அண்ணாவின் அணுகுமுறை

தமிழ்நாட்டில் அண்ணா முதலமைச்சரானார்.  அத்தருணத்தில் கூட்டுறவு சங்கத்திற்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்த நான் தொடுத்த வழக்கும் வெற்றி பெறும்  நிலை உருவானது. அவரை சந்தித்து விவரம் கூறியவுடன் சம்மந்தப்பட்ட கூட்டுறவு இயக்குனரை சந்திக்கச் சொன்னார்.   இயக்குனரை சந்தித்து விவரம் கூறினோம். தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவாதமளித்தார்.

1967ல் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாவிற்கெதிராக சிம்சன் யூனியன் குருமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.  சிம்சன் தொழிலாளர்கள் குழு என்ற பெயரில் அண்ணாவிற்கு ஆதரவாக நாங்கள் களத்தில் இறங்கினோம். அண்ணாவிற்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தினோம். இதன்பொருட்டு எங்களுக்கு நன்றி கூறும் வகையில், அண்ணா  வுட்லேண்ட்ஸ் ஹோட்டலில் விருந்து கொடுத்து பாராட்டினார். இந்த உறவினால் அவர் முதலமைச்சரானவுடன் எங்களால் எளிதில் அவரை சந்திக்க முடிந்தது.  அண்ணா முதலமைச்சராக இருந்தவரை அரசின் கவனத்தை ஈர்க்க கோட்டைக்கெதிரே ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இருந்தது. இதற்கிடையில் ஐ.என்.டி.யு.சி சங்க நிர்வாகிகள் சங்க அங்கீகாரத்திற்கு கவனம் செலுத்தினரே தவிர, கூட்டுறவு சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஆனால் இது நாள்வரை வெளியே தெரியாமல் இருந்த திமுகவிற்கு விசுவாசமான தொழிலாளர்கள், அண்ணா முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கூட்டுறவு சங்க தேர்தலுக்கு ஆதரவாக திரண்டனர்.  அதில் பிரதாபசந்திரன் என்பவர் குறிப்பிடத்தக்கவர். அவர் எனது சகஊழியரும் ஆவார். அவர் டிப்ளமோ படித்தவர் மட்டுமல்ல, பாடிபில்டரும்கூட.  நிர்வாகத்தின் அடியாட்களாக இருக்கும் குஸ்தி பயில்வான்கள்கூட இவரைக்கண்டால் சலாம் போடுவார்கள்,  அவர் ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைத்தது.

எனது மார்க்சிஸ்ட் கட்சி தொடர்பால் அவர்களது ஆலோசனைப்படி பிரபலவழக்கறிஞர் வி. வெங்கட்ராமன் ஆலோசனை வழங்கினார்.  கூட்டுறவு சங்க உறுப்பினர் என்ற தகுதியோடு வரவு செலவு கணக்கை பார்வையிடும் உரிமை கோரி கூட்டுறவு சங்கத் தலைவருக்கு கடிதம் எழுதினேன்.  சம்பளப் பிடிப்பிற்கான ரசீது தரும்படியும் கோரினேன். கூட்டுறவு சங்க பாக்கியை நிர்வாகம் பிடித்தால், சம்பள ரசீதோடு நிர்வாகம் கூட்டுறவு சங்க ரசீதை இணைக்க வேண்டும் இல்லையேல் அதற்கான அனுமதியை  அரசிடம் பெறவேண்டும். ஆயின்  நிர்வாகம் அரசிடம் அனுமதியும் வாங்கவில்லை ரசீதையும் இணைக்கவில்லை.  உண்மையில் சிம்சன் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் கடன் கொடுக்கும் சொசைட்டியே தவிர மளிகைக் கடை நடத்த அதன் விதிகளில் இடமில்லை.  குருமூர்த்தி மளிகை ஸ்டோரை சங்க அலுவலகத்திலேயே நடத்தினார்.  அந்த ஸ்டோர் பாக்கியை நிர்வாகம் சொசைட்டி கடனாக கருதியே பிடித்து வந்தது.   நிர்வாகம் செசைட்டிக்கு ஒரு செக்கும், ஸ்டோருக்கு இன்னொரு செக்கும் கொடுத்தது. இது பற்றிய சட்டநுணுக்கத்தை வி.வி என்று எங்களால் அன்போடு அழைக்கும் வழக்கறிஞர் வி.வெங்கட்ராமன் வழங்கினார். அவர் பற்றி தனியாக கூறவேண்டும்.  அவரது ஆலோசனையே சிம்சன் கூட்டுறவு சங்க ஊழலை வெளியே கொண்டுவர உதவியது. பிரதாப சந்திரன் போன்ற திமுக நண்பர்கள் பக்கபலமாக நிற்கவே கூட்டுறவு சங்க ஊழலை விசாரிக்கவும், தேர்தல் நடத்தவும், கோட்டையை நோக்கி ஊர்வலம் எடுப்பதென முடிவு செய்தோம்.   சட்டமன்றம் கூடுகிற நேரத்தில் ஊர்வலம் எடுக்க ஸ்டிரிங்கர் தெரு சங்கம் ஆலோசனை கூறியதோடன்றி, அன்றைய தினம் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற பிரதிநிதியாக இருந்த  மார்க்சிஸ்ட் ஏம்எல்ஏ. ஏ.எம். கோதண்டராமனிடமும் மனுவை கொடுக்க வைத்தனர்.



சைக்கிள் செயின் உயர்ந்தது

சட்டமன்றம் நடக்கிற நேரத்தில் ஊர்வலமாக போய் கூட்டுறவு சங்க ஊழலை அரசு விசாரிக்கவேண்டும் என்று மனுகொடுக்க  முடிவு செய்தோம்.   குருமூர்த்தி சங்க பிஸ்தாக்கள் ஊர்வலத்தை கலைப்பது என்ற முடிவுடன் இருந்தனர்.  நேப்பியர் பூங்காவில் கூடி சுமார் நூறுபேர் கலந்து கொண்ட ஊர்வலம் புறப்பட்டது.   சட்டமனறத்திலே மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசை நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.  ஏற்கனவே விவரம் அறிந்த அண்ணா கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அறிவித்தார். 

எங்களது ஊர்வலம் மெயில் பில்டிங் அருகில் சென்ற பொழுது குருமூர்த்தி பிஸ்தாக்கள் எங்களைத் தாக்கினர்.  எனது மூக்கில் ஒரு குத்து விழுந்தது.  சராமாரியாக அடிகள் விழுந்தன.  பிரதாபசந்திரன் அந்த பிஸ்தாக்களை சைக்கிள் செயினால் தாக்கி விரட்டி அடித்தார்.  அவர் இல்லையென்றால் அந்த பிஸ்தாக்கள் என் கைகாலை முறித்திருப்பர்.  அதற்குள் போலீஸ் வந்து லத்தி சார்ஜ் செய்து, குருமூர்த்தி ஆட்களை விரட்டி அடித்தனர்.  மனுவைக் கொடுக்க இயலாவிட்டாலும் மார்க்சிஸ்ட் கட்சி ஏம்எல்.ஏ கவனஈர்ப்பும், அண்ணாவின் அணுகுமுறையும் எங்களுக்கு வெற்றியை தேடித்தரும் என்ற நம்பிக்கையை அளித்தது.

இதற்கிடையில் கூட்டுறவுத்துறை தேர்தல் சம்மந்தமான வழக்கை விசாரணைக்கு எடுத்தது.   விசாரணைக்கு வந்த குருமூர்த்தி ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்தார்.  அதன்படி மீனாட்சிசுந்தரம் ஒருகம்யூனிஸ்ட், அவர் எங்களது சங்க உறுப்பினரல்ல, அவருக்கு தேர்தல் சம்பந்தமான வழக்கு தொடுக்கும் உரிமை கிடையாது என்பதாகும்.  விசாரணை அதிகாரி அவர் வாக்குமூலத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தார்.

ஆனால் முதலமைச்சர் கூறியபடி கூட்டுறவு சங்க தில்லுமுல்லு கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க அத்துறை முடிவு செய்தது.  இரண்டு சோக நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து வந்து அந்த நடவடிக்கைகளை காலதாமதமாக்கிவிட்டது. நடவடிக்கை எடுக்க இருந்த கூட்டுறவு இலகா இயக்குனர் குமரிக்கடலி ல்குளிக்கச் சென்றவர் பாறையில் தலைமோதி மரணமடைந்தார்.  முதலமைச்சரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அரசின் தொழிலாளர் நல ஆதரவு பார்வை பலகாரணங்களால் மாறத் தொடங்கியது.

சிம்சன் நிர்வாகம் குருமூர்த்தியின் செல்வாக்கை காப்பாற்ற சில நடவடிக்கைகளில் இறங்கியது.  தொழில் அமைதியை கெடுக்கிறார்கள் என்று சில அப்பாவித் தொழிலாளர்களை தற்காலிக வேலை நீக்கம் செய்தது. அதனைக் கண்டித்து 2-10ஷிஃப்ட் தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்தனர்.  அதனைக்காட்டி நிர்வாகம் சிம்சன் தொழிலகத்தை லாக்அவுட் செய்தது.  தொழிலகத்தை திறக்க வேண்டுமானால் குருமூர்த்தி உத்தரவாதம் அளிக்கவேண்டும்  என்று அறிவித்தது.  குருமூர்த்தி சங்கம் தொழில் அமைதி கெடுப்பவர்கள் பெயரைக் கொடுத்தால் நிர்வாம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவித்தது.   அதன்படி நான் உட்பட பிரதாபசந்திரனையும் சேர்த்து 36பேர் நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டோம். 



ஸ்டிரிங்கர்ஸ் தெருவை நோக்கி

ஊர்வலமாகச் சென்று அரசைதலையிடும்படி கோரினோம்.  லாக்ஆவுட் 36நாட்கள் நீடித்தது.  தொழிலாளர்கள் மேற்கொண்டு போராடவிரும்பவில்லையென்றும், குருமூர்த்தி சங்கம் கூறுகிறபடி பணிசெய்வோம் என்றும் மனுவில் கையொப்பமிட்டு கொடுத்தனர். ஐ.என்டியு.சி சங்கம் தொழில் தகராறை கிளப்பியதால் தொழிலாளர் நல இலகா சமரசம் செய்தது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 36பேரும் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் நிர்வாகம் வேலை கொடுக்க பரிசீலிக்கும். 36 நாட்கள் லாக்அவுட் சட்டப்படியானதா? இல்லையா என்பதை லேபர் டிரிபுயனல் விசாரித்து தீர்ப்பளிக்கும்.  அதனை மேல்முறையீடு செய்யாமல் இருதரப்பும் ஏற்கும்.   இந்த ஒப்பந்தப்படி பிரதாபசந்திரன் உட்பட மன்னிப்பு கேட்டு வேலைக்கு சேர்ந்தனர்.  மன்னிப்பு கேட்காத ஐவர் மீது நிர்வாகம் டொமஸ்டிக் என்குயரி நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமென்று நிர்வாகம் அறிவித்தது. வேலையைமறுக்க சட்டப்படியான சடங்கு இது என்பதை அறிந்தேன்.  எனக்கு இரண்டு கம்யூனிஸ்ட் பிரிவினரோடும் தொடர்பு இருந்தும் சஸ்பென்ஷன் காலத்தில் ஸ்டிரிங்கர் தெரு பக்கமே செல்லவிரும்பினேன்.  அதற்கு காரணமிருந்தது.

(அடுத்து வரும்)



தொடர் 1ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 1 | V. மீனாட்சி சுந்தரம்

தொடர் 2ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 2 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 3ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 3 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 4ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 4 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 5ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 5 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 6ஐ வாசிக்க



தொடர் 9 ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 9 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 10ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 10 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 11ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 11 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 12ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 12 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 15ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 15 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 16ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 16 | வே .மீனாட்சிசுந்தரம்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *