அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (Accu. Healer A.Umar Farook) அக்குபங்சர் வரலாறு - தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை | Acupuncture History from Chinese to India

அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை – நூல் அறிமுகம்

அக்குபங்சர் வரலாறு – தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை

அறிதலும் புரிதலுமே அஸ்திவாரக் கல்!

2014 என்று நினைக்கிறேன். “சின்னக் கண்ணாஆ! என்றொரு சிறுகதை எழுதியிருந்தேன். செம்மலர் மாத இதழ் அதைப் பிரசுரம் செய்திருந்தது. பேசத் தெரியாத இள்ங்குழந்தை ஒன்று நாள்முழுக்க அழுது துடித்துக் கொண்டிருந்தது. காரணம் புரியாமல் பெற்றோர் தவித்தனர். (அலோபதி மருத்துவம் அனைவரையும் ஆட்கொண்ட பிறகு சுய மறுத்துவம் செய்வது குறைந்து போனது.) மருத்துவமனையில் சேர்த்து மூன்று நாள் வரை மருத்துவம் பார்க்கப் பட்டது. அல்லோபதி மருத்துவத்தின் சிறப்பு நோயாளியைத் தூங்கவைத்து சிகிச்சை அளிப்பது. தூக்கம் கலைந்தால் மீண்டும் நோய்மை விழித்துக் கொள்ளும். அந்தக் குழந்தை தூக்கம் கலைந்தபின் மீண்டும் துடிதுடித்து அழுவது. அதே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெரிய மனுசி சீரடிப்பு நோய் என்று கூறி நாட்டு வைத்தியம் பார்க்கும் அனுபவக் கிழவி ஒருவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.

குழந்தையைப் பரிசோதித்த கிழவி ஏதோ ஒரு தாவர வேரை அரைத்து நீரில் கலந்து குடிக்க கொடுத்ததோடு, அந்த வேரை கைமணிக்கட்டிலும் கட்டிவிட்டார். ஒரே நாளில் குழந்தை அழுகையை நிறுத்தி சிரிக்க ஆரம்பித்தது. நிலத்துக்கேற்ற நோயும் அதற்கேற்ற நிவாரணமும் இருப்பதைப் புரிந்துகொண்டால் எளிதாக நோய்நீக்கம் கிடைக்கும் என்பதாய்க் கதை நிறைவுற்|றது. அலோபதி மருத்துவர்கள் பலரும் இது அறியாமையின் வெளிப்பாடு என்றும் அறிவியலுக்குப் புறம்பானது என்றும் விமர்சனம் செய்தார்கள். அக்குஹீலர் உமர் பாரூக் மட்டும்தான் இது சரியான பார்வை என்று பாராட்டினார்.

ஜனன மரணக் கரைகளுக்கு இடையில் ஓடும் நதிதான் வாழ்க்கை. ஓடுவது நந்நீரா கலங்கல் நீரா எனக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். கலங்கலைக் கண்டறிவதும் தூய்மைப் படுத்துவதும்தான் மருத்துவரின் கடமை. அதாவது நோயறிதல் நோய் நீக்கம் ஆகிய வாழ்வியல் நெறிமுறைதான் மருத்துவம். மனிதகுலம் தோன்றிய ஆரம்ப காலத்திலேயே நோயும் நோய்நீக்க இயற்கை மருந்துகளும் தோன்றிவிட்டன. ஒவ்வொரு நாட்டுக்கும் நிலத்துக்கும் தகுந்து மருத்துவ முறைகள் தோன்றியதையும் நோயறிதல் மற்றும் தத்துவ வளர்ச்சியின் வழியாக சரியான மருத்துவ முறைகள் நீடித்திருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது இந்த நூல். 64 மரபு முறை மருத்துவ நிலைபாடுகள் உலகமெங்கும் பரவி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம் பட்டியலிட்டிருக்கிறது.

உமர் பாரூக் அவர்கள் மிகவும் எளிமையானவர். அவர் கற்றறிந்த மருத்துவக் கல்வி மகத்தானது. வாசித்து அறிந்ததை அமல்படுத்துவது மட்டுமில்லாமல் புதிய தேடல்களையும் கண்டுபிடிப்புகளையும் செய்திருக்கிறார். அதன்மூலம் இன்று இந்தியா முழுமைக்குமான அக்குஹீலர் கூட்டமைப்பை உருவாக்கி, புதிய புதிய பாடத்திட்டங்கள் வழியாக ஒற்றைப் புள்ளி மருத்துவத்தின் அடுத்தகட்டம் என்ன என்பதை ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். பொதுவாக ஆய்வாளர்கள் என்றால், இதுபோன்ற மருத்துவ ஆய்வாளர்கள் பலகாலும் தேடி முதுமைப் பருவத்தில் ஆய்வு முடிவுகளை வெளியிடுவார்கள். ஆனால் உமர் பாரூக் சின்ன வயதில் பல பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி வெற்றிகண்டிருக்கிறார். இவரின் “உடல்மொழி” நூல் நோயறிதல் மருத்துவத்தின் புரட்சிப் படலம் எனலாம். இவர் எழுதிய “ஆதுரசாலை”| நாவல் ஒருபக்கம் இலக்கியப் பனுவலாகவும் இன்னொருபக்கம் நாடித்துடிப்பு மூலம் நோய் கண்டறிந்து நோயகற்றும் முறையை விளக்கும் மருத்துவ நூலாகவும் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக உரையாடல்மூலம் கட்டமைக்கப் பட்ட நாவல், தமிழின் அரிதான கட்டமைப்புக் கொண்ட படைப்புகளின் வரிசையில் இந்த நாவலும் அடங்கும். “உங்களுக்குள் ஒரு மருத்துவர்” நூல் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய சுய மருத்துவச் செயல்திட்டப் பாடக் குறிப்பு எனலாம்.

இப்படி நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் மூலம் அக்குபங்சர் இயக்கத்தை மேலானதோர் இடத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார். நம் காலத்தின் மருத்துவச் சிந்தனையாளர் தோழ்ர் உமர் பாரூக். அக்குஹீலர்கள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு தமிழரும் பெருமைப் பட்டுக் கொள்ளும் அளவுக்கு தனது இயங்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

இப்போது அவர் வெளியிட்டிருக்கும் நூல் “அக்குபங்சர் வரலாறு.”

பொதுவாக ஆய்வு என்பது உண்மையைக் கண்டறிவதற்கான தேடல் ஆகும். பல்வேறு தரவுகளைத் தேடும்போது உண்மைகளுக்கு ஊடாகப் பொய்மைகளும் வந்து சேரும். பெருமித உணர்வுகளும் பொங்கிப் பெருகும். உதாரணமாக, திராவிடத் தோற்றத்தின் அடித்தளத்தைத் தேடும்போது, “ஏழாயிரம் மைல் நீளம் கொண்ட பஃ|றுளி ஆறு தமிழ்நிலத்தில் பாய்ந்தது என்ற பொய்ம்மைப் பெருமிதம் பரப்பப் படுகிறது. அதுபோல் இல்லாமல் நடுநிலையோடு இந்த ஆய்வுநூல் அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பு.

அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (Accu. Healer A.Umar Farook) அக்குபங்சர் வரலாறு - தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை | Acupuncture History from Chinese to India

அக்குபங்சர் மருத்துவம் என்பது இயற்கை மருத்துவத்தின் ஒரு கூறு. இயற்கைத் தாவரங்களின் நோய்நீக்கியாக இல்லாமல் உடலின் உள்ளுறைந்திருக்கும் நரம்பு மண்டலத்தில் குடிகொண்டிருக்கும் புள்ளிகளில், தேவையான ஒன்றைத் தொடுவதன்மூலம் நோய்நீக்கம் சாத்தியம் என்பதை இந்த நூல் அனுபவக் கூறுகளின் வழியாகப் பிரகடனப் படுத்துகிறது. சக்தியேற்றாம் என்றும் கூறலாம். அக்குபங்க்சர் மருத்துவம் எப்படித் தோன்றி எப்படி வளர்ந்தது என்பதற்கும் மேலாக சமூக வரலாற்றுத் தரவுகளையும் கண்டறிந்து சொல்கிறது இந்த நூல்.

அக்குபங்சர் என்பது சீனாவில் உருவான மருத்துவமுறை. என்ற உண்மையைப் பல தரவுகள்மூல்ம் நிறுவுகிறார் ஆசிரியர். அக்குபங்சர் லத்தீன் மொழிவழியாகப் பெறப்பட்ட ஆங்கிலச் சொல். அதன் சீனப் பெயர் ஜெ ஜியூ. ZHENJIU. துல்லியமான தூண்டுதல் என்று பொருள்.

அந்த மருத்துவம் ஃப்ரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் பரவும்போது அக்குபங்சர் என்ற நவீனப் பெயர் வருகிறது. ACCUS + PUNTURA என்பது லத்தீன் மொழிச்ந்சொல். கூர்மையான ஊசியால் குத்துதல் என்று பொருள்.

அக்குபங்சர்; மருத்துவத்தின் மூல நூல் நெய்ஜிங். NEIJING. இந்த நூலைச் சீனமொழியில் எழுதியவர் ஹுவாங் டி. யார் இவர் என்பதைக் கண்டுபிடிக்க தோழர் அ. உமர் பாரூக் மேற்கொண்ட முயற்சிகள் என்ன என்பதை வாசகர்கள் வாசித்துப் புரியும் போதுதான் சுவை கூடும்.

உலகளாவிய மருத்துவம் அக்குபஞ்சர். எல்லா நாடுகளிலும் எப்படிப் பின்பற்றப் படுகிறது என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் நூல் விவரிக்கிறது. வாசிக்க எளிதாகவும் சுவையாகவும் இருக்கிறது சாமான்யர்களும் புரிந்துகொள்ளும்படி ”புள்ளி” விபரங்களோடு சொல்லப் பட்டிருக்கிறது.

சீன மருத்துவமான அக்குபங்சர் சீனாவில் பின்னடைவைச் சந்தித்த நாளில் நவீன சீனத்தின் சிற்பி தோழர் மாவோ “வெறுங்கால் மருத்துவர்” என்ற புதிய கல்வித் திட்டத்தைத் தீட்டி, கிராமங்கள்தோறும் சென்று சிகிச்சையளிக்க வழிவகை செய்தார். அபினி போதைக்கு அடிமைப் பட்டுக் கிடந்தவர்கள் உட்பட நோய்நீங்கி சுபிட்சம் அடைந்தனர். இதைக் கண்டு உலகமே வியந்த் பாராட்டியதோடு தத்தமது நாட்டிலும் அமல்படுத்தத் திட்டம் தீட்டின. “வெறுங்கால் மருத்துவர்” முறை அமலான பிறகு இந்தியாவையும் அது கவர்ந்தது.

அதோடு அக்குபங்சரிசத்தை நவீனப் படுத்தியவர் சீனாவைச் சேர்ந்த டாக்டர் உ. வே. பிங். தைவானைச் சேர்ந்த இவர் 1954ல் சீன மொழியில் எழுதிய நூல் “சீன அக்குபங்சர்.” இந்நூல்தான் இன்றைய தூண்டல் மருத்துவத்தின் ஆகச் சிறந்த கையேடு.

இந்தியாவின் அக்குபங்சர் மேதை என்றால் அவர் பி. கே, பாசு என்பவரே. ஆவ்ர் சீனா சென்று முழுமையாய்க் கற்றி ஆய்ந்து இந்தியாவில் அமல்படுத்த முயன்றார். இலங்கையைச் சேர்ந்த ஆண்ட்டன் ஜெயசூரியாவும் அக்குபங்க்சர் மேதையே. பாசு 1959லும் ஜெயசூரியா 1970லும் இந்தியாவில் நடைமுறைப் படுத்த முயன்றனர். அக்குபங்சர் உண்மையான நோய்நீக்கி என்|ற அந்தஸ்திலிருந்து அ/றுவை சிகிச்சைக்கான வலி நிவாரிணியாக பின்னிலை பெற்றபோதுதான் இந்தியாவில் அறிமுகமானது.

இந்த ஆபத்தை உணர்ந்து சரிசெய்ய முயன்றவர்கள் மருத்துவ சகோதரர்கள் என்று உமர் பாரூக் அவர்களால் சுட்டிக் காட்டப் படுகிற சித்திக் ஜமால் மற்றும் அவரின் சகோதரர் ஃபசலூர் ரஹ்மான் என்ற இருவரும்தான். உலகமெங்கும் பல புள்ளி, மூன்றுபுள்ளி சிகிச்சைமுறை அமலில் இருந்த போது ஒருபுள்ளி சிகிச்சை முறையை அனுபவம் மற்றும் தேடல் ஞானத்தோடு அமல் படுத்தியவர்கள் அவர்கள். அதற்குப் பேருதவி செய்தது டாக்டர் பிங் அவர்களின் “சீன அக்குபங்சர்” நூல்தான். சென்னையைச் சேர்ந்த இந்த இருவரும்தான். இன்றைய நாளில் உயர்ந்தபட்ச அக்கு டச் சிகிச்சையின் இந்திய முகங்கள். அவ்விருவருக்கும் பின்னால் முஹமது மீராவும் அ. உமர் பாரூக் அவர்களும் அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கின்றனர். குஇறிப்பாக தோழர் உமர் பாரூக் சிகிச்சை முறையை நிலைப்படுத்துவதோடு நின்/றுவிடாமல் ஆவணமாக்கி உலமெங்கும் பரப்புரை செய்தவண்ணம் உள்ளார். அதன் ஒரு பகுதி இந்த நூல்.

அக்கு சிகிச்சையை முழு ஆற்றலோடு மேற்கொள்ள வேண்டுமென்றால் அதன் இன்றைய நவீன வடிவத்தைமட்டும் கற்றுத் தேர்ந்தால் போதாது என்கிறார் ஆசிரியர். ஆவர் எழுதுகிறார்;- “அக்குபங்சர் சிகிச்சையை ஒருவர் சரியாகப் பின்ப|ற்ற வேண்டுமென்றால் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள நவீன உத்திகளையோ கோட்பாடுகளையோ அறிந்துகொள்வது மட்டும் பயன் தராது. மாறாக, அதன் தொன்மையான விதிகள் பற்றிய புரிதலே முதல் தேவை.” (பக் 66)

அக்குபங்சர் பாடத்திட்டத்தை உருவாக்குவதில் முனைப்புக்காட்டும் உமர் பாரூக் வேறொரு சிந்தனைமரபு அல்லது மாற்று மருத்துவ மரபு உள்ளே நுழையாமலும் கவனமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். மருத்துவ சகோதரர்கள் வழியில் நின்று மேலதிகப் படிப்பையும் ஆய்வையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

இந்த நூலின் இன்னொரு சிறப்பு கனவுநிலைக் கோட்பாடு. கனவு என்பது மன இயக்கத்தின் புற வெளிப்பாடு. ஒருவர் வெள்ளைநிறம் சார்ந்த நிகழ்வுகளையும் குழப்பங்களையும் கொலைச் சம்பவங்களையும் கனவு காண்கிறார் என்றால் நுரையீரல் ஆற்றலின் குறைபாடு என்று அர்த்தம்.

இப்படியாக அரிய தகவல்களும் வரலாற்றுத் தரவுகளும் இந்நூலில் உள்ளடங்கிக் கிடக்கின்றன. யதார்த்தமற்ற மருத்துவ நுகர்வால் வலிமை குன்றிக் கிடக்கும் ஒவ்வொருவரும் வாசித்து அறிந்து உண்மையை நோக்கி நகர்வதற்கான வழிகாட்டுதலை இந்நூல் வழங்குகிறது.

வாழ்க, உமரர் பாரூக் அவர்களின் மருத்துவ மற்றும் சமூகத் தொண்டு.

நூலின் தகவல்கள் :  

நூல்: அக்குபங்சர் வரலாறு – தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை
ஆசிரியர்: அக்குஹீலர் அ. உமர் பாரூக்.
வெளியிடு: நம் பதிப்பகம்.
பக்கம்: 90.
விலை: ரூ.120/

நூல் அறிமுகம் எழுதியவர்:

தேனிசீருடையான்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *