று அர்த்தப்படுவதில்லை.

அதிலும் ஒரு குடும்பத்தில் ஆறு ஏழு பிள்ளைகளைப் பெற்று ஒரு கூட்டுக்குள் அல்லது பொந்துக்குள் அனைவரையும் வளர்த்து ஆளாக்க வேண்டியிருந்த இந்திய சூழலில் சில சிக்கலான பாலியல் நடவடிக்கைகள் இருக்கவே இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நான் ஆறாவது வகுப்பில் இருந்தேன். ஒரு நண்பன் இருந்தான். காலையில் எழுந்து விறுவிறுப்புடன் எழுந்து பள்ளிக்கு ஓடுவதே அவனைப் பார்ப்பதற்கு தான் என்கிற நிலைமை இருந்தது. அவனுக்கும் கூட இருந்திருக்கலாம். இரண்டு பேரும் பொசிசிவ் என்பதாக இன்று அதிகமாக உருட்டப்படுகிற டிரெண்டில் இருந்திருக்கிறோம். தினமும் சண்டை. ஒருநாள் அப்படி பிரிந்தது பிரிந்தது தான். நான்கு வருடங்கள் ஒரே வகுப்பில் இருந்து பள்ளியை விட்டு வெளியேறும் வரையில் பேசிக் கொள்ளவில்லை. சண்டைக்கு என்ன காரணம் என்பதை இருவருமே மறந்து விட்டோம். அங்கே என்ன நிகழும்போதும் நான், அவனை அவன், என்னை பார்த்துக் கொள்ளாமல் இருந்ததே இல்லை. அதற்கு அப்புறம் பத்து வருடம் முடிந்து விபத்து போல மிகவும் அகஸ்மாத்தாக ஒரு திருமணத்தில் முகத்தோடு முகம் பார்த்துக் கொள்ள நேர்ந்தபோதும் திசைக்கு ஒருவராக தெறித்தோம். நெஞ்சு அது பாட்டுக்கு துடித்தது நினைத்தால் இன்று சிரிப்பு வருகிறது. எனது பெண் தோழிகள் பலரும் இதைக்காட்டிலும் பயங்கரமான நட்புக் கதைகளை வெகுளித்தனமாக சொல்லி இருக்கிறார்கள். அதில் ஒரு பகுதி உண்மைகள் மறைக்கப்படும் என்பதையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5 Malayalam movies on female buddies | Veere Di Wedding | female ...

அது இயற்கையில் இருக்கிறது.

இப்படம் அதைக் குறித்தது தானா என்பதைக் கொஞ்சம் ஆராய வேண்டியிருக்கிறது.

சாலியும், நிம்மியும் தோழிகள். காண்வென்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவகி என்கிற ஆசிரியையுடன் இடைவிடாமல் மோதிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது. அவ்வப்போது மோதிக் கொண்டுமிருக்கிறார்கள். தேவகியைப் பழி வாங்குவதற்காக பள்ளி எஸ்கேஷனில் இருந்து தலைமறைவாகிறார்கள் என்கிற வரையில் எல்லாம் சரிதான். ஒன்றை யோசிக்க வேண்டியிருந்தது. இரண்டு பெண்களுக்குமே அலுப்பூட்டும் குடும்பப் பின்னணி. அள்ளி அணைத்துக் கொள்கிற ஈரம் சுரக்கும் மனப்பான்மையுடன் யாருமற்ற வெறுமையில் இவர்கள் ஒருவருக்கொருவர் மனதினால் பின்னிப் பிணைந்து கொண்டு விட்டார்கள். இதுவரை இருந்த வாழ்வை விடுத்து வெட்ட வெளியில் நின்றாலுமே கூட, அவர்கள் தாங்கள் இருவருமாக இருக்கிற சுதந்திரத்தை விரும்பினார்கள் என்பது வெளிப்படை. அவர்கள் கேள்விகள் இல்லாத வெளியில் சந்தோஷமாக இருக்கிறார்கள் எனபது திரைக்கதையில் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுக்குள் ஒரு காதல் உலாவுகிறது என்று குறிப்பிடப்படவில்லை. அல்லது ஒருவர் மற்றவர் உடலில் ஒரு நோட்டத்தினால் கூட தீண்டவோ திளைக்கவே இல்லை.

அவர்கள் அவர்களுடைய வயதுக்கு வேண்டிய அறிவுடன் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

படம் துவங்கி ஒரு மணி நேரத்துக்கு அப்புறம் அவர்களுக்கு நடுவே ஹரி என்கிற ஆணின் இடையீடு நேர்கிறது. 

அவன் நீங்கள் யார் என்று விசாரிக்கிறான். பெண்கள் தங்களுக்குள்ளில் நிலவுகிற ஒரு சின்ன பயத்தினால் அவனுக்கு அவர்களிடம் இன்னும், இன்னும் பேசுகிற சௌகரியம் கிடைக்கிறது. சாலி அவனைக் கட்டுபடுத்துவதற்குள் நிம்மி அவனிடம் மனதை பறிகொடுத்து விடுகிறாள். நாட்கள் செல்லும்போது நிம்மியை சாலி தடுப்பதில்லை. அவளுடைய மயக்கத்தை அங்கீகரிக்கவே செய்கிறாள். அவன் இவளுக்கு சரியானவன் தானா என்று சோதனைகள் தான் செய்து பார்க்கிறாள். முழுமையாகவே அவன் பக்கம் சாய்ந்து விட்ட அவனிடம் நமது ரகசியங்களைக் கூட நீ சொல்லிக் கொள்ளலாம் என்று கூட அனுமதியே கொடுக்கிறாள் சாலி. ஆனால் அது விஷயத்தை வேறு பக்கம் திருப்புகிறது. நீங்கள் இருவரும் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்று ஹரி சொல்லும்போது நிம்மி அதற்கும் சம்மதிக்க வேண்டியதாக இருக்கிறது.

Desatanakkili Karayarilla (1986) A Review plus tribute to ...

எல்லாவற்றிற்கும் நிம்மி அவன் மீது கொண்ட காதல் தான் காரணம்.

படத்தில் ஹரியின் வருகைக்கு அப்புறம் வேறு ஒரு பெரிய கதை இருக்கிறது. அதன்படி ஹரி இப்போது தேவகியின் காதலன்.

பள்ளிக்கு திரும்புவதாக வாக்கு கொடுத்த பிறகு தான் நிம்மி அவர்களின் காதலை அறிகிறாள்.

நாளைக்கு அவர்களைக் கூட்டி செல்ல பள்ளியின் ஆட்கள் வரவிருக்க சாலி நிம்மியிடம் வா இங்கிருந்து சென்று விடுவோம் என்கிறாள். நிம்மி அதற்கு தயார் இல்லை. நிம்மியை விட்டுவிட்டுக் கிளம்பின சாலி தன்னையறியாமல் திரும்பி வரும்போது அவளுக்கு அப்போது தான் தனக்கு நிம்மி எவ்வளவு முக்கியம் என்று செருப்பால் அடித்தது போல தெரிய வருகிறது. கதவை உடைக்கிற மாதிரித் தட்டுகிறாள். கதவைத் திறக்கிற நிம்மியும் சாலி தனக்கு எவ்வளவு வேண்டும் என்பதறிந்து தூக்க மாத்திரைகளை உட்கொள்ளவிருந்தாள். இருவரும் தங்களுக்குள் ஓடுவதை புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் கதை.

Old Malayalam Movie Stills -Deshadanakili Karayarilla - OLD ...

அவர்களுக்குள் கண்டிப்பாக அது இருக்கிறது.

அது இப்போது வெளிப்பட்டும் விட்டது.

இதற்கு மேல் அவர்கள் வெறும் தோழிகளாக இருக்க மாட்டார்கள். 

ஆனால், அப்படித்தான் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிந்து விடுமா என்ன?  

ஒரு சிஸ்டமாக அமர்ந்து விட்ட , அதனால் முறைப்படுத்தப்பட்ட ஆண் பெண் உறவைத் தவிர மற்றெதுவும் உலகின் கண்களால் கண்காணிக்கப்படும், முணுமுணுக்கப்படும், முற்றுகையிடப்படும், முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்படும் என்பதை யாவருமே அறிவோம். ஆயின் பத்மராஜன் வழக்கம் போல அதில் அதிசயம் செய்திருந்தார். இரண்டு பெண்கள் ஒரு உலகிலிருந்து வெளியேறி வந்து விட்டதால் , வேறு ஒரு புறம், அதற்கு வேறு ஒரு தொடர்ச்சி, வேறு ஒரு பாதிப்பிருந்தது. அதனால் தேவகியும் ஹரியும் இணைகிறார்கள். வெளியேறிப் போன இரண்டு பெண்களையும் சமாதானம் செய்து வைத்து அவர்களை கூட்டத்தோடு கூட்டமாக இணைக்கப் போகிற ஹாப்பி எண்டிங் ஒரு இயல்பான நடவடிக்கை அல்ல என்பதை மறுக்க முடியுமா? இந்தப் படத்தில் வேறு ஒரு  வாழ்க்கை வாழப் போகிற பெண்களுக்கு அதுதான் எதிராயிருக்கிறது. வில்லன்களே இல்லை, நமது வாழ்வின் முறைகள் தான் வில்லன் முகம் எடுத்துக் கொள்கிறது.

பத்மராஜன் ரொம்ப சாதாரண மனிதர்களின் கழுத்து திருப்பலை எல்லாம் குறை சொல்லிக் கொண்டிருக்கவில்லை.

DESATANAKKILI KARAYARILLA | malayalaulagam

இரண்டு பெண்களுக்கு நடுவிலான உறவை சொல்ல வருகையில், எவ்வளவு உயர்ந்த ரகமான படமாயினும் அதற்கு என்று குறிப்பிட்ட டெம்ப்ளேட் உலகம் முழுக்க உண்டு. பத்மராஜன் அதை அறியாமல் இருந்திருக்க மாட்டார். அதில் முதல் நிபந்தனை, இரண்டு பெண்களில் ஒருத்தி கொஞ்சம் ஆண் தன்மை கொண்டிருப்பாள். சாலி அப்படி தலைமைப் பதவி வகிக்கிற பெண். நான் எப்போதும் உன்னைப் பார்த்துக் கொள்வேன் கண்ணே டைப்பில் அவளுடைய பார்வை மற்றவள் மீதிருக்கும். இக்கட்டான சூழல்களில் அதை சொல்லவும் செய்கிறாள். அவளுடைய மகிழ்ச்சிக்காக தனக்கு உறுத்தல்கள் தோன்றக் கூடிய அனைத்தையும் விட்டுக் கொடுக்கிறாள். தலைமறைவு வாழ்க்கையில், யாரும் அடையாளம் கண்டு கொள்ளாதிருக்க கூந்தலை வெட்டிக் கொள்ள வேண்டும் என்கிறவள் அதை தனக்கு மட்டுமே செய்து கொள்கிறாள். புறப்பட்ட இடத்துக்கே சென்று சேர வேண்டிய சூழல் உண்டாகி வருகையில், நிம்மியை விட்டு செல்லுகிற சாலி தனிமையில் கூட தனது சுதந்திரத்தை அனுபவித்துக் கொள்ள முடியும், அவள் அப்படிப்பட்ட ஆளுமை, ஆனால் நிம்மியின் தனிமைக்கு பயம் கொண்டு தான் அவள் ஓட்டமாக ஓடி திரும்பி வருகிறாள், ஆம் அவளை பாதுகாப்பது என்கிற ஆணின் மனம் அவளில் படிந்திருக்கிறது. அது திரைக்கதையில் அவ்வளவு லாவகமாக வந்திருக்கிறது.

சாலியின் மனம் வியப்பு கொள்ள வேண்டியது தான். படம் முழுக்க அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. கல்லூரியில் பொழுது போக்கு நிகழ்வின் நடுவே பாம்பைக் கொண்டு வந்து விடுவது உள்பட்ட விஷயங்களில் வெளிப்படுவது குறும்போ சந்தோஷமோ மட்டுமல்ல. அதில் உள்ள தீவிரம், அவள் கொண்டிருக்கிற தனிமையைக் குறிக்கிறது. நிம்மி தன்னைப் பார்ப்பவர்களிடம் எல்லாம் அன்பைத் தேடி வருத்தம் கொள்ள வேண்டி வருகிறது என்றால், சாலி முற்றிலும் அதற்கு எதிரானவள். உலகினோடு அவளுக்கு எவ்விதமான பந்தங்களும் இல்லை. அவள் கூட்டத்தில் கலக்கவே மாட்டாள். யாரிடமும் கொஞ்சம் நடித்து தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வாளே தவிர அவளால் அவர்களை விரும்ப முடியாது. நிம்மிக்கு பிடித்திருக்கிறது என்கிற ஒரு காரணத்தை தவிர அத்தனை நல்ல குணங்களும் கொண்ட ஸ்வீட் பாய் ஹரியை அவள் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை. மனசார மன்னிப்பு கேட்க முனைகிற தேவகியிடம் நடக்கப் போவது பற்றி என்னவெல்லாம் கறபனை செய்து அவளிடம் மோதுகிறாள் என்பதைப் பார்க்க வேண்டும்.

Old Malayalam Movie Stills -Deshadanakili Karayarilla - OLD ...

சாலி என்கிற கதாபாத்திரம் ஒரு சாதனை என்று கொள்ள வேண்டும். பத்மராஜன் அதில் ஒரு இடத்திலும் சமரசம் செய்து கொள்ளவேயில்லை என்பதை முக்கியமாக சொல்லி விட வேண்டும். ஒரு எழுத்தாளன் தனது படைப்பு பொலிவுற வேண்டும் என்பதற்காக சில கேரக்டர்களை ஊனமாக்கி விடுவதோ, பலி கொடுப்பதோ நிகழ்ந்து விடும் என்கிற ரூட்டில் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை என்கிறேன்.

அதனால் தான் படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு கிளைமாக்ஸ் கிடைத்தது. படத்தின் பெயர் தேஷாதனாகிளி கரையாரில்லா ( Deshadanakkili Karayarilla)

கேரள திரைப்பட விழாவில் தான் நான் ப்ளு இஸ் த வார்ம்ஸ்ட் கலர் பார்த்தேன். கூட்டம் வந்து குவிந்ததால் அங்கிருந்து விலகி சென்று, மூன்றாம் முறையாகத் திரையிட்ட போது  படத்தைப் பார்க்க முடிந்தது. அவ்வளவு ஜனம் ஒரு நீண்ட படத்தை ஆண்களும் பெண்களுமாக கூட பார்த்த பிறகும் அது பற்றின ஒரு ஏளனத்தை என்னால் கவனிக்க முடிந்தது. உலக சினிமா ரசிகர்கள் என்றால் சொல்ல வேண்டுமா, அவர்கள் அத்தனை பேரும் மாஸ்டர்கள் தானே, அப்படியிருந்தும் இந்த இளக்காரம் எங்கிருந்து கிளம்புகிறது என்று யோசித்தவாறு இருந்தேன். படத்தில் தவிர்க்க முடியாமல் இருந்த பாலியல் காட்சிகளுக்காகவா? இந்த இணைய காலத்தில் அப்படி எல்லாம் அதற்கு ஒரு மதிப்பு இருந்து விட முடியாது. பின் என்ன? அவர்களால் பெண்ணோடு பெண் இருந்து விட முடியும் என்பதில் நம்பிக்கையில்லை. ஆண்களில்லாமல் எதுவும் ஆகாது என்று கருதுகிறார்கள். அவர்கள் சேருவதில் பிரிவதில் எல்லாம் என்ன இருக்க முடியும் என்று உதாசீனம் செய்கிறார்கள். படத்தில் இருந்த அடேல் தன்னுடைய வலியுடன் படத்தின் இறுதியில் தனிமையாக நடந்து செல்லும்போது இதென்ன பிரம்மாதம் என்று பலருக்கும் தோன்றியிருக்கிறது.

யாராவது ஒரு ஆணுடன் இணைந்து கொண்டு விட்டால் அது முடிந்து போகிற பிரச்சினை தானே என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடும்.

அப்படி எல்லாம் முடியாது என்பதை எண்பத்தி ஆறில் சொல்லி இருக்கிறார் பத்மராஜன்.

மகிழ்வான கதை முடிவிற்காக ஹரியும், தேவகியும், பள்ளிப் பொறுப்பாளர்களுமாக படியேறி வந்து, கதவைத்திறந்து பார்க்கையில், சாலியும் நிம்மியும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு படுத்திருக்கின்றனர்.

இறந்தும் போயிருக்கின்றனர்.

***     

 

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-12/

தொடர்13ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-13/

     

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *