எங்கே ? ஏன்? எழுதத் தொடங்கினோம்?
அறிவியலாற்றுப்படை 23
முனைவர் என்.மாதவன்
ஒரு பிரபலமான நிகழ்வு. அறிஞர் ஐன்ஸ்டீன் அவர்கள் வீட்டில் நடைபெற்ற நகழ்விது. அவர் வாசிப்பதற்கென்று அறை ஒன்று இருந்தது. வழக்கமாக அவர் இல்லாத நேரங்களில் அந்த அறையின் கதவை அவர் தாழ்ப்பாள் இட்டுக்கொள்வார். அவருடன் பூனை ஒன்றும் வசித்ததாம். அவர் இல்லாத நேரத்திலும் அந்த அறையிலிருந்த மரத்தடுப்பிலுள்ள துளையின் மூலம் அது உள்ளே சென்று படுத்துக்கொள்ளும். ஒருசுபயோக சுபதினத்தில் அது குட்டி ஒன்றினை ஈன்றது. ஐன்ஸ்டீனுக்கு பதற்றம் பற்றிக்கொண்டுவிட்டது. வாள், உளி, ரமபம் துணையுடன் அந்த துளைக்கு மத்தியில் துளை ஒன்றினை போட ஆயத்தமானார். வழக்கமாக உடலுழைப்பில் ஈடுபடாதோர் அப்பணிகளில் ஈடுபட்டால் வீடே அமளிதுமளியாகுமல்லவா. அன்றும் அப்படித்தான் ஆனது. அளவுக்கு அதிகமான ஒலி அவரது வீட்டின் பணிப்பெண்ணை ஈர்த்தது. ஐன்ஸ்டீன் எல்லோருடனும் இயல்பாக உரையாடும் வழக்கம் உடையவர். அந்த பெண்மணி , ஐயா, என்ன செய்கிறீர்கள் நான் தெரிந்துகொள்ளலாமா? என்றார்.
அதற்கு ஐன்ஸ்டீன் அவர்கள் ”இதுவரை ஒரு பூனைதான் இருந்தது. அதற்கு ஒரு ஓட்டை போதுமானதாக இருந்தது. தற்போது அதற்கு குட்டி வேறு இருக்கிறது. அது எப்படி அறைக்குச் சென்று ஓய்வெடுக்கும். நீங்கள் யாரும் பொறுப்பாக இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் இன்னொடு துளையையும் நானே ஏற்படுத்துகிறேன். குட்டி இந்த துளை வழியாகச் செல்லட்டும். எப்படி எனது யோசனை” என்றார்
”ஐயா, நீங்கள் ஏன் இவ்வளவு அல்லல்படவேண்டும். அம்மா பூனை செல்லும் துளைவழியாகவே குட்டியும் செல்லுமே” என்றார் பணிப்பெண்.
அட ஆமாம்ல என்று ஆச்சரியத்திலாழ்ந்தார் ஐன்ஸ்டீன்.
எதற்கு இந்த பீடிகை என்றால், அறிஞர்கள் அல்லல்பட்டு செய்யும் பணிகளுக்கு எளிமையான வழிவகைகளைக் காண்பவர்கள் சாதரண மக்களே. ஏனென்றால் எந்த ஒரு கண்டுபிடிப்புகளுக்கும் பின்னால் மக்களின் தொகுக்கப்பட்ட அனுபவங்களே இருக்கும். அப்படிப்பட்ட அனுபவங்கள் தெருவில் திரிவோர்க்கே அதிகம் கிடைக்கும். இன்றைக்கும் ஃப்ரொபஷனலாக செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் சாதாரண மக்களின் அனுபவங்களே நிறைந்திருக்கும். இன்றைக்கு காகிதமே தேவைப்படாத அளவுக்கு கணிணியிலேயே அனைத்துப் பணிகளும் முடிந்துவிடுகின்றன. ஆனால் இந்த நிலையை அடைய காகிதத்தின் வழியாக காகிதமில்லா பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை அடைந்துள்ளோம். அந்த வரலாற்றைப் பதிவது அறிவியலாற்றுப்படையின் அடுத்த தேவையாகிறது.
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடிகர் சூரி பரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெறும். இந்த புகழ் பெற்ற நகைச்சுவையினை நம்மில் பலரும் பார்த்திருப்போம். அவர் பரோட்டா சாப்பிட சாப்பிட கரும்பலகையில் உணவகப் பணியாளர் கோடு போடுவார். பின்னர் கணக்கில் தகராறு வரும்போது கோட்டை அழித்துவிட்டு மீண்டும் சாப்பிடத் துவங்குவதாகச் சொல்வார். இந்த காட்சியின் மூலம் கணக்கு வைக்க கரும்பலகையை பயன்படுத்தும் கலையை மீட்டுருவாக்கம் செய்திருப்பர். இந்த இடத்தில் மட்டுமல்ல. முற்காலங்களில் பால் கணக்கு போன்றவற்றிற்கும் வீட்டின் சுவர்கள்தான் பயன்பட்டிருக்கின்றன. அதுபோலவே காலரா, யானைக்கால் போன்ற நோய்களுக்கான தடுப்பூசி போன்றவற்றிற்கான கணக்குகளும் வீட்டின் சுவர்களிலேயே எழுதுவர். ஸ்டென்சில் போன்ற வரைவின் மூலம் அச்சு செய்யப்பட்டு கார்பன் பென்சிலால் எழுதிச் செல்வர். மேலும் விபரம் தேவைப்படுவோர் வீட்டிலுள்ள பெரியோரை அணுகவும். இதிலிருந்து எழுத்து எப்படி உருவாகியிருப்பினும் எழுதி வைப்பதற்கான பரப்பு. அமைப்பிற்கான தேவை ஆதிகாலத்திலிருந்து இருந்துவருகிறது.
பாறைகளிலும், குகைகளிலும் எதையாவது கிறுக்கிக் கொண்டிருந்தவரை ஓய்வு நேரங்களில் ஓவியங்கள் வரைவது போன்ற செயல்பாடுகளே நடைபெற்றன. ஆனால் கிராமங்கள் போன்ற அமைப்புகள் தோன்றி அதனை நிர்வகிக்கும் பொறுப்புகள் கூடியபோது கணக்கு வழக்குகளுக்கான தேவைகளும் உண்டாயின. நாகரீகங்களின் அடுத்த கட்டமான அரசு, ஆட்சி, நிர்வாகம், அரசன் என்று வந்த பிறகு கணக்கு வழக்கு முறைகளுக்கான தேவை கூடுதல் தேவையானது. மேலும் நிலத்தின் உரிமை கொண்டாடப்படும் இடங்களில் அதனை நிர்வகிக்கும் ஆட்சியாளர்கள் அவர்களுக்கு எழுத்துபூர்வமாக எழுதித் தரவேண்டிய தேவை ஏற்பட்டது. இது சொத்து தொடர்புடைய அதன்மூலம் வரவேண்டிய வருவாய் தொடர்புடையதாய் இருந்தது. வருவாய் வரும் இடங்களிலெல்லாம் எப்போதும் பணிகள் கனஜோராய் நடக்குமல்லவா? இதனால் ஒவ்வொரு பகுதியிலுமிருந்த ஆட்சியாளர்களுக்கு எழுத்துக்களை செம்மைப்படுத்தவும் அதனை எழுதி வைக்கும் பரப்பினை ஒழுங்குபடுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை அசோகர் காலத்தில் அவர் தமது கட்டளைகளை கற்களில் பொலிந்து வைக்கும் ஏற்பாட்டை மேற்கொண்டார். இதுபோலவே ஹமுராபி போன்ற அரசர்களும் அவர்களது கட்டளைகளை களிமண் பலகைகளில், கற்தூண்களிலும் எழுதிவைத்தனர் . ஒருபக்கம் எழுத்துமுறையின் பரிணாமத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பாக இவைகள் அமைந்தன. இது அரசு தொடர்பான ஏற்பாடாக இருக்கும் வரை இவ்வாறு சிக்கல் நிறைந்ததாகவும், அதிகமான செலவில் குறைந்த அளவிலான பயன்பாடு உடையதாகவும் அமைந்தன. ஆம் அரசர் கட்டளைகளை எழுதிவைத்துவிடலாம். அதனை உணர்ந்து நடக்க மக்கள் அதனை வாசிக்கவேண்டும் அல்லவா. வாசிப்பு வாசனையே இல்லாதோர் எவ்வாறு அதனை வாசிப்பர். இதனால் மக்களுக்கு கட்டளைகளை அறிவித்துவிட்டு அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை. யாரோ அதனை மீறி குற்றச் செயல்கள் புரியும்போது அவர்களைப் பிடித்து ”கண்ணுக்கு கண்,” ”இரத்தத்துக்கு இரத்தம்” எனதீர்ப்பெழுதிக் கொண்டிருந்தார்.
பிற்காலங்களில் ஜனநாயகம் தழைக்கும் வரை இந்தக் கொடுமைகள் நடந்துகொண்டிருந்தன. எழுத்தில் வடித்துவைத்துவிட்டால் தவறுகள் குறைந்துவிடும் என்பது எப்படிப்பட்ட தவறான நம்பிக்கை. இன்றைக்கும் புல் தரையில் நடக்காதீர்கள், எச்சில் துப்பாதீர்கள் என்று மரியாதையுடன் எழுதிவைத்துள்ள இடங்களில் நடைபெறும் காட்சிகளைப் பாருங்கள் புரியும்.
எப்போதுமே சாதாரண மக்களே எளிய வழிகளைக் கண்டறியும் வசதி பெற்றவர்கள். அந்த வகையில் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்த மக்கள் எழுதுவதற்கான பல்வேறு பொருட்களைக் கண்டறிந்தனர். நாகரீகம் பிறந்த பண்டைய நைல் நதி நாகரீகத்தின் பகுதிகள் மற்றும் எகிப்தில் பாப்பிரஸ் என்ற புல் வகைகளைப் பதப்படுத்தி எழுத்துக்களை வடிக்கும் காகிதம் போன்ற பொருளினைக் கண்டறிந்தனர். இதனிடையே விலங்குகளில் தோலையும் பதப்படுத்தி எழுதி வைக்கத் தொடங்கினர். ஆனால் இவ்வாறான பொருட்கள் பூஞ்சைகளால் தாக்கப்பட்டன. அப்படியே தப்பித்தாலும் நீண்ட நாட்களுக்குத் தாக்குப்பிடிக்க இயலவில்லை. இதனால் தொடர்ந்து மாற்றுப்பொருட்களைக் கண்டறிவதற்கான தேவை ஏற்பட்டது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் காகிதத்தினை முறைப்படி சீனர்கள் கண்டறிந்ததாக குறிப்புகள் உள்ளன. அது மிகவும் விறுவிறுப்பான கதை. அதனை அடுத்த பகுதியில் காண்போம்.
படை எடுப்போம்
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.