தொடர் : 9 அறிவியலாற்றுப்படை – மனிதன் மட்டும்தான் மகத்தானவனா?
– முனைவர் என்.மாதவன்
முதலில் ஒரு கதை. அதுவும் ஆடையோடு தொடர்புடைய கதை. நீண்ட நாட்களாகவே பலரும் அடிப்படைத் தேவையான உடையைப் புறக்கணிக்கிறீர்கள் என்று வாதம் செய்யத் தொடங்கிவிட்டனர். எனவே அந்த பஞ்சாயத்துக்குள் நுழைவோம்.
அது ஒரு அருமையான தோட்டம் பல்வேறு வகையான பழ மரங்களும், நீர்ச்சுனைகளும் அருவிகளும் நிறைந்திருந்தன. எந்த வகையான குறையுமில்லாத இந்த தோட்டத்தில் ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் வாழ்ந்துவந்தனர். இறைவனே இவர்களிருவரையும் படைத்துவிட்டு இங்கிருக்கும் எல்லாவற்றையும் அனுபவித்து சுகித்திருப்பீராக ஆனால் அந்த மரத்திலுள்ள ஆப்பிளை மட்டும் சாப்பிடாதீர்கள் என்று அறிவுரை கூறி ஆசிர்வதித்துவிட்டு நகர்கிறார். அப்படியே இருவரும் சுகித்திருக்கின்றனர். ஒரு கதை என்றால் திருப்பம் வேண்டாமா? அந்த தோட்டத்திற்கு ஒரு நாகம் வருகிறது. மெல்ல அங்கிருக்கும் பெண்ணிடம் அந்த ஆப்பிளை அந்த ஆண் சுவைத்தால் நல்லது என்று பல்வேறு ஆசைவார்த்தைகளை சொல்லி தூபம் போடுகிறது. அந்த பெண் முதலில் மறுக்கிறாள். உடனே அந்த நாகமும் அந்த மரம்தான் அறிவைத் தரும் மரம். எனவேதான் இறைவன் அதனை சாப்பிடவேண்டாம் என்று கூறியிருக்கிறார் என்று மேலும் வலியுறுத்துகிறது. நாகத்தின் பேச்சைத் தட்டாமல் அந்த பெண்ணும் ஆணிடம் அப்படியே அந்த மரத்தின் ஆப்பிளை சாப்பிடச் சொல்கிறாள். முதலில் மறுக்கும் ஆண் பின்னர் சாப்பிடுகிறான். தான் சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்கும் கொடுக்கிறான். இருவரும் சாப்பிடச் சாப்பிட அவர்களுக்கு ஒருவிதமாக இருக்கிறது. அப்போதுதான் தங்கள் உடலில் உடையில்லாமையை உணர்கின்றனர். ஆளுக்கொரு இலையாகக் கட்டிக்கொண்டு மானம் காத்துக்கொள்ள முயல்கின்றனர். இப்படிப்பட்ட கதைகள் எல்லா நாடுகளிலும் உண்டு. கதை கதையாகப் பார்ப்போம்.
இது ஆடையைப் பற்றி இலக்கிய ரீதியாக பதிவு செய்யப்பட்ட கதைகளுள் ஒன்று . இதனை எழுதியவர் ஆங்கிலத்தில் புகழ்பெற்ற கவிஞர் மில்டன். (1608 – 1674) 1667ல் தனது இழந்த சொர்க்கம் என்ற காப்பியத்தில் இந்த கதையை பகிர்ந்துள்ளார். அந்த ஆணும் பெண்ணும்தான் ஆதாமும் ஏவாளும். நாகமாய் வந்தவர் சாத்தான்.
சரி கதை போதும். அறிவியலாற்றுப்படைக்கு வருவோம். விவாசாயத்தின் பரிணாமத்தை இன்னும் கொஞ்சம் பார்த்துவிட்டு நாகரீகத்தின் பக்கம் வரும்போது ஆடையைப் பற்றிய அறிவியலைக் கொஞ்சம் பேசுவோம். அதுவரை இலை, தழைகளையும், விலங்குகளின் தோல்களில் தோதானவைகளை மட்டுமே குளிரிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அணிந்துகொண்டிருந்தனர். அப்போதெல்லாம் அவர்கள் என்ன கல்யாணம், கார்த்திகைக்காகச் சென்றிருக்கப்போகிறார்கள். ஆடை வரலாற்றுக்கு கொஞ்சம் பிரேக்.
அந்த ஓரத்தில் உளுந்தைப் போடு, இந்த ஓரத்தில காராமணியைப் போடு நடுவில நிலக்கடலையைப் போடுன்னு ஊடு பயிரோட விளைச்சலெல்லாம் அவ்வளவு சீக்கிரம் சாத்தியமாகவில்லை. அவ்வளவு ஏன் நஞ்சை நிலம் புஞ்சை நிலம்னு அப்படின்னும் பட்டியலிடப்படவில்லை. அவ்வளவு ஏன் கொஞ்சம் கொஞ்சமாக பயிர்கள் விளையும் மண்ணாகவும் மண் அவ்வளவு விரைவில் மாறவில்லை. மனிதர்களுக்கு ஆற்றங்கரையோரங்களில் பயிர்கள் விளைவதற்கு அத்தியாவசியத் தேவையான தண்ணீர் கிடைத்துவிட்டது. வருடக்கணக்கில் ஓடிய ஆறுகள் வண்டலையும் உரத்தையும் கொண்டுவந்து கொட்டின. மரங்கள் செடி கொடிகளுக்கும் பஞ்சம் இல்லை. மரம் செடி கொடிகள் சார்ந்த இயற்கைச் சூழலில் அவைகளைச் சார்ந்து வாழும் இதர பறவைகள், பூச்சியினங்களுக்கும் பஞ்சமில்லை. இவ்வாறான சூழலில் மகரந்தச்சேர்க்கைக்கும் குறைவில்லை. மகரந்தச் சேர்க்கை நடைபெறுகையில் காய் கனிகளுக்கும் பஞ்சமில்லை. இந்த உயிரினங்களே அன்றிலிருந்து இன்று வரை மகாந்தச் சேர்க்கைக்கு உதவி வருகின்றன. இன்றும் நடைபெறும் பெருமளவில் மகரந்தசேர்க்கைக்கு தேனீக்கள்தான் உதவிவருகின்றன என்பது ஒரு கொசுறு செய்தி.
மனிதர்கள் பரிணாமம் அடைந்ததுபோல பல தாவர வகைகளும் பரிணாமம் அடைந்தன. வகை வகையான மண்ணுக்கு ஏற்ற தாவரங்களாக பரிணமித்தன. இவ்வாறான பரிணாமங்கள் பலவும் தனிப்பட்ட ஒரு இனமாகவும், வெவ்வேறு இனங்களாகவும் பரிணமித்தன. ஒவ்வொரு குறிப்பிட்ட சூழலிலும் அவைஅவைகளுக்கு ஆதரவாக இருந்த தாவரங்கள் பரிணமித்தன. மொத்தத்தில் அவைகளுக்குள் ஒருவகையான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியது.
இவை அனைத்தும் யாரும் யாருக்காகவும் காத்திருக்கத் தேவையில்லாமல் அவையவைகளின் போக்கில் பரிணமித்தன. குறிப்பாக இங்கு தாவரங்களின் பரிணாம வளர்ச்சி மற்றும் அவற்றின் வளர்ச்சியில் அறிவியல் பூர்வமான பார்வைகள் குறித்தும் ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக ஒவ்வொரு வெப்பநிலைக்கும் தகுந்தாற்போல் அவை தங்களைத் தகவமைத்துக்கொண்டதும் ஆச்சரியத்துக்குரியது. இன்றைக்கும் பாலைவனத்தைப் பாருங்கள். அங்கு வளரும் தாவரங்கள் எவ்வளவு குறைவான தண்ணீர் வசதியில் வளர்கின்றன. அதுமட்டுமா தங்களது நீராவிப்போக்கினைக் குறைக்க தங்கள் இலைகளை முட்களாய் மாற்றிக்கொள்கின்றன. அதுபோலவே கோடை காலங்களில் சமவெளியில் உள்ள மரங்கள் நீர்ப்பிரச்சனையைச் சமாளிக்க தங்களது நீராவிப்போக்கைக் குறைத்துக்கொள்ள வசதியாக இலைகளை உதிர்க்கின்றன. செடிகளிலும் மரங்களிலும் வண்ண வண்ணமயமான பூக்கள் பூச்சிகளைக் கவர்ந்து மகரந்தச்சேர்க்கையை உறுதிசெய்கின்றன. இரவில் பூக்கும் பூக்களைக் கொண்ட பீர்க்கன், சுரை, அவரை போன்றவைகளின் மலர்கள் வெண்மை நிறத்திலிருப்பதைக் கவனியுங்கள். இரவில் பூச்சிகளைக் கவர ஏதுவாகவே அவை அந்த நிறத்தில் உள்ளன.
அடடா நீண்ட துரம் வந்துவிட்டோம். குகைளிலும் மலைகளிலும் வாழ்ந்த மனிதன் குறிப்பிட்ட இடத்தில் வசிக்க ஆரம்பித்ததும், விவசாயம் மேற்கொண்டதும் ஏதோ மனிதர்களின் மகத்தான சாதனை மட்டுமல்ல. மனிதன் செய்துகொண்டிருக்கும் ஒரே சாதனை உலகம் பிறந்தது எனக்காக என்ற ரீதியில் பாடிக்கொண்டு சுயநலமாக வாழ்வதும், மற்றவர்களை வாழத்தூண்டுவதுமே. அறிவியல் பல்வேறு உயிரினங்களையும் ஆற்றுப்படுத்துவதைக் குறிக்கவே இவ்வளவு விளக்கம் தேவையாகிவிட்டது. இவ்வாறான அறிவியலின் ஆற்றுப்படுத்துதல் ஒவ்வொன்றையும் புரிந்துகொண்டு தங்களுக்கு சாதகமாக மனிதர்கள் பயன்படுத்திக்கொண்டனர் இன்றைக்கும் தாவரங்களும் விலங்கினங்களும் சரியான தட்பவெப்பமும் அவசியம் என்பதை வலியுறுத்தவேண்டிய தேவை உள்ளது.
ஆற்றங்கரைகளில் நாகரீகம் என்பதும் ஏதோ ஓரிரு நாளில் சமைந்துவிடவில்லை. அதுபோலவே உலகில் ஏதோ ஒரிடத்தில் மட்டும் உருவாகிவிடவில்லை. எங்கெல்லாம் மனிதர்கள் குடியேறி ஓரளவுக்கு உறைவிடங்களை அமைத்துக்கொண்டனரோ அங்கெல்லாம் நாகரீகங்கள் பரிணமித்தன. அவற்றில் எது முன்பு எது பின்பு என்பதற்கான உலகளாவிய வீரபாண்டிய கட்டபஞ்சாயத்துக்களும் நடைபெற்றுவருகின்றன. நாம் பல்வேறு நாகரீகங்களில் அறிவியல் பரிணாமமடைந்த விதத்தை மட்டும் இந்த தொடரின் அடுத்தடுத்துப் பாகங்களில் பார்ப்போம்.
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார். உறைவிடலாற்றுப்படை
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: தொடர் : தொடர் : 8 அறிவியலாற்றுப்படை – நாகரீகங்களின் தோற்றுவாய்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.