ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள் – நூல் அறிமுகம்
கவித்துவம் என்னும் ரசவாதம்
ப்ளக் ப்ளக் ப்ளக், காகத்தின் சொற்கள், நாகதிசை ஆகிய கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கும் கவிஞர் ராணிதிலக் குறுங்கதை வடிவத்தில் சில கதைகளை எழுதி ‘ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள்’ என்னும் தலைப்பில் சின்னஞ்சிறியதொரு தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். அவை கதைகள் என தலைப்பிடப்பட்டிருந்த போதும், கவித்துவப்புள்ளியை மையமாகக் கொண்டு சற்றே தளர்வான வடிவத்தில் எழுதி இணைக்கப்பட்ட கவிதைகளாகவே தோற்றமளிக்கின்றன. பெரும்பாலான குறுங்கதைகள், கவிதைக்குரிய கூர்மையான வாசிப்பையும் மறைந்திருக்கும் உள்ளடுக்குகளை அசைபோட்டுப் பிரித்துத் துய்ப்பதற்கான பொழுதையும் கோருபவையாக இருக்கின்றன. குறுங்கதை வடிவத்துக்கு அவை கூடுதல் அழகையே அளிக்கின்றன.
ஒவ்வொரு கதையிலும் புனைவம்சம் கொண்ட ஒரு அபூர்வ கணம் மறைந்திருக்கிறது. கடற்கரைப்பாதையை ஒட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறான் ஒருவன். அப்போது ஒரு மணியோசை கேட்கிறது. ஓசை வந்த திசையைப் பார்க்கிறான் அவன். முப்பதாண்டுகளுக்கு முன்பாக அவன் படித்த பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அந்த ஓசை வருகிறது. அப்போது அந்த வளாகம் வேறொரு பின்னணியில் அமைந்திருந்தது. இப்போது அந்தப் பின்னணி மாறியிருக்கிறது. ஒரு மணியோசை முப்பதாண்டு கால சித்திரங்களைக் கலைத்துப்போட்டு திக்குமுக்காடச் செய்கிறது. அக்கணம், காலம் அவனோடு விளையாடும் விளையாட்டா அல்லது அவன் காலத்தோடு விளையாடும் விளையாட்டா என்பது புதிராக இருக்கிறது.
ஒரு மணியோசை ஒரே ஒரு கணத்தில் முப்பதாண்டு கால பள்ளத்தை மூடிவிடுகிறது. அந்தப் பக்கத்திலிருந்து ஒரு கை நீண்டு இந்தப் பக்கத்திலிருப்பவரை இழுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது. ஒரே ஒரு கண நேர மணியோசை, இன்று என்னும் சாளரம் வழியாக நேற்று என்னும் சித்திரத்தைப் பார்க்கவைக்கிறது. ஒரு சாதாரணமான கணம் அசாதாரணமான ஒன்றாக மாறிவிடுகிறது. நினைவடுக்குகளில் திளைத்திருக்கும் நானும் அன்றாட அனுபவத்தை எதிர்கொண்டிருக்கும் நானும் சந்தித்துக்கொள்ளும் அபூர்வமான புள்ளி அது. ஆயிரக்கணக்கான முத்துக்குவியலில் அபூர்வமான வண்ணமும் அழகும் கொண்ட முத்தைத் தேர்ந்தெடுப்பதுபோல கணம்தோறும் நிகழ்ந்தபடி இருக்கும் ஆயிரக்கணக்கான காட்சிகளில் ஒரே ஒரு காட்சி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு கவிஞனால் மட்டுமே இத்தகு பேருணர்வை உருவாக்கமுடியும். இதுதான் ராணிதிலக் படைப்புகள் வழங்கும் அனுபவம்.
மெட்ரோ ரயில் பயணத்தில் காண நேர்ந்த ஒரு காட்சி பற்றிய சித்திரம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ஓடிக்கொண்டே இருக்கும் ரயிலில் சிலர் அமர்ந்திருக்கிறார்கள். சிலர் நிற்கிறார்கள். சிலர் காதில் ஒலிக்கருவியைப் பொருத்திக்கொண்டு பாட்டு கேட்டபடி பயணம் செய்கிறார்கள். குறைந்த சொற்களில் ஒரு பொதுச்சித்திரத்தை உருவாக்கிய பிறகு ராணி திலக் இன்னொரு சிறப்புச்சித்திரத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார். நுழைவாயில் ஓரத்தில் இருந்த கம்பிப் பகுதியில் ஓர் இளைஞனும் இளம்பெண்ணும் நெருக்கமாக நின்றபடி, ஒருவர் தோளை ஒருவர் தொட்டு அணைத்தபடி பேச்சே இன்றி பயணம் செய்கிறார்கள்.
அந்த மெளனத்தின் காரணமாகவே அவர்கள் மீது கவனம் குவிகிறது. அடுத்த நிறுத்தம் வந்ததும் அவர்கள் இறங்கிச் சென்றுவிடுகிறார்கள். ரயில் மீண்டும் புறப்படுகிறது. நுழைவாயில் கம்பிக்கு அருகில் நிறைந்திருக்கும் வெறுமை மீண்டும் மீண்டும் அந்த இளம்ஜோடியை நினைவூட்டியபடி இருக்கிறது. அந்த வெறுமை கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பாகவும் மாறுகிறது. ஒரு கலைஞனின் கண்களுக்கு மட்டுமே தெரியும் அபூர்வமான காட்சி. அந்த இருப்பும் இன்மையும் இளஞ்சோடிகள் சார்ந்த ஒன்றல்ல. காதல் என்னும் உணர்வு சார்ந்தது. ‘காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்; கானமுண்டாம் சிற்பமுதல் கலைகளுண்டாம்; ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே’ என்னும் பாரதியார் வரிகளை நினைத்துக்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை. ராணிதிலக் அக்காட்சியை அழகாக எழுதியிருக்கிறார். துணி துவைத்துக்கொண்டிருக்கும்போது குருவிகள் கூடி நின்று எழுப்பும் சப்தத்தையும் அவை போய்விட்ட பிறகு அமைந்த நிசப்தத்தையும் இணைத்து எழுதப்பட்ட தேவதச்சனின் புகழ்பெற்ற கவிதையும் ஒருகணம் நினைவுக்கு வந்து போகிறது.
ஒரு காப்பிக்கடை மேசையில் இருவர் அமர்ந்துகொண்டு காப்பியை அருந்தும் காட்சியை வேறொரு கதையின் மையச்சித்திரமாக எழுதியிருக்கிறார் ராணிதிலக். அவர்களைப்போலவே, ஒரு ஜோடி ஈக்களும் அந்த மேசையில் சிந்தியிருக்கும் காப்பித்துளிகளை மொய்த்தபடி இருக்கின்றன. காப்பியை அருந்திக்கொண்டிருக்கும் ஜோடி கைவீசி விரட்டவிரட்ட நகராமல் காப்பித்தம்ளரைச் சுற்றி மொய்த்தபடி இருக்கும் ஈக்கள் ஊட்டும் அருவருப்பைப் பற்றி இருவரும் கசப்போடு பேசிக்கொள்கிறார்கள். அதே நேரத்தில் காப்பித்துளிகளை மொய்த்துக்கொண்டிருக்கும் ஈக்களின் ஜோடி காப்பி ஆறுவதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் பேசிக்கொண்டே இருக்கும் அந்த மானுட ஜோடி ஊட்டும் அருவருப்பைப்பற்றி கசப்போடு பேசிக்கொள்கின்றன. சற்றே பகடி கலந்த வெளிப்பாடு என்றாலும் நாமும் பிறர் பார்வையில் காட்சிப்பொருளாக தெரியக்கூடும் என்னும் உண்மையைத் தொட்டுக் காட்டுவதாகவே அந்தக் கற்பனை அமைந்திருக்கிறது. அனைத்துக்கும் மேலாக, ஒவ்வொருவரும் அடுத்தவர்களை அருவருப்பூட்டுபவர்களாக பார்க்கும் பார்வையோடு இருப்பதை இந்தப் படைப்பு மெளனமாகச் சுட்டிக் காட்டியபடி இருக்கிறது.
இதனுடைய நீட்சியாக உண்மையைத் தொட்டுக் காட்டும் இன்னொரு காட்சியை இரண்டு நட்சத்திரங்கள் கதையில் ராணிதிலக் எழுதியிருக்கிறார். வானில் நிலவு எழும் நேரத்தில் ஒருவன் அதை வேடிக்கை பார்த்தபடி இருக்கிறான். நிலவுக்குக் கீழே இரு நட்சத்திரங்கள் தெரிகின்றன. அக்காட்சி யாரோ வயதான தம்பதியினரை அவனுக்கு நினைவூட்டுக்கின்றன. கதையின் மறுபக்கத்தில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் வயதான தம்பதியினரின் சித்திரம் அமைந்திருக்கிறது. அவர்களும் நிலவையும் நிலவுக்குக் கீழே மின்னிக்கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தையும் பார்க்கிறார்கள். அப்போது கிழவர் ”அந்த ஒற்றை நட்சத்திரம் நீயா அல்லது நானா?” என்று கேட்கிறார். அதற்கு “நாம் இருவரும் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் நாம் அங்கே இருப்போம்” என்று பதில் சொல்கிறார் கிழவி.
’ஒரே காலம்’ என்னும் தலைப்பில் அமைந்த கதையும் கவித்துவம் நிறைந்த ஒன்று. ஆற்றங்கரை ஓரமாக ஒரு சரக்கொன்றை மரம் நின்றிருக்கிறது. அது பூத்துக் குலுங்குவதைப் பார்ப்பதே ஆனந்தமான அனுபவம். பூத்திருக்கும் மர உச்சியில் ஒரு குயில் அமர்ந்து பாடுவதைக் கேட்பது இன்னும் சிறப்பான அனுபவம். அந்தப் பக்கமாக நடந்துசெல்லும் இரண்டு நண்பர்கள் தினந்தோறும் அதைப் பார்த்து மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு நடக்கிறார்கள். ஒருநாள் திடீரென யாரோ அந்தச் சரக்கொன்றை மரத்தை வெட்டிவிடுகிறார்கள். முதலில் பார்த்த நண்பர் ஓடிவந்து சொல்கிறார். ஓடிச் சென்று பார்த்த மற்றொரு நண்பர் மனமொடிந்து போய்விடுகிறார்.
மரமும் குயிலும் இல்லாத திசையில் செல்லக்கூடாது என்பதற்காகவே முப்பது வருட காலமாக அவர்கள் அந்தப் பக்கம் செல்லாமலேயே இருக்கிறார்கள். முப்பது வருடத்துக்குப் பிறகு இருவரில் ஒருவர் மீண்டும் அந்த இடத்தில் சரக்கொன்றை பூத்துக் குலுங்குவதைப் பார்த்ததாக ஓடோடிவந்து தெரிவிக்கிறார். உடனே மற்றொருவரும் வேகமாகச் சென்று பார்த்து மகிழ்ச்சியில் திளைக்கிறார். ஒரு மலர் முப்பது ஆண்டுகளை மறக்கச் செய்து இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒரே காலமாக மாற்றும் ரசவாதத்தை நிகழ்த்துகிறது.
குறுங்கதைகள் என்னும் அடையாளத்தைத் தாங்கியிருந்தாலும், இத்தொகுப்பில் நிறைந்திருக்கும் கதைகள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் விரித்தெழுதப்பட்ட கவிதைகளாகவே தோன்றுகின்றன. ராணிதிலக்குக்கு வாழ்த்துகள்.
நூலின் தகவல்கள் :
நூல் : ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள்
ஆசிரியர் : ராணி திலக்
வெளியீடு : பாலி வெளியீடு
நூல் அறிமுகம் எழுதியவர் :
பாவண்ணன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.