தமுஎகச: கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்றது *பாசிட்டிவ் பயம்* – விஜயராணி மீனாட்சி
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. நேற்று மதியம் கூட அவர் என்னிடம் பேசினார். இந்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. என் மனதின் வதையைத் தணிக்க தண்ணீர் குடித்தேன். தொண்டைவழியாக இறங்குகிற தண்ணீரின் க்ளக் க்ளக் … சத்தம் என் மௌனத்தை உடைத்துக் கொண்டிருந்தது.
தினம் தினம் இப்படி வரும் மரணச் செய்திகளைக் கேட்டுக்கேட்டு பயத்தின் உச்சிக்குச் சென்று நடுங்கும் மனதை எப்படி மீட்டுக் கொண்டுவருவது? நிம்மதியாக இறந்தவர்களின் செய்தியும் நம்மை மட்டும் கலங்கடித்துவிடுகிறது. பயத்தின் இறுக்கமே மூச்சுமுட்டுகிறது இதில் இந்த மாஸ்கு வேற…. அதிலும் ரெண்டு மாஸ்க போடணும், அப்படி போடணும் இப்படி போடணும் எதத் தான் ஃபாலோ பண்ண? எல்லாம் ஒரே குழப்பமாவே இருக்கு. யார் பக்கத்துல வந்தாலும் அல்லது தற்செயலா தும்மினாலும் ஒரே பதட்டமா பயமாகிடுது. இயல்பான இருமலு தும்மலு இதெல்லாம் இவ்வளவு பயமுறுத்தும்னு நெனெச்சிப் பார்த்திருப்போமா? சாதாரண ஜலதோஷத்துக்கே கொரொனாவா இருக்குமோன்ற பயம் வந்திருது.
இன்னைக்கு செத்துப்போன சுதாகர் சாரும் நானும் போன வாரம் வரைக்கும் ஒண்ணாத்தான் சுத்திக்கிட்டு இருந்தோம். திடீர்னு போன் பண்ணி எனக்கு கோவிட் பாசிடிவ் நீ எதுக்கும் செக் பண்ணிடுனு சொன்னதில் இருந்து திக்திக்குனு இருக்கு. அவர ஆஸ்பத்திரீல சேர்த்ததுல இருந்து கேட்ட செய்தி எதுவும் சொல்ற மாதிரியில்ல. அத்தனை லட்சம் செலவு பண்ணியும் கொஞ்சங்கூட ஈவு எரக்கமில்லாம அந்த டாக்ட.ருங்க நடந்துகிட்டத மத்தவங்க சொல்லிக் கேட்டபோது தூக்கிவாரிப்போட்டுச்சு. அதநான் ஏம்வாயால சொன்னா நீங்களும் பயப்படுவீக. இதோ இன்னைக்கு அவரு செத்தும் போய்ட்டாரு. அதேநேரம் நல்லாக்கவனிச்சு பொழைக்க வைக்கிற டாக்டருகளும் இருக்காக. காசு காசுன்னு அலையறவங்களும் இருக்காக.
ஒரு மனுஷனோட வாழ்க்கை அவ்ளோதானா?. இதுக்கா இத்தன ஆட்டம். இங்கு எல்லோரும் மனதளவில் சரிந்துதான் போய்ட்டாங்க. ஏன்னா அவ்வளவு வெறுமை இப்படி ஒரு வெறுமை யாரும் அனுபவிக்கக்கூடாது.
ஆனா எனக்குத் தெரிஞ்சு எல்லோரும் அவர் அவரின் அளவில் வெறுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கொரோனா காலத்தில் இத்தனை புழுக்கத்திற்கு இடையிலும் நான் வாழ்ந்தாக வேண்டும் மற்ற மனிதர்களிடம் இருந்து என்னை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். இப்ப தான் புரியுது சிறைச்சாலையில் தனி அறையில் பூட்டி வைக்கப் பட்டிருக்கும் கைதிக்கான தண்டனையை அனுபவிப்பதன் ரணம். ஆனா காந்தி மண்டேலால்லாம் புஸ்தகம் படிச்சு தனிமையப் போக்கிக்கிட்டாங்களாம். ஆமா அவங்களுக்கு நோய் பயமோ உசுரு பயமோ இல்ல. நாட்டுக்காக விடுதலைக்காக சிறைல இருந்தவங்க.
மனசு கண்ட கண்டத நினைச்சி குழம்பி, பயந்து பதட்டத்தோட தவிக்குது. போன மார்ச்ல இருந்து கிட்டத்தட்ட ஒண்ணேகால் வருஷம் ஆகிபோச்சு வேலையில்லை, கையில் காசு இல்ல, ஆனா எப்படியோ இந்த வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. பயம் மட்டும் குறையவேயில்லை. என்னை நான் என்னிடமிருந்தே சகித்துக் கொண்டு, தப்பித்து பிழைக்க அருவருப்பா இருக்கு. ஆனாலும் இப்ப எனக்கு ஜுரம் வரமாதிரி இருக்கு. வந்துடுமோனு ரொம்ப பயமாவுமிருக்கு. வந்துட்டா எப்படி சமாளிக்கறது. உடல் முழுக்க வலி பின்னுது உடம்போட ஒவ்வொரு செல்லையும் ஊசி வச்சி குத்தற மாதிரி வலிக்குது. மூச்சுக்காத்து எனக்குள்ள வந்து போறது நல்லாத் தெரியுது. சட்டையில் வெள்ளை வெள்ளையாக வேர்வையின் உப்பு பூத்திருக்கிறது. மிதமாக தொண்டை கரகரக்கிறது. ஆனால் மல்லிப்பூவின் வாசனை நல்லா மணக்குது. கொரோனா வந்தா வாசனை தெரியாது. ஆனா எனக்கு நல்லா வாசனை தெரியுதே. “So, Be positive”
சுதாகர் சாரு செத்துடாருனு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல. அது வேற எதாவது சுதாகர் சாரா இருப்பாங்க. சீ…. வேற யாரா இருந்தாலும் ஒரு மரணத்த எப்படி உன்னால சாதாரணமா கடக்க முடியுது? அந்த அளவுக்கு இந்த சூழல் நம்மை மாத்திடுச்சா? ஃபேஸ்புக்கில் அவரோட profile போய் பாக்கும் போது அவரோட போட்டோவ போட்டு ” ஆழ்ந்த இரங்கல்”னு வர பதிவ பாத்துட்டு எளிதில் கடக்க முடியல. என் கண்கள் என்னை அறியாம அழுதிடிச்சி. என்னால என்ன பண்ண முடியும் இன்னும் நல்லா அழ முடியும் இல்ல sad சிம்பலை அழுத்திவிட்டு ஆழ்ந்த இரங்கல்னு comment பண்ணத்தான் முடியும்.
கொரோனா காலத்தில் எத்தனை பேருக்கு பசியப் போக்கியிருப்பாரு. எல்லாத்தையும் கடந்து வந்துடுவோம்னு சோர்ந்து போனபோதெல்லம் நம்பிக்கைய கொடுத்த அந்த வார்த்தை இனி கிடைக்காது. கடைசியா முகத்தக்கூட பாக்க முடியல. எனக்கு இன்னும் பயமாக இருக்கிறது. பசியுமெடுக்கிறது.
ஒருவரின் இறப்புச் செய்தியால் அதிர்ந்திருக்கிறேன். எனக்கும் கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்துடனுமிருக்கிறேன். பசியுமெடுக்கிறது. இந்த மூன்றின் உணர்வும் என்னை சிதைத்துக் கொண்டிருக்கிறது. பயம் பசியைவிட பலம் வாய்ந்தது. பயம் பசியைமட்டும் அல்ல என்னையும் சேர்த்துத் தின்று கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்த வெறுமையின் மௌனத்தில் என் மூச்சுக் காற்று மட்டும் என்னுள் வந்து வெளிவருவதை அறியமுடிந்தது. அதையும் மீறி வெளியே எங்கோ இருமும் சத்தம் என் காதில் கேட்டவுடன் கைகள் அனிச்சையாக சானிடைசரை எடுத்து கைகளுக்கு தெளித்து தேய்த்துக் கொண்டதில் கைகள் சில்லிட்டது, சானிடைசரின் வாசனையை என்னால் உணர முடிந்ததில் அப்பாடா என்ற பெருமூச்சின் வேகம் மாஸ்கை வெளித்தள்ளி அழுத்தியது.
காலராவுக்கு பிறகு எல்லோரும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கினோம், இப்ப கொரோனாவிற்கு பிறகு காற்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்துட்டோம்னு சுதாகர் சார் சொன்னது சம்பந்தம் இல்லாம இப்ப ஞாபகத்துக்கு வருகிறது.
வாழ்க்கை நாம நினைக்கிற மாதிரி நேர்கோட்டில் பயணிக்கறது இல்ல. அது இழுத்த இழுப்புக்கு நாம ஓடிட்டு இருக்கோம். எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சகிச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க எல்லாருக்குள்ளயும் எதோ ஒரு நாள் நாம செத்துடுவோம்ங்கற எண்ணம் நிச்சயம் வந்திருக்கும் அத எல்லாத்தையும் தாண்டி நாம வாழ்ந்தே ஆகணும். இதுக்குப் பேரு தப்பிப்பிழைக்கறதில்ல வாழ்க்கைய வென்று ஜெயிக்கறதுனு
சொல்லிட்டு இப்படி பொட்டுனு போய்ட்டாரு..
அமைதியான சூழ்நிலையில் அவரின் நினைவுகள் எனக்குள்ள மயக்க ஊசி போல படிப்படியா இறங்குது. மனசு மறத்துப்போகாம கனத்துப் போகுது விம்மி அழுததில் தான் மூச்சு திணறுகிறது மத்தபடி நான் பயப்பட வேண்டாம்.
மூச்சு முட்டுகிறது உடல் முழுக்க வெப்பம் மிகுந்து கண்களின் வழியேவும் மூக்கின் வழியேவும் வெப்பம் கொப்பளிக்கிறது. தொண்டை வறண்டு வாய் கசக்கிறது. உடலின் எல்லா பக்கமும் வியர்வை சுரந்து உடையை நனைத்து பிசுபிசுக்கிறது.
எலும்புகளின் இணைவில் ஊசியை வைத்து சுருக்கென்று குத்துவதைப் போல வலிக்கிறது. உடல் அனிச்சையாகப் போராடிக் கொண்டிருக்கிறது மனம்மட்டும் பயந்து எங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. கொரோனா என்னுள்ளும் இருக்கிறது. எனக்கும் நாளை யாராவது முகநூலில் என் புகைப்படத்துடன் பதிவு போடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. பாழாப்போன டெஸ்ட் ரிசல்ட் வரும்வரைக்கும் இந்த மனசு பயந்தே செத்துப்போய்டும் போல. நீ தைரியமா இரு என்று எனக்கு நானே தைரியமூட்டிக் கொண்டேன்.
எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்கு. ஆயிரக்கணக்கான தூரம் குழந்தை குட்டியோட நடந்துபோற அளவுக்கு வறுமையில் இல்லனாலும். எல்லாத்தையும் சந்தேகத்துடன் அணுகவே பதைபதைப்பா இருக்கு. எல்லாத்தையும் தலைகீழா மாத்திடிச்சி கண்ணுக்கு தெரியாத ஒன்னு. பிழைச்சா வாழ்ந்திடலாம்னு வந்து நிக்கறோம்.
யாரும் இல்லாத என்னுடைய அறையே எனக்கான ஆறுதல். அறை நண்பர்கள் எல்லாருமே லாக்டவுன் போட்டவுடனே ஊருக்கு கிளம்பிடாங்க. ஒருவகையில் அவங்க எல்லாரும் தப்பிச்சிட்டாங்க.
நான் மட்டும் தான் மாட்டிகிட்டேனா.? இப்படி எனக்கு நானே பேசிட்டு இருக்கேன்
என்னோட தனிமை என்னுடைய சுயரூபத்தை எனக்கு காட்டிக் கொடுக்குது. மரணத்தவிடக் கொடும இந்த பயம் ..சீ.. செத்துப் போய்டலாம்.
இன்னைக்குள்ள மேசேஜ் வந்தா கொரோனா பாசிடிவ் வரலனா நெகடிவ் கருமம் புடிச்சவனுங்க சீக்கிரம் சொல்லித் தொலைக்க மாட்டாங்களா.
நேரம் நகர நகர பதட்டமும் பயமும் அதிகமாகுது. என்னோட நெஞ்சு துடிக்கிறது எனக்கே கேக்குது. சம்மந்தமே இல்லாம இடது தொடையின் சதை துடிக்குது. பல்லிவிழும் பலன் போல தொடையின் சதை துடிப்பதற்கு எதும் காரணம் இருக்குமா என காலண்டரின் பின் அட்டையை தேடியது கண்கள். தண்ணிய வேற அதிகமா குடிச்சதால மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தது வழக்கமா இருப்பதைவிட அடர் மஞ்சள் வண்ணத்தில் எரிச்சலுடன் சிறுநீர் வந்தது. உன்மையிலே உடலுக்கு பிரச்சனை தான் போல அதான் இப்படி வருது என்று பயத்துக்கு பல காரணங்கள் கிடைத்துக் கொண்டே இருந்தது. எச்சிலை கூட்டி முழுங்கினாலும் கசக்குது, கசாயத்த குடிக்கறதால வாய் கசக்குதா இல்ல எதனால? ஆனா இப்ப எல்லாம் முன்ன போல கசாயம் கசக்கறதில்ல, ஒருவேளை தினமும் குடிக்கறதால பழகிப்போச்சா.?
பொறுத்தது போதும் நாமே கால் பண்ணி கேட்டுடுவோம்னு கால் பண்ணா அவரும் கால் அட்டன் பண்ணவேயில்ல.. எப்படியும் பாத்துட்டு அவரே கூப்பிடுவாரு.. அதுகுள்ள நம்ம ஆவி பிடிச்சிடுவோம்னு
கொதித்த தண்ணிரில் “Eucalyptus” மாத்திரையை கிள்ளிப் போட்டவுடன் நீராவியும் யூகலிப்டஸ் வாசனையும் இணைந்து நெடியைக் கிளப்பி இருமச் செய்தது சூடான காற்று என் மூக்கின் வழியாக என் உடலுக்குள் செல்கிறது. மழை நின்ற பிறகு இலையில் துளி துளியாக சொட்டிக் கொண்டிருப்பதைப் போல வேர்வை துளிகள் என் முகத்திலிருந்து சொட்டிக் கொண்டிருந்தது. வேர்வை துளி சுடுநீரில் விழும் சத்தமும் கடிகாரத்தில் சிறிய முள் நகரும் சத்தமும் இணைந்தே கேட்டுக்கொண்டிருந்தது. போனில் மெசேஜ் வந்ததற்கான சத்தம் கேட்டவுடன் போர்வையை விலக்கிப் பார்த்தால் “விநாயகர் ஒரு?A)கடவுள்B)பாடகர்.A/B WINRs.500RC” என்று வந்திருந்தது.
நொந்து பற்களை கடித்துக் கொண்டு, அவருக்கு மீண்டும் கால் செய்தேன்.
செல்போனின் மணியுடன் என் இதய துடிப்பும் சேர்த்தே ஒலித்தது இவ்வளவு நேரம் காத்திருப்பதைவிடவும் அவர் போன் எடுக்கும் வரையில் காத்திருப்பது மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியது.
ஹலோ..
சார் வணக்கம்.
என்னோட கோவிட் ரிசல்ட்…
நேத்தே அனுப்பிட்டனே
நீங்க பாக்கலையா…
இல்ல சார் எதும் வரலையே..
அப்படியா ..
உங்களுக்கு நெகடிவ் சார் ..
கொரோனா இல்ல..
இருந்தாலும் கவனமா இருங்க…
மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதையாகும்.
தீநுண்மியை வெல்வோம் – கௌதமன் நீல்ராஜ்
தீநுண்மியை வெல்வோம்…
திக்கெட்டும் சூழ்ந்திருக்கும் தீநுண்மியின் அச்சுறுத்தல்
திராவகமாய் முழ்கடிக்கும் திங்களெல்லாம் உனைமுடக்கும்…
பனையெட்டும் பால்நிலவை பாவையாய்க் கண்டவனும்
தனைமட்டும் காப்பதற்காய் நாவடக்கி நாணுகிறான்…
பெருந்துயர் எவையெனினும் பேரிடர் தோன்றிடினும்
நெடுந்துயர் களைந்திடவே கடுந்தவம் புரிவோமா…?
இருந்துங்கெடல் இழுக்காம் தமிழ்க்குடி தமைஈன்ற
அருந்தழல் அரசான்ட ஆதியவளாம் தமிழன்னைக்கு…
கொடும்பிணியோ அஞ்சோம் கொலைவாளோ அஞ்சோம்
கடும்பனியோ அஞ்சோம் மலைமுகடாய் நெஞ்சம்…
பொறுத்தல் முறையே தமை வருத்தல் பிழையே இவை
மறுத்தல் குறையே இனி ஒருத்தல் நிலையே அவையும் ஒறுத்தல் மலையே…!
விடும்பகை யொழித்தல் மரபே கடுஞ்சொல் மழித்தல் அறமே
கெடுவினை யழித்தல் தரவே யார்மாட்டும் மடுமலர் கொய்தல் திறனே…!
திறம்பட யெழுதல் இனிதே அதனினும் தமிழ்ச் சுவைதனைச் சொரிதல் இதமே அதனிடைப்
பெறுஞ்சுனை வேய்தல் அரிதே அதிலும் மிதமாய் கொய்தல் வலிதே…!
சுற்றமெலாம் ஆற்றுங்கால் வீருகொண்டே தொடருங்கால்
நற்றமிழே வாழியெனும் நாவாறச் சொல்லுங்கால்…
ஆற்றிடுவோம் செயல்கள்தனை கலைந்திடுவோம் மடமைதனை
நாற்றங்கால் பயிர்போலே நாமிருக்க ஊன்றிடுவோம் உடனெழுவாய் தமிழாளா…!
– கௌதமன் நீல்ராஜ்
நூல் அறிமுகம்: கோவிட் 19 நெருக்கடியும் சூறையாடலும் – கி. ரமேஷ்
கோவிட் 19 என்ற கரோனா கடந்த இரண்டாண்டுகளாக உலகத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இலட்சக்கணக்கான இறப்புகள், ஊரடங்கு என நாம் முன்பின் பார்த்தறியாதவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சமயத்தில் இந்தியாவில் லட்சக்கணக்கான சிறுகுறு தொழில்கள் மூடப்பட்டதையும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து குழந்தை குட்டிகளுடன் தமது ஊரை நோக்கி நடந்ததையும் பார்த்தோம். ஆனால் இதே சமயத்தில், உலக அளவிலும், இந்திய அளவிலும் பெருமுதலாளிகள் தமது செல்வத்தை பலமடங்கு அதிகரித்துக் கொண்டதை அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. அது மட்டுமின்றி, இந்திய அரசு இந்த ஊரடங்கு காலத்தையும், தொழிலாளர்கள் எதிர்க்க முடியாதபடி இருக்கும் நிலையையும் பயன்படுத்திக் கொண்டு மக்கள் விரோத, தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி வேகவேகமாக நிறைவேற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.
இந்தப் போக்கு எதோ இப்போது இருக்கும் அரசுக்குத்தான் சொந்தம் என்று நம்மில் சிலர் நினைக்கலாம். ஆனால் இது தொடங்கப்பட்ட ஆண்டு 1991. 1991, ஏப்ரல் 5 அன்று காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்தப் பேரழிவுக்கு வித்திட்டவர் முன்னாள் பிரதமரும், அப்போதைய நிதியமைச்சருமான ’பேரறிஞர்’, பொருளாதார நிபுணர் திரு.மன்மோகன்சிங். அப்போதே இந்தப் பேரழிவைக் கணித்த தொழிற்சங்கங்களும், இடதுசாரிக் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தன. 29, நவம்பர் 1991இல் தொடங்கி இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக 18 அகில இந்திய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. பல கோடித் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். 1991இல் இந்தக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு யானையைக் கட்டவிழ்த்து விடுவது போல் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த யானை இப்போது மதம் பிடித்து மக்களையும், தொழிலாளர்களையும், விவசாயிகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது. மாவுத்தர்களான முதலாளிகள் பெரும்பயன் பெற்று வருகிறார்கள். இந்தக் கொள்கையை ஐ.மு.கூ 1 அரசு தவிர மற்ற அரசுகள் தொடர்ந்து அமல்படுத்தின. ஐ.மு.கூ 1 அரசில் 62 இடதுசாரி மக்களவை உறுப்பினர்கள் இருந்ததால் அந்த அரசால் இதனைக் கடுமையாக அமல்படுத்த முடியவில்லை. அவ்வளவுதான்.
சரி, இந்தக் கொள்கைகள் இவ்வளவு மோசமானவை என்பது இந்தப் பேரறிஞர்களுக்குத் தெரியாதா என்றால், தெரியும். ஆனால் அவர்கள் அதுதான் முன்னேற்றம் என்று முழுமையாக நம்புகிறார்கள். தொழிலாளர்களுக்கு எப்படி மார்க்சியம் இருக்கிறதோ, அப்படியே இவர்களுக்கு முதலாளித்துவம் இருக்கிறது. இந்தக் கொள்கைகளை எப்படிப் புரிந்து கொள்வது? சாதாரணமான நம்மைப் போன்றவர்களால் இந்தக் கொள்கைகளைப் புரிந்து கொள்ள முடியுமா என்றால், முடியும் என்று கூறி எளிய முறையில் விளக்கி இப்போது சிந்தன் புக்ஸ் வெளியிட்டிருக்கும் கோவிட் 19 – நெருக்கடியும், சூறையாடலும் நிரூபிக்கிறது. அந்தப் புத்தகத்தை நான் இங்கு அறிமுகம் செய்கிறேன்.
இந்தப் புத்தகம் ஒரு ஆய்வுப் புத்தகம். ஆனால் ஒரு ஆய்வுப் புத்தகம் போலல்லாமல், எளிய முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதுதான் அதன் சிறப்பு. ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ளது அரசியல் பொருளாதாரத்துக்கான ஆய்வுக் குழு – Research Unit for political economy. எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில், எளிய தமிழில் தோழர் பிரவீன்ராஜ் மொழிபெயர்த்துள்ளார். ஆய்வுக்குழுவுக்கும், பிரவீன்ராஜுக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறிவிட்டு புத்தகத்துக்குள் செல்கிறேன்.
புத்தகம் எட்டு அத்தியாயங்களையும், மூன்று பிற்சேர்க்கைகளையும் கொண்டுள்ளது. கரோனாவானது, ஏற்கனவே வீழ்ச்சியடைந்து வந்த பொருளாதாரத்தை மேலும் எதிர்மறை நிலைக்குக் கொண்டு சென்றது. இந்த நிலையிலும், அதை மீட்க வழி செய்யாது, மேலும் வீழ்ச்சியடையும் கொள்கைகளை இந்திய அரசு ஆக்ரோஷமாக அமல்படுத்துகிறது. சரிவைச் சரி செய்யும் வழியை அது தேர்ந்தெடுக்கவில்லை. ஏன்? இந்த விஷயத்தில் அவர்களது ஒரு கூற்றை நினைவில் கொள்ளுங்கள். “முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுதல்” என்ற சொல்லை அவர்கள் அடிக்கடி சொல்லுகிறார்கள். ஆக, இந்தியாவின் நிலை அன்னிய முதலீட்டாளர்களைச் சார்ந்து வீழ்ந்து விட்டது. அது ஏன் என்ற விவரத்தை இந்த அத்தியாயம் விளக்குகிறது.
இரண்டாவது அத்தியாயம் பொருளாதார நெருக்கடி முன்பே எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது. முக்கியத் துறைகளான விவசாயத்தையும், தொழிலையும் அழித்து சேவைத்துறை வளர்ந்துள்ளது. அதன் காரணம் என்ன என்பதெல்லாம் விளக்குகிறது இது. அடுத்த இயல் பொதுமுடக்கத்தின் தாக்கம். இந்த நிலையிலும் அரசு ஏன் மக்களுக்காகச் செலவழிக்க மறுக்கிறது, மாறாக பெருமுதலாளிகளின் கடனை ஏன் தள்ளுபடி செய்கிறது என்பது அடுத்த இயல். அப்படியே செலவு செய்யவேண்டுமென நினைத்தாலும் அதனை ஏன் அன்னிய மூலதனம் தடுக்கிறது? உண்மையில் உள்ளூர் சந்தை வளர்ச்சியடைந்தால் அவர்களுக்கு நல்லதுதானே? இந்த முரண்பாட்டை விளக்குகிறது அடுத்த அத்தியாயம்.
இந்த கோவிட் நிலையை இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகள் எதிர்கொண்ட முறை, அமெரிக்க இதைப் பயன்படுத்தி சீனாவை அழிக்க முயல்வது போன்ற பல விவரங்கள் அடுத்த அத்தியாயம். உலகமே வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த அதே சமயத்தில் சீன அதிபர் ஜின்சிங் சீனா அதிதீவீர வறுமையிலிருந்து விடுபட்டது என்று அறிவித்ததை இங்கு நினைவு கூர வேண்டும்.
அடுத்த கடைசி அத்தியாயத்தில் இந்தியப் பொருளாதாரமும், அதன் முன்னுள்ள பாதையும் விளக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் ஒரு வருடம் முன் செய்யப்பட்டவை என்பதால் அதிலுள்ள விவரங்கள் சற்றுப் பழையதாக இருக்கலாம். ஆனால் அதில் கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் பழையவை அல்ல. குறிப்பாகத் தொழிற்சங்கத்திலுள்ள தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, படித்து விவாதிக்க வேண்டிய விவரங்கள். இவை தெரிந்தால்தான் நாம் நமது எதிர்காலத் திட்டங்களை வகுக்க உதவிகரமாக இருக்கும். எனவே அனைத்துத் தொழிற்சங்கங்களும் இந்தப் புத்தகத்தை வாங்கவும், படித்து விவாதிக்கவும் அனைத்துத் தொண்டர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
இன்றைய நிலையில் மிகவும் தேவையான இந்தப் புத்தகத்தை வெளியிட்டு சிந்தன் புக்ஸ் ஒரு வரலாற்றுத் தேவையை நிறைவேற்றி உள்ளது. தோழர் மாதவுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த ஆய்வு மேற்கொண்டு புத்தகமாக வெளியிட்ட அரசியல் பொருளாதாராத்துக்கான ஆய்வுக்குழு ரூபேவுக்கும், தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் தோழர் பிரவீன்ராஜூக்கும் எனது வாழ்த்துக்கள்.
கி.ரமேஷ்
கோவிட் 19 – நெருக்கடியும் சூறையாடலும்
வெளியீடு – சிந்தன் புக்ஸ்
பக்கங்கள்: 354
விலை: 350/-
தொடர்புக்கு: 94451 23164