இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதி பற்றிப் பேசுவீர்கள்?
-அ. குமரேசன்
இந்தியச் சமுதாய அமைப்பு ஒரு தொடர் வண்டி. அது ஓடுகிற சரளைக்கல் வழித்தடத்தைத் தாங்கியிருப்பது உழைப்புச் சுரண்டலை அடித்தளமாகக் கொண்ட வர்க்கக் கட்டுமானம். அதன் மேல் போடப்பட்டிருக்கும் இருப்புப்பாதையின் இரண்டு தண்டவாளங்களில் ஒன்று சாதியம், இன்னொன்று பெண்ணடிமைத்தனம்.
சாதியமும் பெண்ணடிமைத்தனமும் இணைந்தே இருப்பவை. ஒரு சாதி இன்னொரு சாதியை ஒடுக்குகிறது என்றால், ஒவ்வொரு சாதிக்குள்ளேயும் பெண் ஒடுக்கப்படுகிறாள். பெண் வேலியைத் தாண்டிவிடாமல் பார்த்துக்கொண்டு சாதி பாதுகாக்கப்படுகிறது. பெண்தான் வாரிசுகளைப் பெற்றுத் தருகிறாள் என்பதால், அவள் வேறு சாதிக்காரனோடு உறவு கொள்வாளானால், பிறக்கிற குழந்தை கலப்புச் சாதியாகிவிடும். சாதியின் புனிதப் புடலங்காய் குலைந்துவிடும். குடும்பத்தின் மானத்தை மட்டுமில்லாமல், சமூகத்தின் மாண்பையும் காக்கிறவள் பெண் என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். அது முள் கிரீடம் என்பதை அறியாமல் பெருமிதத்தோடு அணிந்துகொண்டு சுற்றி வருகிறாள் பெண் – சாதி வேலிக்கு உள்ளேயே. ‘அயலி’ என்ற வலைத்தொடரில் “உங்க குடும்ப கௌரவத்தை ஏன் எங்க காலுக்கு இடையில தேடுறீங்க?,” என்று ஊரின் ஆண்களிடம் ஒரு பெண் சாட்டையடியாகக் கேட்கிற காட்சி நினைவில் ஓடுகிறது.
எத்தனை காலம்தான் இதைப் பேசுவது
“சினிமா, நாவல், கவிதை எதை எடுத்தாலும் சாதிப் பிரச்சினையைப் பேசுறாங்க. சாதியை ஒழிக்கணும்னு சொல்லிக்கிட்டு, மறக்க வேண்டியதை ஞாபகப்படுத்துற மாதிரி எதுக்காக அதையே பேசிக்கிட்டு இருக்கணும்?”
“சாதி ஏற்றத்தாழ்வையும் சாதி ஆணவத்தையும் ஒழிக்கிறதுக்கு அது எவ்வளவு அருவருப்பானதுங்கிறதைப் பேசித்தானே ஆகணும்?”
“இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சாதியைப் பேசுவீங்க?”
“சாதி இருக்கிற வரைக்கும்.”
தேநீர்க்கடை முன் கூடியிருந்த நண்பர்கள் கூடிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது வெளியாகியிருந்த ஒரு திரைப்படம் தொடர்பாகப் பேச்சு வந்தபோது இடம்பெற்ற உரையாடல் இது.
“போராடும் தொழிலாளிக்கு சாதியில்லை, மதமில்லை,” என்ற பேரணி முழக்கம் எழுச்சிகரமான உணர்ச்சியைத் தருகிறது. ஆனால், போராடும் தொழிலாளிக்கு சாதி இருக்கிறது, மதம் இருக்கிறது என்ற உண்மை நிலை அந்த உணர்ச்சியை அடக்குகிறது. வர்க்க உணர்வு பெற்ற உழைப்பாளிகள் அடையாள அரசியல்களிலிருந்து வெளியேறிவிடுகிறார்கள். ஆனால் வர்க்க உணர்வைப் பெற விடாமல் இங்கே மதம் குறுக்கிடுகிறது, மிகக் குறிப்பாகச் சாதி குறுக்கிடுகிறது. ஒருவர் அதுவரையில் நம்பி வந்த கடவுளைக் கைவிட்டு மதம் மாறி வேறொரு கடவுளைப் பிடித்துக்கொள்ள முடியும். ஆனால் சாதி மாற முடிவதில்லை.
அது என்ன வாதம்?
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு கலந்துரையாடலின்போது, ஒருவர், “சாதி கருத்து முதல்வாதமா, பொருள்முதல்வாதமா, ஒரே வரியில் சொல்லுங்கள்,” என்று என்னை நோக்கிக் கேட்டார். அப்படியொரு கேள்வி வருமென்று யாருமே எதிர்பாராத நிலையில், என்ன பதில் சொல்லப்போகிறேன் என்று எல்லோருமே எதிர்பார்த்த சூழலில், சிறிது நேரம் யோசித்தேன். “சாதிய ஏற்றத்தாழ்வுக் கருத்துகள் கருத்துமுதல்வாதம்தான். நேரடியான சமூகக் குழுவாக இருக்கிறது என்ற வகையில் அது பொருள்முதல்வாதம்தான்,” என்று அப்போதைக்குக் கூறிவைத்தேன். கலந்துரையாடலின் மையப் பொருளிலிருந்து விலகிவிடக்கூடாது என்பதற்காக அந்த அன்பரும் அதற்கு மேல் கேட்கவில்லை.
பின்னொரு கட்டுரையில், ஏன் சாதி ஒரு பொருள்முதல் வாதம் என்று சொன்னேன் என விளக்கியிருந்தேன். மையமானவையாக அடையாளப்படுத்தப்படும் சாதிகளைச் சேர்ந்த மக்களிடையே குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்த, உடலமைப்பு சார்ந்த அடையாளங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட சூழலில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருவதாலும், சாதிக்குள்ளேயே திருமணம் முடித்துக்கொள்வதாலும், உறவுகளுக்குள்ளேயே குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்கிற அகமண முறை போன்ற காரணங்களாலும் அந்த அடையாளங்கள் உருவாகியிருக்கக்கூடும். அத்தகைய கண்கூடான அடையாளங்கள் என்ற பொருளிலேயே பொருள்முதல்வாதம் என்று குறிப்பிட்டதை அக்கட்டுரையில் தெரிவித்திருந்தேன்.
மேலும், சாதிப் பிரிவினையின் அடிப்படை சமூகம் சார்ந்தவேலைப் பிரிவினை என்று சொல்லப்பட்டாலும், மார்க்சியக் கண்ணோட்டத்தில் அது உழைப்புச் சுரண்டல்தான். உழைப்பும் உழைப்புச் சுரண்டலும் பொருள் உற்பத்தி சார்ந்தவையே. அந்த வகையில் பார்த்தாலும் சாதி ஏற்பாட்டில் பொருள்முதல்வாதம் இருக்கிறது.
மற்றபடி சாதியப் படிநிலைக் கட்டுமானத்தையோ, இன்ன சாதிக்கு இன்ன வேலை என்ற ஏற்பாட்டையோ, அதில் புகுத்தப்பட்ட உயர்வு-தாழ்வு மனப்பான்மையையோ பொருள்முதல்வாதம் என்று நான் சொல்லவில்லை. அவை ஐயத்திற்கிடமின்றி கருத்துமுதல்வாதம்தான். எடுத்துக்காட்டாக, இயற்பியலின்படி பருப்பொருள் சார்ந்ததாகிய ஒரு கட்டடம் பொருள்முதல்வாதம், அந்தக் கட்டடத்தைச் சுற்றிப் புனையப்படும் புனிதக் கருத்துகள் கருத்துமுதல்வாதம் என்ற விளக்கத்தையும் அளித்திருந்தேன்.
சாதியத்தை ஒழிப்பதற்கான பேரியக்கத்தில் இந்தப் புரிதல் உதவும் என்றே கருதுகிறேன். தோழமையோடு இது பற்றி உரையாட முன்வந்த சில அன்பர்கள், “பொருள் என்றால் திட்டவட்டமானது, மாற்ற முடியாதது, கருத்து என்றால் ஊகமயமானது, மாற்றக்கூடியது. ஆகவே கருத்துமுதல்வாதமாகப் புரிந்துகொண்டால்தான் சாதியத்தை ஒழிக்க முடியும்,” என்ற வாதத்தை முன்வைத்தார்கள். “பொருள்முதல்வாதம் என்றால் சாதியை மாற்றவோ ஒழிக்கவோ முடியாது என்ற கண்ணோட்டம் வருகிறது,” என்றும் கூறினார்கள்.
ஆனால், பொருள் மாறக்கூடியது என்பதுதானே அறிவியல்? அளவு மாற்றம் குண மாற்றம் என்ற இயற்பியல் கோட்பாட்டின்படி, காதல் ஏற்கப்பட்டு கலப்பு அனுமதிக்கப்பட்டு சுதந்திரமான இணைத் தேர்வுகள், நடைபெறுமானால், அந்தக் கலப்பின் விளைவாகவே சாதிப்பிரிவு என்ற “பொருளின்” தன்மைகளும் மாறிவிடும். அந்தக் கலப்பை ஏற்கச் செய்வதற்கான போராட்டமே சாதி எதிர்ப்பு இயக்கம். அந்தக் கலப்பு நிகழ்ந்துவிடக்கூடாது என்ற புனிதவாதமே சாதி ஆதரவு மூர்க்கம்.
போரும் போராட்டமும்
வர்க்க எதிரிகளான (முதலாளித்துவம், நிலவுடைமைத்துவம்) சுரண்டல் சக்திகளுக்கு எதிராகத் தொடுக்கும் போரைக்கூட எளிதாக நடத்திவிடலாம். ஆனால், அந்தப் போரின் களவீரர்களான உழைப்பாளி மக்களை, வர்க்க உணர்வு பெற்றவர்களாகத் திரட்டுவதுதான் கடினமான போராட்டம். அந்த அளவுக்கு சாதிய உணர்வு இறுக்கமாகக் கெட்டிப்பட்டிருக்கிறது. அதை நெகிழ வைக்க வேண்டுமானால், சாதியின் நுட்பமான வலைப்பின்னல்களையும் ஆழமான மூலங்களையும் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும். இதுவரை சொல்லப்பட்டிருக்கிற வரலாற்றுத் தகவல்களே போதுமானவை என்று அந்தத் தேடலை நிறுத்திவிடக்கூடாது.
நடப்பது என்னவென்றால், சாதியின் தோற்றுவாய் குறித்து இதுவரை சொல்லப்பட்டிருக்கிற தகவல்களோடும் அனுமானங்களோடும் கருத்துகளோடும் நின்றுவிடுவதுதான். ஒரு தேக்க நிலை ஏற்பட்டிருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். இதற்காகவே தங்கள் ஆயுளையும் அறிவுத் திறனையும் உழைப்பையும் அர்ப்பணித்த தலைவர்கள், ஆய்வாளர்கள் தாங்கள் செல்ல முடிந்த அளவுக்குச் சென்று பல உண்மைகளைப் பதிவு செய்து கொடுத்திருக்கிறார்கள். சாதி ஒழிப்புப் பயணத்திற்கான பாதைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
ஜோதிராவ் புலே, அயோத்தி தாசர், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், இ.எம்.எஸ், பி.டி. ரணதிவே எனப் பல தலைவர்களின் பங்களிப்பு வெறும் ஆராய்ச்சியாக அடைபட்டுவிடாமல், மக்களிடையே இயக்கமாகவும் வளர்த்தெடுக்க வழி செய்திருக்கிறது. அதே வேளையில், தாங்கள் சொல்வது மட்டுமே இறுதியானது என்று அவர்கள் சொன்னதில்லை, அப்படி எடுத்துக்கொள்வது அவர்களுக்குச் செய்கிற முழுமையான மரியாதையுமில்லை. அவர்கள் தங்கள் தோள்களைக் கொடுத்திருக்கிறார்கள். திறந்து விரிந்த மனதோடு அந்தத் தோள்களில் ஏறி நின்று பார்த்தால் மேலும் விரிவாக, மேலும் நெடுந்தொலைவுகளைக் கண்டறிய முடியும்.
இன்று அப்படிப்பட்ட ஆய்வுகள் நடப்பதையும் அறிய முடிகிறது. அமைப்புகள் சார்ந்தும், தனிப்பட்ட முறையிலுமாக நடக்கிற ஆய்வுகள் ஒருபுறம் பங்களிக்கின்றன. இன்னொருபுறம் குழுக்களாகச் சேர்ந்து மேற்கொள்ளப்படும் கூட்டு ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. சாதியத்தின் வேர்களை அறிவதற்கும், அகற்றுவதற்கும் அந்த ஆராய்ச்சிகள் துணை நிற்கும்.
அந்தத் தலைவர்களையும், ஆய்வாளர்களையும் போன்று முழுநேர அர்ப்பணிப்போடு, பரந்துபட்ட தகவல் ஆவணங்களோடு இதைப் பற்றிப் பேசக்கூடிய ஆராய்ச்சியாளர் அல்ல நான். ஆனால் அவர்கள் உயர்த்திய சாதிய ஒழிப்புத் தீச்சுடரை ஏந்திப் பிடித்திருக்கிறவர்களில் ஒருவனாக, சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்கிற சிறு முயற்சியே இக்கட்டுரை. எனது கருத்தும் இறுதியானதாக இருக்க வேண்டியதில்லை. துல்லியமான விடைகள் கிடைக்கிற வரையில் பல்வேறு கோணங்களில் தேடுவதற்கான கேள்விகளில் ஒன்றாகத்தான் இங்கே முன்வைக்கப்படுகிறது.
தத்துவமும் சட்டமும்
பொதுவாக, இந்தியத் துணைக்கண்டத்திற்குள் நுழைந்த ஆரியர்களும், அவர்களின் வழிவந்த பிராமணர்களுமே சாதிப் பிரிவுகளை ஏற்படுத்தினார்கள் என்று சொல்லப்பட்டு வந்திருக்கிறது. சாதியத்திற்குத் தத்துவ முலாம் பூசியது, அதைக் கெட்டிப்படுத்தி வளர்த்தது, பாறை போன்று திட்டவட்டமான அமைப்பாக சாதியம் இங்கே ஊன்றச் செய்தது இவற்றில் ஆரிய வருகைக்கும் பிராமணர் ஆதிக்கத்திற்கும் தலையாய இடமிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஆரியர் வருகை என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமே நிகழ்ந்ததல்ல. நிலம் விட்டு நிலம் நகர்ந்து புலம்பெயர்ந்த ஆரியர்கள், பூமியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார்கள். அப்படித்தான் நடந்திருக்க முடியும். அப்படியானால், அந்த மற்ற பகுதிகளில் ஏன் இங்கிருப்பதைப் போன்ற பிராமணியமோ, சாதியமோ கட்டப்படவில்லை? ‘வர்க்கம் சாதி நிலம்’ என்ற புத்தகத்தில் ஆய்வாளர் கெய்ல் ஓம்வெல்ட் எழுப்பியுள்ள இக்கேள்வி முக்கியமானது.
நமக்குக் கிடைக்கக்கூடிய பதில் என்னவெனில், அவர்களின் வருகைக்கு முன்பே இங்கே தனித்தனி இனக்குழுக்கள் இருந்திருக்கின்றன. அக்குழுக்கள் ஆரியர்களுக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பாகவே வந்து சேர்ந்த மனிதக் கூட்டங்களின் பரம்பரையினராக இருக்கலாம். தொன்மைக் காலத்தில் அந்தக் குழுக்களிடையே மோதல்கள் நடந்து வந்திருக்கின்றன. வாழ்ந்த காடுகள், சமநிலப் பரப்புகள், மலைப்பகுதிகள் ஆகியவற்றைப் பொறுத்து அவர்களுடைய வாழ்க்கை முறையிலும், வழிபாட்டுச் சடங்குகளிலும், குடும்ப உறவுகளிலும் தனித்துவமான மாறுபாடுகள் நிலவியிருக்கின்றன. அந்த வேறுபாடுகளை, அதற்குப் பின்னால் வந்த ஆரியர்களின் வம்சாவளியினரான அன்றைய பிராமணர்கள், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதற்கான கதைகளையும் வழிபாட்டு மந்திரங்களையும் உருவாக்கினார்கள். அவற்றை அதிகாரப்பூர்வமாக்குவதற்கு அரசதிகாரத்தையும் பயன்படுத்திக்கொண்டார்கள்.
அனைத்துப் பிரிவு மக்களும் இந்த வேறுபாடுகளை, பாகுபாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு இரண்டு வழிமுறைகள் கையாளப்பட்டன. ஒன்று, தத்துவ வழிமுறை. புனையப்பட்ட வேதங்களும் புராணங்களும் பகவத் கீதை போன்ற நூல்களும் அந்த வேலையைச் செய்தன. இரண்டாவது வழிமுறை ஆட்சியதிகாரத்தின் சட்டம். மநு தர்மம், சாணக்கியம் போன்றவை அவ்வாறு உருவாக்கப்பட்ட அன்றைய அரசியல் சட்டங்கள்தான். தத்துவ வழிமுறை, நமக்கு விதிக்கப்ட்ட வாழ்க்கை இதுதான் என்று சாதிப் பாகுபாட்டையும், ஒதுக்கப்பட்ட வேலைப் பிரிவினைகளையும் ஏற்றுக்கொள்ள வைத்தது. அப்படி ஏற்க மறுத்தவர்களை, அரசியல் சட்டம் தண்டனைகளைக் காட்டி ஏற்க வைத்தது.
இந்தச் சாதிய ஏற்பாட்டின் அடிப்படைத் தளங்கள், அதன் நுட்பமான கட்டமைப்புகள் ஆகிவற்றை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Nice analysis