ஞான் கந்தர்வன் என்கிற இந்தப் படம் எனக்குள் பல நினைவுகளைக் கிளறியது.

தேடுதல் ஆட்டிப்படைத்த காலம் அது. ஒவ்வொரு நேரத்தில் ஒன்றை எடுத்துக் கொண்டிருப்பேன். நாங்கள் கொஞ்சம் பேர் சபரிமலைக்கு மாலைப் போட்டுக் கொண்டு, பல கோவில்களுக்கும் சுற்றிக் கொண்டு, இரவுகளில் கண் விழித்துக் கொண்டு ஒரு தினுசாக இருந்தோம். டிசம்பரின் பனி இரவுகளில் நாங்கள் பல்வேறு தொன்மக்கதைகளை, மறைபொருள் வாக்கியங்களை, தெய்வீக அற்புதங்களின் காரணக் கதைகளை, கண்ணுக்குப் புலப்படா உயிர்களின் சமிங்ஞைகளை எல்லா திக்குகளில் இருந்தும் வாங்கி, அதன் பாரம் சுமக்க முடியாதவர்களாக இருந்தோம். ஒரு விதமான நடுக்கம் இருந்தவாறு இருந்தது. நள்ளிரவில் ஒருமுறை தேநீர் குடிக்கப் போன ஒரு இடத்தில் நான்கு பேர்,  மணியாட்டிகள் என்று சொல்ல்ப்படுவோரைப் பார்த்தோம். விசித்திரமாக இருந்தார்கள். திரும்பி வந்து அதைத் தொடர்ந்த பேச்சில் முனீஸ்வரன் பற்றின பேச்சு வந்தது.

நண்பன் இலங்கையைச் சேர்ந்தவன். அவனுடைய அம்மாவின் தங்கையைப் பற்றி விவரித்தான். அவ்வளவு பேரழகி. குடும்பத்திலேயே அவள் தான் முதல் வீராங்கனை. ஊரே அவளைப் பார்த்து குண்டி எரிச்சல் கொண்டு பொருமியது. ஒரு பொண்ணு இப்படியா ஆடுவா என்பார்கள். அவளும் யாரையும் விலை வைப்பதில்லை. ஒரு முறை அவளுடைய தீட்டுத்துணியை கவனப்பிசகாக தோட்டத்தில் எறிந்து விட்டிருக்கிறார்கள். முனீஸ்வரன் வந்து பற்றி விட்டிருக்கிறான். அவள் எப்படி கதவைத் திறந்து வெளியேறி அந்தத் தோட்டத்தில் குறிப்பிட்ட மரத்துக்குக் கீழே சென்று அமர்ந்து காலையில் திரும்புகிறாள் என்பதை ஒருவராலும் சொல்ல முடியவில்லை. ஆரம்பத்தில் அவளுடைய முகத்தில் இனம் தெரியாத ஜொலிப்பு இருந்திருக்கிறது. அப்புறம் அது வற்றியவாறு வந்து எலும்பும் தோலுமானாள். சாப்பாடு தூக்கம் உரையாடல் படிப்பு எதுவுமில்லை. கர்ப்பம் என்றார்கள். அபார்ஷன் செய்து எடுத்ததில் அது ஒரு பிண்டம், அவ்வளவு தான். அவளுக்கு இது பற்றி ஏதும் சுய நினைவில் இல்லை. வெறித்துப் பார்த்தவாறு இருந்து ஒரு மன நல மருத்துவமனையில் இறந்து போனாள். 

Watch Njan Gandharvan Movie Online - Stream Full HD Movies on Airtel Xstream

இதை போன்ற ஒரு அற்புதமான புனைவு, சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதையில் படித்திருக்கிறேன். முற்றிய இரவொன்றின் உல்லாசத்தில் சந்தோஷமாக ஆற்றில் முழ்கி எழுந்தவள் அங்கே பார்த்தாள், ஒன்றுமில்லை, புளியமரம் அங்கே நின்று கொண்டிருந்தது எனும்படியான அவரது வருணனையில் எழுகிற விஷ்வல் பேரனுபவம்.

இதைத் தொடர்ந்து தான் ஒரு பேச்சு வந்தது. சொன்னவன் கோழிக்கோட்டை சேர்ந்தவன். ஞான் கந்தர்வன் படக்கதையைக் கேட்டு பலரும் இதை எடுக்க வேண்டாம் என்று திரும்ப திரும்ப சொன்னார்களாம். பத்மராஜன் அதை சட்டை செய்யவில்லை. அவர் அதை எடுக்கத் துவங்கினார். முடித்தார். பலரும் பயந்த மாதிரியே சாக வேண்டியிராத காலத்தில் அவரது மரணம் நிகழ்ந்து விட்டது என்றான். நான் அதற்கு மேல் இதுவரை அதைப் பற்றி யாரிடமும் விசாரித்தது இல்லை. படத்தையும் அப்புறம் எப்போதோ தான் பார்த்தேன். இன்றுமே நான் அதை நம்புகிறேனா இல்லையா என்பது பற்றியும் தெரியவில்லை. ஆனால் இவைகளை எல்லாம் நினைக்கும்போது ஒருவிதமான சிறிய பீதி புகை எழுப்பி மறைவதை அறிகிறேன். அது எனக்கு வேண்டும். மற்றபடி நான் அறிவியல் ரீதியாக உண்மைகளை தேடித் திரிந்து கப்பு வாங்கவும் வேண்டாம். ஆகவே நான் இவற்றைக் காப்பாற்றிக் கொள்ளவே விரும்புகிறேன். பேயை நம்புகிறீர்களா? இல்லை தான், ஆனால் பயமாக இருக்கிறதே. எப்பவும் நான் புதுமைபித்தன் கட்சி. முழக்கங்களைக் காட்டிலும் முடியும்வரை மனதிற்கு மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும். 

பத்மராஜன் செய்த சாதாரண படம் இது என்று வேறு ஒரு தரப்பு இருக்கிறது.

இல்லை.

அசாத்தியம் செய்திருக்கிறார்.

Old Malayalam Movie Scenes - OLD MALAYALAM MOVIE STILLS

கதை கிடக்கிறது மண்ணாங்கட்டி. படத்துக்காக அவர் ஒரு காதலை எடுத்துக் கொண்டிருக்கிறார். அது வழக்கமானதே அல்ல. ஓவ்வொரு அசைவிலும் ஒரு அடி தாண்டுகிறார். மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது, மனம். அதுவே அவருடைய தரிசனம். அவர் எடுத்துக் கொண்ட அவர்கள் தங்களுக்குள் அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார்கள். அவன் ஒரு இடத்தில் குழியும்போது அவள் அதற்குள் நிரம்புகிறாள் என்பதாக வருகிற பொருத்தம். அவன் ஒரு கந்தர்வன். தண்டனையாக பூமிக்கு வந்தவன். அவள் அவனை அறியாமல் மனதினால் பற்றவே, அவன் அவளை ஆக்ரமிக்கிறான். அவளை மறக்க செய்து கலவி கொண்டு அவளது மயக்கத்திலே அவன் நழுவிச் சென்றிருக்க வேண்டும். செல்லவில்லை. சொர்கத்தின் அடிமைத்தனத்தை வெறுத்து பூமி பந்தத்தில் பெருமை காண்கிற அவன், யாருமற்றவனாக இருந்து சலித்த அவன் அவளுக்குள் இருந்த நிழலில் பெரும் நிறைவை அடைந்து விட்டான். அவளே கூட எப்போதிருந்தோ அவனை அறிந்தவள் போல குழந்தமையில் களிப்பது பார்க்கலாம். அவர்கள் அப்படித்தான் தமக்குள் பிணைந்து விடுகிறார்கள். படத்தின் கிளைமாக்சுக்கு நியாயம் சேர்க்கிறார்கள். உனக்கு அங்கே கிடைக்கப் போகிற தண்டனைகளை கற்பனை செய்து கொண்டு நான் எனது வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ள விரும்பவில்லை, கிளம்பி செல்லு என்கிறாள் அவள். என்னுடன் இணைந்து அனுபவித்து முடித்து விட்டு என்னை மறந்து செல்லு என்பதையும் தான். அவள் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு அனுபவத்துடன் இங்கே வாழ்வைத் தொடரலாம். அவன் அவளைப் பற்றி நினைக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த தெய்வ மனிதக் கதை, அதில் இருக்கக் கூடிய விநோதங்களை சொல்ல பத்மராஜன் இக்கதையை எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் எனக்குப் பிடித்திருந்தது.

கந்தர்வனின் கதை முழுவதும், நிகழ்வுகள் முழுவதும் வெறும் டேட்டாக்களாக சொல்லி முடிக்கப்பட்டு விடுகின்றன.

படத்தின் இறுதிக் காட்சிகளுக்கும் அவ்வளவு தான் மதிப்பு.

குறைந்தபட்ஷம் எழுபது சதவீதம், நாம் அந்தக் காதலர்களை மட்டுமே சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கந்தர்வனுக்கு யாருமில்லை. நான் பார்ப்பது அவனை மட்டும்தான். ஆனால் நாயகியான பாமாவிற்கு பாட்டி இருக்கிறாள். அப்பா, அம்மா இருக்கிறார்கள். தங்கை இருக்கிறாள். எல்லோரும் கதையோடு இருக்கிறார்கள். பாட்டி தான் பாமாவை வளர்த்தவள். அவளுக்குள் பழமை நுழையக் காரணமாக இருக்கிறவள். ஒரு சிறிய தருணம் வந்து அந்தப் பாட்டி சோர்ந்து போனவளாக இருந்திருக்கவே முடியாது. அப்படி ஒரு ஆளுமையான படைப்பு. பாமாவின் முறைப்பையன் அவளோடு கடைதிறப்பு விழாவிற்கு வர சொல்லி பேசும்போதுபாமா தலையாட்டிவிட்டு நகர ,  பாட்டி அந்த முறைப்பையனிடம் பின்னால் தொடர்ந்து சென்று பேசு என்று தள்ளி விடுகிறாள். இந்தக் காலத்து பையன்களுக்கு உசிரே இல்லை என்று சொல்லுகிறாள். பாமா சந்தேகமான முறையில் நடமாடும்போது முறைப்பையனை கட்டி வைத்து விடுங்கள் என்று எச்சரிக்கிறாள். இல்லையென்றால் ஏதாவது அந்நிய சாதிப் பையன் இவ்வீட்டுக்கு மருமகனாக வந்து அவர்கள் இந்த வீட்டு படுக்கையறையில் அந்தி உறங்குவதை நீங்கள் எல்லாம் பார்க்க நேரிடும் என்கிறாள். சொல்லப் போனால் யாரும் பாட்டியை ஏற்றுக்கொள்ளாதது போலிருந்தாலும் அவள் நினைக்கிறபடி தான் காரியங்கள் நடக்கும் என்பதை யோசித்தால் புரிந்து விடும். சாதிப் பெருமை பலவேறு மட்டங்களில் நிலவுகிற அந்த வீட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான் கந்தர்வன். அவனது சாதி அவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதை பத்மராஜன் தன்னுடைய பாணியில் சொல்லத் தவறவில்லை.

Old Malayalam Movie Scenes - OLD MALAYALAM MOVIE STILLS

இவர்கள் எல்லாம் இருக்கிற வீட்டில் உயிரை மற்றும் வாழ்க்கையை வளர்த்த பாமாவிற்கு கந்தர்வன் அவன் வேறு உலகைச் சேர்ந்தவன் என்பது ஒரு விஷயமே கிடையாது.

அவள் அவனைக் கண்டடையும் முதல் கணமே முத்தத்தில் இருந்து மீண்ட பிறகுதான்.  கண்கள் கிறங்க அவனை அவள் காணுகிறாள். அவனது உடம்பு எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்யப்பட்டு, எழுதப்பட்டு கந்தர்வன் தேர்வு நடந்திருக்க வேண்டும். படம் நெடுக நீளுகிற காதல் காட்சிகளில் காட்டப்படாத பாலுணர்வு நமக்கு கான்ஷியசாக இருப்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், அது பத்மராஜன் செய்திருக்கிற மேஜிக். உதாரணமாக பாமாவிற்கு அவளுடைய பாட்டி இடுப்பில் தங்க ஒட்டியாணம் அணிவிக்கிற காட்சியை சொல்லலாம். கந்தர்வன் வரப்போகிற நாள் அது, இன்றொரு இரவு அணிந்து கொண்டு நாளைத் திருப்பித் தந்து விடுகிறேன் என்று பாமா கொஞ்சுகையில் நாம் அந்த இரவைக் கொஞ்சமேனும் கற்பனை செய்யாமல் இருக்க முடியாது. உண்மை, நாம் விறுவிறுப்படைய வேண்டுமென்று அவருடைய திரைக்கதை விரும்புகிறது. அதற்கு கதையில் அவசியம் இருக்கிறது. அதற்காக நடிகைகளின் கிளிவேஜ்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை.

இது அவருடைய கடைசி படம்.

திரைக்கதைகளைப் பற்றின கடைசிக் கட்டுரையும் இதுதான்.

அடுத்த வாரம் அவர் இயக்கிய மொத்த படங்களைப் பற்றின சற்றே சுருக்கமான குறிப்புகளுடன் இத்தொடர் நிறைவடைகிறது.

பொதுவாக நான் எழுதி முடித்து விட்ட இந்தத் தொடரைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும் என்றால், ஒரு பத்தியில் கூட திரைக்கதை என்றால் என்ன என்கிற வகுப்பறை நடத்த முயலவில்லை. தான் வைத்திருக்கிற மெடீரியலில் தன்னுடைய மனசைப் புகுத்தி பத்மராஜன் அதை எப்படி ஆர்டர் செய்திருக்கிறார் என்று பார்க்க சொல்லியிருக்கிறேன், அதாவது படத்தையே பார்க்க சொல்லியிருக்கிறேன். மற்றொருவர் நீங்கள் ஏறப்போகிற மலையின் அழகை அதன் ரகசியங்களை விவரித்துக் கொண்டிருப்பதாவது ! இந்தக் கட்டுரைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் பார்க்கப் போகிற படத்தின் பிரம்மாண்டத்தை அனுபவித்துக் கொண்டே வந்து பரவசம் அடைவதற்கு உதவலாம். எனது உத்தேசம் அதைத் தாண்டி எதுவுமில்லை. கதையை எப்படியும் சொல்லலாம் என்கிற சௌகர்யத்தை உண்டாக்கிக் கொண்டு நான் அதை பல இடங்களில் முழுசாகக் கூட சொல்லியிருக்கிறேன். பழுதில்லை, அது அதன் திரைக்கதை லாவகங்களை உணர்த்த செய்த ட்ரிக் மட்டுமே. நான் சொன்ன ஆர்டரில் பத்மராஜன் செய்யவில்லை என்பதை உணர ஆரம்பிக்கிற சந்தோஷத்தை கற்பனை செய்தேன். முழுமையாக சொல்லக் கூடுவது, ஒரு படைப்பு என்பது நமக்குள் புரிகிற எதோ ஒன்று. அப்படி ஒரு கப்பை உடைத்து உங்களுடைய புரிகிற தன்மையுடன் நான் விளையாடிப் பார்க்க எனக்குத் தெரிந்த வரையில் முயலுவேன், மற்றபடி முதலில் மூன்று வெங்காயமும் இரண்டு தக்காளியும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று சமையலுக்கு இறக்க முடியாது. காமெடி நாலு தேக்கரண்டி, ஒரு கிண்ணம் எமோஷன் என்பதெல்லாம் திரைக்கதை என்பதை இனிமேலும் புரிந்து கொள்ள முடியாத ஆசாமிகளின் லாஜிக் ஷோக்கள். அதற்கு எல்லாம் நான் எனக்கு இம்மியளவு இடம் கொடுக்க மாட்டேன். 

Old Malayalam Movie Scenes - OLD MALAYALAM MOVIE STILLS

பத்மராஜனைப் பற்றி எழுதுவது ஒரு பெரிய கடமை போல பட்டுக் கொள்ள ஆரம்பித்து வெகு காலமாகி விட்டது. அதை இனிமேல் ஒரு பெரிய ஜனக்கூட்டத்துக்கு நடுவே நின்று முழங்க வேண்டியதுமில்லை. இது அதன் நோக்கத்தை அடைந்தே தீரும். காரணம் நல்ல சினிமாவைத் தேடுபவர்கள் உருவாகி வந்து கொண்டிருக்கிறார்கள். அலட்டல் இல்லாமல் பத்மராஜ்னை புரிந்து கொள்ளுவார்கள்.அவரைப் பற்றி சொல்லி பீதி கிளப்பி தன்னை மேதையாக காட்டிக் கொள்ள முந்தியவர்களை ஒதுக்கவும் செய்வார்கள். மனிதன் எங்கோ பறக்க வேண்டியவன் என்கிற இயற்கையான அறிவிற்கு முன்னால், அவன் தன்னை புரிந்து கொள்ள நல்ல படைப்புகள் கரம் நீட்டும்.

கண்டிப்பாக அவர் நமக்கு உதவியாக இருப்பார்.  

****   

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-12/

தொடர் 13ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-13/

தொடர் 14ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-14/

தொடர் 15ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-15/

தொடர் 16ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-16/

தொடர் 17ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-17/

தொடர் 18ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-18/

தொடர் 19ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-19/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *