Erisooru book review by N Sekar

ப.விடுதலை சிகப்பி எழுதிய “எறிசோறு” (நூலறிமுகம்)

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணி புரியும் விக்னேஷ்வரன் விடுதலை சிகப்பி எனும் புனை பெயரில் எழுதி வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு ‘எறிசோறு’.

“என் மண்ணில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய சாதியப் பாகுபாட்டையும் வன்கொடுமைகளையும் எதிர்த்துச் சமரசமின்றி சண்டை செய்யும் பெண்களுக்கு” என இந்நூலை நூலாசிரியர் சமர்ப்பணம் செய்ததில் இருந்தே இவரது உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொள்ள முடியும்.

காலங்காலமாய் புரையோடிக் கிடக்கும் சாதியப் பாகுபாடுகள், வன்மம் நிறைந்த தீண்டாமை வன் கொடுமைகள் கவிஞரது மனதை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை இவரது கவிதைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

வட்டார வழக்கு வார்த்தைப் பயன்பாடுகளைப் பெரும்பாலான எழுத்தாளர்கள் சிறுகதை, நாவல் போன்ற தளங்களில் பயன்படுத்துவர். ஆனால் அவற்றைக் கவிஞர்கள் தங்களது கவிதைகளில் தவிர்ப்பது வழக்கம்.
இதில் வித்தியாசமாகத் திகழ்கிறார் விடுதலை சிகப்பி.

இந்நுலில் தமது முன்னுரையில் “மொழியின் மேற்பரப்பில் சொல்லப்பட்டால் மௌனம் காத்து பல செய்திகள் இந்தப் பேச்சு வழக்கு மொழியின் ஆழ்தளத்தில் ஆற்றின் அடி ஆழத்தில், மணற்படுகையில் வட்ட வட்டக் கண்களுடன் படுத்திருக்கும் மீன்களைப் போல காத்திருப்பதை உணர முடிகிறது” என்று கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் குறிப்பிடுவது உண்மையே என்பது நூலை வாசித்தபின் உணர முடிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல..

“எட்டுத் தெசைக்கும் உருண்டை புடிச்சு எங்க சாமி எறியயில
எறி சோறே எடுத்துச் சொல்லும் ஒக்காழி நாங்க எப்பவுமே இந்து இல்ல”

தெறிப்பான வார்த்தைகள் நூலின் தலைப்புக் கவிதையில் சிறப்பு பெறுகின்றன.

“வீட்டு மலக்குழியில் அடைப்பெடுக்க அயோத்தி சென்று இராமனைக் கையோடு கூட்டி வந்தேன்”

என்று துணிச்சலாக எத்தனை கவிஞர்களால் எழுதிவிட முடியும்? தொடரும் கவிதையில் சீதையின் வழி மலக்குழி மரணங்களின் தாக்கத்தை எப்படி உணர்த்துகிறார்
பாருங்கள்.

“சீதா பிராட்டி
அருகில் கிடந்த சிகரெட் அட்டையில் எழுதியிருந்தாள்
மன்றாடிக் கேட்கிறேன் மலக்குழியைத் திறக்க வேண்டாமென்று
எனக்கும் மனமில்லை மலக்குழியைத் திறப்பதற்கு”

சாதி மறுப்பு காதல் திருமணங்களில் இன்றளவும் தொடர்கின்றன ஆணவக் கொலைகள். அதன் வலிகளை, தொடரும் ரணங்களை,

“முச்சூடும் அவன் பெயரையே
அன்பாய் உச்சரித்து அடம்பிடித்த அவளை
ஊர்கூடி ஒருமனதாக முடிவெடுத்தார்கள் கழுத்தறுப்பதென்று
துண்டிக்கப்பட்ட தலை நிலமெங்கும் உருண்டோடையில்
அவன் பெயரை இறுதியாய் உச்சரித்து
அசைவை நிறுத்திக் கொண்டது நாக்கு
நிலத்தில் காயாமல் கிடந்த இரத்தத்தில்
கைப்பிடி கல் உப்பைத் தூவி நகர்கிறது காலம்”

எனும் கவிதையில் விவரிக்கிறார் கவிஞர். இதைவிட எப்படி வேறொரு கவிதையால் ஆணவக் கொலையின் ரணங்களை விவரிக்க முடியும்.

அனேக கவிதைகளில் இடம் பெற்றுள்ள மாட்டிறைச்சி கீழ்க்கண்ட கவிதை வரிகளில் முக்கியத்துவம் பெறுகிறது. எப்படியென்று நீங்களே வாசித்து உணருங்கள்.

“கோமாதாவில் குடிகொண்ட முப்பத்து முக்கோடி தேவர்களும்
அம்மா மூட்டிய நெருப்பில்
சூடு பொறுக்காமல் பதறிக் கொண்டிருப்பார்கள்.”

“அய்யாவிற்கும் ஆயாவிற்கும்
காலையில் இருந்த மனக்கசப்புக் கறி வேகையில் காதலாய் மலர்ந்தது”

“அப்படி என்னதான் இருந்துவிடப் போகிறது மாட்டீரலில் இல்லாதது ஆப்பிளில்”

கால மாற்றத்தில் நிகழ்ந்த போராட்டங்களின் விளைவாக பண்ணையடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதை

“உங்களூரில் ஆறோ மழையோ இல்லாததால்
விவசாயம் பொய்த்ததோயென
ஊருக்கு வந்த நண்பர்கள்
கவலையாய்க் கேட்கிறார்கள்
எங்கள் தாத்தனையும் அப்பனையும் போல
இப்பொழுது நாங்கள் பண்ணைக்கில்லையென
மகிழ்ச்சியாய்ப் பதிலளிக்கிறேன்”

எனும் கவிதையில் உணர்த்தியுள்ளது சிறப்பு.

இந்தியாவின் சுதந்திர தின குடியரசு தினங்களின் பவள விழாக்களை முடித்த போதும் ஊர், சேரி எனப் பிரிந்து கிடக்கின்றன கிராமங்கள். எனவேதான்,

“எங்களூர் வரைபடத்தை நீட்டி ஊரையும் சேரியையும்
வெவ்வேறு வண்ணம் தீட்டி வேறுபடுத்திக் காட்டுக என்றால்
எல்லோருமே வாங்கியிருப்போம் பத்துக்குப் பத்து”

என்கிறார் விடுதலை சிகப்பி. இன்னொரு கவிதையில்,
“குண்டியில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு
நான் சேரிக்குத் திரும்பினேன்
குல்லா ஜெபமாலை பட்டை மூன்றும் வழக்கம்போல்
ஊருக்குள் சென்றது” எனச் சாடுகிறார் போலிக் கொண்டாட்டங்களை.

சமத்துவத்துவத்துக் கெதிரான ஆகம விதிகளின் மீதான கோபம்

“எங்கள் குண்டிக்கு அடியில் நசுங்கிச் சாகும் ஆகம விதி”
எனும் வரிகளில் வெளிப்படுகிறது

இறுதியாக, உள்ளட்டையில் இடம்பெற்றுள்ள

“வரலாற்றின் வழி நெடுக
என்னிடம்
வழிப்பறி செய்த நீங்கள்
இழி வென்று
பறிக்காமல் விட்டு வைத்த
பறையொன்றே போதும்
நான் இழந்த
அனைத்தையும் மீட்டெடுக்க”

எனும் கவிதை காத்திரமாகக் கானல் வீசுகிறது.

சமத்துவம் விழையும் யாவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அற்புதக் கவிதை நூல். கவிஞர் விடுதலை சிகப்பி மேலும் பல கவிதை நூல்களைக் கொண்டு வர வாழ்த்துகள்.

 

                         நூலின் தகவல்கள் 

நூல்              : “எறிசோறு”

ஆசிரியர்  : ப.விடுதலை சிகப்பி

பக்கங்கள்  : 68

விலை         ரூ .100

பதிப்பகம்நீலம் பதிப்பகம்  (முதல் தளம் திரு காம்ப்ளக்ஸ் மிடில்டன் தெரு,எழும்பூர்.சென்னை 600008)

 

                                எழுதியவர் 

பெரணமல்லூர் சேகரன்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. ஆக்கப்பூர்வ கருத்துக்களை அருமையாக அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து இருக்கிறார்.
    அண்ணன் பா.விடுதலைப் சிகப்பி அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *