மு.இக்பால் அகமது (Mu.Iqbal Ahamad) எழுதிய மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் (Makkalisai Methai M.P.Seenivasan Tamil Book) புத்தகம் ஓர் அறிமுகம்

மு.இக்பால் அகமது எழுதிய மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் – நூல் அறிமுகம்

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் (Makkalisai Methai M.P.Seenivasan)

தமிழ் திரையுலகத்தில் ஒரு நட்சத்திரமாகப் பிரகாசித்தவரும், தற்போது பெரும்பாலோர் அறியாதவராக இருப்பவருமான தோழர் எம்.பி.சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்றை தோழர் இக்பால் மிகச்சிறப்பாக எழுதி பரிசல் மூலம் வெளியிட்டுள்ளார்.  மறைந்திருக்கும் ஏராளமான கதவுகளை இப்புத்தகம் திறந்து வைத்திருக்கிறது.  இங்கும் கூட திரையுலகத்தினருக்கு அடிப்படை உரிமை பெற்றுத் தரப் போராடியது, பல உரிமைகளை நிலைநாட்டியது கம்யூனிஸ்டான எம்.பி.சீனிவாசன் தான் என்பதை ஆதாரங்களோடு எடுத்துக் கூறி ஒரு விரிவான புத்தகத்தை வெளியிட்டிருக்கும் தோழர் இக்பாலுக்கும் பரிசலுக்கும் முதல் வாழ்த்துகள்.

சுமார் நூறாண்டுகளைக் கடந்த தமிழ்த் திரையுலகத்திலும், கேரளத் திரையுலகத்திலும் தமக்கென முத்திரை பதித்தவர்களில் தோழர் எம்.பி.எஸ். குறிப்பிடத்தக்கவர்.  ஆனால் அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்பதாலும், திரையுலகத் தொழிலாளர்கள், இசைக்கலைஞர்களின் உரிமைகளுக்காகத் தமது வாழ்க்கையையும் பணயம் வைத்துப் போராடினார் என்பதும் வரலாறாக நம் கண் முன் விரிகிறது.

1946களில் வலுவாக உருப்பெற்ற இடதுசாரி மாணவர் இயக்கத்திலேயே முன்னால் நின்று போராடியவர் எம்.பி.எஸ். என்பதும், 1946இல் பம்பாயில் நடந்த கப்பல்படைப் புரட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற மாபெரும் பேரணியில் முழக்கம் எழுப்பி நடந்தவர்களில் ஒருவர் எம்.பி.எஸ். என்பதும் உணர்ச்சியூட்டும் செய்திகள்.

1951இல் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற தோழர் ஏ.கே.ஜி.க்கு கட்சியின் கட்டளைப்படி எம்.பி.எஸ். ஐந்து ஆண்டுகள் உதவியாளராக இருந்துள்ளார்.  அது பல மொழிகள், கலாச்சாரங்களுடன் அறிமுகத்தை அவருக்கு ஏற்படுத்தியது.  முழு நேரக் கலைஞனாக ஆகவும் அவருக்கு உத்வேகமளித்தது.

தம்மை இசைத்துறையில் ஈடுபடுத்திக் கொண்ட எம்.பி.எஸ். பல புரட்சிகளைச் செய்திருக்கிறார் என்பதை தோழர் இக்பால் பதிவிடுகிறார்.

இசைக்கலைஞர்களுக்கு சரியாக சம்பளம் கிடைக்காத வேளையில் அவர்களுக்கான தொழிற்சங்கம் தொடங்கி, ஸ்பாட் பேமண்டைப் பெற்றுத் தந்தவர் எம்.பி.எஸ்.  இதை நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட எஸ்.பி.பி. நன்றியுடன் நினைவு கூர்ந்ததை ஓரிடத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆகப்பெரும் இசைக்கலைஞரான கே.ஜே.யேசுதாசை இசையுலகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தவர் எம்.பி.எஸ். என்பதையும், அதை யேசுதாஸ் பலமுறை நன்றியுடன் நினைவு கூர்ந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இசைப்பயிற்சியைக் கட்டி அமைத்தவர்களில் முக்கியப் பங்கு வகித்தவர் எம்.பி.எஸ்.  இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனுடன் நெருங்கிப் பழகியவர் எம்.பி.எஸ்.  சேர்ந்திசை என்ற வடிவத்தை தமிழ் இசையுலகத்துக்கு அறிமுகம் செய்து அரங்கேற்றியவர் அவர்.
அவர் கூறுகிறார்:

”வெறும் வாதங்களையும், தத்துவார்த்த விமர்சனங்களையும் பொதுவான குறிக்கோள்களையும் மட்டும் வைத்து ஒரு கலை இலக்கிய இயக்கத்தை உருவாக்க முடியாது என்பது நமது இயக்கத்திலிருந்து பல ஆண்டுகள் அனுபவத்திலிருந்து நான் கற்றறிந்த உண்மையாகும்.  கலையிலும், இலக்கியத்திலும், நாடகத்திலும் ஆர்வம் பூண்ட இளம் கலைஞர்களுக்குத் தொழில்நுட்ப அறிவையும் வளர்ப்பதற்கு ‘கம்யூனிஸ்ட் இயக்கம் முன்வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு.”
தியாகி மணவாளன், ஐ.வி.சுப்பையா, கே.பி.ஜானகியம்மா போன்றோரெல்லாம் அவருடன் மேடையில் பாசிச எதிர்ப்பிலும், தேச விடுதலைப் போரிலும் நின்று போராடியவர்கள் என்பது சிறப்பான செய்தி.

’விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே’ என்ற பாடல் கட்சியின் மாநாட்டில் இசைக்கப்பட்ட போது தோழர் சங்கரய்யா நெகிழ்ந்து கண்ணீர் சிந்தியது நம் அனைவருக்கும் நினைவிருக்கும்.  அதற்கு அடிப்படை இசையமைத்தவர் எம்.பி.எஸ். என்பது எத்தகைய ஒரு செய்தி!

நாடக மேடையிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் எம்.பி.எஸ்.  இந்திய மக்கள் நாடக மன்றத்துடன் தொடர்பில் இருந்தவர்.  சேர்ந்திசையைப் பிரபலப்படுத்தியதில் அதன் பங்கு மகத்தானது.  தத்துவார்த்த ரீதியாக இடதுசாரிகளாக இருந்த நாடகக் குழுக்களை இணைக்க வேண்டிய அவசியத்தை பி.சி.ஜோஷி உணர்ந்திருந்தார்.  இப்டாவின் நோக்கமும் அதுதான்.  அந்தப் பெயரை முன்மொழிந்தவர் அணுசக்தி விஞ்ஞானியான ஹோமி பாபா என்பதும், இதற்கு அவருக்குத் தூண்டுதலாக இருந்தவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ரொமேன் ரோலாண்ட் என்பதும்!

இந்தியாவில் தேசப்பற்று மிக்க பாடல் என்றால் அதில் சில இடங்களில் வருவது ‘சாரே ஜஹாசே அச்சா’.  அதற்கான மெட்டமைத்தது இஃப்டா!, இசையமைத்தவர் பண்டிட் ரவிசங்கர்.

மு.இக்பால் அகமது (Mu.Iqbal Ahamad) எழுதிய மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் (Makkalisai Methai M.P.Seenivasan Tamil Book) புத்தகம் ஓர் அறிமுகம்

இவ்வாறு போகிற போக்கில் ஏராளமான வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்து கொண்டே போகிறார் இக்பால்.

திரையில் மேற்கு வங்கத்திலிருந்து சோவியத் யூனியன் மூலமாக(!) தமிழகத்துக்கு வந்து சேர்ந்த நிமாய் கோஷூம், எம்.பி.எஸ்.சும் பல புரட்சிகளைத் தமிழ்த்திரையுலகில் புரிந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் புரட்சிகரமாக எடுக்க முயன்ற படங்களை தற்போது கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் ஏ.வி.எம். புரொடக்‌ஷன்ஸ் ஒழித்துக் கட்டியது என்ற செய்தியை எப்படி எடுத்துக் கொள்வது?  அவர் எடுத்த புதுச் செருப்பு கடிக்கும் என்ற படம் வெளியே வரவேயில்லாமல் முடிங்கியது.  மிகச் சிறந்த கொள்கைப் படமான பாதை தெரியுது பார் வரவேற்பைப் பெறவில்லை.

ஆனால் அவர் இசையமைப்பில் மிகவும் நிபுணராக இருந்துள்ளார்.  ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை சேகரும் அவருடன் பணிபுரிந்திருக்கிறார்.  அவர் இசையைக் கற்றுத் தரும் முறையை யேசுதாஸ் உட்பட அனைவரும் உணர்ச்சியுடன் கூறுகின்றனர்.  முதல் முறையாகப் பாட வருகையில் யேசுதாஸ் மிகவும் பதற்றத்துடன் இருந்ததை அறிந்து அது ஒத்திகைதான் என்று கூறி சாமர்த்தியமாகப் பாட வைத்ததை யேசுதாஸ் பதிவு செய்கிறார். ஒவ்வொரு ஸ்வரமாக இசையைக் கற்றுக் கொடுப்பவர், ஒவ்வொறு வார்த்தையிலும் நெளிவு, சுளிவை வைப்பவர் என்று புகழப்படுகிறார் எம்.பி.எஸ்.

சென்னையில் சேர்ந்திசைக் குழுவை உருவாக்கி ஏராளமான இளைஞர்களைப் பயிற்றுவித்தவர்.  பேசத் தெரிந்தவர்கள் எல்லாருமே பாடத் தெரிந்தவர்தான் என்பாராம் எம்.பி.எஸ்.  அதற்கேற்ப ஆயிரக்கணக்கான நகராட்சி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து ஒரே நேரத்தில் பல தேசபக்திப் பாடல்களைப் பாடச் செய்து சாதனை படைத்திருக்கிறார் அவர்.  மேலும் சென்னை வானொலியில் சேர்ந்திசையைக் கொண்டு வந்து சேர்த்து அதற்குப் புகழ் சேர்த்தவர் எம்.பி.எஸ்.

தமிழ் திரையுலகம் அவரை சரியாக இசையில் பயன்படுத்திக் கொள்ளா விட்டாலும், கேரளத் திரையுலகம் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளது.  அவர் அங்கு இசையமைக்கச் செல்வதற்கு முன் அங்கு சென்று மொழியையும், கலாச்சாரத்தையும், இசையையும் முழுதும் அறிந்து உள்வாங்கிக் கொண்டுதான் செய்தார் என்ற செய்தி அவரது தீவீர ஈடுபாட்டையும் தொழில் நேர்மையையும் காட்டுகிறது.

தமிழில் எக்ஸ்ட்ரா என்று அறியப்படும் ஜூனியர் ஆர்டிஸ்டுகளுக்கு வாழ்க்கை கொடுத்தவர் எம்.பி.எஸ்.  அவர்களை ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்து ஒருமித்த திரட்சியான சக்தியாக மாற்றி, தொழிலாளி என்ற மரியாதையை அவர்களுக்குக் கிடைக்கச் செய்தவர்கள் எம்.பி.எஸ்.சும், நிமாய் கோஷும்.  சினிமாவின் அனைத்துக் கிளைச் சங்கங்கள் தோன்றுவதற்கும் மூலக் காரணகர்த்தா அவராகத்தான் இருந்துள்ளார்.

அவரது சொந்த வாழ்க்கையிலும் ஒரு புரட்சிக்காரராகவே விளங்கியுள்ளார் எம்.பி.எஸ்.  அவர் திருமணம் செய்து கொண்டது பிரபல விடுதலைப் போராட்ட வீரர் சைபுதீன் கிச்சுலுவின் புதல்வி ஜஹிதாவை.  சாதி, மதம், மொழி கடந்த, கருத்தொருமித்த திருமணம்.

1988இல் தமுஎச நடத்திய ஐந்து நாள் பயிலரங்கில் கலந்து கொண்டு தோழர்களுக்கு சேர்ந்திசை கற்றுக் கொடுத்ததையும், அதில் மூத்த தோழர் காஸ்யபனிடம் கூறிய செய்தியையும் கூடப் பதிவு செய்துள்ளார் தோழர் இக்பால்.

இத்தகையதொரு மாபெரும் கலைஞனின் வாழ்க்கையைத் தோண்டி எடுத்து தமிழ் மக்களுக்குக் கொடுத்துப் பெரும் சேவையை ஆற்றியுள்ளார் தோழர் இக்பால்.  அதற்காக இன்னொருமுறை பாராட்டுகள்.

ஆனால் எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.  எம்.பி.எஸ்.தான் 1977இல் இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை ஆதரித்துப் பாடிய பாட்டுக்கு இசையமைத்ததாகவும், அதுதான் தினமும் மீண்டும் மீண்டும் வானொலியில் ஒலித்ததாகவும் ஒரு மூத்த தோழர் என்னிடம் கூறினார்.  இது உண்மையா என்பதையும் தோழர் இக்பால் பதிவு செய்திருக்க வேண்டும்.  தனக்குத் தவறு என்று தோன்றுவதைக் கூர்மையாகவும், கடுமையாகவும் விமர்சனம் செய்யும் தோழர் இக்பால் இதையும் பதிவு செய்திருந்தால் இந்தப் புத்தகம் முழுமையடைந்திருக்கும் என்பது என் பணிவான கருத்து.  இல்லையெனில் அவர் அதை ஆதரிக்கிறாரா?

நூலின் விவரம்:

புத்தகத்தின் பெயர்: மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் (Makkalisai Methai M.P.Seenivasan)
ஆசிரியர்: மு.இக்பால் அகமது (Mu.Iqbal Ahamad)
வெளியீடு: பரிசல்
விலை: ரூ.350/-
பக்கம்: 296

எழுதியவர் : 
கி.ரமேஷ்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. மக்கள் இசை மேதை எம் பி சீனிவாசன் அவர்களது வாழ்க்கை இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று அவரது ஆழ்ந்த இசைஞானம். மற்றது அவரது இடதுசாரி கம்யூனிஸ்ட் என்ற அடையாளத்துடன் கூடிய தொழிற்சங்கப் பணி. இந்த இரண்டின் இணைப்பு புள்ளியாக இருந்ததுதான் அவரது அடையாளம்.
    சுருக்கமான இந்த மதிப்புரையில் இந்த மையமான கருவை சுட்டிக்காட்டிய கி ரமேஷ் அவர்களுக்கு நன்றி. எம்பி சீனிவாசன் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தவர். 1975 நெருக்கடி நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது என்பது வரலாறு. அவ்வாறு இருக்க
    அக்கட்சியின் உறுப்பினரான எம் பி சீனிவாசன் கட்சி எடுத்த நிலைப்பாட்டில் நின்றார் என்பதும் உண்மைதான். இதனாலேயே அவருக்கு அகில இந்திய வானொலியில் வாய்ப்புகள் கிடைத்தது என்று உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில் 1971இலேயே அகில இந்திய வானொலி சென்னை நிலையத்துக்காக பள்ளிப்பாடுவோமே என்ற சேர்ந்திசை நிகழ்ச்சியை அவர் வசந்தி தேவி அவர்களுடன் இணைந்து சிறப்புற வழங்கினார் என்பது வரலாறு. அதன் தொடர்ச்சியாக டெல்லி பம்பாய் கல்கத்தா வானொலி நிலையங்களிலும் சேர்ந்திசை குழுக்கள் தொடங்கப்பட்டன. 12 மொழிகளில் சேர்ந்திசைப் பாடல்கள் பாடப்பட்டன. அதற்கு உந்துவிசையாக எம் பி சீனிவாசன் இருந்தார் என்பது வரலாறு. எனவே இந்திரா காந்தியையோ அல்லது அவர் அறிவித்த நெருக்கடி நிலையையோ ஆதரித்ததால்தான் எம்பிஎஸ்க்கு வானொலி வாய்ப்புகள் வழங்கப்பட்டன என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தவிர ஒரு கட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எமர்ஜென்சியை ஆதரித்தது தவறு என்றும் ஒப்புக்கொண்டது. எனவே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் அவர் கட்சியின் நிலையை ஆதரித்தார். சென்னையில் சி ஐ டி யு ஏ ஐ டி யு சி இணைந்த ஒரு மே தின மேடையில் எம் பி சீனிவாசன் சேர்ந்திசை நிகழ்ச்சி தொடங்கும் போது அவரை மேடையில் இருந்து கீழே இறங்கு என்று கோஷமிட்டு கூடி இருந்த தொண்டர்கள் நடத்த விடாமல் செய்தார்கள் என்பதை மூத்த தோழர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். எனவே இந்த நூலில் அந்த வரலாற்றை சொல்லவில்லையே தவிர அது அனைவரும் அறிந்த வரலாறு, உண்மை வரலாறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 1990இல் அறந்தை நாராயணன் அவர்கள் எழுதிய சிறிய ஆனால் மதிப்புமிக்க ஒரு நூலுக்குப் பிறகு 35 வருடங்கள் கழித்த நிலையில் அவரது நேர்மறையான இரண்டு பரிமாணங்களை மையமாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. அவ்வாறே இந்த நூலையும் நான் எழுதி இருக்கிறேன் என்பது பதிவு செய்கிறேன். எதையும் மறைப்பது எனது நோக்கம் அல்ல. நூலை வாசித்து நூலின் மையமான விஷயங்களை தொட்டுள்ள தோழர் ரமேஷ் அவர்களுக்கு எனது நன்றி. Bookday வுக்கு எனது நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *