கடல் மட்டம் உயர்வு கவனம் கொள்வோமா?
– முனைவர். பா. ராம் மனோகர்
கடற்கரை அழகிய சூழல் அமைப்பு! சுற்றுலா செல்ல ஏற்ற ஒரு அருமையான இடமாக நாம் அனைவரும் விரும்பும்
நிலை, அறிந்ததே! கடல் அதிக பொருளாதார மேம்பாடு தரும் ஒரு கருவூலம்! வெவ்வேறு மீன், மெல்லுடலி கடல் உணவு பொருட்கள்,மட்டுமல்லாது, கடல், வணிகம், மற்றும் போக்குவரத்துக்கும் பயன்படுகிறது. எனினும் ஒரு அரிய இயற்கை சூழல் மூலம் பெறக்கூடிய நேரடி வளம், மகிழ்ச்சி, பொழுது போக்கு, ஆகியவற்றை தவிர்த்து, நாம் வாழும்
பூமியின், கழிவு கார்பன் டை ஆக்சைடு வாயுவினை உள்ளிழுக்க அவசியம் கடலின் முக்கிய பங்கு உள்ளது. இந்த நிலையில், 7500 கிலோமீட்டர் தொலைவுக்கு நம் இந்திய கடற்கரை, நமது நாட்டின் கலாசாரம், பொருளாதார
உயிரின வேற்றுமை வளம் ஆகியவற்றுக்கு சிறந்த அடையாளம் என்றாலும் மிகையல்ல. ஆனால் இந்த இனிய இயற்கை சூழல் அமைப்பு சமீப காலமாக, அச்சுறுத் தலுக்கு உள்ளாகி வருவது உண்மை.
பருவ கால நிலை மாற்றத்தின் காரணமாக, கடலுக்குள் வெப்ப பரவல் மற்றும் பனிப் பாளங்களின் உருகுதல்
ஏற்படுகிறது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து, உலகம் மட்டும் அல்ல, நம் இந்தியாவிலும் பல பிரச்னைகளை
சந்திக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. புவி வெப்ப உயர்வு காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருகின்ற அறிவியல் ஆய்வு தகவலின் படி , எதிர்காலத்தில் மனித வாழ்க்கை, குறிப்பாக கடற்கரை வாழ் மக்கள், மீனவர்கள்
அவர்களின் பொருளாதார நிலை, வாழ்விடம், சமூக நிலை போன்றவற்றை கேள்விக்கு உள்ளாக்க போகிறது
என்பதை நாம் இன்னமும் முழுமையாக உணரவில்லை.
1880 ஆம் ஆண்டிலிருந்து, பூமியில் உருவாகிய பசுமை குடில் வாயுக்கள் (கார்பன் டை ஆக்ஸ்சைடு,மற்றும்
மீத்தேன் ) 20 செண்டிமீட்டர் கடல் மட்டம் உயர்ந்து, வந்து தற்பொழுது மிக விரைவாக, தொடரும் நூற்றாண்டின்
இறுதியில் 1.2 மீட்டர் அளவு உயரத்திற்கு செல்லுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இந்தியாவில்
மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய மாநகரங்களில் கடும் பிரச்சினைகள் வரக்கூடும். வெள்ள பாதிப்பு,
கட்டமைப்பு அழிதல், நன்னீர் ஆதாரங்களில் நுண்னுயிர் பரவல் ஏற்படலாம். பெரு மாநகராட்சி நகரங்களில்மட்டும்
அல்லாது, கடற்கரை கிராமங்களில், பொருளாதார சூழல் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி ஏழை மக்கள் தவிக்கின்றனர். குறிப்பாக மீன் பிடி தொழில், விவசாயம் பாதிக்கிறது. சுற்றுலா தொழிலும் நசிகிறது.
ஒடிசா மாநிலத்தில் சட்டபாயா, என்ற கிராமத்தில் கடற்கரை மண் அரிப்பு, கடலில் வெள்ளம் காரணமாக, 571 நபர்கள்
இடம் மாறவேண்டிய நிலை ஏற்பட்டது. வாழிடத்தில் உப்பு அளவு மிகையாய் பெருகியது. மீன்கள் இனப்பெருக்கம்
செய்யும் பகுதி இடம் மாறிவிட்டது. வளமான பயிர் உற்பத்தி நிலங்களில் மண்ணில் உப்பு அளவு உயர்ந்து பாழ் ஆகி
பின்னர் உணவு உற்பத்தி மகசூல் குறைகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. உணவு விலை உயர்வு அதனால் தொடருகிறது. குறிப்பிட்ட கடல் பகுதியில் உயிரின வேற்றுமை முக்கிய தலங்கள், அலையாத்தி என்ற சதுப்பு நில காடுகள், பவள பாறை, கழிமுகங்கள் என்ற கடல் வாழிடத்தின் வெவ்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மிக முக்கிய வன சரணாலயம் மற்றும் அலையாத்தி என்ற (MANGROVES ) காடுகள் 2100 ஆவது
ஆண்டு 80% சதவீதம் அழிந்து விடும் என்று ஆய்வு மூலம் அறியப்பட்டுள்ளது. ஆம், மிகவும் பெரிய அகன்ற சுந்தர வனக்காடுகள் தான் இத்தகைய அபாய நிலையினை சந்திக்க இருக்கிறது. இங்கு 2585 சதுர கிலோமீட்டர்
பரப்பளவு பகுதியில் 1973 ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு சரணாலயமாக மாற்றப்பட்டது. UNESCO இப்பகுதியினை
உலக பாரம்பரிய சிறப்பிடம் என அறிவித்துள்ளது. 1989 ஆம் ஆண்டு, மேலும் 9360 சதுர கிலோமீட்டர், வனப் பகுதி விரிவாக்கம் செய்து உயிரின வேற்றுமை பாதுகாக்க நடவடிக்கை தொடர்ந்தது. எனினும் இங்கு உள்ள
கிராமங்களில் மக்கள் தொகை 1961 ஆம் ஆண்டில் 15,00000 இருந்து 2001 ஆம் ஆண்டு 3700000 ஆகி விட்டது.மேலும்
இங்கு உள்ள அரிய ஆலிவ் ரிட்லி ஆமை இனங்கள் அழியும் ஆபத்து எதிர் கொண்டுள்ள தகவல் வருத்தம் அளிக்கிறது.
கடல் மட்டம் உயர்வு பெறும் நிலையில் உயிரின வேற்றுமை அழிதல், உள்ளூர் பழங்குடி மக்கள் மீன் பிடி தொழில் ஈடுபட்டு வருவது பாதிப்பு அடையும். கடல் மட்ட உயர்வு காரணத்தினால் கடற்கரை சூழல் பாதிக்க வாய்ப்பு இருப்பதால் 1986 ஆம் ஆண்டு சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி “கடற்கரை ஒழுங்கு முறை மண்டலம் “பிரிப்பு அறிவிக்கையினை 1991 ஆம் (CRZ )ஆண்டு இந்திய அரசு வெளியிட்டது.பல்வேறு நடவடிக்கை மூலம் கடற்கரை கட்டுமான பணிகள், வளர்ச்சி திட்ட கட்டுப்பாடு கள் அதற்குரிய கூடுதல் விழிப்புணர்வு மூலம் வரையறுத்தது. சூழல் அபாய மிக்க பகுதியில் கடல் பேரிடர் மேலாண்மை மூலம், மீனவர்கள் மற்றும் மக்கள் புயல், வெள்ள பிரச்சனைகளிலிருந்து, காப்பாற்றப்பட திட்டங்கள் உருவாக்க மாநில அரசுகள் தயார் ஆனார்கள். கடற்கரை
வெள்ள தடுப்பு சுவர், எச்சரிக்கை திட்டம், இயற்கை தடுப்பு முறைகளை உருவாக்குதல், மீள் குடியிருப்பு, நீண்ட நிலையான கடற்கரை நடத்தை முறைகளை அங்கு வாழும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அலையாத்தி
காடுகளை புதிய இடங்களில் உருவாக்க முயற்சி, கடற்கரை அருகில் உள்ள விவசாய நிலங்களில் உப்பு தாங்கு திறன்
பயிர் செய்யும் முறை ஊக்குவித்தல் ஆகிய பல்வேறு செயல்பாடுகள் இருக்கின்றன.
குறிப்பாக, கடற்கரை பகுதி மக்கள் தம் முயற்சி மூலம் பல தகவமைப்புகள் பெற்று, விழிப்புணர்வு அடைவது
மிகவும் முக்கியம் ஆகும். சமீபத்திய அறிவியல் வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு (ARTIFICIAL INTELLIGENCE )மூலம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அண்டார்டிகா கடல் பகுதியில் பனி ப்பாளங்களுக்கு நீர் அதிகம் குவிந்து
கிடப்பதாக அறிந்துள்ளனர். 2013-2021 ஆம் ஆண்டுகளில் செய்த ஆராய்ச்சிப் படி 57 பகுதிகளில் இத்தகைய ஆபத்து
நிலைகள் உணரப்பட்டுள்ளது. இந்த நிலையில் நம் உலகில் கடல் மட்டம் உயர்வு பற்றிய ஆய்வு, கடற்கரை மக்கள் விழிப்புணர்வு, தகவமைப்புகளுக்கு, பன்னாட்டு வளர்ச்சி பெற்ற நாடுகள் மற்ற வளர்ச்சி நோக்கி செல்லும் சாதாரண
ஏழை நாடுகள் உள்பட அனைத்து நாடுகளுக்கும்,நிதியுதவி ஆதாரம், தொழில் நுட்பம் போன்றவற்றை அளிக்க முன்
வரவேண்டும்.
கடல் என்பதை அழகு என ரசித்து மகிழ்ச்சி கொண்டாலும் பருவ மழை காலங்களில் மக்கள் அச்சம் கொண்டு எதிர் நோக்கும் நிலை நம் நாட்டில் உள்ளது. புயல், வெள்ளம், சுனாமி, அதிக மழை என்ற இயற்கை பேரிடர்கள் பற்றிய
போதிய விழிப்புணர்வு நம் நாட்டு மக்கள், அரசு, கொள்கை உருவாக்குபவர்கள், அனைவரிடமும் மேலும் தேவை என்பதை ஆண்டு தோறும் நாம் உணர்ந்து வருகிறோம். எனினும் ஒருங்கிணைந்த தொடர் முயற்சி அவ்வப்போது
மறக்கப்பட்டு, பிரச்சினைகள் வரும் பருவ காலத்தில் மட்டும் நாம் விழித்து கொள்கிறோம். அடிப்படை கட்டமைப்பு, நகர மயமாக்கம், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல திட்ட சட்டம் ஆகியவற்றில் மேலும் கூர்ந்து கவனம் செலுத்துவது
இக்காலத்தில் அவசர அவசியம் ஆகும். மேலும் பொது மக்கள் கடற்கரை பயன்பாடு, அங்கு நடந்து கொள்ளும் முறைகள், தூய்மை பேணுதல், பற்றிய விழிப்புணர்வு மேலும் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. நல்ல சுற்றுசூழல் அறிவு மட்டுமல்ல, அதற்குரிய பாதுகாப்பு மனப்பான்மை, காத்துக்கொள்ளும் திறன் ஆகியவை அனைவரிடமும் விரைவில் மேம்படும் என்று நம்பிக்கை கொள்வோம்.
கட்டுரையாளர் :
– முனைவர். பா. ராம் மனோகர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கடற்கரைகளில் மிகப்பெரிய கட்டுமானங்கள் வருவதும் குறிப்பிடத்தக்கது. அதனால் கூட கடல் நீர் மட்டம் உயர்ந்து, அது புதிய புதிய கரைகளை உருவாக்கி வருகிறது.