புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் (Uma Mohan) அஞ்சலி : Smiling Face: Poet Umamohan Anjali - Paavannan - பாவண்ணன் - https://bookday.in/

புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் அஞ்சலி

புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் அஞ்சலி

 

– பாவண்ணன்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில்தான் கவிஞர் உமா மோகனை முதன்முதலாகச் சந்தித்தேன். அன்று மாலையிலேயே கண்காட்சிக்கு வந்துவிட்ட நான் ஒரு சுற்று எல்லாக் கடைகளிலும் ஏறி இறங்கிவிட்டு இரண்டாவது சுற்றில் சந்தியா பதிப்பகத்துக்கு வந்து சேர்ந்தேன். அப்போது உமா மோகனையும் வண்ணதாசனையும் அங்கு நின்றிருந்தனர். வண்ணதாசன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். உமா மோகன் புன்னகைத்தபடியே “என்ன சார் நீங்க? எங்க ஊருக்காரர எனக்கு அறிமுகப்படுத்திறீங்களா? அவரைப் பார்த்ததில்லையே தவிர, நிறைய படிச்சிருக்கேன்” என்று கூறினார். “அப்படியா, சரி சரி” என்று சிரித்துக்கொண்டார் வண்ணதாசன்.

வண்ணதாசனுடைய கையில் உமா மோகனின் கவிதைத்தொகுதி இருந்தது. அதன் அட்டையில் புதுச்சேரி கவர்னர் மாளிகையை ஒட்டி நின்றிருக்கும் ஆயி மண்டபத்தின் படம் இருந்தது. ஆயி மண்டபம் மாபெரும் தாஜ்மகாலைப் போன்ற உருவத்தைக் கொண்டதல்ல. ஆயினும் சிறு வடிவத்திலேயே கண்களை நிறைக்கும் அழகான கட்டமைப்பைக் கொண்ட மண்டபம். தாஜ்மகாலைப் பார்க்கச் செல்லும் சுற்றுலாப்பயணியர் பலரும் அதன் முன்னால் நின்று படமெடுத்துக்கொள்வதுபோல, புதுச்சேரிக்கு வரும் பயணியர் பலரும் அந்த ஆயி மண்டபத்தின் முன்னால் நின்று படம் எடுத்துக்கொள்வது வழக்கம். அந்தக் காலத்தில் ஆயி மண்டபத்தின் முன் ஒருவர் நிற்க, இன்னொருவர் படமெடுப்பார். இன்று ஒவ்வொருவரும் பிறர் துணையின்றி தற்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.
’ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’ என்னும் தலைப்பிட்ட தன் கவிதைத்தொகுதியை உமா மோகன் தன் பையிலிருந்து எடுத்து கையெழுத்து போட்டு எனக்குக் கொடுத்தார். எழுத்துகளை உருண்டையான பெரிய வடிவில் அவர் எழுதிய முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. புதுச்சேரி வானொலி நிலையத்தில் வேலை செய்வதாகவும் அடுத்தமுறை புதுச்சேரிக்கு வரும்போது நிலையத்துக்கு வரவேண்டும் என்றும் சொன்னார். நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவருக்கு உதவி செய்ய அவரோடு ஓர் இளம்பெண்ணும் வந்திருந்தார். கண்காட்சியில் சுற்றியலைந்த பிறகு புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் செல்லவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் உரையாடலில் ஆர்வம் கொண்டவராக புதிது புதிதாகக் கேள்வி கேட்டு உரையாடலை வளர்த்துக்கொண்டே இருந்தார். “நேரமாகலையா? இனிமேல எங்க போய் சாப்ட்டு, எத்தனை மணிக்கு ஊரு போய் சேருவீங்க?” என்று தயக்கத்துடன் கேட்டேன். “எப்படியும் பன்னெண்டு மணிக்குள்ள போயிடுவேன்” என்று புன்னகைத்தபடி சொன்னார்.
நான் ஊருக்குத் திரும்பி வந்த பிறகு அவருடைய தொகுப்பைப் படித்துவிட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அக்கடிதத்தைப்பற்றி அதற்குப் பிறகு பலமுறை நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் உமாமோகன்.

அந்தத் தொகுதிக்குப் பிறகு உமா மோகன் மேலும் இரு கவிதைத்தொகுதிகளையும் ஒரு சிறுகதைத்தொகுதியையும் எழுதி வெளியிட்டார். புத்தகம் தயாராகி வெளிவந்ததுமே எனக்கு அனுப்பி வைத்துவிடுவார். ’கனவு செருகிய எரவாணம்’ என்னும் தொகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. புதுவகைகளில் அவர் உருவாக்கி எழுதும் பல சொல்லாட்சிகள் நினைத்து நினைத்து ரசிக்கத்தக்கவை.

ஓலை வேய்ந்த கூரை வீடுகளைப் பார்த்தவர்களுக்கு எரவாணம் என்றால் என்ன என்பது தெரியும். தபால்காரர் கொடுத்துவிட்டுச் செல்லும் அஞ்சலட்டைகள், பால்கணக்குச்சீட்டு, மளிகைக்கடைச்சீட்டு, சீப்பு, ரிப்பன் என ஏராளமான பொருட்களை அந்த எரவாணத்தில்தான் செருகி வைத்திருப்பார்கள். ஓர் அலமாரித்தட்டில் வைக்கத்தக்க எல்லாப் பொருட்களுக்கும் எரவாணம்தான் பொருத்தமான அடைக்கலம். கனவு செருகிய எரவாணம் என்று குறிப்பிட்டதுமே அது நம் மனத்தைக் குறிக்கும் படிமமாக மாறிவிட்டது. கனவு, இனிப்பு, கசப்பு, சிரிப்பு என எல்லா அனுபவங்களையுமே இன்று நாம் அந்த எரவாணத்தில்தானே செருகிவைத்திருக்கிறோம். உமா மோகன் தன் தொகுதிக்குச் சூட்டியிருந்த ஒரு தலைப்பு என்னை வெகுதொலைவுக்கு அழைத்துச் சென்றுவிட்டது. நான் அதைப்பற்றியும் அவருக்கு எழுதியிருந்தேன். அவருடைய ‘சிப்பம் கட்டிய கடல்’ என்னும் அருமையான சொல்லாட்சியையும் மறக்கவே முடியாது..

கொரானா காலத்துத் துன்பங்கள் அனைவருமே அறிந்த வரலாறு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான துன்பம். அதை ஒவ்வொருவரும் அவரவருக்கே உரிய வழிகளில் எதிர்கொண்டு கரையேறி மீண்டு வந்தனர். நோயில் சிக்கி மீண்டுவந்தவர்களில் உமா மோகனும் ஒருவர். இருளடர்ந்த அந்தக் காலத்தை அவர் தன் கவிதைகள் வழியாகவே கடந்துவந்தார். அந்த மன உறுதி அவரிடம் இருந்தது. அக்காலத்தில் அவர் எழுதிய கவிதைகளை ’முகம் அழிந்த காலம்’ என்னும் தொகுதியாகவும் கொண்டுவந்தார். கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் போன்ற இலக்கிய வகைமைகள் எல்லாம் பலருடைய வாழ்வில் மிகச்சிறந்த மாமருந்தாக விளங்கியிருக்கின்றன.

புதுவை வானொலிக்காக ஓராண்டு இடைவெளியில் அவர் என்னை இருமுறை நேர்காணல் செய்தார். ஒன்று மிகச்சிறிய நேர்காணல். பத்து நிமிடங்கள் மட்டுமே கொண்டது. இன்னொரு நேர்காணல் அரைமணி நேரத்துக்கும் மேல் நீளமானது. இடையிடையே சில பாடல்களோடு அந்த நேர்காணல் பகுதியை அவர் அழகாக அமைத்திருந்தார். ஒருசில வாரங்கள் கழித்து கைபேசியில் உரையாடும்போது, அந்நேர்காணல் குறித்து பல நேயர்களிடமிருந்து கடிதங்கள் வந்ததாகத் தெரிவித்தார். அதற்குப் பின்பு ஒரு தனி உரைக்காகவும் அழைத்திருந்தார். அந்த உரையை முடித்துவிட்டு விடைபெறும்போது மேசையின் இழுப்பறையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்தார். ’ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்பது அப்புத்தகத்தின் தலைப்பு. அவருடைய புதிய கவிதைத்தொகுதியாக இருக்கக்கூடும் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். பிரித்துப் பார்த்தபோதுதான் அது சிறுகதைத்தொகுதி என்பதை உணர்ந்தேன். “கவிதைக்குள்ள அடங்காத சில விஷயங்கள் மனசுல இருந்தது சார். அதுங்களையெல்லாம் கதைகளாத்தான் சொல்லமுடியும்னு தோணிச்சி. அதன் விளைவுதான் இந்தத் தொகுப்பு” என்றார். புதியதொரு வகைமைக்குள் அவர் மிக எளிதாக தன்னைப் பொருத்திக்கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. “வாழ்த்துகள். தொடர்ந்து இப்படியே எழுதுங்கள். கதைக்குள்ள அடங்க மறுக்கிற சில விஷயங்கள் உங்களுக்கு சீக்கிரமே கெடைக்கணும். அதை நீங்க ஒரு நாவலா எழுதணும்” என்றேன். புன்னகையோடு அந்த வாழ்த்தை அவர் ஏற்றுக்கொண்டார்.

வானொலி நிலையத்தில் அவருக்கு இயக்குநராக அப்போது கண்ணையன் தட்சிணாமூர்த்தி இருந்தார். அவரும் என் மனைவியின் தங்கையுடைய கணவரும் பணிநிமித்தமாக தில்லியில் ஒரே சமயத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்கிற வகையில் அவருடைய அறிமுகம் இருந்தது. தொலைபேசி வழியாக மட்டுமே ஒருசில முறை அவரோடு பேசியிருந்தேன். நேஷனல் புக் டிரஸ்ட்டுக்காக அவர் ஏராளமான நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் உமா மோகனையும் உமா மோகனைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் அவரையும் சந்திப்பதும் வழக்கமாகிவிட்டது. இருவருமே இலக்கிய உரையாடல்களில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்ததால், பொழுது போவது தெரியாமலேயே பேசிக்கொண்டிருப்போம்.

இந்தியா விடுதலையடைந்து எழுபத்தைந்தைந்தாவது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு வானொலி நிலையத்தில் ஏதேனும் புதிய நிகழ்ச்சியைத் தொடங்க நினைத்த உமாமோகன் தேச விடுதலையில் மகளிர் ஆற்றிய பங்கினை அனைவருக்கும் தெரியச்செய்யும் வகையில் ஒரு புதிய நிகழ்ச்சியைத் தொடங்கினார். ஆர்வத்தோடு பலவேறு தகவல்களைத் திரட்டி சிறுசிறு கட்டுரைகளாகவும் எழுதினார். 365 பேர்களைப்பற்றிய தகவல்களைத் திரட்டவேண்டும் என்பது அவருடைய இலக்காக இருந்தது. கவிதை, சிறுகதை அனைத்தையும் நிறுத்திவிட்டு, திடுமென ஆவணமாக்கச்செயலில் தன்னை முழுமையாகவே ஈடுபடுத்திக்கொண்டார். 365 ஆளுமைகளைப்பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டிவைத்துக்கொண்டு எழுதி நூலாக்கவேண்டும் என்பதுதான் அவருடைய ஆரம்ப விழைவாக இருந்தது. ஆயினும் ஒலிபரப்புக்கான கட்டுரைகளை வேகவேகமாக எழுதவேண்டிய தேவை இருந்ததால், ஓர் ஆளுமையைப்பற்றிய தகவல் கிடைத்ததுமே எழுதிமுடிப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டார். அவர் தனக்குத்தானே வகுத்துக்கொண்ட விதி அது. அந்த விதியின்படி ஒழுகியதால்தான் அந்த வேலையை அவரால் வெகுவிரைவில் சாதிக்கமுடிந்தது. தன் அயராத உழைப்பின் வழியாக ஐந்து தொகுதிகளை அடுத்தடுத்து கொண்டுவந்துவிட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் வானொலி நிலையத்தில் செய்திப்பிரிவில் துணை இயக்குநராக பணிபுரிந்த என் மனைவியின் தங்கையுடைய கணவர் ஓய்வு பெற்றார். அவரை வழியனுப்பும் விதமாக வானொலி நிலையத்தில் நடைபெற்ற பிரிவுபச்சார விழாவில் கலந்துகொள்வதற்காக நான் சென்றிருந்தேன். வாழ்த்திப் பேசும் பேச்சாளர்களில் ஒருவனாக நான் இருந்தேன். உமா மோகன் அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். நிகழ்ச்சி நிறைவுற்றதும் உமா மோகனைச் சந்திப்பதற்காக அவருடைய அறைக்குச் சென்றிருந்தேன். வீரமகளிர் தொடர்பான ஐந்து தொகுதிகளும் அவருடைய மேசையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. எல்லாமே ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகள். நான் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன்.

“சீக்கிரமாவே ஆறாவது தொகுதி வேலையை முடிச்சிருவேன் சார். அத்தோடு 365 பேர்னு நான் வகுத்துகிட்ட இலக்கு முடியுது. அந்த ஆறாவது தொகுதிக்கு நீங்கதான் சார் சிறப்பு முன்னுரை எழுதித் தரணும்”
பேச்சோடு பேச்சாக உமா மோகன் தன் வேண்டுகோளை முன்வைத்தார். ஒரு தகவலைத் திரட்டுவது என்பது எவ்வளவு கடுமையான பணி என்பதை அறிந்தவன் என்பதால், அவருடைய கோரிக்கையை அக்கணமே ஏற்றுக்கொண்டேன். “தியாகிகள் பத்தின ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்க எழுத்து வேலை முடிஞ்சதுமே எனக்கு ஒரு செட் பிரிண்ட் அவுட் அனுப்பி வச்சிடுங்க. நேரம் கிடைக்கும்போது நான் கொஞ்சம் கொஞ்சமா படிச்சி முடிச்சிடுவேன். அதுக்கப்புறம் ஒரு ரெண்டுநாள்ல முன்னுரையை கொடுத்துடுவேன். கவலையே வேண்டாம்” என்றேன்.

“அப்படியே செய்யறேன் சார்” என்றார் உமா மோகன். அவருக்கு இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பூட்டும் வகையில் “இதோ இப்பவே ஆறு மாசம் ஓடிப் போயொடுச்சி. சீக்கிரமா வேலையை ஆரம்பிச்சி செஞ்சீங்கன்னா, வர புத்தகக்கண்காட்சிக்குள்ள புத்தகத்தை கொண்டுவந்துடலாம்” என்று சொன்னேன். அச்சொற்கள் உண்மையிலேயெ அவருக்குள் ஒரு மாயத்தை நிகழ்த்தின. “ஆறு மாசம் எனக்குத் தாரளமா போதும் சார். எல்லா வேலையையும் முடிச்சிட்டு உங்களை வந்து சந்திக்கிறேன்” என்று சொன்னார் உமா மோகன்.

சிவக்குமாரின் மகனுக்கு 15.12.2024 அன்று புதுவையில் திருமண வரவேற்பு நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக 10.12.2024 அன்றே நான் புதுச்சேரிக்குப் போய்விட்டேன். அச்சமயத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி 27 முதல் நடைபெறும் என அறிவிப்பும் வந்துவிட்டது. அந்த அறிவிப்பைப் பார்த்ததும் நான் உமா மோகனைத்தான் நினைத்துக்கொண்டேன். அந்த ஆறாவது தொகுதியைப்பற்றிய நினைவும் வந்தது. அவரைச் சந்திக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் வெளியே செல்லமுடியாதபடி விடிந்ததிலிருந்து கடுமையாக மழை பொழிந்துகொண்டிருந்தது.

முற்றிலும் எதிர்பாராத விதமாக அவரே அக்கணத்தில் என்னை கைப்பேசியில் அழைத்துவிட்டார். வழக்கமான நலன் விசாரணைகளுக்குப் பிறகு ”முழு தொகுதியும் தயாராக இருக்குது சார். நேரா அச்சுக்குக் கொடுத்துடலாம். உங்க முன்னுரை மட்டும்தான் சார் வேணும்” என்றார். எனக்கும் உடனடியாக அவற்றைப் படிக்கவேண்டும் என விருப்பமாக இருந்தது.

“எரநூறு முன்னூறு பக்கம்லாம் சிஸ்டத்துல படிக்க சிரமமா இருக்கும். ப்ரிண்ட் அவுட்டா இருந்தா சீக்கிரம் படிச்சிடுவேன். ஒரு செட் ப்ரிண்ட் அவுட்டை யார் மூலமாவது இங்க வீட்டுக்கு கொடுத்தனுப்பிறீங்களா? இங்க, நான் சிவக்குமார் வீட்டுலதான் தங்கியிருக்கேன்” என்று கேட்டேன்.

“பழம் நழுவி பால்ல விழுந்தாமாதிரின்னு சொல்றமாதிரி இருக்குது சார். இந்த முன்னுரையே உங்களை இந்த ஊருக்கு உங்களை இழுத்து வந்திருக்குதுபோல. கூடிய சீக்கிரம் உங்களுக்கு அனுப்பி வைக்கறேன் சார்” என்றா உமாமோகன்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் யாரோ ஓர் இளைஞர் இரண்டு சக்கர வாகனத்தில் மழைக்கோட்டு அணிந்துகொண்டு வந்து பிளாஸ்டிக் உறை போட்டு மூடிய ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்ட ஒரு பெரிய கையெழுத்துப் பிரதியைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சென்றார். வீட்டில் யாருமில்லை. நான் மட்டும்தான் தனியாக இருந்தேன். எல்லோரும் திருமணத்துக்கான பொருட்களை வாங்க கடைத்தெருவுக்குச் சென்றிருந்தனர். அதனால் மதிய உணவுக்குப் பிறகு பிரதியைப் படிக்கத் தொடங்கி ஒரே மூச்சில் இரவு ஏழு மணியளவில் படித்துமுடித்தேன். நிறைவாக இருந்தது. நம் நாடு முழுதும் வாழ்ந்த பல்வேறு தியாகப் பெண்மணிகளின் வாழ்க்கைவரலாற்றை நினைக்க நினைக்க பெருமையாக இருந்தது.

அவர்களுடைய தியாகங்களையெல்லாம் நினைவில் திரட்டி அசைபோட்டபடி நடைப்பயிற்சிக்குச் சென்றேன். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பி குளித்துமுடித்து சூடாக ஒரு தேநீரை அருந்திவிட்டு அத்தொகுதிக்கான முன்னுரையை எழுதத் தொடங்கினேன். பத்து மணிக்கு எழுதி முடித்து அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பும் நேரத்தில்தான் கடைக்குச் சென்றிருந்தவர்கள் எல்லோரும் வீட்டுக்குத் திரும்பிவந்தனர். முன்னுரையை அனுப்பிவைத்திருப்பதாக கைபேசியில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பிவிட்டு நான் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டேன்.

அடுத்தநாள் காலையில் உமா மோகனே கைபேசியில் அழைத்தார். முன்னுரை தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார். ”எப்படி சார் இவ்ளோ சீக்கிரமா படிச்சி முடிச்சி எழுதினீங்க?” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
“பெண்மணிகளைப்பற்றிய வரலாறு என்பது அந்த வேகத்துக்கு ஒரு காரணம். அப்புறம் உங்களுடைய மொழிநடை இன்னொரு காரணம். இந்த நேரத்துல பப்ளிஷர் கைக்குப் போனாதான் சீக்கிரம் புஸ்தகம் தயாராவும்ங்கறது மற்றொரு காரணம்” என்றேன்.

“நன்றி சார், நன்றி சார்” என பலமுறை அவர் சொல்லிக்கொண்டே இருந்தார் உமாமோகன்.
15ஆம் தேதி மாலையில் திருமண வரவேற்புக்கு உமா மோகன் வந்திருந்தார். “முன்னுரையை பப்ளிஷர்ஸ்க்கு அனுப்பி வச்சிட்டேன் சார். நெனச்ச மாதிரியே கண்காட்சிக்குள்ள வந்துடும் சார். ரொம்ப திருப்தியா இருக்குது சார்” என்றார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த தம் நண்பர்களை அவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். நான் என்னுடைய நண்பர்களை ஒவ்வொருவராக அவருக்கு அறிமுகப்படுத்தினேன். மாறிமாறி படங்கள் எடுத்துக்கொண்டோம்.
குடும்ப வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு நான் நேராக பெங்களூருக்கே திரும்பிவிட்டேன். புத்தகக்கண்காட்சிக்குச் செல்ல இயலவில்லை. நாலைந்து வாரங்களாக செய்யாமல் விட்ட பல வேலைகள் அடுக்கடுக்காக இங்கு காத்திருந்தன. வீட்டுக்கு வந்ததுமே, அந்த வேலைகளின் அலைகளால் நான் அடித்துச் செல்லப்பட்டுவிட்டேன். வேறெந்த நினைவும் இல்லை.

புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் (Uma Mohan) அஞ்சலி : Smiling Face: Poet Umamohan Anjali - Paavannan - பாவண்ணன் - https://bookday.in/

06.01.2024 காலை எழுந்ததும் வந்திருந்த மின்னஞ்சல்களையும் செய்திகளையும் படிக்கத் தொடங்கினேன். நான் சேமிப்புக்கணக்கு வைத்திருக்கும் வங்கி எனக்கு பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தது. சான்றிதழ்ப்படி இந்த நாள் என்னுடைய பிறந்தநாள். ஒவ்வொரு முறையும் அந்த நாளை நினைவில் வைத்துக்கொண்டு எங்கள் வங்கி எனக்கு வாழ்த்துச்செய்தி அனுப்புகிறது. புன்னகையோடு அந்த வரிகளைப் படித்துவிட்டு, அடுத்தடுத்த செய்திகளுக்குச் சென்றேன்.

எண்ணற்ற தகவல்களுக்கு நடுவில் மொழிபெயர்ப்பாளர்கள் கண்ணையன் தட்சிணாமூர்த்தியும் வெங்கட சுப்ராய நாயகரும் அனுப்பியிருந்த மரணச்செய்தி வரிகள் திகைக்கவைத்தன. ’உமாமோகன் இயற்கையெய்தினார்’ என்னும் இரண்டு சொற்களை என்னால் எளிதில் கடக்கமுடியவில்லை. சட்டென்று நெஞ்சில் துக்கம் கவிந்தது.
பத்து நாட்களுக்கு முன்னால் எங்கள் வீட்டுப் பிள்ளைக்கு நடந்த திருமணத்தில் விருந்தினர் வரிசையில் அமர்ந்து எல்லோரோடும் சிரிக்கச்சிரிக்க பேசிக்கொண்டிருந்த உமா மோகன் மரணமடைந்து விட்டார் என்பதையே என் மனம் நம்ப மறுத்தது. ஓர் ஆறுதலுக்காக புதுச்சேரி நண்பர்களை அழைத்து உரையாடினேன். அனைவருமே அச்செய்தியை உறுதிப்படுத்தினர்.

திருமண நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களையெல்லாம் கணிப்பொறியிலேயே சேமித்துவைத்திருந்தேன். பல படங்களில் அவர் இருந்தார். பளிச்சென்ற புன்னகை மாறாத முகம். ஒவ்வொன்றாகப் புரட்டிப்புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். துயரம் நெஞ்சை அழுத்துவதைத் தாங்கவே முடியவில்லை.
விடுதலைக்கு வித்திட்ட வீர மகளிர் பற்றிய தொகைநூல் அவருடைய வாழ்நாள் கனவாக இருந்தது. கவிதை, சிறுகதை, கட்டுரை என கொஞ்சம் கொஞ்சமாக விரிந்த அவருடைய உலகமும் மொழியும் அந்தத் தொகைநூல் ஆக்கத்துக்காகவே வார்த்தெடுக்கப்பட்டவையோ என்று இப்போது தோன்றுகிறது. தியாகப்பெண்மணிகளின் வரலாற்றை எழுதும் முனைப்பில் தம் படைப்பாக்கப் பணிகளையெல்லாம் தியாகம் செய்து நேரமொதுக்கி ஒற்றை நோக்கத்துடன் உழைத்த அந்த உயர்ந்த உள்ளம் இன்று நம்மிடம் இல்லை. இனி, அவர் இருந்த இடத்தில் அவருடைய நூல்கள் நம்மோடு இருக்கும். அவருடைய புன்னகை மாறாத முகம் என்றென்றும் நம் நினைவில் நீடித்திருக்கும். கவிஞர் உமா மோகனுக்கு அஞ்சலி.

கட்டுரையாளர் :

 

பாவண்ணன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. V Kannan

    நீங்கள் முன்னுரையை அளித்த மறுநாள் (டிசம்பர் 16) அவரை சந்தித்தேன். திருமணத்திற்கு வந்திருந்த பாவண்ணன் அந்த வேலையை விட்டுவிட்டு சில மணி நேரங்களுக்குள் முழுவதும் படித்து விட்டு முன்னுரையைத் தந்து விட்டார் என்று இரண்டு மூன்று முறை வேறு வேறு விதமாகக் குறிப்பிட்டார்.

    நேற்று நடந்தது போல் இருக்கிறது. ஆனால், அதற்குள் ஏதேதோ நடந்து அதன் பின்னும் இரண்டு நாட்கள் ஆகி விட்டன. மிகவும் உலுக்கி விட்ட பிரிவு அவருடையது.

    காலம்தான் பறந்து பறந்து எல்லாவற்றையும் ஆற்றுப்படுத்துகிறது

  2. S V Venugopalan

    நெகிழ வைக்கும் பதிவு
    தாள மாட்டாத அதிர்ச்சி உமா மோகன் அவர்களது மறைவு

    எஸ் வி வேணுகோபாலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *