ஒரு புறாவுக்கு அக்கப்போறா!
சமாதானதின் அடையாளமாக நேரு மாமா பறக்க விடும் வெள்ளை நிற புறாவைப் படங்களில் பார்த்திருப்போம். பின்பு பண்டைய காலங்களில் தூது அனுப்பியதாகக் கதைகளில் நாம் அனைவருமே கேள்விப் பட்டிருப்போம். மாடப்புறாவைப் பல பேர் வீடுகளில் தற்போது வளர்த்து வருவதை நேரில் பார்த்திருப்போம். ஆந்திராவில் புறாக்களைப் பழக்கப்படுத்தி, அதன்மூலம் நிறையப் புறாக்களைப் பிடித்து வந்து உணவுக்காக விற்பனை செய்கின்றனர். குஜராத் போன்ற வட மாநிலங்களில் மரங்களிலும், பழைய கட்டிடங்களிலும் மாடப்புறாக்களைக் காணலாம். மற்ற உயிரினங்களுக்கு மனிதர்களே உணவு அளிப்பது இயற்கைக்கு மாறானது, இருப்பினும் புறாக்களுக்கு ஒரு சிலர் உணவளிக்கின்றனர், மேலும் சிலர் ஜன்னல், நுழைவாயில் வழியாக வீட்டிற்குள் வருவதாலும், எச்சங்களினால் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தோற்று பரவுவதாலும் ஒரு சிலர் தொந்தரவாக நினைக்கின்றனர். அந்த அளவிற்கு மாடப்புறா எண்ணிக்கையில் மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போழுது நாம் பார்க்கவிருப்பது அதே புறா குடும்பத்தைச் சார்ந்த மஞ்சள்-கண் புறா என்ற பறவை பற்றித்தான்.
இதன் அறிவியல் பெயர் – Columba eversmanni;
Columba – லத்தினில் புறா என்று அர்த்தம்.
Eversmanni – Eduard Friedrich Eversmann (23 ஜனவரி 1794 – 14 ஏப்ரல் 1860)
பிரெஞ்சு பறவையியலாளர் சார்லஸ் லூசியன் போனபார்டே (Charles Lucien Bonaparte) என்பவர் தான் முதல்முறையாக 1856 ஆம் ஆண்டு இந்த புறவைப் பற்றிய விரிவான தகவல்களைத் தந்தார். ஆனால் இந்த இரு சொல் பெயரில் ரஷ்யாவின் தென்கிழக்கில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளை ஆய்வு செய்த ஜெர்மன் உயிரியலாளரும் ஆய்வாளருமான எட்வார்ட் பிரீட்ரிக் எவர்ஸ்மேன் அவர்களின் பெயர் உள்ளது.
இவர் 1818 முதல் 1820 வரை தெற்கு யூரல்களில் பயணம் செய்து, இயற்கை மாதிரிகளைச் சேகரித்து, பெர்லின் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியர் ஹின்ரிச் லிச்சென்ஸ்டைன் அவர்களுக்கு அனுப்பினார். இந்த பயணத்தைத் தொடர்ந்து மத்திய ஆசியப் பகுதிகளுக்கு இயற்கை வரலாறு (Natural history) மாதிரிகளைச் சேகரிப்பதற்காகவே சென்றார். அப்போது மொழி, வரிவிதிப்பு மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை பற்றியும் அறிந்து கொண்டார். மேலும் ஒரு வணிகராக மாறு வேடமிட்ட பின்பே பல வரலாற்றுத் தகவல்களைத் தெரிந்து கொண்டார் என்று லிச்சென்ஸ்டீன் அவர்கள் எழுதிய இயற்கை வரலாற்று பின் இணைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
1825 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் கிவாவு என்ற பகுதிக்கு ஒரு இராணுவக் குழுவுடன் பயணம் செய்த எவர்ஸ்மேன். 1828 ஆம் ஆண்டில் கிவாவுக்கு அருகில் கசான் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் மற்றும் தாவரவியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இதே நேரத்தில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். இதுமட்டுமில்லாமல் இரு பல்லி இனங்களை இவர் கண்டுபிடித்துள்ளார்.
மேலும் வோல்காவிற்கும் யூரல்களுக்கும் இடையில் ரஷ்யாவின் தென்கிழக்கில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய ஆராய்ச்சியின் முன்னோடியாகவும் திகழ்கிறார்.
இத்தனை பயணங்கள், கண்டுபிடிப்புகள் அனைத்தும் மாஸ்டர் ஆஃப் லிபரல் சயின்ஸில் (Maser of science) முதுகலைப் பட்டமும், 1814 லும் மற்றும் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பட்டம் (Doctor and master of surgery) 1817 லும் பெற்ற பின்பு தான். மருத்துவராக மட்டுமிருந்தால் நமக்கு இத்தனை வரலாற்றுப் பதிவுகள் கிடைத்திருப்பது சந்தேகம் தான்.
இதனால் தானோ என்னவோ இவருடைய இந்த உழைப்பிற்காகவே மேலும் சில பறவைகள், பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி மற்றும் பல்லி போன்றவைகளுக்கும் இவருடைய பெயரையே வைத்துள்ளனர். ஆனால் இன்றைய தலை முறைகளை மதிப்பெண், வேலை, சம்பளம், குடும்பம் என்று தவறாக வழிநடத்துவதால் தானோ என்னவோ இயற்கையையும் தவற விட்டிருக்கிறோம்.
இப்புறாவின் ஆங்கிலப் பெயர் Yellow-eyed Pigeon இதன் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதே இதற்குக் காரணம். மஞ்சள்-கண் புறா நமது நாட்டில் உள்ள மாடப்புறாக்களைப் போன்று பெரும்பாலும் விதைகள், தானியங்கள் மற்றும் பெர்ரிகளை உணவாக உட்கொள்கிறது. வழக்கமாக நிலங்களின் மேற்பரப்பில் இருக்கும் உணவுகளை உட்கொள்ளும். சில சமயங்களில் மர கிளைகளிலிருந்து பழங்களை உண்ணுகின்றன.

இந்த மஞ்சள் கண் புறா குளிர்காலத்தில் துணை வெப்பமண்டல/வெப்பமண்டல நாடுகளுக்கு வலசை வருகின்றன. இந்தியாவிற்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வலசை வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, ராஜஸ்தான், குஜராத், ஜம்மு-காஷ்மீர், ஜோர்பீர் மற்றும் பிகானேர் ஆகிய பகுதிகளுக்கு மட்டுமே வருகிறது. இனப்பெருக்கம் செய்ய ஏப்ரல் மாதத்தில் தாயகத்திற்குத் திரும்பி, தெற்கு கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் வடமேற்கு சீனா ஆகிய பகுதிகளுக்குச் செல்கின்றன. மரத்தின் உச்சியில் துளையிட்டோ அல்லது பயன்படுத்தப்படாத கட்டங்களிலோ கூடு கட்டுகின்றன. கூட்டில் குச்சிகளை அடுக்கி இரண்டு வெள்ளைநிற முட்டைகளை இடுகின்றன.
ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருந்த பறவைகளின் எண்ணிக்கை தற்போது சில நூறுகளாகக் குறைந்து விட்டது. காரணம் தற்போது வேட்டையாடுதல், பூச்சிக்கொல்லி வெப்பநிலை மாற்றம் போன்ற காரணங்களால் மேலும் குறைந்து கொண்டே வருவதால், வேகமாக அழிவிற்குள்ளாகக் கூடிய (Vulnerable – VU) பட்டியலில் இதனை வைத்துள்ளனர்.
“ஒரு புறாவுக்கு இவ்வளவு அக்கப்போறா” என்ற இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தில் வடிவேல் அவர்களின் பிரபலமான வசனம் ஞாபகம் வருகிறதா ?. ஆம் இயற்கையில் எந்த உயிரினமும் எண்ணிக்கையில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அக்கப்போர் தான், பல்லுயிர் சமநிலை இல்லையென்றால் மற்றவையனைத்தும் அதனால் பாதிக்கப்பட்டு இயற்கை சமன்பாடு சீர்குலைந்துவிடும்.
முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: [email protected]
முந்தைய தொடரை வாசிக்க:
பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
1 Comment
View Comments