சிறுகதை - நிழல் - தங்கேஸ் (Nizhal Short Story By Thanges)

வெய்யிலை எடுத்து குழைத்து அப்படியே நெற்றியில் பொட்டாக இட்டுக் கொள்ளலாம் போல் இருந்தது சங்கரிக்கு. சுற்றிலும் அலை அலையாக புரண்டு வந்த  வெக்கை கண்ணுக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து மிதந்து  கொண்டிருந்தது. கையை நெற்றிக்கு அணைவாக கொடுத்து மேலே அண்ணாந்து பார்த்தாள். சூரியன் சரியாக உச்சிக்கு மேல் வந்து நின்றது. வேகாத வெய்யிலில் இவ்வளவு தூரம் நடந்து வந்ததால் நெற்றி  மூஞ்சி மொகரை என்று எல்லா இடத்திலேயும் ஆறாக வேர்த்து ஊத்தியது. ‘’ஸ் அப்பாடா ‘’  என்று எங்கேயாவது கொஞ்ச நேரம் நிழலில் உட்கார்ந்து எழுந்தால் தேவலை போல் இருந்தது.

அந்தத் தெருவிலேயே ஓரளவுக்காவது நிழல் தரும்படியாக நிற்கும் மரம்  என்றால் அது அந்த பல் டாக்டர் வீட்டுக்கு  எதிரே  நிற்கும்  மஞ்சள் அரளி மரம் தான். நல்ல அளவான வளர்த்தியில் பச்சை குடையை தெருவெல்லாம் விரித்து வைத்தது போல வாசலிலிருந்து தெருவரைக்கும் கிளைகள் பரவி புசு புசுவென்று வஞ்சகமில்லாமல் வளர்ந்து நிற்கும். உட்கார்ந்த பிறகு அண்ணாந்து பார்த்தால்  மஞ்சக்  குருவிகள் போல பெரிய பெரிய பூவாக பூத்து கிளைகளில் உட்கார்ந்திருக்கும். ’’ஒரு அஞ்சு நிமிசம் இப்படியே உட்கார்ந்திருந்தா எப்படியும் தலையில் ஒண்ணு ரெண்டு பூவாவது நமக்குத் தெரியாமலே உதிர்ந்து கிடக்கும்‘’  என்று சங்கரி நினைத்துக் கொண்டாள். பிறகு மரத்துக்கு கீழே நின்று தலைச்சுமையை மெல்ல இறக்கி வைத்து விட்டு சும்மாடு கட்டை அவிழ்த்து உதறினாள். ஒரே தூசியாகப் பறந்து சென்றது. உதறிய துண்டை கொண்டு வந்திருந்த அலுமினிய வட்டகை மேல் போட்டு பத்திரமாக மூடி வைத்து விட்டு சுற்றிலும் பார்த்தாள். பக்கத்தில் நான்கைந்து தெரு நாய்கள் நிழலுக்கு சுகமாக படுத்துக் கிடந்தன. அவைகளுக்கு நடுவே நல்ல வாகான இடத்தில் போய் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டாள். நாய்கள் எல்லாம்  இவளை பங்குக்கு வந்தவள் போல நினைத்து தலை தூக்கிப் பார்த்தன. பிறகு  வட்டகைக்குள் என்ன வைத்திருக்கிறாள் என்று மோந்து பார்க்க வாயை உள்ளே கொண்டு வந்தன. ‘’ சீ அங்கிட்டுப் போங்க கழுதைகளா ‘’  என்று பக்கத்தில் கிடந்த ஒரு  சுள்ளியை கையில் எடுத்துக் கொண்டு  ஒரு வெத்து அதட்டுப்போட்டாள். அவ்வளவு தான் அதோடு அவைகள் கம்மென்று வாலைச்சுருட்டிக் கொண்டு அதனதன் இடத்தில் படுத்தபடி மூச்சிரைத்துக்கொண்டிருந்தன.

வட்டகையின் உள்ளே நல்ல தூக்கலான பழுப்பு நிறத்தில் பனங்கிழங்குகள் கூறு கூறாக காட்டுக் கொடியில் சுற்றிக் கட்டி அடுக்கப்பட்டிருந்தன. அவளுக்கு எப்போது இந்தக் கிழங்குளை பார்த்தாலும் நீளமான நாரையின் மூக்கு  உடனே ஞாபகத்திற்கு வந்து விடும். சின்ன வயதில் ஆளில்லாத போது இந்தக்  கிழங்குகளை பார்த்தால் உடனே, அதை நீவி விடுவது போல, தடவி தடவிப் பார்ப்பாள். இப்போதும் கூட இந்தப் பழக்கம் முழுவதுமாக அவளை விட்டு மறைந்து போய்விடவில்லை. எப்போதாவது மனதுக்கு தோன்றினால் கிழங்குளை எடுத்துக் கொண்டு விரல்களால் மெல்ல வருடிக்கொடுப்பாள். பிறகு சிரித்துக் கொண்டே மீண்டும் அதை கூடைக்குள்ளேயே வைத்து விடுவாள். ‘’மனுச ஜென்மத்துக்கு வயசு போனாலும் எளவெடுத்த ஆசைதான் போகுதா பாரு சின்னப்புள்ளைக மாதிரி வெளாட்டு கேட்குது‘’ என்று யாரையோ சொல்வது போல அவளையே திட்டிக்கொண்டு கொண்டு ஒரு தினுசாக சிரித்துக் கொள்வாள். ‘’பெத்த புள்ளையை கொஞ்சவே நேரமில்லை. பிறகு எப்படி மத்த கழுதைகளைப் பார்க்குறது ‘’ என்று அவளாகவே அவளுக்கே சொல்லிக் கொண்டு சிரித்துக்கொள்வாள்.

எப்படியும் ஒரு கட்டுக்குள் பத்துக் கிழங்குகளாவது இருக்கும் . அவ்வளவு லேசில் அவிழ்ந்து விடாத படி, சுற்றிலும் நல்ல காட்டுக்கொடியைப் போட்டுத்தான் இறுக்கி கட்டியிருந்தார்கள்.. எல்லாம் நேத்து பொழுசாயத்தான் பேரையூர் பக்கம் இருந்து சின்னமனூர் பஸ் ஸ்டான்ட்டில் வந்து இறக்கியது.

பெருமாள்  வீட்டில் இருக்கும் பழைய சைக்கிளை எடுத்துக் கொண்டு சின்னமனூருக்கு வந்து மொத்தமாக சாக்கு மூட்டையில் கட்டிக்கொண்டு எடுத்து வருவான். அதற்குப் பிறகு ஆள் கண்ணிலேயே தட்டுப்படமாட்டான். மறுநாள் சந்தை முடிந்து பொழுது நன்றாக மசங்கும் சமயம் அவள் முன் வந்து ஆஜராவான்.

இவள் ஒரு சாக்கை விரித்து அதன் மீது கிழங்குகளை பனங்கிழங்குகளை பரப்பி வைத்து கூவி கூவி விற்றுக் கொண்டிருப்பாள். சந்தையில் பொழுது மசங்க மசங்கத்தான் சரக்குகள் தட்டழிந்து கொண்டிருக்கும். பெரிய வியாபாரிகளிலிருந்து சாக்கு விரித்து வியாபாரம் செய்கிற சின்ன சின்ன கடைக்காரர்கள் வரையிலும் கிடைத்த விலைக்கு சரக்குகளை தள்ளி விட்டு விட்டு நாலு காசு பார்த்துக் கொண்டு வீடு போய் சேரவேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் பெருமாள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டான். நேராக இவளிடம் காசை வாங்கிக்கொண்டு  டாஸ்மாக் போவதிலேயே குறியாக இருப்பான். ‘’கொஞ்ச நேரம் பார்த்துக்கோ ஒரு டீ சாப்பிட்டு வந்துர்றேன்‘’ என்று இவள் எவ்வளவு தவுதாயப்பட்டு சொன்னாலும் கேட்க மாட்டான். பக்கத்தில் கப்பைக்கிழங்கு வித்துக் கொண்டிருக்கும் பார்வதி அக்காளிடம் சொல்லி விட்டுத்தான் போய்  ஒரு டீத் தண்ணியாவது குடித்து விட்டு வருவாள். ஆனால் அவன் சற்றுத் தள்ளி நின்று கொண்டு சந்தையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான்.

இவள் ஏதோ நாலு காசு லாபம் பார்த்து முந்தியில முடிஞ்சு வச்சிருக்கிறதை வாங்கிட்டுப்போனான் என்றால் வீடு திரும்புறதுக்கு எப்படியும் நடு ராத்திரிக்கு மேல் ஆகிவிடும். ‘’அப்படி என்ன தான் குடியை கண்டானோ உருப்படாதவன். புள்ளைகன்னு ரெண்டு சீவாத்துக வீட்டுல இருக்கே, அதுக சாப்பிட்டுச்சோ சாப்பிடலையோன்னு கொஞ்சமும் நினைக்க மாட்டான். ‘’வேலையென்று நிரந்தரமாக ஒன்றுமில்லை. எந்த தொழிலும் அவனுக்கு சரியாகவும் அமையவில்லை. அதனாலேயே எதிலும் ஒட்டாமலே தாமரை இலை தண்ணீர் போலவே தான் இருப்பான். வீட்டில் இருக்கும் பிள்ளைகளிடம் கூட மனசிருந்தால் தான் சிரித்து விளையாடுவான். இல்லையென்றால் உம் மென்று  மூஞ்சியை வைத்த படி முறைத்துக் கொண்டேதான்  திரிவான்.

இது போல் இவளுக்கு சரக்குகள் எடுத்துக் கொடுப்பது, வசூலிப்பது என்று சின்ன சின்ன ஒத்தாசைகள் செய்வதோடு சரி . சமயத்தில் அந்த வேலைகளையும்  இவளேதான் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டியதிருக்கும். எத்தனை வேலைகள் செய்தாலும் அலுக்காத பெண் ஜென்மமாக அவள் ஆகிப் போனாள். அதை நினைத்தால் அவளுக்கே  ஓரோர் சமயம் திக்கென்று இருக்கும்.

வியாழக்கிழமை சந்தையில் வியாபாரம் என்றால் மத்த நாள்களில் இவள் தெருத் தெருவாக கால் நடையாக வியாபாரத்தில் இறங்கி விடுவாள். இன்ன கிழமை இன்ன சமான் தான் விற்க வேண்டுமென்று ஒரு கணக்கெல்லாம் இல்லை. ஒரு நாள் பனங்கிழங்கு என்றால் மக்கா  நாள் கப்பைக்கிழங்கு, ஒரு நாள் இலந்தைப்பழம் என்றால் மறு நாள் கொடிக்காப்புளி அல்லது லவாப்பழம், ஒரு நாள் அகத்திக் கீரை, மறுநாள் நிலக்கடலை என்று சீசனுக்கு தகுந்து ஏவாரத்தை மாற்றிக் கொண்டேயிருப்பாள். சமயத்தில் வாழைப்பழச் சீப்புகளை தள்ளுவண்டியில் ஏற்றிக் கொண்டு வீடு வீடாக கூவி கூவி விற்றபடி  போவதை பார்க்கலாம்.

பெரிய கடை கண்ணிகளில், குடோன்களில் ஆள் பழக்க வழக்கத்தை வைத்து சமயத்தில் கடனுக்கு கூட சரக்குகளை வெடிப்பாக எடுத்து வந்து விடுவாள். அன்னன்னிக்கு சாயங்காலமோ மறுநாளோ சொன்னபடிக்கு போய் காசை கட்டி விட்டு பைசலும் முடித்து விடுவாள். ‘’பொழுசாய வீட்டுக்கு போகும் போது நாலு காசு கொண்டு போனாத்தான புள்ளைக மொகத்தை கண்கொண்டு பார்க்க முடியும்‘’ என்று அடிக்கடி பாக்கியத்திடம் புலம்புவது தவறாமல் நடக்கும். பாக்கியம் மட்டுமென்ன பெரிய மனநல மருத்துவரா? பதிலுக்கு அவளும் இவளிடம் புலம்ப ஆரம்பித்தால் மணிக்கணக்காக நிற்காமல் பேச்சு ஓடிக்கொண்டிருக்கும்.

சங்கரி கொஞ்ச நேரம் அப்படியே கண்ணை மூடிக்கொண்டிருந்தாள். தலைச்சுமையை இறக்கி வைத்ததை கழுத்து இன்னும் நம்ப மறுத்தது. வலி இன்னும் தீரவில்லை. கொஞ்சம் நிதானித்து தலையை நிமிர்த்தி தெருவைப்பார்த்தாள். எதிர் சாரியிலிந்து அவளது அம்மா  பத்மாக்கிழவி தலையில் கீரைக்கட்டுகளோடு தளர்வாக நடந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது. ‘’நல்ல தாட்டிகமாத்தான இருந்தா கௌவி. இப்ப ஏன் இப்டி தள்ளாடிகிட்டு வாரா‘’ என்று இவளாகவே முனு முனுத்துக் கொண்டாள். இவள் சின்னப்பிள்ளையாக இருக்கும் போதிருந்தே அம்மா இப்படித்தான் ஊர் ஊராகப் போய் கீரை விற்றுக் கொண்டுதானிருக்கிறாள். கிழவிக்கு இரண்டும் பொம்பளைப் பிள்ளைகளாகப் போய் விட்டன.. இப்படி கூவி கூவி கீரை விற்றே தான் இவளையும் இவளது தங்கச்சியையும் கரையேத்திவிட்டாள் .

கிழவியின் பெரியாம்பளைக்கு இப்போது அதிகம் நடமாட்டமில்லாமல் போய்விட்டது. அவர் ஒரு காலத்தில் விவசாயக் கூலியாக இருந்தார். விவசாயக் கூலி என்றால் வயலை குத்தகைக்கு எடுத்து முழுமூச்சாக பாடுபடுவது. கிழவன் நல்ல உழைப்பாளி தான். முந்தியெல்லாம் தானியம், தவசம் என்று வீட்டில் நல்ல செழிம்பாகத்தான் இருக்கும். குடும்பம் மொத்தமுமே வயலில் தான் இருக்கும். கிழவன் அந்த வருமானத்திலே ரெண்டு பொட்டைப்புள்ளைகளுக்கும் ஆளுக்கு நாலு பவுன் எடுத்துப் போட்டு அழகு பார்த்தான். ஆனால் எல்லாம் அந்த ஊருக்குள்ள டாஸ்மாக் வாறவரைக்கும் தான். அந்தப் பாழாய் போன குடி அந்த குடும்பத்தையை தலை கீழாக குடைசாய்த்து விட்டது. கிழவன் மயங்கி விழுந்த ஒரு நாளில் இருந்து ஒரு கை கால் இழுத்துக் கொண்டு பக்கவாதம் வந்து விட்டது.  இப்போது சகலமும் வீட்டோடு தான் . சொந்த தங்கச்சி மகன் என்று பெருமாளுக்கு இவளையும், தங்கச்சியை தூரத்து சொந்தத்திலும் கொடுத்தார்கள். மாமன் ஓயவும் அந்த குடிகாரப் பட்டத்தை இப்போது பெருமாள் எடுத்துக் கொண்டான். கிழவன் இப்போது வாய் சும்மா இருக்காமல் ஏதாவது கோளாறு சொல்லி விட்டு கிழவியிடம் செமத்தியாக வாங்கி கட்டிக்கொள்வான். ‘’பெத்த புள்ளையை நல்லா வளர்த்து பாழுங்கிணத்துக்குள்ள தள்ளி விட்டிட்டியே பாவி மனுசா‘’ என்று சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பித்து விடுவாள். கிழவி அப்படி இப்படி பேசினாலும் எல்லாவற்றையும் அவள் தான் பார்த்துக் கொள்கிறாள். பெருமாள் இது போல கோணகலப்பை சாத்தும் போதெல்லாம் சங்கரிக்கு அய்யா மேல் தீராத கோபம் வரும்.  இரண்டு மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு போயிருந்தவள்  கோபம் தாளாமல் அய்யாவைப் பார்த்து ‘’தங்கச்சி மகன், தங்கச்சி மகன் என்று பாழுங்கிணத்துக்குள்ள புடிச்சு தள்ளி விட்டுட்டியே நீயெல்லாம்  நல்லா இருப்பியா‘’ என்று வாய் விட்டு கேட்டு விட்டு வந்து விட்டாள். அதற்குப் பிறகு இவள் அந்தப் பக்கம் போவதேயில்லை. பிள்ளைகளையும் போகவிடுவதில்லை.

‘’ஸ் ஏ அப்பா தை மாசியிலேயே வெய்யிலு இந்தப் போடு போட்டதுன்னா, இனி பங்குனி சித்திரையில என்ன போடு போடப் போகுதோ‘’ என்றபடி கிழவி இவள் அருகில் வந்து சற்று நேரம் நின்றாள்.. உட்காரச் சொல்றாளான்னு பாரு என்று பார்த்தபடியே இருந்தாள். ‘’என்ன இவுங்க அப்பனா வீட்டை கட்டி மரத்தை வச்சிருக்கான் என்று நினைத்துக் கொண்டாள் ‘.  ‘’கௌவி என்னமா நோட்டம் பார்க்குறா பாரு‘’ என்று நினைத்த படியே சங்கரி ‘’ஏம்மா என்ன வெயிலடிச்சாலும்  கட்டு கட்டுன்னு எட்டுவச்சு நடந்து வருவியே இன்னிக்கு என்னாச்சு ?’’ என்று கேட்டாள். ‘’ஏண்டி உன்னைப்போல இள வயசா நான் கட்டு கட்டுன்னு நடந்து வாறதுக்கு‘’ என்று சுமையை  கைத்தாங்கலாக இறக்கி வைத்தாள். சங்கரி கீரைக்கூடையை வாங்கி தரையில் வைத்து விட்டு ஒரு சிட்டிகை மூக்குப் பொடியை எடுத்து உறிஞ்சினாள். கிழவி பக்கத்தில் கிடந்த நாயைப் பார்த்து ‘’சீ அங்கிட்டு தள்ளிப் போய் படு கழு ‘’ என்று அதட்டுப் போட்டாள். நாய்கள் கொஞ்சம் நகர்ந்து போய் அவளுக்கும் அங்கே இடம் கொடுத்தன. கிரைக்கட்டைப் பார்த்ததும் அவைகள் மோந்து பார்க்க கூட வரவில்லை. கூடைக்குள் முருங்கை கீரையும் , பாலாக்கீரையும், வெந்தயக்கீரையும் வாடிப்போய் இருந்தன. கிழவி எங்கேயாவது குழாயைப் பார்த்தால் போதும் உடனே கூடையை கீழே இறக்கி அடிக்கடி தண்ணீர் தெளித்து மேலே வெள்ளைத்துணியால் மூடிவைத்துவிட்டு மறுபடியும் தலையில் தூக்கிக்கொண்டு நடப்பாள்.

‘’அய்யா எப்டி இருக்கு‘’

‘’கெழவனுக்கென்ன நல்ல கட்டைமாதிரி கெடக்குறான். கோழிக்கறி வேணும் கோழிக்கறி வேணும்னு இந்த நாலு நாளா புலம்பிகிட்டே கிடக்குறான்.  பொம்பளை வேலை செஞ்சு குடும்பத்தை காப்பாத்துறாலே அப்டின்னு எந்தக் கவலையும் இல்ல‘’

‘’எல்லா வீட்லயும் அப்டித்தான் நடக்குது’’

‘’நான் தான் தேய்ஞ்சுகிட்டே போறேன் என்னை யாரு கேட்குறது‘’

‘’ஆமா இங்க யாருதான் சமீன் வச்சு ஆளுறது‘’

‘’இப்ப உன்னை யாரு என்ன சொல்றது. வயசான காலத்துல உஸ்ஸுனு ஒரு இடத்துல உட்கார முடியல‘’

‘’எங்களுக்கு மட்டுமென்ன மாளிகையா கட்டித் தந்திருக்க ? நாங்களும் வேனாப்பறந்த வெய்யிலுக்குள்ள அலைஞ்சு திரிஞ்சு தான் வயித்துப்பாட்டை பார்க்குறோம்‘’

‘’அது சரி அதுக்கு கோடீஸ்வரன் வீட்ல பொறந்திருக்கனும். ஏழை எளியவுக வீட்டுள்ள வந்து பொறந்திருக்க கூடாது. உள்ளதை வச்சு நல்லது செய்யுற மாதிரி நாங்க நல்ல படியாத்தான் ரெண்டையும் கரையேத்தி விட்டோம்‘’

‘’நீ கரையேத்துன லட்சனம்தான் ஊரு ஒலகத்துக்கே தெரியுமே, பாழுங்கிணத்துக்குள்ள எல்லாம் கண்ணை கட்டித்தான் தள்ளி விடுவாக. நீ அப்பிடியே தள்ளி விட்டவாளாச்சே, நல்லா இரு‘’

கிழவிக்கு கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது. ’’உன்னை இப்படி தள்ளி விட்ட பாவத்துக்குத் தேன் கெழவனுக்கு கை கால் வௌங்காமப் போச்சு. இப்ப அதையே நெனச்சு நெனச்சு ஆளு அரை உசிரா கெடக்கான்.‘’

‘’நாங்க என்ன செய்யிறது‘’

‘’போதும்டி எல்லாம் நல்லாயிருக்கும்னு தான் நெனச்சோம். வேணும்னா இப்டி செஞ்சோம். ஆனா ஒண்ணுடி எவ்வளவு மனச்சடவு இருந்தாலும் அப்பன் ஆத்தா உசிரோட இருக்கும் போதே வந்து பார்த்திருங்க. ஆளு செத்த பிறகு வந்து அய்யா போய்ட்டானே, அய்யா  போய்ட்டானேனு கூப்பாடு போட்டாலும் பாவம் தீராது பார்த்துக்கோ‘’ என்றாள்.

‘’சங்கரிக்கு கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது. ஆமா இன்னும் கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்திருந்தா அய்யாவை நான் தான் கொன்னேன்னு சொல்லிப்புடுவ. நான் கௌம்புறேன். வீட்டுல புள்ளைக ரெண்டும் கிளிக்குஞ்சுக வாயைத் திறக்கிற மாதிரி திறந்துகிட்டு இருக்குங்க‘’ என்று சொல்லி விட்டு எழுந்தாள்.

‘’இந்தா இதை கொண்டு போய் புள்ளைகளுக்கு குடு‘’ என்று கிழவி கூடைக்குள்ளிருந்து ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்து இவளது கூடைக்குள் வைத்தாள். உள்ளே உரித்து வைத்த பழாச்சுளைகள் பத்து பதினைந்து இருந்தன. நல்ல பழ வாசனை மூக்கைத் துளைத்தது. இன்னொரு தினசரி பேப்பரில் நான்கு வெள்ளரி பிஞ்சுகள் பிளாஸ்டிக் ரப்பர் பேண்டு போட்டு சுற்றப்பட்டிருந்தது. சின்னப் பொட்டலத்தில் மடித்து வைக்கப்பட்ட மிளகாய்த்தூள் இருந்தது.

சங்கரி இடுப்பு சேலைக்குள் சொருகியிருந்த உருவாஞ்சுருக்குப் பையை வெளியில் எடுத்து அதிலிருந்து மடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு நூறு ரூபாய் தாள்களை எடுத்து கவனமாகப் பிரித்து கிழவியின் கைகளில் திணித்து விட்டு ‘’இந்தாம்மா வீட்டுக்குப் போற வழியில அப்படியே கறிக்கடைச் சந்துக்குப் போயி   ஒரு கிலோ கோழிக்கறி  வாங்கிட்டுப்போய் அய்யாவுக்கு சமைச்சுக் குடு நான் நாளைக்கு வந்து பாக்குறேன்‘’  என்று சொல்லி விட்டு சும்மாடு கூட்டி வட்டகையை தூக்கி தலையில் வைத்தாள்.

’உம் புருசன் வந்து இப்ப காசு கேட்டான்னா என்ன செய்வ ?‘’  என்று கிழவி கேட்டாள்.

‘’அவன் கிடக்குறான் பொசை கட்ட பய‘’ என்ற படி சங்கரி அடுத்த தெருவை நோக்கி நடந்தாள்.

கிழவி கையில் இருக்கும் இரண்டு ரூபாய் நோட்டுக்களையும் வெறித்துப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள்.

 

தங்கேஸ்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 4 thoughts on “சிறுகதை: நிழல் – தங்கேஸ்”
  1. இதைக் குறும்படமாக எடுத்து யூ ட்யூப் இல்பதிவிடலாம். சிறப்பாக இருக்கும்.

  2. உழைப்பாளி மக்கள் குறிப்பாக பெண்களின் அன்றாட வாழ்க்கை போராட்டத்தை மிக அருமையாக அந்த வட்டார பேச்சு வழக்கில் நம் கண் முன்னே நிறுத்தி, நம்மையும் களத்தில் நிறுத்துகிறார்.
    வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *