டிசம்பர் -14 : உலக குரங்கு தினம் (International Monkey Day) - Monkey Essay - ஏற்காடு இளங்கோ (Yercaud elango) - https://bookday.in/

டிசம்பர் -14 : உலக குரங்கு தினம் (International Monkey Day)

டிசம்பர் -14 : உலக குரங்கு தினம் (International Monkey Day)

– ஏற்காடு இளங்கோ

ஒரு விலங்கு எப்போதும் சோம்பலே இல்லாமல், சுறுசுறுப்பாகவே இருந்து கொண்டிருக்கும். அது குறும்புக்கும், சேட்டைக்கும் பெயர் போனது. இதைப் பார்த்த உடனே குழந்தைகள் சந்தோஷம் அடைவார்கள். அது செய்யும் சேட்டையைப் பார்த்தால் சிரிப்பை அடக்க முடியாது. தங்கள் குழந்தைகள் செய்யும் சேட்டையை இந்த விலங்கோடு ஒப்பிட்டு பேசுவார்கள். அது என்ன விலங்கு? எனக் கேட்டால், குரங்கு என்று நீங்களே பதில் சொல்வீர்கள்.

குரங்கு வகைகள்

உலகில் வாழும் குரங்குகளை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். அவை பழைய உலக குரங்குகள் மற்றும் புதிய உலக குரங்குகள் ஆகும். ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் வாழக்கூடிய குரங்குகளைப் பழைய உலக குரங்குகள் என்கின்றனர். மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் வெப்பமண்டல பகுதியில் வாழக்கூடிய குரங்குகளைப் புதிய உலக குரங்குகள் எனப் பிரித்துள்ளனர்.

டிசம்பர் -14 : உலக குரங்கு தினம் (International Monkey Day) - Monkey Essay - ஏற்காடு இளங்கோ (Yercaud elango) - https://bookday.in/

பழைய உலக குரங்குகள் சுமார் 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு இடம் பெயர்ந்தன. அங்கு படிப்படியாக பரிணாம மாற்றம் அடைந்தன. இதன் காரணமாக பழைய உலக குரங்கு மற்றும் புதிய உலக குரங்கு ஆகிய இரண்டிற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

அமெரிக்கக் குரங்குகளையே புதிய உலக குரங்குகள் என்கின்றனர். இவை பழைய உலக குரங்குகளை விட சிறியவை. இவற்றின் தலை உருண்டை வடிவமானது மற்றும் தாடை சிறியது. இதன் மூக்கு சப்பையாக (Platyrhine) காணப்படும். மூக்கின் நடுச்சுவர் அகன்று இருக்கும். மூக்குத் துளைகள் பக்கவாட்டில் திறந்திருக்கும். இதன் பிட்டத்தில் தழும்பு இருக்காது. மேலும் இந்த குரங்குகளுக்கு நீண்ட வால் இருக்கும்.

பழைய உலக குரங்குகளில் பாபூன்கள், ட்ரில்ஸ், மக்காக்குகள், மாண்ட்ரில்ஸ், கியூனான்கள், லாங்கர்கள் மற்றும் கோலோபஸ் குரங்குகள் அடங்கும். புதிய உலக குரங்குகளில் மார்மோசெட்டுகள், டமரின்கள், ஹவ்லர் குரங்குகள், சிலந்தி குரங்குகள், அணில் குரங்குகள், கம்பளி குரங்குகள் மற்றும் கபுச்சின்கள் போன்றவை உள்ளன. தற்போது உலகம் முழுவதும் சுமார் 260 குரங்கு இனங்கள் உள்ளன.

உடலமைப்பு

குரங்குகளின் அளவு பெரிதும் வேறுபடுகின்றன. உலகிலேயே மிகச் சிறிய குரங்கு பிக்மி மார்மோசெட் (Pygmy Marmoset) ஆகும். இது 14 சென்டிமீட்டர் நீளமும், 100 கிராம் எடையும் கொண்டது. குரங்குகளில் மிகப் பெரியது ஆண் மாண்ட்ரில் (Mandrill) ஆகும். இது சுமார் ஒரு மீட்டர் (3.3 அடி) நீளம் வரை வளரும். இதன் எடை சுமார் 36 கிலோ வரை இருக்கும். இது உலகின் வண்ணமயமான பாலூட்டிகளில் ஒன்றாகும்.

டிசம்பர் -14 : உலக குரங்கு தினம் (International Monkey Day) - Monkey Essay - ஏற்காடு இளங்கோ (Yercaud elango) - https://bookday.in/
பிக்மி மார்மோசெட்

குரங்குகளில் பல இனங்கள் மழைக்காடுகளில் உள்ள மரங்களில் வாழ்கின்றன. இருப்பினும் பாபூன்கள் மற்றும் வேறு சில இனங்கள் தரையில் வாழ்கின்றன. இவை புல்வெளிகள் மற்றும் பாறைப் பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டுள்ளன. பெரும்பாலான குரங்குகள் பகலில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளன. மேலும் இவை புத்திசாலித்தனமாகச் செயல்படுகின்றன.

குரங்குகள் உடலின் பெரும்பாலான பகுதிகளில் முடி உள்ளது. இது நான்கு கால்கள் கொண்ட விலங்காகும். ஆனால் இதன் முன் காலின் நுனிப் பகுதியில் கை (Hand) உள்ளது. பின் காலின் நுனிப்‌ பகுதி பாதம் (Foot) போன்றது. இவற்றின் கைகளும், காலடிகளும் மரக்கிளைகளைப் பற்றுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. இதன் உதவியால் மரத்தில் ஏறவும், ஓடவும், தாவி குதிக்கவும் முடிகிறது.

இதன் முன் கையில் 5 விரல்கள் உள்ளன. கையின் பெரு விரல் மற்ற நான்கு விரல்களுக்கும் எதிராக கொண்டுவர முடியும். இதனால் கையின் மூலமாக பொருட்களைப் பொறுக்கவும், பிடிக்கவும் முடியும். மேலும் உணவை எடுத்து வாய்க்குள் கொண்டு செல்வதற்கும் பயன்படுகிறது. சில இனங்களில் பெருவிரல் சிறிதாக இருக்கும். சில இனங்களுக்கு பெருவிரல் இருப்பதில்லை.

டிசம்பர் -14 : உலக குரங்கு தினம் (International Monkey Day) - Monkey Essay - ஏற்காடு இளங்கோ (Yercaud elango) - https://bookday.in/
மாண்ட்ரில் Mandrill

குரங்குகள் தரையில் நடக்கும் போது நாயைப் போலவே நடந்து செல்லும். சில சமயம் நிமிர்ந்து நடக்கும். இவை நீரில் நன்றாக நீந்தும். இவை பழங்கள், பூக்கள், விதைகள், தளிர்கள், வேர்கள், கிழக்குகள் மற்றும் இலைகளைச் சாப்பிடுகின்றன. மேலும் சில வகை குரங்குகள் பறவைகளின் முட்டை, பூச்சிகள் மற்றும் சிறிய விலங்குகளையும் உண்ணுகின்றன. இவை பெரும்பாலும் ஒரு தடவைக்கு ஒரு குட்டியே போடுகினறன.

ஆபத்து

குரங்கைச் சில மனிதர்கள் உண்ணுகின்றனர். தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனாவின் சில பகுதிகளில் குரங்கு மூளை ஒரு சுவையான உணவாகும். ஆப்பிரிக்காவில் பூஷ்மீட் என்று அதன் இறைச்சி விற்கப்படுகிறது. நேபாளத்தின் பாக்மதி, ஸ்வயம்நாத்தில் உள்ள ஒரு கடையில் குரங்கின் உணவு இங்கே கிடைக்கும் என எழுதி வைத்துள்ளனர்.

குரங்கின் மயிர் மென்மையாகவும், அழகாகவும் இருப்பதால் அதற்காக வேட்டையாடுகின்றனர். உளவியல், உயிரியல், மருத்துவம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்வதற்காக குரங்குகளைப் பயன்படுத்துகின்றனர். சில குரங்குகள் பிடிக்கப்பட்டு செல்லப்பிராணிகளாக விற்கப்படுகின்றன. மழைக்காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதால் குரங்குகள் வாழ்விடங்களை இழக்கின்றன. இது போன்ற காரணங்களால் பல குரங்கு இனங்கள் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளன.
உலக குரங்கு தினம்

உலக குரங்கு தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது. இது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. உலக குரங்கு தினம் (World Monkey Day) மற்றும் சர்வதேச குரங்கு தினம் (International Monkey Day) எனவும் இது கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 2000 ஆம் ஆண்டில் முதன் முதலாக தொடங்கப்பட்டது.

டிசம்பர் -14 : உலக குரங்கு தினம் (International Monkey Day) - Monkey Essay - ஏற்காடு இளங்கோ (Yercaud elango) - https://bookday.in/
கேசி சோரோ (Casey Sarrow)

இந்த தினத்தை கேசி சோரோ (Casey Sarrow) மற்றும் எரிக் மில்லிகின் (Eric Millikin) ஆகிய இருவரால் உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் மிக்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் கலை மாணவர்களாக 2000 ஆம் ஆண்டில் படித்தனர். நகைச்சுவையாக ஒரு நண்பரின் காலண்டரில் குரங்கு தினத்தை எழுதினர். அதன் பின்னர் மற்ற மாணவர்களுடன் இணைந்து டிசம்பர் 14 ஐ விடுமுறை நாளாகக் கொண்டாடினர். இது அதிகாரப்பூர்வமற்ற ஒரு சர்வதேச விடுமுறையாகும்.

இவர்கள் இருவரும் குரங்கு தினத்தின் போது குரங்கு கலைப் படைப்புகளை உருவாக்கினர். குரங்கு உடைகளை அணிந்து கொண்டு குரங்கு நடத்தையைப் பின்பற்றினர். இவர்கள் இருவரும் தங்களின் கலைப் படைப்பு மற்றும் காமிக்ஸ் ஆகியவற்றின் மூலம் குரங்கு தினத்தை பிரபலப்படுத்தினார். இதை ஆன்லைனில் வெளியிட்டு மற்ற கலைஞர்களுடன் சர்வதேச அளவில் காட்சிப்படுத்தினர்.

டிசம்பர் -14 : உலக குரங்கு தினம் (International Monkey Day) - Monkey Essay - ஏற்காடு இளங்கோ (Yercaud elango) - https://bookday.in/
எரிக் மில்லிகின் (Eric Millikin)

கேசி சோரோ என்பவர் ஒரு அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் மற்றும் அச்சு தயாரிப்பாளர் ஆவார். இவர் தி ஸ்டேட் நியூஸ் என்ற இதழை நடத்தினார். இவர் வரைந்த படங்கள் சர்வதேச அளவில் மிகவும் பிரபலம் அடைந்தன. ஆகவே இவர் பின்னாளில் ஒரு சர்வதேச இல்லஸ்ட்ரேட்டர் (Illustrator) என்ற தகுதியைப் பெற்றார்.

இவர் குரங்கு கருப்பொருள் சார்ந்த கலைப் படைப்புகளை உருவாக்கினார். மேலும் “குரங்கு செய்திகள்”என்ற வலைப்பதிவையும் பராமரித்து வருகிறார். இதில் குரங்கு கடத்தல், குரங்கு தாக்குதல்கள் மற்றும் குரங்கு அறிவியல் போன்ற தலைப்புகளில் கதைகளுடன் கூடிய செய்திகளை வெளியிடுகிறார். ஒவ்வொரு உலக குரங்கு தினத்தின் போதும் முந்தைய ஆண்டின் சிறந்த 10 குரங்குகள் பற்றிய முதன்மையான செய்திகளை இந்த வலைதளத்தில் பதிவிடுகிறார்.

எரிக் மில்லிகின் என்பவர் ஒரு செயற்கை நுண்ணறிவு கலைஞர் ஆவார். இவர் புலிட்சர் பரிசு பெற்ற அமெரிக்கர். இவர் இணைய கலை, செயல்திறன் கலை, வீடியோ கலை மற்றும் வெப் காமிக்ஸ் ஆகிய பணிகளுக்காக நன்கு அறியப்படுகிறார். இவர் 2012 ஆம் ஆண்டு குரங்கு தினத்திற்காக 12 நட்சத்திர குரங்குகள் என்ற ஓவியத்தை வரைந்தார்.

இது ராக்கெட் மூலம் விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்ட குரங்குகள் பற்றிய ஓவியம் ஆகும். இந்தக் குரங்குகளே விண்வெளிப் பயணத்தின் முன்னோடியாகும். இதன் பிறகே அமெரிக்கா மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியது. இவர் 2013 ஆம் ஆண்டில் ஒரு அஞ்சல் கலைத் தொடரையும் உருவாக்கினார். 2014 ஆம் ஆண்டு குரங்கு தினத்தை முன்னிட்டு குரங்கு அனுபவம் என்ற ஒரு 3D ஆல்பத்தை உருவாக்கினார்.

ஆதரவு

இவர்களால் உருவாக்கப்பட்ட இந்த தினம் குறிப்பாக விலங்கு உரிமைகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காட்சி கலைஞர்கள் மற்றும் கலை நிறுவனங்களிடையே பிரபலமானது. ஜேன் குடால், கிரீன்பீஸ், நேஷனல் ஜியோகிராஃபிக், லண்டனில் உள்ள நேஷனல் போர்ட்ரெய்ட் கேலரி, லூவ்ரே மியூசியம் ஆகியவை ஆதரவு தெரிவித்தன.

இந்த உலக குரங்கு தினம் அறிவிக்கப்பட்ட பிறகு அமெரிக்கா, கனடா, இத்தாலி, இந்தியா, பாகிஸ்தான், யுனைடெட் கிங்டம், கொலம்பியா, தாய்லாந்து மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அதன் பிறகு உலகின் பல்வேறு நாடுகளிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. பல உயிரியல் பூங்காக்கள் ஆண்டுதோறும் குரங்கு தின நிகழ்வுகளை நடத்துகின்றன.

டிசம்பர் -14 : உலக குரங்கு தினம் (International Monkey Day) - Monkey Essay - ஏற்காடு இளங்கோ (Yercaud elango) - https://bookday.in/

சிறப்பு நிகழ்வுகள்

இந்த தினத்தின் போது குரங்குகளைப் பராமரிக்க நிதி திரட்டப்படுகிறது. இந்தியாவில் உள்ள இந்திரா காந்தி விலங்கியல் பூங்காவில் குரங்கு தின நிகழ்ச்சியாக குழந்தைகளுக்கு வனவிலங்கு பிரச்சனைகள் பற்றி கற்பிக்கப்படுகிறது. குரங்குகளை தத்தெடுக்க மக்களை ஊக்குவிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

பாகிஸ்தானில் உள்ள லாகூர் உயிரியல் பூங்காவில் ஆண்டுதோறும் உலக குரங்கு தினக் கொண்டாட்டம் நடத்துகிறது. இதில் குரங்குகள் பற்றிய கலைப் போட்டிகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகள் அடங்கும். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் குரங்கு முகமூடி அணிந்து, குரங்கு பற்றிய கவிதைகளை வாசிக்கின்றனர். குரங்குகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் அச்சுறுத்தல்கள் சார்ந்த கலை நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர்.

ஐந்தாவது ஆண்டு குரங்கு தின விழாவின் போது கிங் காங் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த தினத்தின்போது அமெரிக்காவில் குரங்கு தின விருந்துகளும் நடைபெறுகிறது. லேடி அயன் மங்கி போன்ற குரங்கு குங் ஃபூ திரைப்படமும் வெளிவந்துள்ளது. குரங்கு பற்றிய பாடல்கள் பல உள்ளன. இதில் தி மங்கி டைம் மற்றும் மங்கி மேன் போன்ற பாடல்கள் குரங்கு தின விழாக்களில் பாடப்படுகிறது.

கட்டுரையாளர் : 

டிசம்பர் -14 : உலக குரங்கு தினம் (International Monkey Day) - Monkey Essay - ஏற்காடு இளங்கோ (Yercaud elango) - https://bookday.in/

– ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *