Music Life Series Of Tamil Cinema Music Article by Writer S.V. Venugopalan. Book day website is Branch of Bharathi Puthakalayam



எஸ் வி வேணுகோபாலன்

ம்பதாவது கட்டுரை வாசிக்கும் அனைவருக்கும் அன்பு வணக்கங்களும், நன்றியும் ! ஓர் இணைய தளத்தில் தொடர்ச்சியாக ஒரு கலந்துரையாடல் போல் இந்தக் கட்டுரைத் தொடர், ஐம்பது வாரங்கள் வந்திருப்பது, உண்மையிலேயே கையில் கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டிய அளவு நம்ப முடியாதிருக்கிறது

அன்போடு இசை வாழ்க்கையைத் தங்களது வாசிப்பு அனுபவத்தின் முக்கிய அம்சமாகப் பார்த்து உடனுக்குடன் வாசித்து, கருத்துகள் தெரிவித்து, ஊக்கப்படுத்தி வரும் சக பயணிகளான  அன்பர்களுக்கு உளமார்ந்த நன்றி சொல்லிக் களிப்புறுகிறேன்

கட்டுரை எழுதி  அனுப்பியவுடன்பல நேரங்களில், இரவு எட்டு மணிக்குப் பிறகு அனுப்பியபோதும், அன்போடு உடனுக்குடன் பதிவேற்றம் செய்து இணைப்பை அனுப்பி வரும் புக் டே இணைய தள அன்புத் தோழர் சுரேஷ் மிகுந்த அன்புக்குரியவர். பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர் தோழர் நாகராஜன், சேலம் சஹஸ் இருவருக்கும் சிறப்பு நன்றி.

ழுத்தினால் கிடைத்து வரும் சொந்தங்கள் புதிய நட்பு உறவுகள். இசை வாழ்க்கை தொடங்கிய பிறகு புத்தம் புதிய நட்புறவுகள் பூத்த வண்ணம் இருப்பது இனிய அனுபவம். இசைப் பாடல் மீதுள்ள காதலால் ஐந்தே ஐந்து நிமிடங்கள் முதன் முதல் பார்க்க வாய்த்த ஒரு மனிதரோடு அத்தனை நெருக்கமான அன்புறவு சாத்தியமாகும் என்று அப்போது தோன்றவில்லைகடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கி, ஊரடங்கு பிறப்பிக்கப்படுமுன் கலந்து கொண்ட ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்தான் அவர் என்னைப் பார்த்தது

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியும் நானும்- Dinamani

‘எம் எஸ் வியும் நானும்’ என்ற அந்த நூலின் ஆசிரியர் கவிஞர் காமகோடியன் எங்கள் தெருவில் வசிப்பவர், அவரது அறிமுகம் சில ஆண்டுகளுக்குமுன் தற்செயலாக மளிகைக்கடையில் பொருள் வாங்குகையில் பரிமாறிக் கொண்ட கவிதை வரியிலிருந்து வாய்த்தது. பார்க்கும் போதெல்லாம், மெல்லிசை மன்னரோடு தமக்கு வாய்த்த நட்பின் பெருமையைக் கண்ணீர் மல்க நினைவு கூர்வார், சுருக்கமான பேச்சு, தமது பெருமை எதையும் தாமாகச் சொல்பவருமல்ல. நூல் வெளியீடு கூட, மளிகைக்கடை அன்பர் ஞானராஜ் அவர்கள் சொல்லித் தான் தெரியவந்து அன்று மாலை மயிலையில் நடந்த அந்த நிகழ்ச்சிக்குப் போனது

நிகழ்ச்சியில், எம் எஸ் வி அவர்களது நெருக்கமான உதவியாளர் அனந்து, கவிஞர் காமகோடியன் எழுதி எம் எஸ் வி இசையமைத்த பாடல்கள் சிலவற்றைக் குழுவினரோடு மேடையில் சிறப்பாகப் பாடிக் கொண்டிருந்தார். நல்லி குப்புசாமி செட்டியார், இயக்குநர் எஸ் பி முத்துராமன், பாடகி வாணி ஜெயராம், நடிகர் ராஜேஷ், எடிட்டர் மோகன் போன்றோர் சிறப்பு விருந்தினர்கள்

உரைகளின் தெறிப்பில் ரசிக்கத்தக்க இடங்களில் எல்லாம் உணர்ச்சிபூர்வமாகப் பாராட்டி மகிழ்ந்து கேட்டுக் கொண்டிருக்கையில், என் வலப்புறம் வந்து அமர்ந்த அந்த எளிய மனிதரை அதற்குமுன் நான் பார்த்ததில்லை. சென்னையில் மகள் வீட்டுக்கு வந்திருந்தவர், மிகத் தற்செயலாக இந்த நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டு வந்தேன் என்றார். என் ரசிப்பு பார்த்துத்தான் அருகே வந்தமர்ந்தேன் என்று சொன்னார்.  

நீங்கள் எழுத்தாளரா?’ என்று கேட்டார், இல்லை, ஒய்வு பெற்ற வங்கி ஊழியர் என்றேன். ‘இல்லை, நீங்கள் ஓர் ஆழ்ந்த இசையார்வம் உள்ளவராகவும், எழுதுபவராகவும் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது’ என்றார்

என் ஜோல்னாப் பையில் இருந்து, தி இந்து நாளிதழ் இந்து டாக்கீஸ் இணைப்பு எடுத்து அவரிடம் கொடுத்து, இதில் என் கட்டுரை வந்துள்ளது, வாசியுங்கள் என்றதும், அலைபேசி எண்ணும் கேட்டு அதிலேயே எழுதி வாங்கிக் கொண்டு பிரியா விடை கொடுத்தார், கோவில்பட்டி முத்துராமலிங்கம் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த அன்பின் அன்பான நண்பர்.

மறுநாள் காலை, அந்த மென்குரல் அலைபேசியில் ஒலித்தது : ‘அய்யா, இப்பம் பேசலாங்களா‘.  முந்தைய இரவே அந்தக் கட்டுரை வாசித்து ரசித்து மிகுந்த அன்பு கலந்து வாஞ்சையோடு பேசத் தொடங்கிய அந்த மென்குரல் பின்னர் எப்போது அலைபேசியில் ஒலித்தாலும், எப்பேற்பட்ட சோர்வும் பட்டென்று அகன்றுவிடும். ‘ஏதேனும் புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்களா?’ என்று துருவித் துருவிக் கேட்டு, அப்புறம் அவராகவே, பாரதி புத்தகாலயம் போய், ‘தர்ப்பண சுந்தரி’ சிறுகதை தொகுப்பும், ‘உதிர்ந்து உதிராதகட்டுரை தொகுப்பும் வாங்கிக்கொண்டுதான் சொந்த ஊர் திரும்பிச் சென்றார். புத்தகங்களை வாசித்துவிட்டு அத்தனை திறனாய்வுப் பார்வையோடு நீண்ட நேரம் விவாதித்தார்.  



தொடர்ந்து இசை வாழ்க்கை படித்து வரும் அந்த அன்பர், எழுத்தைத் தொடர்வதற்கான மிகப் பெரிய ஊக்க மொழி வழங்கி வருவோரில் ஒருவர்

விசில் இசை ஒலித்த பாடல்கள் பற்றிய கட்டுரையில் இடம் பெற்றிருந்த, ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரைபாடலைப் பற்றி வாசித்ததும்,  தூத்துக்குடியில் பல ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த ஒரு தீ விபத்து பற்றி வருத்தம் பொங்கப் பேசினார். பாவ மன்னிப்பு வெளியாகி இருந்த சமயம், படத்தில் தீப் பற்றி எரியும் காட்சியில் மக்கள் லயித்துப் பார்த்துக் கொண்டிருந்த அதே வேளையில்தியேட்டரில் உண்மையிலேயே திடீர் என்று தீப்பற்றி எரியத் தொடங்கி இருந்திருக்கிறது, முதலில் அதை உணராமல் உள்ளேயே இருந்த கூட்டம், பின்னர் கூக்குரல் எழுப்பி அலைமோதி எந்த வழியில் தப்பி எப்படி வெளியேறிப் போவது என்று திண்டாடிய கொடுமையான தீ விபத்து சார் என்று குறிப்பிட்டார் முத்துராமலிங்கம். “வந்த நாள் முதல் பாடல் கேட்கும் போதெல்லாம் அந்தத் துயரமான சம்பவம் நினைவுக்கு வந்திரும் சார்என்றார்

இசை நம் உணர்வாய் மட்டுமின்றி உடலோடும் ஒட்டியிருக்கிறது. உண்மையான உடன்பிறப்பு இசை

சை வாழ்க்கை தொடர் எங்கோ ஆரம்பித்து எங்கெங்கோ பயணம் செய்து இங்கே ஐம்பது தொட்டுப் பரவுகிறது. ‘ராகு காலம்எனும் தலைப்பில் ஜோதிட நம்பிக்கைகள் குறித்த விமர்சன நையாண்டிக் கட்டுரை ஒன்று எழுதினார் எழுத்தாளர் கல்கி. அதைத் தொட்டுவிட்டு வேறு பல செய்திகளையும் விவாதித்து நிறைவு பெறுமிடத்தில்,, , ‘பாருங்கள், எங்கோ எழுத ஆரம்பித்து வேறெங்கோ வந்து நிற்கிறது, இதற்குத் தான் சொல்கிறது ராகு காலத்தில் ஆரம்பிக்கக் கூடாதுஎன்று தமக்கே உரிய நகைச்சுவை மொழியில்  நிறைவு செய்வார் கல்கி!  

இசை வாழ்க்கை, இசையைத் தொட்டு, இசையைத் தேடி, இசையில் நனைந்து, கரைந்து, இசையோடு தான் மீண்டும் மீண்டும் சங்கமிக்கிறது.

அண்மையில், கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன் அவர்களது இணையர் சீதா அம்மாள் மின்னஞ்சல் ஒன்று வந்திருந்ததுஅவரது குடும்ப உறுப்பினர் ஷ்ரேயா தேவ்நாத் வாசித்திருக்கும் வயலின் இசை இணைப்பு அதில் இருக்க, கவி தாகூர் அவர்களது புகழ் பெற்ற மோமோ சிட்டீ….என்ற ரவீந்திர சங்கீதத் துளி அதில் இழையோடியது

மிகக் குறைவான நிமிட நேர இசை தான், கண்ணீர் மல்க வைத்த அந்த இசைக்கருவி கண்ணை மூடிக் கேட்க வைக்கையில், தானே ஒரு மயில் இறகாக உருவெடுத்து உள்ளத்தை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது. மொழி கடந்து அது கடத்திய உணர்வுகள், இடங்களைக் கடந்து சாந்தி நிகேதனத்தில் அடர்த்தியான இயற்கைப் பரப்பில், காலத்தைக் கடந்து பின்னோக்கிப் போய், குருதேவ் அவர்களது அருகே கொண்டு போய் அமர வைத்துவிட்டது.





இணையத்தில் தேடிப் பார்க்கவும், அஞ்சன் கங்குலி என்பவரது எளிய மொழி பெயர்ப்பு கண்ணில் பட்டது. ஆங்கிலத்தில் வாசித்ததை, என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் தமிழில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்

நான் வியந்து போகிறேன், என் மனத்தினுள் சீரான முடிவற்ற ஒரு நாட்டியத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் யார் என்றுஎன் ஆன்மாவும் உடலும் மிருதங்க தாளத்திற்கேற்ப எப்படி ஒத்திசைந்து ஆடுகின்றன என்று வியந்து போகிறேன்எக்காலத்திற்குமான சீரான நடனம்….புன்னகையும் கண்ணீரும், நன்மையும் தீமையும் ஒருங்கே அந்த சீரான தாள கதியில் வாழ்க்கையும் மரணமும் அவதானித்தபடி, கூடவே ஆட, எக்காலத்திற்குமான சீரான நடனம்ஆஹா….என்ன பேரானந்தம்பேரானந்தம்சிறைப்படுதலும் விடுதலையும் அருகருகே அல்லும் பகலுமாய்….அந்த நாட்டிய அலைகளை உற்று நோக்குகிறேன், அதன் பின்னோடுவதில் களிப்புறுகிறேன்சீரான முடிவற்ற நிலைபெற்றுவிட்ட நாட்டியம்….”

இசை வாழ்க்கைக்கு இப்படியான ஓர் உருக்க விளக்கம் வந்தடையும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மிருதங்கத்தை அவர் தேர்ந்தெடுத்தது பேரின்பமாக இருக்கிறது வாசிக்க. கடந்த நாட்களில், காற்றில் பரவும் பாடல்களில் மிருதங்க இசை கலந்திருக்கக் கேட்ட தருணங்களில் ஏனோ புதிய சிலிர்ப்பு மேலிடத் தொடங்கி விட்டிருக்கிறது. மோமோ சிட்டீ கீதத்தை வயலினில் அப்படி இழைத்திருந்தார் ஷ்ரேயா

வயலின் இசைக்கு நன்றி தெரிவிக்கவும், தோழர் எஸ் எஸ் ஆர், இப்படி பதில் போட்டிருந்தார்: “தாகூர் தனது பாடல்கள் பலவற்றிற்கும் அவரே இசை அமைத்திருப்பார். இரவீந்திர சங்கீத் வங்காளிகளின் உயிர்மூச்சுஇரண்டு நாடுகளின் தேசியகீதம் படைத்த பெருமை தாகூருக்கு உண்டு. கீதாஞ்சலியின் மூலம் வங்க மொழியில் தான் உள்ளது. ஆங்கிலக் கவிஞர் ஈட்ஸ் உதவியுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அம்மொழிபெயர்ப்பே அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுக் தந்தது. பாரதியின் பாடல்களில் சில ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதுபாஞ்சாலி சபதம் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கலாம்.”

மகாகவி பாரதி, தமது பாடல்களுக்கு ராகம், தாளம் எல்லாம் அவரே தேர்வு செய்திருந்ததை, அவரது தொகுப்பில் பார்க்க முடியும். ‘சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மாகவிதைஎன்று காண்க என்றே எழுதி இருந்தவர். உலகளாவிய அந்த அங்கீகாரம் நழுவிப்போன துயரம் பல தலைமுறைகளைக் கடந்து இப்போதும் நீடிப்பது.

மோமோ சிட்டீ கீதத்தை, சௌனக் சட்டோபாத்யாய எனும் இசைப் பாடகர், இன்னொரு கீதத்தோடு இணைத்து இசைத்திருக்கும் ஆல்பம், யூ டியூபில் கிடைக்க, அவரது இசையின் கரைதல் மொழியைக் கடந்து இசைக்கு நெருக்கமாக உணரவைத்தது





சீரான கதியில் ஒரு நாட்டியத்தை, கவிதை வாசிப்பை, சிறுகதை ஓட்டத்தை, நாடகக் காட்சியை, உரையாடலை, வசை பாடலை மனிதர்கள் கடந்து கொண்டு தான் இருக்கின்றனர். அதனூடே இசையையும் ! இசையின் பொழிவில் சிலர் நனையவும், சிலர் சன்னல் வழி பார்க்கவும், சிலர் குடை  விரிக்க அந்தக் குடையின் மீது விழும் தாளக்கட்டை ரசித்தபடி ஓடியும், சிலர் தத்தம் காகிதக் கப்பல்களை இசை நதியில் ஓடவிட்டுமாக……

ம்பதாவது வாரம் என்பதால் பொன் என்ற சொல்லில் தொடங்கும் ஓர் இசைப்பாடலை யோசித்தேன். ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ என்பது என் இதயத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்டி எம் எஸ் அப்படி ரசித்துப் பாடி இருப்பார். ‘பொன்னு விளையற பூமியடா’ என்னமாக ஒரு கிராமப்புறப் பாடல்… ‘பொன் மகள் வந்தாள்’, எம் எஸ் வி இசையில் ஒயிலான ஒரு பாடல்

‘பொன்மனச் செம்மலைப் புண்படுத்தியது யாரோ…’ஆஹா, வாணி ஜெயராம், டி எம் எஸ், சரணங்களில் சங்கதிகள் துள்ளி விளையாடும். ‘பொன்னா இல்லை பூவாஎன்பது ஓர் இனிமையான  காதல் மெல்லிசை

பொன்னாரம் பூவாரம்‘, எஸ் பி பி கொஞ்சல் கானம். ‘பொன் மானைத் தேடி நானும்‘, கங்கை அமரன் இசையில் மலேசியா வாசுதேவன், எஸ் பி ஷைலஜா பாடி இருந்த முத்துலிங்கம் அவர்களது அருமையான சோக கீதம், கலங்கரை விளக்கத்தின், உயிரோட்டமிக்கபொன்னெழில் பூத்தது புது வானில்பாடலை விடவா….

இந்தப் பட்டியல் முடிவற்றுப் போய்க் கொண்டிருந்தது. தங்கம் என்ன பாவம் செய்தது, ‘தங்கத் தாமரை மகளே’ தொடங்கி அது ஒரு தனிப் பட்டியலாகும் போல் தோன்றியது

ண்ணை மூடி சிந்திக்கையில், சன்னமான ஒரு காதல் மொழி காதில் மெல்லக் கேட்டது. ஒரு மெல்லிதயத்தின் துடிப்பை இன்னோர் இதயம் பற்றிக் கொண்டு தனது துடிப்பை உரத்து ஒலிக்கவும் விழித்துக் கொண்டு கேட்டபோது, ‘போலீஸ்காரன் மகள்’ படத்தின் அபாரமான அந்தப் பாடல் உருட்டியுருட்டி எடுத்தது

கண்ணதாசன்விஸ்வநாதன் ராமமூர்த்திபி பி ஸ்ரீனிவாஸ், எஸ் ஜானகிவீணை, புல்லாங்குழல், வயலின் மற்றும் வெவ்வேறு இசைக்கருவிகள் வாசித்த இசைக் கலைஞர்கள் என கூட்டாக இந்த மந்திர ஜாலப் பாடலை வழங்கிய எல்லோரையும் கொண்டாடத்தான் வேண்டும்





பொன்னென்பேன் சிறு பூ என்பேன்….’  பாடல் அல்ல. கண்களில் இருந்து இதயத்திற்குச் செய்தி போகவும் உடனே இதயங்கள் இடமாறிக்  கொள்வதைக் கண்கள் பார்த்து மலைத்து நிற்கையில் உதடுகள் உகுக்கும் தேன் அது!

அடர்ந்த கானகத்தில் நிலவொளியில் மரக்கிளையில் சந்திக்கும் இளம்  பறவைகளது உள்ளத்தின் குரலாகத் தொடங்குகிறார் பி பி ஸ்ரீனிவாஸ். மயக்க முயக்கத்திற்கான  மெட்டு அது

பொன்னென்பேன் சிறு பூவென்பேன்என்பது தலையை ஆட்டியபடியே பேசும் ஒரு பறவையின் துடிப்புஅடுத்து, ‘காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்என்று அலகால் அது தனது பேடு நோக்கிச் சீண்ட, பிறகு எஸ் ஜானகியின் குரலில் பெண் பறவை, தன்னுணர்வை, ‘என்னென்பேன் கலை ஏடென்பேன், கண்கள் நான் என்றால் பார்வை நீ என்பேன்என்கிறது!  

பல்லவியை சுகமான ஒரு ஹம்மிங் மூலம் முடிக்கவைத்திருக்கும் இசையமைப்பாளர்களின் கற்பனை அபாரம். அது காதல் பறவைகளை இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்டு தாயின் மடியில் கிடைக்கும் தாலாட்டுப் போன்ற சுகத்தை பரஸ்பரம் வழங்கி இன்புற வைத்துவிடுகிறது

உடனே காத்திருக்கும் மற்ற கானகவாசிகள் இந்தக் காதலை உரக்கக் கொண்டாடக் கிளர்த்தும் வயலின் புறப்பாட்டில், வீணை வந்து கலப்பதும், அதன் வேக மீட்டலில் குழலிசை தன்னை ஒப்புக்கொடுப்பதும், அதை ஏற்று வீணை சிந்தும் துளிகளில் குளித்து, பி பி ஸ்ரீனிவாஸ், ‘கொத்து மலரெடுத்து முல்லைச் சரம் தொடுத்துச் சிட்டு முகம் பார்த்து…’ என்று குரலெடுக்க, எஸ் ஜானகி,தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்..’ என்று தொடரும் முதல் சரணம் இணை  பறவைகளின் காதல் உலா. ‘நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்என்ற நிறைவில், ‘அறிவோம்என்ற இடத்தில் போடும் சங்கதிகளில் குயிலாகவே ஒலிப்பார் ஜானகி

இரண்டாம் சரணத்தில் எஸ் ஜானகி, ‘சின்னச் சின்னப் பறவை அன்னை அவள் மடியில்..’ என்று இழைக்கிற இழைப்பில், அய்யோ அதுவும் அந்தமடியில்சங்கதிகள் போட்டு இசைக்கையில், ‘தவழ்வது போல்தான் நாமும் தவழ்ந்திருப்போம். அதற்குப் பதில் சொல்லும், பி பி ஸ்ரீனிவாஸ், ‘கண்ணை மெல்ல மறைத்து…’ என்று எடுக்குமிடம் அத்தனை போதையூட்டும். அடுத்த இரு வரிகளில் இருவருமே உருக்கி வார்த்திருப்பார்கள் காதலை.  

பின்னர், பல்லவியை ஜானகி பாடவும் ஸ்ரீனிவாஸ் ஹம்மிங் கொடுக்கவும் ஆவி சோரக் கலந்து நிறைவுறுகிறது காதல் இசைப்பாடல்.

கத்தான இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் தலைமுறைகளைக் கடந்து நிற்கும் படைப்புகளை வழங்குவது என்பது இசை வாழ்க்கையின் கொண்டாட்டம்

ஐம்பது வாரங்கள் எழுதிய எழுத்து, அந்தப் பெருங்கடல் நோக்கி அகன்ற பார்வை செலுத்தியபடி, மெல்லக் குனிந்து அள்ளமுடிந்த கைம்மணல் அளவு.  

கடற்கரையில் இன்னும் கொஞ்சம் உலவிப் பார்க்கலாம், துழாவிப் பார்க்கலாம்

(இசைத்தட்டு சுழலும் ….)

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]

முந்தைய கட்டுரைகள் படிக்க: 

இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



8 thoughts on “இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் ”
  1. எஸ்.வி.வேணுகோபாலனின்’ இசை வாழ்க்கை’ இனிதே தொடர எம் வாழ்த்துகள்.
    அவர் ஒரு மகாரசிகர். எதையும் இதயத்திலிருந்து எழுதுகிறார்.
    இனிய இசைபோல் காதில் தேன் பாய்கிறது.

  2. நம் வாழ்வில் ஒவ்வொரு கணமும் இசையோடு இசைந்த வகையில் உள்ளது. நம்மிடம் இருந்து இசையை பிரித்தறிய முடியாது. அனைவருமே வெளிப்படையாகவோ மனதோடோ இசை இழைந்தோடிக் கொண்டேதான் காலம் கரைந்தோடிக் கொண்டிருக்கும். சகோதரர் எஸ்.வி.வி. அவர்கள் எழுத்திசை வீணை நாதமாக எழுத்துகளில் இழைந்து கொண்டிருக்கிறது. வாழ்த்துகள். நல்ல வாசிப்பனுபவம்.

  3. இசைக்கு எல்லையில்லை. இன்னும் கொஞ்சம் சுழற்றிதான் பாருமைய்யா.

  4. மிகச்சிறப்பான இசைபணக்கட்டுரை.திரு வேனுகோபால் அவர்களின் சில வரிகள் சொல்புதிது குழுவில் படித்திருக்கிறேன்.அவரைப்ற்றி பெரிதாய் எதுவும் தெரியாது.ஆனால் இந்தக்கட்டுரை மிகச்சிறப்பு அதுவும் அந்த காலத்துப்பாடல்களைப்பற்றி.வேறு ஒரு கோணத்தில் கட்டுரைப்பார்த்தது போல் இருந்தது.
    Quarantine from reality என்ற Music show நடத்தும் சுபஸ்ரீயின் இசையைப்பற்றிய அறிவை நினைத்து வியந்தது போல் இந்தக்கட்டுரை படித்ததும் இருந்தது.

    1. ‘கானகவாசிகள் இந்தக் காதலை உரக்கக் கொண்டாடக் கிளர்த்தும் வயலின் புறப்பாட்டில், வீணை வந்து கலப்பதும், அதன் வேக மீட்டலில் குழலிசை தன்னை ஒப்புக்கொடுப்பதும், அதை ஏற்று வீணை சிந்தும் துளிகளில் குளித்து, பி பி ஸ்ரீனிவாஸ், ‘கொத்து மலரெடுத்து முல்லைச் சரம் தொடுத்துச் சிட்டு முகம் பார்த்து…’ என்று குரலெடுக்க, ‘ வார்த்தைகள் இசைவோடு இணைந்து இசையாக வந்து விழுகின்றன. வாழ்த்துக்கள். 100ஐ நோக்கி சுழலட்டும்.

  5. //ஐம்பது வாரங்கள் எழுதிய எழுத்து, அந்தப் பெருங்கடல் நோக்கி அகன்ற பார்வை செலுத்தியபடி, மெல்லக் குனிந்து அள்ளமுடிந்த கைம்மணல் அளவு. //

    இசைக் கடலில் தொடர்ந்து உலாவுங்கள் ஐயா
    தாங்கள் அள்ளும் கை மணலின் ஒவ்வொரு துகளும் எங்களை எங்கோ அழைத்துச் செல்கிறது

  6. நன்று. முதலில் கொஞ்சம் இழுவையாக இருந்து பிக்கப் ஆகி சிறப்பாக இருக்கு. நன்றி சார் ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *