ஆல் வி இமேஜின் அஸ் லைட் (All we imagine as light) - திரைப்படவிமர்சனம் - பெருநகரமொன்றில் வசிக்கும் பெண்களின் கதை - https://bookday.in/

ஆல் வி இமேஜின் அஸ் லைட் (All we imagine as light) – திரைப்படவிமர்சனம்

ஆல் வி இமேஜின் அஸ் லைட் (All we imagine as light) – திரைப்படவிமர்சனம்

உணர்வுப்பூர்வங்களை அதன் இயல்தன்மையோடு எங்கும் மிகையாகக் காட்டாமல் உண்டாக்கப்பட்ட பிரம்மாதமான திரைப்படம்.

ஒரு பெருநகரம், அந்த நகருக்குள் வாழ்கின்ற மூன்று பருவத்தைச் சேர்ந்த பெண்களின் கதை. அனு – இளம்பெண், பிரபா – மத்திம வயதினள், பார்வதி – முதியவள் மூவரும் ஒரே மருத்துவமனையில் பணிபுரிபவர்கள், அனுவும் பிரபாவும் செவிலியர்கள், ஒரே அறையில் வாடகையைப் பகிர்ந்து குடி இருப்பவர்கள், பார்வதி அந்த மருத்துவமனையில் சமையல் வேலைகளை கவனித்துக் கொள்பவள்.
அனு,
காதலின் மாயங்களுக்குள் இருக்கின்ற பருவத்தினள், பருவம் தருகின்ற காதலின் கிளர்ச்சியும் உடலின் தேடலுமாக மகிழ்ச்சியாக வளையவருபவள். அவளுக்கும் அவள் காதலனுக்கும் இருக்கின்ற நெருக்கமும், உடலோடு ஒட்டிக்கொண்டு அவர்கள் இருவரும் உலாவுகின்ற இடங்களும் அத்தனை கச்சிதம்.

ஒருமுறை பிரபா தன்னை திட்டிவிட்டதற்காக வருத்தத்தில் இருப்பாள், ரயில் பயணத்தில் அவளிடம் காதலன் சொல்வான், நாளைக்கு நீ எங்க வீட்டுக்கு வர்றியா? எங்க வீட்ல யாரும் இருக்கமாட்டாங்க, பர்தா அணிந்து வா என்பான், அந்த நொடியே அவள் உற்சாகமாகி விடுவாள். அவள் முகம் மலர்ந்து தன் பின் நிற்கும் காதலன் அருகில் ஒருஅடி பின்வைத்து நெருங்கி சாய்ந்து கொள்வாள், ஒரு நொடிக காட்சிதான் அது, ஆனால் அது கடத்துகின்ற காதலும் காமமும் அளப்பரியது. – ஒரு பர்தாவை வாங்கி அணிந்து அவனைத் தேடிச் செல்வாள், செல்லும் போது நீ வரவேண்டாம் எங்கள் வீட்டில் எல்லோரும் வந்துவிட்டார்கள் என்பான் காதலன்.

அத்தனை ஆர்வங்களும் வடிந்து சோர்ந்து விடுவாள். அலைபேசியை எடுப்பாள், எப்போதும் அம்மாவின் அழைப்பை நிராகரித்துக் கொண்டே இருப்பவள், அவளிடம் பேச பெரிதாக ஆசைப்படாதவள், அம்மாவை அழைப்பாள். சும்மா பேசுவாள், ஒரு காட்சி கவிதையாகின்ற இடம் அது, யாருமே நம்மிடம் இல்லாத போது நாம் யாரைத் தேடுகிறோம்? பிரபா, திருமணம் முடிந்து கணவன் ஜெர்மனிக்கு சென்றுவிட அவன் வருவான் என காத்திருந்து தனியாக வாழ்வை நடத்தும் மத்திம வயதுப் பெண், எப்போதும் ஒரு அலைக்கழிப்பு கொண்ட முகத்துடனே இருப்பார், காமமும் காதலும் கிட்டாத ஒரு பெண்ணின் வார்ப்பு. இதுதான் வாழ்வென அதனை ஏற்றுக்கொண்டு வாழ்பவள்.

ஆல் வி இமேஜின் அஸ் லைட் (All we imagine as light) - திரைப்படவிமர்சனம் - பெருநகரமொன்றில் வசிக்கும் பெண்களின் கதை - https://bookday.in/

ஜெர்மன் சென்ற கணவன் அவ்வப்போது பேசுவார் பிறகு அது குறைந்து கடைசியில் அவர் பேசுவதே இல்லை என்று வருத்தப்பட்டு, பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் போயிருக்கும் என்று சமாதானமும் கொள்பவளை. அனு கேள்வி கேட்பாள், “அதெப்படி முன்பின் தெரியாத ஒருவரை திருமணம் செய்யமுடிகிறது? என்னால் முடியாது” – பிரபா சொல்வாள், நன்றாகப் பழகியவர்களே முன்பின் தெரியாத யாரோ போல மாறுவார்கள் தெரியுமா!. (அனுபவத்தின் வலி அது.)

இவள் வாழ்வில் வருகின்ற ஒரு மருத்துவனின் கதாபாத்திரம், அவன் மோசாமானவன் எல்லாம் இல்லை, மிக மிக நல்ல குணாம்சம் கொண்டவனாகவே தன்னை முன்வைப்பான். பாவமாகவே இருப்பான். ஆனாலும் அவன் நோக்கம் இவளிடம் காமத்தைப் பெறுவது. ஆண் எப்படிப் பட்டவனாகினும் அவன் வந்து நிற்கும் புள்ளி இதுதான் என்பதை வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி சொல்லிவிட்டார்கள். அவள் இந்த அழைப்பை மறுப்பாள், அவளுக்கும் அவனைப் பிடிக்கும்தான், அவனோடு அனு சிரித்து நெருங்கிப் பேசியதால்தான் அவள்மீது கோபம் கொண்டு மோசமாக திட்டியும் இருப்பாள். (அன்றைய இரவே பிரபாவின் முன் அனு ஆடை மாற்றுகின்ற ஒரு காட்சி. தன் இளமையைக் காட்டி வயதேறிய அவளை வெகுவாகச் சீண்டுதல். நிச்சயம் ஒரு பெண் மட்டுமே இத்தகைய காட்சியை எழுதமுடியும்) ஆனால் இந்தப் பிடித்தத்தை ஒரு பிறழ்காதல் என்ற அளவிற்கு நீட்டிக்க அவள் விரும்பவில்லை. மிக நுட்பமான இடம். அதே பிரபாதான் அறிமுகமற்ற ஆண் ஒருவனை தன் கணவனாக பாவித்து உறவு கொள்பவளாகவும் இருக்கிறாள்.

ஆல் வி இமேஜின் அஸ் லைட் (All we imagine as light) - திரைப்படவிமர்சனம் - பெருநகரமொன்றில் வசிக்கும் பெண்களின் கதை - https://bookday.in/

பார்வதி, நகர விரிவாக்கத்தில் பார்வதி வாழ்ந்து வந்த இடமும் சிக்கிக் கொள்ள, அவள் அந்த இடத்தில்தான் 22 வருடங்களாக வாழ்ந்தாள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லாமல் தன்தரப்பு நியாயத்தைச் சொல்ல வழியின்றி சொந்த ஊருக்கே திரும்பிச் செல்கிறாள். காதல் காமம் என எல்லாவற்றில் இருந்தும் வெளிவந்த ஒருத்தி, இருக்கின்ற காலத்தை நிம்மதியாக கழித்தால் போதுமென வாழ்பவள். சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லும்போது துணையாக உதவிக்கு பிரபாவும் அனுவும் உடன்வருகிறார்கள். அனுவுக்கு ஒரு காதல் இருக்கிறது என்பது அங்குதான் பிரபாவிற்கு தெரியவருகிறது, அவள் அவர்கள் இருவரையும் ஒருவித எரிச்சலோடுதான் பார்க்கிறாள்.

கடற்கரையில் யாரோ மத்திம வயதினன் ஒருவன் நினைவின்றி கிடக்க, பிரபா செவிலி என்பதால் அவனுக்கு முதலுதவி செய்து அவன் உயிரைக் காப்பாற்றுகிறாள். ஒரு வீட்டிற்கு அவனைக் கொண்டு சென்று மருத்துவரின் வருகைக்காகக் காத்திருக்கிறாள், அங்கிருந்த வயதான பெண் ஒருத்தி இவர்கள் இருவரையும் கணவன் மனைவி என நினைத்துக் கொள்கிறாள். அவனுக்கு தான் யாரென எதுவும் நினைவில் இல்லை. அவனிடம் தன்னுடைய கதையைச் சொல்கிறாள், சொல்லிமுடித்து நீங்க என்னை விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது என்பாள், யாரோ ஒருவனை தன் கணவனாக பாவித்து முறையிடுதல். அது ஒரு நாடகம் போல அங்கு நிகழும். அவனும் அவளிடம் மன்னிப்பு கேட்பான், இன்னொரு நாடகம், நான் ஜெர்மனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் உன்னைத்தான் நினைப்பேன், உன் முகத்தைத் தான் நினைப்பேன், அவள் உள்ளங்கையில் முத்தமிடுவான், கண்ணீரோடு பார்ப்பாள்.

ஆல் வி இமேஜின் அஸ் லைட் (All we imagine as light) - திரைப்படவிமர்சனம் - பெருநகரமொன்றில் வசிக்கும் பெண்களின் கதை - https://bookday.in/

மனித மனங்கள்தான் எத்தனை பூஞ்சையானது. எதைக் கொண்டு எதை நிரப்ப முயல்கிறது? முத்தத் தொடர்ச்சியாக புணர அனுமதிப்பாள். இனி இந்த வாழ்வில் நான் உன்னைச் சந்திக்கவே கூடாது எனச் சொல்லி அப்புணர்ச்சி முடியும்.
இந்தப் புணர்ச்சிக்குப் பின் அனுவையும் அவள் காதலனையும் பிரபா பார்க்கின்ற பார்வையில் ஒரு கருணை இருக்கும் வாஞ்சை இருக்கும். அன்பு மிகும்போது மட்டும்தான் உங்களால் இன்னொரு அன்பைப் புரிந்துகொள்ள முடியும், இன்னொரு இரண்டு உயிர்களின் உறவைப் புரிந்துகொள்ள முடியும்.

இவை மட்டுமல்ல இன்னுமே நிறைய நிறைய நல்ல காட்சிகள் இருக்கின்றன, பெருநகரத்தை காட்டுகின்ற ஒளிப்பதிவு முதல், பின்னணியில் ஒலிக்கின்ற மெல்லிய பியானோ இசை வரை எல்லாம் அதனதன் தொழிலைச் செவ்வனே செய்திருக்கின்றன. அசலான பெண்ணிய படம் என இதனை வரையறுக்கலாம்.
hotstarல் காணக் கிடைக்கிறது.

எழுதியவர் :

கார்த்திக்

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. அன்பு

    தமிழில் உள்ளதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *