ஒரு திரைப்படமும் ஒன்னரை லட்சம் புற்று நோயாளிகளும்.(One movie and one and a half lakh cancer patients) - The Conqueror - https://bookday.in/

ஒரு திரைப்படமும் ஒன்னரை லட்சம் புற்று நோயாளிகளும்.

ஒரு திரைப்படமும் ஒன்னரை லட்சம் புற்று நோயாளிகளும்.

– ஆயிஷா இரா நடராசன்

ஹிரோஷிமா நாகசாகி அணு குண்டு வெடிப்புகள் குறித்து இனி எழுதுவதற்கு ஒன்றுமில்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஜெர்மன் தேசத்திலிருந்து ஜப்பானில் வாழ்ந்து கொண்டிருந்த கிருத்துவ பாதிரியார் “REV HUBERT SCHIFFER” தி லிட்டில் பாய் என்னும் அணுகுண்டு ஹிரோஷிமாவின் மீது வீசப்பட்டபொழுது தப்பிப்பிழைத்தவர். அவர் ஜெர்மன் மொழியில் அப்போதே எழுதி இப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஒரு கட்டுரையை சமீபத்தில் வாசித்தேன்.

ஒரு யுத்தத்தின் முடிவில் தான் வெற்றி பெற்றதை அறிவிப்பதற்காக ஒரு தேசம் இன்னொரு தேசத்தை தாக்குவது என்பது அரசியல் சம்பந்தமான ஒரு விஷயம். எத்தனை கொடூரமானதாக இருந்திருக்க வேண்டும் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியவில்லை ஆனால் இப்படித்தான் அது கொடூரமாக நிகழும் என்பது தெரிந்தும் அது எத்தனை கொடூரமாக இருக்கிறது என்பதை கணக்கிடுவதற்கும் உற்றுநோக்கி அறிவியல் ரீதியில் பதிவு செய்வதற்கும் 112 விஞ்ஞானிகள் கொண்ட ஒரு குழு அணுகுண்டின் கூடவே வானத்தில் வட்டமடித்தது என்கிற ஒரு தகவலை பாதிரியார் SCHIFFER குறிப்பிடும் பொழுது என்ன ஒரு கொடூர புத்தி என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. அறிவியல் ஆய்வு என்பது மனித முன்னேற்றத்திற்கானது என்கிற மனநிலையோடு இதை பார்க்கும் பொழுது உண்மையிலேயே இதை ஏற்க முடியவில்லை. இந்த பேரழிவு அணு அறிவியல்வாதிகள் விஞ்ஞானிகளா என் றும் கேட்கத்தோன்றுகிறது. ஆனால் நிலைமை இத்தோடு முடியவில்லை.

சரி இந்த பேரழிவுக்கு பிறகாவது அணு சோதனைகள் நிகழ்த்துவது நிறுத்தப்பட்டதா என்கிற கேள்வியோடு பாதிரியார் SCHIFFER அவர்களுடைய கட்டுரை முடிவடையும் அதற்கு பதில் சொல்லும் விதமாக இன்றைக்கு அவர் இல்லை என்றாலும் அவருக்கு சில தகவல்களை சொல்லும்விதமாக நானே இந்த கட்டுரையை எழுதி பார்த்தேன். லட்சக்கணக்கானவர்களை காவு வாங்கிய அணுகுண்டு வீசப்பட்ட அந்த நாளுக்குப் பிறகும் தொடர்ந்து அணு குண்டுகளை அடுத்தடுத்து வெடிக்க செய்த வரலாற்றின் கருப்பு பக்கங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன். ரஷியாவும் அமெரிக்காவும் ஃப்ரான்ஸ் நாடு உட்பட சில நாடுகள் திட்டமிட்டு இப்படி அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தி கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு நம் நாடும் விதிவிலக்கல்ல என்பது எவ்வளவு பெரிய அவலம். சரி விஷயத்திற்கு வருவோம்.

OPERATION PLUMBBOB அதாவது (ஆப்பரேஷன் ஃப்ளம்பாப்) என்பது குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அமெரிக்காவின் நிவேதா பாலைவனம் பகுதியில் உள்ள ஒரு ஊரைத் தேர்வுசெய்து அங்கே நூற்றுக்கணக்கான அணுகுண்டுகளை வீசி சோதித்துப் பார்ப்பதற்கான திட்டத்தின் பெயர் தான் அது. இதற்கும் ஒரு திரைப்படத்திற்கும் சம்பந்தம் உள்ளது. எப்படியெல்லாம் மக்களை அவர்கள் ஏமாற்றினார்கள் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு சாட்சி. அணுகுண்டு வீசி அங்கே இருப்பவர்களுக்கு என்ன ஆகிறது என்பதை சோதனை செய்வதை ஒரு அறிவியல் என்று கருதி அந்த அறிவியலுக்கு மக்களை காவு வாங்குவதற்கு ஏதோ ஒரு பெரிய திரைப்பட ஷூட்டிங் நடப்பது போல ஒரு மாய நாடகத்தை நடத்தி நிஜ ஷூட்டிங் ஏற்பாடுசெய்து லட்சக்கணக்கானவர்களுக்கு நோயை ஏற்படுத்தி எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அவ்விதமாக இறந்து போவதற்கு ஒரு திட்டம் காரணமாக இருந்தது என்றால் அதுதான் அமெரிக்காவின் ஆப்பரேஷன் ஃப்ளம்பாப் தி கண்கரர் (THE CONQUEROR) என்று ஒரு திரைப்படம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்தது இதன் பிரதான பாத்திரத்தில் நடித்து இருந்தவர் மிக பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜான் வைன் JOHN WAYNE இவர் எவ்வளவு முக்கியமானவர் என்றால் அந்த காலகட்டத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பை பாராட்டுவதற்கு அவர்தான் இந்தியாவின் ஜான் வைன் என்று பிரபலமாக பலர் வர்ணித்தது உண்டு.

ஒரு திரைப்படமும் ஒன்னரை லட்சம் புற்று நோயாளிகளும்.(One movie and one and a half lakh cancer patients) - The Conqueror - https://bookday.in/

உலகிலேயே வரலாற்றிலேயே மிக மோசமான படம் என்று பிற்காலத்தில் தி கண்கரர் வர்ணிக்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் இந்த படத்தில் செங்கிஸ்கான் எனும் வீரனாக நடித்தவர்தான் ஜான் வைன். இந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவர் முற்றிலும் தவறாக பயன்படுத்தப் பட்டதாக பரவலாக பின் நாட்களில் வர்ணிக்கப்பட்டது எழுத்தாளர் ஆஸ்கார் மில்லார்ட் இந்த திரைப்படத்தின் கதையை எழுதியவர். கதை அருமையானது தான் மங்கோலிய தலைவர் தே முஜின் பின்நாட்களில் செங்கிஸ்கான் என்று அழைக்கப்பட்டார் என்பதை நாம் அறிவோம். இந்த மகா வீரன் தோடர்களின் தலைவரது மகளை திருடிச்சென்று ஒரு போரை தூண்டுகின்றான் என்பதுதான் சுருக்கமான கதையின் முதல் பகுதி. இந்த படத்தில் மொத்தம் 800 குதிரை வீரர்கள் தேவைப்பட்டார்கள் இந்த திரைப்படத்தின் இயக்குனர் டிக் பவால் திரைப்படத்தை எடுப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது வரை எல்லாம் சரியாக சென்றது இடையில் இயக்குனர் டிக் அமெரிக்காவினுடைய அணு ஆராய்ச்சி விஞ்ஞான கூடத்தின் தலைமை அதிகாரியை சந்திக்கிறார் இந்த திரைப்படத்தை எடுப்பதற்கான பாதி விலையை தாங்கள் தருவதாக அவர்கள் அறிவிக்கிறார்கள். எனவே இந்த திரைப்படம் களம் முழுவதையும் எடுப்பதற்கு நேவதா. பாலைவனம் படம் எடுப்பதற்கு தேர்வு செய்யப்பட்டது. 1953 ஆம் ஆண்டில் மே மாதத்தில் ஹாரி என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு வெடிப்பு சோதனைகளை இந்த இடத்தில் திரைப்படம் எடுக்கப்படும் குழுவினர் அங்கு இருக்கும் பொழுதே செயல்படுத்துவது என்று அமெரிக்க அணு ஆராய்ச்சித்துறை முடிவு செய்தது. இந்த விஷயம் திரைப்பட குழுவுக்கு தெரியாது.

ஒரு திரைப்படமும் ஒன்னரை லட்சம் புற்று நோயாளிகளும்.(One movie and one and a half lakh cancer patients) - The Conqueror - https://bookday.in/
ஹாலிவுட் நடிகர் ஜான் வைன் JOHN WAYNE

 

திரைப்படத்தை தயாரித்தவர் ஹாரர்டூ ஹவுஸ். என்பவர் உட்டா (UTAH) என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு ஊரில்தான் அத்தனை பேரும் இருந்தார்கள் இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகின்ற அந்த காலகட்டத்தில் தினந்தோறும் அணுகுண்டு சோதனை வெடித்து நிகழ்த்தப்பட்டது. அணுகுண்டு சோதனை வெடித்து நிகழ்த்தப்படும் இடத்திற்கும் திரைப்பட குழுவினர்கள் தீவிரமாக உழைத்து படம் எடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கும் இடையே 30 – 40 மைல்கள் கூட தூரம் இல்லை. நேரடியாக இந்த வெடிப்பில் யாரும் சாகவில்லை என்று வேறு பிற்காலத்தில் ஒரு சால்ஜாப்பு கூறப்பட்டது.

நாம் தி கண்கர் திரைப்படம் ஷூட்டிங் இடத்திற்கு திரும்புவதற்கு முன் அந்த கால கட்டத்தில் அணு குண்டு சோதனைனுடைய கதிர்வீச்சு மிக எளிதாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்கிற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நான் மேரி கியூரி அம்மையாரிடம் இருந்து தொடங்கலாம்.. மேரிகியூரி அம்மையார் இயற்கையாக முதுமை வந்து இறந்து போனதாக பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல தன்னிடம் இருந்த ரேடியம் யுரேனியம் போன்ற கதிர்வீச்சு பொருட்கள்ல் இருந்து வெளிவந்த நச்சுக் கதிர்வீச்சினால் லுகேமியா வந்து இறந்து போனவர் மேரி கியூரி. அந்த நாட்களில் அதுகுறித்த அதிகம் விழிப்புணர்வு இல்லாமல் தன்னுடைய ஆய்வக கோட் பாக்கெட்டுகளில் விதவிதமான கதிர்வீச்சு கற்களை அவர் வைத்துக் கொண்டிருந்தார் உதாரணமாக ரேடியம் 226 மிகக் கொடுமையானது அதை விட ரேடியம் 228 இவற்றை சர்வ சாதாரணமாக தான் போக முடியாது இருக்கலாம் அவர் தன்னுடைய சட்டை பாக்கெட்டில் போட்டு எடுத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தார். இப்போது பிரான்ஸில் அவருடைய பொருட்களை கதிர்வீச்சு வெளிவராத பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருக்கிறார்கள் அதை பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கும் உடைகளைக் கொடுத்து அதை போட வைத்து தான் அங்கு அருகில் அழைத்துச் செல்கிறார்கள் என்பதை நான் பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் அந்த காலகட்டத்தில் கதிர்வீச்சை வெளியிடுகின்ற பொருட்களை அற்புதம் என்று பலரும் முகத்தில் பூசிக் கொண்டார்கள் இதை விட கொடுமை கில்பர்ட் அண்ட் கம்பெனி என்கிற ஒரு நிறுவனம் தான் ஏற்பாடு செய்த சுற்றுலா பயணங்களின் பொழுது பலரை அழைத்துக்கொண்டு போய் கதிர்வீச்சு தன்மை கொண்ட நீச்சல் குளங்களில் பளபளவென்று ஜொலித்த தண்ணீரில் குளிக்க வைத்து புதிய அனுபவத்தை கொடுத்துக்கொண்டிருந்தது. இது மிக மிக பிரபலம் ஆகவும் இருந்தது அந்த காலகட்டத்தில் இப்படி வந்தவர்கள் பெரும்பாலும் அனைவருமே பிற்காலத்தில் புற்று நோய்க்கு பலியானார்கள்.

இன்னொரு விஷயம் அமெரிக்கா ஐரோப்பா ரஷ்யா உட்பட அந்த காலத்தினுடைய காலனி என்று அழைக்கப்படும் செருப்புகள் விற்கும் கடைகளில் ஒருவகையான கதிர்வீச்சு கருவி வைக்கப்பட்டு இருந்தது நீங்கள் ஷூவை போட்டு பார்க்கும் பொழுது அந்த கருவியில் இருந்து எக்ஸ் ரே மாதிரி எடுப்பார்கள் நீங்கள் அருகிலிருக்கும் திரையில் உங்கள் கால் அந்த ஷூக்குள் எவ்வளவு கச்சிதமாக இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளலாம். இதனால் வெளிப்படும் கதிர்வீச்சும் அணுக்கதிர்வீச்சு தான் இந்த கடைகளைக்கு போன பலர் புற்றுநோய் வந்து இறந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் கால தாமதமாக திரைப்படம் வெளிவந்து ஓஹோவென்று ஓடாவிட்டாலும் மிகப் பிரபலமான நடிகர் நடித்த படம் என்பதால்  இந்த படம் தயாரிக்கப்பட்ட ஷூட்டிங் நடந்த இடங்கள்.. திடீரென்று அமெரிக்க அனு துறையினரால் சுற்றுலா தளமாக மாற்றப்பட்டது தான் மிகப்பெரிய கொடுமை. இவ்விடம் அந்த இடத்திற்கு சுற்றுலா அழைத்து வருபவர்களை டவுன் விண்டர்ஸ் என்று அணு ஆய்வுத்துறை அழைத்தது அமெரிக்காவுக்காக அறிவியல் சோதனைகளுக்காக மிகப்பெரிய அளவில் உதவுகிறார்கள் என்று அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் கொடுத்தார்கள். ஹிரோஷிமா நாகசாகியோடு ஒப்பிடும் பொழுது ஹாரி என்று பெயரிடப்பட்ட அந்த குண்டுகள் ஜப்பானை விட அதிகமான கதிர்வீச்சை வெளியிட்டன என்பது தான் உண்மை அங்கிருக்கும் தண்ணீரை குடித்து அங்கு கிடைத்த இறைச்சியை உண்டு மேலும் மேலும் தனக்கு தானே இந்த சுற்றுலா பயணிகள் ஆபத்தை ஏற்றுக் கொண்டார்கள் இந்த சூழ்நிலையில் திடீரென்று இன்னொரு திட்டம் அமெரிக்க அனு வித்தகர்களால் உருவாக்கப்பட்டது.

ஆப்பரேஷன் பிளம்பாப் செயல்திட்டத்தில் PASCAL B (பாஸ்கல் பி) என்று அழைக்கப்படும் கவர்ச்சிகரமான ஆனால் அதே சமயம் கொடூரமான ஒரு திட்டம் இணைக்கப்பட்டது ஆகஸ்ட் மாதம் 1957 ஆண்டில் இதன் திட்ட இயக்குனராக ராபர்ட் பரௌலி நியமிக்கப்பட்டார். அதே பாலைவன தீவுகளின் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சற்று அருகே 51 அடி ஆழமாக ஒரு குழி வெட்டப்பட்டது அதையும் சினிமா எடுப்பதற்கு கம்பெனிகள் போட்டி போட்டன. அங்கிருந்து 900 கிலோ யுரேனியம் அடைக்கப்பட்ட ஒரு குண்டுக்கு மேலே இரும்பு மூடி அமைக்கப்பட்டு ஒரே ஒரு குண்டு வெளியேறும் அளவிற்கான துளை போடப்பட்டு ‘விண்வெளிக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளை அனுப்புகின்ற சாதனை’ என்கிற பெரிய விளம்பரத்தோடு இந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள்.. மூடி மடாரென்று வெடித்து வேகமாக வானத்தை நோக்கி சென்றது உண்மைதான். சென்ற வேகம் ஒரு நொடிக்கு 67 கிலோ மீட்டர் என்று கணக்கிடப்பட்டது ஆனால் அது வானை நோக்கி செல்லவில்லை அது ஆஸ்திரேலியாவில் எங்கோ விழுந்திருக்க வேண்டும் என்பது பெரும்பாலோர் கருத்து.. இல்லை இல்லை அது இந்நேரம் புளூட்டோ கிரகத்தை அடைந்திருக்கும் என்று அணு ஆராய்ச்சி வித்தகர்கள் அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு திரைப்படமும் ஒன்னரை லட்சம் புற்று நோயாளிகளும்.(One movie and one and a half lakh cancer patients) - The Conqueror - https://bookday.in/

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஜான் வைன் விரைவில் புற்றுநோய்க்கு பலியானார். அவரோடு அந்த திரைப்படம் எடுக்கின்ற இடத்தில் கலந்து கொண்ட அவர் குடும்பத்தின் உறுப்பினர்கள் மற்றும் குதிரைகள் குதிரை வீரர்கள் நடிகைகள என்று அடுத்தடுத்து 91 பேர் மட மடவென்று இந்த உலகை விட்டு பிரிந்து கொண்டிருந்தார்கள் அப்போதுதான் கதிர்வீச்சு என்பது நாம் உடலை பாதிக்கின்ற ஒரு அம்சம் இனி மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ராபர்ட் பெகதன் போன்ற பேராசிரியர்கள் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்கள். THE CONQUEROR திரைப்படத்தில் கலந்து கொண்ட துணை நடிகர்கள் மட்டுமல்ல சுற்றுலா தளம் என்று நம்பி அந்த இடத்திற்கு விஜயம் செய்த 1,10,000 பேர் ஏறக்குறைய அனைவருமே புற்றுநோயால் விரைவில் பாதிக்கப் பட்டார்கள்.

Top Ten John Wayne Western Movies : r/Westerns

தங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மிகவும் கால தாமதமாக1980 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு வழக்கு தொடரப் பட்டது எப்படியோ பத்தாண்டுகளுக்கு இழுத்து வழக்கு தொடர்ந்த ஸ்காட் மத்திசான் உட்பட இன்னும் பல 1000 பேர் புற்றுநோய்க்கு இறந்த பிறகு 1990 களில் அரை மனதோடு அமெரிக்கா RADIATION EXPOSURE COMPENSATION ACT .. அதாவது கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு வழங்கும் சட்டம் என்கிற ஒன்றை கொண்டுவந்து முதலில் யுரேனியம் தாது வெட்டி எடுக்கின்ற சுரங்கத்தினுடைய தொழிலாளர்களுக்கு 50,000 டாலர்களும் அதேசமயத்தில் ஆப்பரேஷன் பிளம்பாப் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 75,00 டாலர்களும் வழங்குவது என்று தீர்ப்பளித்தார்கள். முதலாவது ஜார்ஜ் புஷ் ஆட்சியின் பொழுது ஏறக்குறைய கண் துடைப்பிற்காக முதலில் 66 பேருக்கு வழங்கி தேசிய மீடியா க்களில் ஒரு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டு அத்தோடு மறக்கப்பட்டது.

இப்போது நாம் அடிக்கடி பார்க்கின்ற அணுகுண்டு வெடிக்கும் புகைப்படம் பாஸ்கல் பி வெடிப்பு படம் தான் என்பதை குறிப்பிட வேண்டும் ஒரு காலகட்டத்தில் முகப்பூச்சு பற்பசை முதல் காண்டம்கள் வரை அனைத்தையுமே கதிர்வீச்சு கொண்ட உலோகங்களால் தூவி தயாரித்து புற்றுநோய் விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வர்கள் உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா என்று கேட்கவில்லை உங்கள் பற்பசையில் கதிர்வீச்சு இருக்கிறதா என்று கேட்பதையே விளம்பரமாகவும் செய்து கொண்டிருந்தார்கள்.. நம்மக்கு நம்மவீதி வழியாக நடந்து போகிற ஒருவரின் சிகரெட் புகையே அணுகுண்டுதான் அந்த அளவிற்கு இன்று புற்றுநோய் என்பது மூவரில் ஒருவருக்கு வந்து ஹிட்லர் படை போல ஆக்கிரமித்து வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது… என்றாலும் ஒரு திரைப்படம் 1,00,000 புற்று நோயாளிகளை ( cancer) உருவாக்க முடியும் என்றால் அது அறிவியலின் சாதனையா வேதனையா என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *