Music Life Series Of Cinema Music (புலமைப்பித்தன் (Pulamaipithan) Old Tamil Movie Songs Article by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் !



எஸ் வி வேணுகோபாலன்

செப்டம்பர் 12 அன்று காலையில் ஒரு முக்கிய நிகழ்ச்சி தொடங்க வேண்டிய வேலைகளில் மூழ்கி இருந்தபோது  9.12 மணிக்கு, அலைபேசியில் ஓர் அழைப்பு. சுதாகர் அழைக்கிறார். சாக்ஸஃபோன் இசைக்கலைஞர் சுதாகர். பேசுவதற்கான அழைப்பு இல்லை, எங்கோ ஒரு திருமண நிகழ்வில் வாசிக்கையில்லைவ்ஆக நான் கேட்பதற்கு அப்படி அழைத்து அருகே அலைபேசியை வைத்துவிட்டு வாசித்துக் கொண்டிருக்கிறார். அலைபாயுதேஆஹாசட்டை பாக்கெட்டில் அலை அப்படியே பாய்ந்து கொண்டிருக்க, எங்கள் நிகழ்ச்சிக்கு வருவோரை வரவேற்பதில் அலைபாய்ந்து கொண்டிருந்தேன். அன்று இரவும் அப்படி ஒரு வாசிப்பு அழைப்பு, அப்போது நகுமோமு!

அடைக்கும் தாழ் அற்ற அன்பின் அழைப்புகள் இப்படி தொடரும். இசையின் இழைகள் கண்ணுக்குப் புலப்படாத அன்பு நெசவை செய்து கொண்டிருக்கவே செய்கின்றன. ரசனை தான் அதன் வண்ணமயக் கொண்டாட்டம்

டந்த ஞாயிறு வண்ணக்கதிர் இணைப்பில், ‘அவர் என்னென்ன சொன்னாலும் ரசனைஎன்ற தலைப்பில் எழுதி இருந்த கட்டுரைக்கு நிறைய ஆர்வமிக்க எதிர்வினைகள். அண்மையில் மறைந்த புலமைப்பித்தன் அவர்களை இப்போது அறியவந்து தேடித்தேடி அவரது அருமையான பாடல்களை ரசிகர்கள் பலரும் கண்டடைந்து வருவதையும் உணர முடிகிறது

கவிதை உலகம் வேறு. திரைப்பாடல் களம் வேறு. ‘ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடாஎன்று திரைப்பாடலில் எழுதி இருப்பார் கவிஞர் கண்ணதாசன் (சின்னச் சின்ன கண்ணனுக்கு.. பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களது முத்துகளில் ஒன்று!). திரைப்பாடல் உருவாக்கம் ஒருவரது துடிப்பினில் விளைவது அல்ல. ஆனால், அதன் உயிர், அதன் ரசவாத சொற்கள், தத்தகாரத்திற்கு ஏற்ப வந்து விழும் சந்தங்கள் எல்லாம் பாடலாசிரியரது சொந்தத் துடிப்புக்கு ஏற்பத் தான் விளையும்

முப்பதாவது வயதில் முதல் பாட்டு தந்து திரையிசை உலகில் நுழைந்தவர் புலமைப்பித்தன். பல நூறு பாடல்கள் எழுதியவர். பாடல்கள் எழுதுவது மிகவும் இயல்பான விஷயம் என்று அவர் சொல்வாராம், அது தான் அம்சம்!

இயக்குனர் சங்கருக்கு மட்டும் தான் தெரியும், குடியிருந்த கோயில் படத்தின் முக்கியமான அந்தப் பாட்டை எழுதியவர் யார் என்று…. 

அறிமுகப் பாட்டே, ‘நான் யார் நான் யார் நீ யார்’ என்று எழுதிக் கொண்டு நுழைந்திருப்பவர் புலமைப்பித்தன், ‘புலவர் வருவார் பின்னே அவர் பாட்டு வரும் முன்னேஎன்று தமது எழுத்துகளால்  அறிமுகமானது எத்தனை சுவையான விஷயம்பிறகு எம்ஜிஆர் இவரை விடவில்லை. அவரது அரசியலின் குரலை இசைப்பாடலாக வடித்துக் கொண்டிருந்தவர் புலவர்.

admkformer leader, the Pulamaipittan has passed away || அ.தி.மு.க.முன்னாள்  அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன் காலமானார்

கோவை சூலூரைச் சார்ந்த அவர், திரைத்துறையில் பாடல் எழுதும் நோக்கத்தோடு தான் சென்னை வந்தார் என்று ஒரு குறிப்பு பார்க்கக் கிடைத்தது. அவர் தமிழ் ஆசிரியராக இருந்தவர்

வடலூர் பாவலர் முருகு வரதராசன், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு வருகையில், அங்கே பணியாற்றிக் கொண்டிருந்திருக்கும் இவரை இன்னார் என்று அறியாமல் இவரிடம் தான் முதல் தாக்கல் கொடுத்திருக்கிறார். பின்னர் ஒரு நாள் வரதராசனைப் பார்க்கும்போது, ‘நீங்கள்  தமிழ் இலக்கண வகுப்புகள் எல்லாம் எளிமையாக சொல்லித் தருகிறீர்களாம், செய்யுள் பகுதிகள் அழகாகப் பாடி விளக்கம் சொல்கிறீர்களாம், மாணவர்கள் சொன்னார்கள்’ என்று பாராட்டிய போதும், தன்னை வாழ்த்துபவர் யார் என்று அறிந்திருக்கவில்லை, பிறகு தான் அங்கே ஓர் ஆசிரியர் சொன்னார் என அண்மையில் பேசும்போது குறிப்பிட்டார் வரதராசன்

அறிமுகமற்ற ஓர் இளம் ஆசிரியரைப் பாராட்டும் மனம் அவருக்கு இருந்தது. பரந்து விரிந்த ஓர் இதயத்தின் பிரதிபலிப்பு அது . ஓர் உன்னதமான படைப்பாளி, தன்னைக் கடந்து உலகைப் பார்க்கும் அகக்கண்கள் பெற்றிருக்கிறார். அவரால் தன்னியல்பாக அடுத்தவர் படைப்புகளைக் கொண்டாட முடிகிறது. புலமைப்பித்தன் தமிழைத், தமிழ் இசையை யார் சிறப்பித்தாலும், தான் அவர்களைச் சிறப்பித்து மகிழ்ந்திருக்கிறார்.

பாடல் வரிகளை ரசித்து ரசித்து அவர் எடுத்துச் சொல்கையில், ஒரு கவிதைக்கான மதிப்பையும், அன்பையும் அவர் திரைப்பாடல்கள் மீதும் கொண்டிருந்தார்  என்று தோன்றுகிறது. எண் சீர் விருத்தம், அகவற்பா, வெண்பா போல ஒரு திரைப்பாடலை அதன் சந்தங்களோடு இசை நயம் சிறக்க அவர் தங்குதடையின்றிப் பிசிறின்றி சொல்லிக் கொண்டே போக முடிந்ததால், இசையமைப்பாளர் மெட்டு கொடுத்தாலும் தட்டுத் தடுமாறாமல் பட்டென்று எழுதிக் கொடுக்க முடிந்தது

தீபம் (1977) தான், சிவாஜி கணேசன் நடிக்க இசைஞானி, இசையமைத்த முதல் படம் என்று நினைவு. கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி பாடி இருக்கும்பூவிழி வாசலில்’, டி எம் எஸ் குரலில்பேசாதேவாயுள்ள ஊமை நீ’ உள்பட அத்தனை பாடல்களும் புலமைப்பித்தன் எழுதியவை

இதை வாசிக்கும் அன்பர்களுக்கு,’ என்ன முக்கியமான அந்தப் பாட்டை இன்னும் சொல்லவில்லையே’ என்று அடித்துக் கொள்ளுமே….ஆஹாவெறும் பாட்டா அது, ராக இசை மாரி அல்லவா அது

காதல் சரங்கள் தொடுப்பதில் ஒவ்வொரு கவிஞருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். காதலின் வெப்பநிலை கொஞ்சம் கூடுகிற போது, சொற்களும் கொதிக்கத் தொடங்குகின்றன. இள நெஞ்சங்களுக்கு அதைப் பக்குவமாகப் பரிமாறுகிற ரசனையை இலக்கணம் அறிந்த புலவர், இலக்கணமாகவே கற்றிருந்தார். எத்தனை கொதித்தால் என்ன, ராஜா, இசையால் குளிர்வித்து விடுவார் என்று அப்படி எழுதி இருப்பார் இந்தப் பாடலை.





அந்தப் புரத்தில் ஒரு மகராணி‘ …. டி எம் சவுந்திரராஜன் குரல், அதற்குமுன் கேட்டிராத ஓர் அலைவரிசையில் ஒலிப்பதை அந்நாட்களில் வெறி பிடித்ததுபோல் கேட்டுக் கொண்டே இருந்தது மறக்கமுடியாதது. எஸ் ஜானகி ஒரு குயிலின் குரலாகவே இசைத்திருப்பார் பாடல் முழுவதையும்

பாடலின் திறப்பை அத்தனை அலங்கார வளைவுகள் அமைத்துத் திட்டமிட்டிருப்பார் ராஜா. வயலின்களின் ஆர்ப்பாட்ட புறப்பாடு, குழலின் குழைவு, சிதார் தேன்துளிகள் இழைத்துக் கொடுக்க அம்சமாக நுழைகிறார் டி எம் எஸ், பல்லவியில்

‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி, அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன், கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்’ ! என்னமான காதல் சிலிர்ப்பில் இருக்கும் அந்த உச்சரிப்பு ஒவ்வொன்றும்! இப்போது, ஜானகி வந்து இணையவேண்டும், அதற்கு ஒரு மாயாஜாலம் வேண்டாமா, தாளக்கருவியை மாற்றி கிண்ணென்று கேட்கவைத்து (மிருதங்கம் என்று தான் தோன்றுகிறது!), சிதார் கொஞ்ச வைத்து வரவேற்கிறார். 

‘சாமந்திப் பூக்கள் மலர்ந்தன’ என்ற வரியை அத்தனை மோக ரசத்தில் இசைக்கிறார் ஜானகி. டி எம் எஸ் பாடும்  ‘இரு சந்தனத் தேர்கள் அசைந்தன’ என்பதில் புலவரின் சிருங்காரம் தலை தூக்குகிறது. ‘பாவை இதழ் இரண்டும் கோவை, அமுத ரசம் தேவை என அழைக்கும் பார்வையோ..’ என்ற  அடுத்த வரிகளுக்கான மெட்டு, ராஜா எப்படி அமைத்தார் என்பது எண்ணியெண்ணி இன்புற வைக்கிறது.

ஆனால், மாயச் சித்துவேலை  அதோடு முற்றுப் பெற்று விடுவதில்லை. பல்லவியை இப்போது எஸ் ஜானகி எடுக்கிறார், ‘அந்தப்புரத்தில் ஒரு மகராஜன், அவன் அன்புக்கரத்தில் ஒரு மகராணி’ என்றுஅப்புறம் தான் இருக்கிறது ரச வாதமே (ராசா வாதம் என்றும் கொள்ளலாம்), 

ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்என்ற வரியில், அந்த ஆசை என்ற சொல்லின் உச்சரிப்பிலேயே எத்தனை ரகசியமான காதல் கடத்தலும், காமன் கட்டளை கடத்தலும் நடந்து விடுகிறது! அதற்கு அடுத்த வரியை, புலவர், சும்மா ஒப்புக்கு, ‘அன்னம் தலைகுனிந்து நிலம் பார்த்தாள்என்று சொல்லி சமாளிக்கும் இடத்தில் காதலின் தட்பவெப்பம் யாராவது பார்த்துக் கொள்வது நல்லது.

உடனே மீண்டும் வயலின்கள் காதல் வளர்த்தெடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டு சரணத்தை நோக்கி, மெல்ல மெல்ல வேகமெடுத்துத் தீ மூட்டி விட, புல்லாங்குழல் தலையிட்டு இதப்படுத்த, ‘சங்கு வண்ணக் கழுத்துக்குத் தங்க மாலை, அவள் சங்கமத்தின் சுகத்திற்கு அந்தி மாலைஎன்ற முதல் சரணத்தை, டி எம் எஸ் சங்கதிகள் மின்னப் பாடப்பாட அந்தத் தாளக்கட்டின் சுகமே அலாதியாக இருக்கும்

Music Life Series Of Cinema Music (புலமைப்பித்தன் (Pulamaipithan) Old Tamil Movie Songs Article by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் !

அதே வேகத்தில், ஜானகி, ‘குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காளை அவன் கொள்ளை கொள்ளத் துடிப்பது என்ன பார்வைஎன்று இசைக்கவும், ‘அது பார்வை அல்ல பாஷை என்று கூறடி என்றான்என்ற பதங்களை டி எம் எஸ் பாட அதற்கேற்ற தாள ஒத்திசைவோடு ராஜா அமைத்திருப்பது, புலமைப்பித்தன் வரிகளுக்கு அசாத்திய மெருகேற்றுதலாக அமைந்திருக்கும்

இப்போது பல்லவிக்கு இருவரும் மீண்டதும், அடுத்த சரணத்திற்கு ராஜா அமைக்கிற இசைப்பயணம் இருக்கிறதே, ஆஹாஆஹாஉயிரில் நேராகப் போய்க் கலக்கும் இசையல்லவா அந்த இடம்…. புல்லாங்குழலில் ஒரு காதல் கோபுரத்தை எழுப்புகிறார், அடடா..அடடாஅதற்கு மென்மையான தாளக் கை தட்டலும் ஒலிக்க, அதைக் கொண்டாடி மீட்ட வைக்கிறார் வீணையை, இதய வீணை அல்லவா, பாடல் முடிவில் வர இருக்கும் ஹம்மிங் ஸ்வரங்களுக்கு ஏற்ற அதே மெட்டில் பிளந்து கட்டுகிறது வீணை இசை, அதைத் தங்கம்போல் வாங்கி வாங்கி ரசிக்கிறது இடையே இடையே வயலின் வில்லிசை

எல்லாமாகச் சேர்ந்து சைகை காட்டியதும் டி எம் எஸ் நுழைகிறார், ‘முத்துச் சிப்பி திறந்தது விண்ணைப்பார்த்துஎன! மொத்த சரணமும் இன்பச் சொற்களால் காதலை ஆசீர்வதித்து, அடுத்த கட்டத்திற்கு வளர்த்து எழுதி இருப்பார் புலமைப்பித்தன். ‘அங்கு தென்பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடும்என்பது தமிழ் மீதான காதலும் சேர்த்துக் கொண்டாடும் புலவரின் முத்திரை வரி

அந்தஆராரிரோவை ஹம்மிங் மந்திரமாக மாற்றிப் பாடகர்கள் இருவரும் அசத்தலாக இசைக்கப் பாடலை நிறைவடைய வைத்துக் காதலைத் தொடர விட்டிருப்பார் ராஜாஇந்தப் பாடலில், மாயாமாளவகௌளை  ராகத்தை ஓர் உற்சவமாகக் கொண்டாடி இருந்தார்  ராஜா என்று தி இந்து கட்டுரையாளர் சாருலதா மணி எழுதுகிறார்

https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-the-magic-of-mayamalavagowla/article2618199.ece

மிகச் சிறந்த ரசனைக்குரிய பாடல்கள் நிறைய வழங்கிச் சென்றிருக்கிறார் புலமைப்பித்தன். கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பது போல் இருக்கிறது பாடல்களுக்கான பெயர்

இலக்கிய சொல்மழை திரைப்பாடலில் எல்லாக் காலங்களிலும் பெய்துதான் வந்திருக்கிறது. புலமைப்பித்தன் பாடல்களில் ஆலங்கட்டி மழை (கல்யாணத் தேனிலா…). சிலபோது சன்னலோரத்தில் இருந்து ரசிக்கத்தக்க கம்பியிழை மழை (சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…). ஒரு சமயம், இடியோசை சரமழை (பொன்னந்தி மாலைப் பொழுது, இன்பமே உந்தன் பேர் பெண்மையோ..). சோகத்தில் இசைக்கும்போது, நள்ளிரவு நேரத்து ஓலைக் குடிசையின் முகட்டில் விடாது சொட்டிக் கொண்டே இருக்கும் மழை, ‘உச்சி வகுந்தெடுத்து’ போல!

வண்ணக்கதிர் கட்டுரை படித்ததும், ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தின் இரண்டு சிறப்பான பாடல்களை நீங்கள் விட்டுவிட்டீர்கள்’ என்று ஆதங்கத்தோடு, எங்கள் தெருவில் வசிக்கும் நண்பர் கிருஷ்ணன் (இந்தியன் வங்கியில் உதவி பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்) செய்தி அனுப்பி இருந்தார். ‘700 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார் என்கிறார்கள், கட்டுரை 800 சொற்கள் தானே, எப்படி எல்லாப் பாடல்களையும் எழுத?’ என்று பதில் போட்டதும், அப்படியானால் அவரைப் பற்றி இன்னொரு கட்டுரை எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.  இந்த அத்தியாயத்தோடு 

முற்றுப் பெறுகிற விஷயமா புலவரின் பங்களிப்பு!

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்ஒரு தபலா திருவிழா. சிதார் உற்சவம். வீணை வைபவம். ராக ஆரத்தியை வாணி ஜெயராம் எடுக்க, ஸ்வர சங்கதி தீபம் ஜொலிக்க வைப்பார் யேசுதாஸ். மெல்லிசை மன்னர் வழக்கம்போலவே வயலின்களும், புல்லாங்குழலும் இழைத்து ஒரு காதல் சிற்பமாக செதுக்கி வழங்கி இருப்பார் இந்தப் பாடலை





பல்லவியை யேசுதாஸ் தொடங்குகிறார், ‘தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம், என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம்என்ற வரிகளில் அவர் இழைக்கும் சங்கதிகளும், பொதுவாகவே யேசுதாஸ் சொல்லின் இறுதியில் வருகிறம்முக்குக் கொடுக்கும் சுகமான அழுத்தமும் அமர்க்களமாக ஒலிக்கும்

மன்னவன் உங்கள் பொன்னுடல் அன்றோ இந்திரலோகம்என்று வாணி ஜெயராம் எடுக்குமிடமே தேனாய்ச் சுரக்கும் குரல். அதுவும் அந்த “அன்றோ”! ‘அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்’ என்று வருமிடத்தில், ‘மாறனின் கணையில்’ இரண்டு சொற்களென்று தெரியாத அளவு தாளக்கட்டுக்குள் அனாயசமாக உருட்டிக் கொண்டு வந்திருப்பார் வாணி. ‘ஏன் இந்த வேகம்என்ற பதங்களுக்கு அத்தனை தாபம் ஏற்றி இசைப்பார்.

ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு லயத்தில் அமைத்திருப்பார் எம்.எஸ்.வி

பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோஎன்ற முதல் சரணத்தை அபாரமான காதல் துளிர்க்க வேகமாக எடுப்பார் யேசுதாஸ். அதன் அடுத்த அடியில், ‘பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோஎன்பதைச் சட்டென்று குரல் தாழ்த்திக் கிறக்கமூட்டுவார். ‘மாலை வரும் நேரமெல்லாம்என்று தொடரும் அடுத்த வரிகளை வாணி ஜெயராம் அதற்கேற்ற பாவத்தில் கொணர்வார்.  

இரண்டாம் சரணத்தின் தொடக்கத்திலேயே, யேசுதாஸ், ராக சுகம் தெறிக்க, ‘ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலேஎன்று எடுத்து நிறுத்தி மீண்டும் இரண்டாம் முறையெடுத்து, ‘இரவென்றும் பகலென்றும் காதல் மனம் பார்ப்பதுண்டோஎன போதையுற இசைப்பார்

முந்தைய சரணத்தில் சாதுவாக வாசித்த தபலா தாளக்கட்டு, இந்த சரணத்தில் யேசுதாஸ் முடித்த மாத்திரத்தில் நடத்தும் இந்திர ஜாலம், ஆஹா!   ‘கள்ளவிழி மோகத்திலே துள்ளிவரும் வேகத்திலே‘  வாணி பாடுகையிலும்  அதே செப்படி வித்தையாக உருட்டு உருட்டித் தொடரும் இன்பம்ஆஹா..ஆஹா..’காலை வரை கேட்பதுண்டோஎன்று வாணி கேட்டால், காலம் முழுக்கக் கேட்டுக் கொண்டே இருக்கும் தபலா மாயம் அது. (பிரசாத் அவர்களே தானோ?)

மூன்றாம் சரணத்தில், ‘கற்பகத்துச் சோலையிலேஎன்ற முதல் வரியில்சோலையிலே’ என்ற சொல்லுக்கு யேசுதாஸ் வழங்கும் சங்கதிகள் சொக்கவைக்கும். வாணி, ‘காவியத்து நாயகனின் கட்டழகு மார்பினிலேஎன்ற இழைப்பும், சரணத்தின் நிறைவில், ‘மோகனப் பண் பாடியதோஎன்ற குழைப்பும் அபாரமாக கொண்டு வந்திருப்பார்.

காதல் பாடல்கள் மட்டுமல்ல, மனித உணர்வுகளை, வாழ்க்கைச் சூழலை, சக மனிதர் நோவுகளை, அதன் காரணங்களை திரைக்கதை வழங்கும் சாத்தியங்களுக்குள் நின்றபடி தனது தமிழால் வியக்கத்தக்க பாடல்களாகப் புனைந்து தந்து கொண்டிருந்தவர் புலமைப்பித்தன். கடந்து போன பாடல்களை இப்போது மீண்டும் கண்ணெதிரே கொண்டு நிறுத்துகிறது அவரது மறைவு

பாடல்கள் மறைவதில்லை. இசை ஓய்வதில்லை. புலவரின் சொத்தான ரசனைக்கோ முற்றுப் புள்ளி விழுவதில்லை. இசையைக் கொண்டாடுவோர், வாழ்க்கையைக் கொண்டாடுவோர். ரசனையின் சாராம்சம் வாழ்க்கை மீதான நேசம் தான். எல்லோரது நல்வாழ்வுக்குமான குரலுக்குத் தான் இசை என்று பெயர்.

(இசைத்தட்டு சுழலும் ….)

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]

முந்தைய கட்டுரைகள் படிக்க: 

இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *