ரவி அல்லது கவிதைகள்
வலி நோதல்.
இரத்தம்
சொட்டச் சொட்ட
சுருக்கென்று
தைத்தது
முள்ளாகத்தான்
இருக்க வேண்டுமா.
***
முளைவிடும் அழிந்தவனின் விதைகள்.
கொதி கலனுக்குள்
நெடு நாள்
நீந்திய வார்த்தைகளை
வெளியாக்கிய
என் மீது
பாய்கிறீர்கள்
எரிபொருளிட்டதே நீங்களென அறியாமல்.
கூர் தீட்டப்பட்டிருந்தது
வெகு காலமாகவென
தெரியாமல்
குத்திய
என்னை குற்றம்பிடிக்கிறீர்கள்
அழிக்க.
முற்று முடிவாக
யாவையும்
முடித்து விட்டதாக
கோப்புகளை
மூடிடும்பொழுது
விழித்தவன் பரம்பரையென கையெழுத்திடுங்கள்
விதைகளை நம்பியே
வாழ்ந்தவர்கள்
ஆதி பூமிக்காய்
அழியத்
துணிந்ததென.
***
உழைப்பவர் உலகம்.
உழும்
மாடுகளும்
ஓடும்
கலப்பைகளும்
கேட்கிறது
உழுகிறவனின் பேச்சை.
உழுகிறவனை வைத்திருப்பவர்கள்
கேட்க மறுக்கிறார்கள்
ஒழுகும்
வியர்வை
உற்பத்தி
மதிப்புகளுடையது என்பதை.
***
மசிந்திடாத பொழுதுகள்.
இந்தப் பேனாக்குப்பியில்
நிரப்பிய
வண்ணம்
என்னுடையதல்ல.
இதன் மூலமாக
எழுதப்படும்
எதுவும்
என் பொருட்டானதல்ல.
ஆனால்
இந்த பேனா என்னுடையது
இது கக்கும்
யாவிற்கும்
நானே பொறுப்பு.
முரண் சுமந்த
பாடுகளில்
இதன்
மசியைக் கொட்டி
கழுவிய
பிறகான
வெற்றில் பார்க்கும்
வினோத
குறியாக்கம்
தக்கதொரு
தாளற்றுத்தான்
கடக்கின்றது
அனவரதமும்
அனாமதேயமென
புத்தெழுச்சி கொண்ட
பூரித்தலாக
தருணம் பார்த்து
எழுதிவிட.
***
தணல் கூட்டும்பொழுதில் கனன்று.
முடங்கிய
ரெக்கைகளுக்கு
நிராகரிப்பின்
நிறமாகவே இருக்கட்டும்.
வல்லாதிக்கத்தில்
பிடுங்கிய
சிறகுகளின்
வலி
யுக தசாப்தங்களாக
தொடரட்டும்.
வதை
முகாமாகிய
விரிந்த
அதிகார எல்லைகள்
சுதந்திரமெனச்
சொல்லப்படட்டும்.
கொல்லப்படும்
முன்
கொட்டிக் கிடக்கும்
சாத்தியங்களில்
சாஸ்வதம் கொள்.
ரண நோதலானாலும்
ஒரு நாள்
கிழித்து வெளியேற
அழகுகள் இருக்கிறதெனும்
இருமாப்பில்
வெல்லும்
ஆசைகள் மேவும்
ரௌத்திரத்தில்
கொதித்திரு.
எழுதியவர் :
***
– ரவி அல்லது.
[email protected]
***
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.