முன்னொரு காலத்தில் ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். விவசாயியின் மனைவி இறந்துவிட்டாள். அவன் தனியாக குழந்தைகளை வளர்க்க சிரமப் பட்டான். எனவே மறுமணம் செய்து கொண்டான். சித்தி குழந்தைகளை மிகவும் கொடுமைப்படுத்தினாள். சாப்பாடு கூட சரியாகத் தரமாட்டாள். இந்தக் குழந்தைகளை எப்படியாவது தொலைத்துக் கட்ட வேண்டும் என்று நினைத்த அவள், அவர்களை கொடுமைக்காரியான ஒரு சூனியக் கிழவி வசிக்கும் காட்டிற்கு அனுப்ப முடிவு செய்தாள்.

ஒருநாள் சித்தி அவர்களிடம், ”நீங்கள் மிகவும் சமர்த்துக் குழந்தைகள் என்பதால் நான் உங்களை காட்டில் இருக்கும் என் பாட்டி வீட்டிற்கு அனுப்ப ஆசைப்படுகிறேன். நீங்கள் அவளுக்கு உதவியாக இருக்க வேண்டும். அவள் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வாள். உங்கள் உதவிக்காக நல்ல பரிசுகள் தருவாள்,” என்றாள்.

எனவே குழந்தைகள் கிளம்பினார்கள். பெண் குழந்தை நல்ல புத்திசாலி. அவள், ” நாம் முதலில் நம் பாட்டி வீடு சென்று நாம் எங்கே போகிறோம் என்பதை சொல்லிவிட்டுச் செல்வோம்,” என்றாள்.

பாட்டியிடம் விஷயத்தைச் சொன்னதும், பாட்டி, ” உங்கள் சித்தி உங்களை தன் பாட்டி வீட்டிற்கு அனுப்பவில்லை. அடர்ந்த காட்டிற்குள் வசிக்கும் சூனியக் கிழவியிடம் அனுப்புகிறாள். எனவே குழந்தைகளே எச்சரிக்கையாக இருங்கள். எல்லோரிடமும் மரியாதையாகப் பழகுங்கள். பிறருடைய பொருளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளாதீர்கள். நான் எப்படியாவது உங்களுக்கு உதவப் பார்க்கிறேன்,” என்றாள்.

அவள் அவர்களுக்கு கொஞ்சம் பால், சிறிய இறைச்சித் துண்டு, சிறிது ரொட்டி ஆகியவற்றைத் தந்தாள். குழந்தைகள் காடு நோக்கி நடந்தனர். நீண்ட தூரம் நடந்த பின்னர். ஒரு வினோதமான சிறு குடிசையை அடைந்தனர்.

”யாரது?” என்று உள்ளேயிருந்து சீறினாள் சூனியக் கிழவி.

பாட்டி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருப்பதால் குழந்தைகள், ” காலை வணக்கம் பாட்டி. எங்கள் சித்தி உங்களுக்கு சேவை செய்வதற்காக எங்களை அனுப்பி இருக்கிறாள்.,” என்றார்கள்.

”சரி, என்ன சேவை செய்கிறீர்கள் என்று பார்ப்போம், நல்லபடியாக வேலை பார்த்தால் பரிசு தருவேன். இல்லாவிட்டால், உங்களைத் தின்றுவிடுவேன்,” என்றாள் சூனியக் கிழவி.

அவள் சிறுமியை நூல் நூற்கச் சொன்னாள். பையனிடம் ஒரு சல்லடையைக் கொடுத்து கிணற்றிலிருந்து நீர் எடுத்து வரச் சொன்னாள். பெண் எப்படி நூற்பது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, கீச் கீச்சென்று ஒரே சத்தம். அறையின் எல்லா மூலைகளிலிருந்து நூற்றுக்கணக்கான சுண்டெலிகள் வந்தன. ” எங்களுக்கு கொஞ்சம் ரொட்டி கொடு பாப்பா, நாங்கள் உனக்கு உதவுகிறோம்,” என்றன.

Stop Enemies Hag Witch Suffercation Spell and 50 similar items

அவள் பாட்டி தந்த ரொட்டியிலிருந்த சிறிது எடுத்து சுண்டெலிகளுக்குத் தந்தாள். உடனே அவை தாம் நூல் நூற்றுத் தருவதாகக் கூறின. கிழவியின் பூனைக்கு சிறிது இறைச்சி தந்தால் அது அந்தக் காட்டிலிருந்து தப்பிக்க வழி சொல்லும் என்று ஆலோசனை கூறின. சிறுமி பூனையைத் தேடிச் செல்லும் போது சுண்டெலிகள் நூற்க ஆரம்பித்தன.

பூனையைத் தேடிச் செல்லும் வழியில் சல்லடையில் நீர் பிடிக்க தன் தம்பி போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். சல்லடையில் நீர் எப்படி நிற்கும்? ”சல்லடையின் ஓட்டைகளை களிமண் பூசி அடைத்துவிட்டு, அதில் நீர் நிரப்பு,” என்று யோசனை சொன்னாள். அவனும் அவ்வாறே ஒரு துளிகூட கீழே சிந்தாமல் நீர் பிடித்துச் சொன்றான்.

பூனை அடுப்படியில் தூங்கிக் கொண்டிருந்த்து. அதற்கு சிறிது இறைச்சி கொடுத்தாள். ”பூனைக் குட்டியே! இந்த சூனியக் கிழவியிடமிருந்த தப்ப வழி சொல்,” என்றாள்.

பூனை சோம்பல் முறித்தபடி எழுந்து ஒரு கைக்குட்டையையும், ஒரு சீப்பையும் தந்த்து. சூனியக் கிழவி துரத்தி வரும் போது, அந்தக் கைக்குட்டையை தரையில் வீசிவிட்டு ஓடவேண்டும் . உடனே நடுவில் ஒரு ஆறு வந்துவிடும். கிழவி ஆற்றைத் தாண்டி வரும் போது சீப்பைத் தூக்கி எறியவேண்டும். நடுவே பெரிய காடு உருவாகிவிடும். அவர்கள் தப்பி விடலாம் என்றது.

பூனை சொல்லி முடிக்கும் போதே குழந்தைகள் வேலையை முடித்து விட்டார்களா என்று பார்க்க கிழவி வந்துவிட்டாள்.

” இன்று சரியாகச் செய்துவிட்டீர்கள். நாளை வேலை இன்னும் கடினமாக இருக்கும். அதைச் சரியாகச் செய்யாவிட்டால், உங்களை பொரித்துச் சாப்பிட்டுவிடுவேன்,” என்று எச்சரித்தாள் சூனியக் கிழவி.

அன்றிரவு குழந்தைகள் மூச்சு விடவும் பயந்தபடி விழித்துக் கொண்டே இருந்தார்கள். மறுநாள் கிழவி சிறுமி இரண்டு பட்டுத் துணிகள் நெய்ய வேண்டும் என்றாள். சிறுவனை விறகு பிளந்து கொண்டு வரவேண்டும் என்றாள்.

அவள் போனதும், இருவரும் கைக்குட்டையையும், சீப்பையும் எடுத்துக் கொண்டு கிழவியின் குடிசையை விட்டு எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடினார்கள். முதலில் கிழவியின் வேட்டை நாய் அவர்களைப் பார்த்து உறுமியபடி பாய்ந்த்து. மிச்சமிருந்த ரொட்டித் துண்டை அதனிடம் வீசவும் அதைத் தின்ன ஆரம்பித்தது. பிர்ச் மரம் தன் கிளைகளால் அவர்களை ஓடவிடாமல் தடுத்தது.  தனது ரிப்பனைக் கொண்டு அந்தக் கிளைகளை இழுத்துக் கட்டினாள் சிறுமி. ஒருவழியாக காட்டைத் தாண்டி திறந்த வெளிக்கு வந்தார்கள்.

கிழவியின் வீட்டில் பூனை சிறுமிக்காக பட்டுத் துணி நெய்து கொண்டிருந்தது. ஜன்னலருகே வந்து நின்ற கிழவி,” குழந்தாய், நெய்து கொண்டிருக்கிறாயா?, என்று கேட்க, பூனை, ”ஆமாம் பாட்டி,” என்று சிறுமியின் குரலில் சொன்னது.

ஆனால் சிறிது நேரத்தில் குழந்தைகள் வீட்டில் இல்லை என்பதை கிழவி கண்டுபிடித்துவிட்டாள். அவர்களை ஏன் தப்ப விட்டாய்? என்று பூனையைத் திட்டினாள். பூனை ”இத்தனை ஆண்டுகளில் நீ எனக்கு சின்ன எலும்புத் துண்டு கூட தந்ததில்லை. ஆனால் அந்தக் குழந்தைகள் தம்மிடம் இருந்த ஒரே இறைச்சித் துண்டை எனக்குத் தந்தார்கள்,” என்றது.

கிழவி வேட்டை நாயிடம் போய் ஏன் அவர்களைத் தப்ப விட்டாய்? என்றது. அது,” இத்தனை ஆண்டுகளில் நீ எனக்கு ஒரு துண்டு ரொட்டி தந்ததில்லை. அவர்களோ தங்களிடமிருந்த கடைசித் துண்டு ரொட்டியையும் எனக்குத் தந்தார்கள்,” என்றது.

பிர்ச் மரமும், ” என் கிளைகளில் நீ ஒரு கிழிந்த துண்டைக் கூட கட்டியதில்லை. அந்தக் குழந்தைகள் எனக்கு ரிப்பன் கட்டினார்கள்,” என்றது.

நாமே தேடிப் போக வேண்டியதுதான் என்று கிழவி கிளம்பினாள்.. அருகில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த சிறுமி தன் கைக்குட்டையை எறிந்தாள். உடனே கிழவிக்கும் அவர்களுக்கும் நடுவே பெரிய ஆறு உருவாகி விட்டது. குறுகலான இடத்தைத் தேடி கிழவி ஆற்றைக் கடந்து வருவதற்குள் குழந்தைகள் வெகு தூரம் போய்விட்டார்கள்.

ஆனால் திரும்பவும் கிழவி அவர்கள் அருகே வந்துவிட்டாள். இப்போது சிறுமி சீப்பை எறிய நடுவே பெரிய காடு உருவாகிவிட்டது. காட்டில் நுழைந்து வெளியே வர கிழவி நீண்ட நேரம் போராடினாள். ஆனால் மரங்களும் கொடிகளும் மிக அடர்த்தியாக இருந்ததால் வெளியே வர முடியவில்லை. கடைசியில் சரி வீட்டிற்குப் போய்விடுவோம் என்று தன் குடிசைக்குத் திரும்பிவிட்டாள்.

குழந்தைகள் ஓடிச் சென்று தம் வீட்டை அடைந்தனர். அவர்களைக் காணாமல் தேடிய தந்தையிடம் நடந்த அனைத்தையும் கூறினர். தந்தை தன் இரண்டாம் மனைவியை வீட்டை விட்டுத் துரத்தினார். பின்னர் மூவரும் சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்தனர்.

ச.சுப்பாராவ்

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/ilam-kudumbaththalaivi-series/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-youngest-girl-and-the-monster-a-scottish-tale/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-american-children-stories/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-7-red-white-black-narmandi-story-s-subba-rao-in-tamil/

3 thoughts on “உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 8: சூனியக் கிழவி (ரஷ்யதேசத்துக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்”
  1. நல்ல நீதிக்கதை. நேர்மறை உணர்வு நிரம்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *