கவிதைச் சந்நதம் 11: “அன்றாடங்களின் மீது கட்டப்பட்ட புனைவு மாளிகை” – நா.வே.அருள்

இது முகவரியின் காலம்.  அலைபேசி எண்தான் அடையாளம்.  அரசாங்கத்தையும் குடிமகனையும் இணைக்கும் இந்தக் கண்ணிகள் வேறெப்போதையும் விட இப்போது அதிகம் செயல்பாட்டில் உள்ளன. பழைய தலைமுறைகளிடம் முகவரிகள் உறவின் சங்கிலிகளாக இருந்தன. தாத்தா இறுதிப் படுக்கையில் இருக்கிறார்.  தாத்தாவிடமிருந்து பேரனுக்கு ஒரு முகவரி அரைகுறையாகக்  கையளிக்கப்படுகிறது. பேரன் அந்த முகவரியைத் தேடிச் செல்கிறான்.  கண்டடைந்தும் விடுகிறான். ஆனால் முகவரி மட்டுமே மிஞ்சுகிறது. மனிதர்கள் காணாமல் போகிறார்கள்.  அவர்களுடைய அப்போதைய முகவரி மரணமாக இருக்கிறது. தேடிப் போனவனின் திகைப்புத்தான் இந்தக் கவிதை.

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்! முன் வந்து விசாரிக்கும் மதுரை கிளை! | sathankulam son and father died in lockup | Tamil News | Tamilan Newz

சாத்தான் குளம்

……………………………..

அந்த முகவரியை நேற்று உனது

இறுதிப் படுக்கையில் அறைகுறையாக சொல்லி வைத்தாய்

தாத்தா உனது இறப்பு எமக்கு உறவை தேடித்தருமென

நீ நினைத்திருப்பாய் போல.

ஏழாவது தெரு,36ம் நம்பர் வீடு,

கனகசபை காலனி

என்று கடைசி சொல்லை தனக்குள் விழுங்கி கொண்டாய்

முழுமைபெறா அந்த விலாசத்தை நான் எப்படி நெருங்குவேன்

உன் இறுதிக் காரியம் நடப்பதற்கு முன்னர்

உன்னை பிரிந்து தூரமாக வாழும் ஜெயராஜ் மாமாவை

நான் எப்படி உனக்கு வாய்க்கரிசி போட அழைத்து வருவேன்.

ஒவ்வொரு கிராமமாக அலைகிறேன் 36ம் நம்பர் வீடு இருக்கின்றது.

ஆனால் மாமாவை காண முடியவில்லை.

நான் எஞ்சிய மணி நேரங்களில் அந்த பெரும் நகரத்தை

அடைய வேண்டும்.

பட்டணம் என்றால் பெரிசு தானே

பயணப்பட்டு பேருந்தை விட்டு இறங்குகிறேன்

தாத்தாவின் அறைகுறை விலாசத்துடன்

அந்த நகரம் என்னை அன்புடன் வரவேற்றது.

தாத்தா இறப்பதற்கு முன் சில ஊர் பற்றி

பேசினாரே என்ற யோசனையில்

சில தெருவை கடந்து விட்டேன்.

சாத்தான்குளம் என்றார் ஒரு வேளை இதுகூட

ஊராக இருக்குமோ.

சேர் ஆட்டோ வியர்வை வாடை

சப்தம் நிறைந்த நகரம்

வளர்க்கப்பட்டிருந்த கட்டடக் காடுகள்

எனது பார்வையை நீளச் செய்கிறது

நிறுத்தப்பட்டதும் வீதிப் பெயர்ப் பலகை

சாத்தான் குளம் என பொறிக்கப்பட்டிருந்தது என்னை

ஆறுதலடையச் செய்தது.

வேகமாக தெருவை கடக்கிறேன்

பரபரப்பாக மனிதர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

விலாசத்தை நான் நெருங்கி விட்டேன்

அந்த வீடு அழுகையால் நிறைந்திருக்கிறது

பரபரப்பான சூழ்நிலை பதற்றமாக என்னைக் கடக்கின்ற

அவரை நிறுத்தி விலாசத்தை கொடுக்கிறேன்

ஆமா ஜெயராஜும் மகனும் தான்

இறந்து விட்டார்கள்

லாக்கப்பில்.

சாவில் கலக்கிறேன்

நிச்சயமாக தாத்தா என்னை புரிந்து கொண்டிருப்பார்.

ஜே.பிரோஸ்கான்

தான் இறந்துவிடுவோம் என்று தெரிய வருவதால் புதிய உறவைத் தேடித் தர நினைக்கிறார் தாத்தா.  பேரனின் பிரயத்தனங்கள்தாம் கவிதையின் பயணங்கள்.  கனகசபை காலனி ஏழாம் நம்பர் தெரு 36 ஆம் எண் இலக்கமுள்ள ஒவ்வொரு இடத்திற்கும் அலைகிறான் கவிஞன்.  கனகசபை காலனி என்பதற்கு அடுத்த நகரத்தின் பெயர் தெளிவாகக் கேட்பதற்கு முன் தாத்தா தனது இறுதி முகவரியை நோக்கிப் பயணப்பட்டுவிடுகிறார்.  இப்போது கவிஞனுக்கு மலைப்பான வேலை.  தாத்தாவின் இறுதிச் சடங்கு முடிவதற்குள் தூரத்தில் இருக்கும் மாமாவை அழைத்து வந்து வாய்க்கரிசி போட வைக்க வேண்டும். ஒவ்வொரு கிராமமாக அலைகிறான்.  கிடைக்காத போது அது எந்த நகரத்தில் இருக்கும் என்று யூகம் செய்து பார்க்கிறான்.  அடுத்து, அவர் பேசியதெல்லாம் மீண்டும் அசைபோட்டுப் பார்க்கிறான். தாத்தா அரைகுறையாய்ச் சொன்ன முகவரிக்கு முன்பு அவர் வாய் முணுமுணுத்த ஒரு சொல் சாத்தான் குளம். பொறி தட்டுகிறது. இப்போது கவிஞனின் கண்களில் சாத்தான் குளம் என்னும் பெயர்ப்பலகை தட்டுப் படுகிறது. அந்த ஊர் சாத்தான் குளமாக இருக்குமோ? விரைகிறான்.  வேகமாகத் தெருவைக் கடக்கிறான்.  அங்குமிங்கும் பரபரப்பாக மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.  கவிதை ஓர் ஒளிப்பதிவாளரின் ட்ராலியில் கட்டப்பட்ட கேமராபோல ஓடிக் கொண்டே இருக்கிறது.  விலாசத்தைக் கவிஞன் நெருங்கிவிட்டான்.  அந்த வீடு அழுகையால் நிறைந்திருக்கிறது.  உறவுகளால் நிறைந்திருக்க வேண்டிய வீடு வெறுமைகளால் நிறைந்திருக்கிறது.  பதற்றமாகக் கடக்கிற ஒருவரை நிறுத்தி விலாசத்தைக் கொடுக்கிறான்.

ரத்தம் சொட்டச் சொட்ட போலீசார் அடித்தார்கள்: கணவர்- மகன் லாக்கப் மரணம் பற்றி பெண் புகார்

“ஆமா ஜெயராஜும் மகனும் தான்

இறந்து விட்டார்கள்

லாக்கப்பில்.

சாவில் கலக்கிறேன்

நிச்சயமாக தாத்தா என்னை புரிந்து கொண்டிருப்பார்.”

கவிதை முடிந்து விடுகிறது.  துயரம் இங்கிருந்துதான் தொடங்குகிறது.  வாய்க்கரிசி போடுவதற்கு அழைத்துப் போக வந்த உறவுகளுக்கு வாய்க்கரிசி போட சாவில் கலக்கிறான் கவிஞன்.

“சேர் ஆட்டோ வியர்வை வாடை

சப்தம் நிறைந்த நகரம்

வளர்க்கப்பட்டிருந்த கட்டடக் காடுகள்”

இவையெல்லாம் கவிஞன் இந்த நகரத்தை அடைய கடந்த இடங்கள்.  ஒவ்வொன்றிலும் மரண நெடியடிப்பதை இப்போது வாசகன் ஊகித்துக் கொள்ள முடிகிறது.

ஜெயராஜ் மாமாவும் மகனும் எப்படி இறந்தார்கள்?  பெரிய விவரிப்புகளோ, மரணத்தின் வாதைகளோ சொல்லப்படவேயில்லை.  நாடே பேசிய நகரத்து மரணங்கள்.  கவிஞன் அதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவேயில்லை.

“சாவில் கலக்கிறேன்

நிச்சயமாக தாத்தா என்னை புரிந்து கொண்டிருப்பார்.”

என்கிற இரண்டு வரிகளில் துயரத்தின் சாயையை ஒட்டுமொத்தமாக உருமாற்றியிருக்கிறான்.  அங்கே தாத்தாவின் இறுதிப் படுக்கை மரணத்துள் புதைந்துவிட்டது.  ஆனால் நிச்சயமாக தாத்தா என்னைப் புரிந்து கொண்டிருப்பார் என்கிற வரிகளில் இந்த மரணங்களுக்கு வாய்க்கரிசி போட வேண்டிய அவசியத்தை உணர்த்திவிடுகிறான் கவிஞன்.

“லாக்கப்பில்” என்ற ஒரு வார்த்தையின் மீது கட்டப்பட்ட மிகப் பெரிய துயர மாளிகைதான் இந்தக் கவிதை.  கவிஞன் வேறு எதையும் பேசவேயில்லை.  மற்ற அனைத்தையும் வாசகன் பேச ஆரம்பிக்கிறான்.  வாசகனின் பேச்சு எப்போது முடிவுறும் என்பது நிச்சயம் எனக்குத் தெரியாது.

தொடர் 1ஐ வாசிக்க 

https://bookday.in/kavidhai-sannadham-by-nave-arul/

தொடர் 2ஐ வாசிக்க 

https://bookday.in/kavithai-sannadham-2/

தொடர்3ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-3-indrajalam-na-ve-arul/

தொடர் 4ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-4-na-ve-arul-2/

தொடர் 5ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-5-na-ve-arul-2/

தொடர் 6ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-6-na-ve-arul-2/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/poetry-sannatham-7-na-ve-arul/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/poetry-sannatham-8-na-ve-arul/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/poetry-sannatham-9-na-ve-arul/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/poetry-sannatham-10-na-ve-arul/