காலம் தன் கேமராவை வைத்துப் படம் பிடித்துக் கொண்டேயிருக்கிறது கவிஞர்கள் அக்காட்சிகளைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
கவிஞர்களின் கண்கள் மீன்கொத்திப் பறவையின் அலகு போல அவ்வளவு லாவகமாகவும், கூர்மையாகவும் சரக்கென்று கவிதை மீனைக் கொத்திப் பறந்துவிட வல்லவை
அவர்களிடம் வெவ்வேறு காட்சிகள் மண்டியிடுகின்றன. அடம்பிடித்து அழுகின்றன. அவர்கள் ஒரு சில காட்சிகளுக்குத்தான் சொல் தோல் போர்த்தி அழகிய பொம்மைகளாக்குகிறார்கள். அப்படியான சில பொம்மைகளைத்தான் இங்கே அடையாளம் காட்டுகிறேன்.
கவிஞர்கள் – Anbazhagan G , ச.ஜெயலட்சுமி, ச.ப்ரியா, ச.கோபிநாத், புதுகை விஜய் ஆனந்த்
கவிதை 1
எந்தவொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு மனிதனின் வாழ்நிலை இருக்கிறது. வசதியுள்ள ஒருவன் தனது ஞாபகங்களை வெறும் நினைவுகளாக மாத்திரம் வைத்திருப்பதில்லை. மலரும் நினைவுகளை கடந்தகாலப் பொருள்களுடனே காப்பாற்றிக் கொள்ள முடிகிறது. அன்றாடம் ஜீவனைத் தள்ள இற்றுப்போன ஒரு பழைய சைக்கிளை தினமும் மிதித்தவனுக்கு தனது ஞாபகார்த்தமாக பழைய சைக்கிளைப் பாதுகாக்க முடிவுதில்லை. அந்த சைக்கிளை யார் தின்றிருக்க முடியும்? இயலாமையின் ஞாபகச் சின்னம்.
“ஞாபகார்த்தமாய்
அந்த பணக்காரன்
பழைய மிதிவண்டியை
வீட்டின் ஓர் அறையில்
பத்திரமாய் வைத்துள்ளான்.
என் ஓட்டை சைக்கிளை
அப்போதே
பசி தின்றுவிட்டது.”
Anbazhagan
கவிதை 2
கால மாற்றங்கள் கவிதை அலைகளை நவீனக் கரையோரம் தள்ளித் தள்ளி விட்டாலும் மீண்டும் மனது என்னவோ பழைய அமைதியின் நடுக்கடலுக்குப் போகத்தான் பிரியப்படுகிறது. கடந்துபோன காதலை அசை போடுவதற்கு ஒரு நாட்டுப்புறப் பாணியிலான கவிதை மனசுக்குள் ஒரு வெடிகுண்டு போல வேலை செய்கிறது. அருவா மீசைக்காரனின் முந்தானை முடிச்சு.
“நெஞ்சுக்குள்ளே உன் நெனப்பு !
கரிக்கருவா புருவத்துல
கன்னியென்ன அறுக்குறியே
காட்டுமரம் தேகத்துல
கட்டழகால் நொறுக்குறியே
அள்ளி தலைமுடிஞ்சு
அடுக்குமல்லிப் பூமுடிஞ்சு
காலில் சக்கரமா
கலத்துமேடு தாண்டிவந்தேன்
……….
வெள்ளெருக்கம் பூவாட்டாம்
வெடிச்சிருக்கு
என்மனசு
புல்லறுத்துப் போறவளச்
சொல்லெடுத்து வீசுமய்யா..!”
ச.ஜெயலட்சுமி
காதலின் இன்னொரு காட்சி. சாதாரணமாக அன்றாடம் சந்திக்கும் காதலர்கள் கவிதையில் அமரத்துவம் எய்திவிடுகிறார்கள். ஒரு காதலனை கற்பனையின் சிகரங்களில் மாறி மாறி ஏற்றி வைத்துவிடுகிறது காதலியின் ஒரு ஜிமிக்கி.
கற்பனையின் கலாபம்!
“தாஜ்மஹாலின் மேற்கூரை
கைப்பிடியில்லா குடை
காம்பில்லாத காளான்
கவிழ்த்து வைக்கப்பட்ட மதுக்கோப்பை
அத்தனைக்கும்
அவள் காதினில் தொங்கும் ஜிமிக்கி யின் சாயல்”
ச.ப்ரியா
கவிதை 3
தாயைப் பற்றி ஆயிரம் கவிதைகள் அன்றாடம் வந்து கொண்டேயிருந்தாலும், திரும்பத் திரும்ப அவளது அன்பு தீரா பேசுபொருளாகித் திகைக்க வைக்கிறது. தாயின் செவிகளில் இடியோசை புகுமுன்னே குழந்தையை அணைக்கத் தாயின் கரங்கள் தவிக்கின்றன! பாசத்தின் படக்காட்சி.
திடீரென கேட்கும் இடியோசை
குழந்தையை அணைத்தன
அம்மாவின் கரங்கள்
ச. கோபிநாத்
சேலம்
கவிதை 4
உள்ளிருக்கும் மர்மங்களை அவிழ்த்துக் காட்டும் மந்திரவாதியாகிறான் கவிஞன். விவசாயிக்கு ஒரு கவிஞன் அடிக்கிற எச்சரிக்கை மணி. ஆனால் விவசாயத்தைத் தாண்டியும் கவிதை பல பொருண்மைகளை நோக்கிப் பயணம் செய்கிறது. படிமத்தின் பன்முகம்.
இரை…
கொஞ்சமே
கொஞ்சம் தவிடுக்கும்
குருணைக்கும்
ஆசைப்பட்டு
தலைகுனிகையில்…
ஒரு மலைப்பாம்பின்
பெரும்பசிக்கு
இரையாகிறீர்கள்….
— புதுகை விஜய்ஆனந்த்.✍
தொடர் 1 : கவி உலா – நா.வே.அருள்
தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்
தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்
தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்
தொடர் 5 : கவிதை உலா 5 – நா.வே.அருள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.