பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை | தொ.மு.சி.ரகுநாதன் - பஞ்சும் பசியும்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை – எழுத்தாளர் ம.மணிமாறன்

வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 3

“வாழப் பிறந்தோம். சாக மாட்டோம்!”
“வேலை கொடு அல்லது சோறு கொடு!”

மதுரை நகரின் பிரதான வீதிகளில் இந்த முழக்கங்கள் விம்மியெழுந்தன. சூறைக்காற்றைப் போல் கோஷித்து கொண்டு அலை புரண்டு வரும் காட்டாற்று வெள்ளம் போல் முன்னேறிக் கொண்டு பட்டினிப் பட்டாளத்தார் மதுரை நகர் வலம் வந்தனர். அந்தப் போர்ப்படையினரின் கோஷம், நீண்டு வளர்ந்த மதுரை நகரத்தின் கட்டிடடங்களுக்குள்ளும், கட்டிடடங்களுக்குள் சுகவாசம் செய்யும் மனிதர்களின் உள்ளத்திற்குள்ளும் புகுந்து மோதியது. ஆயிரமாயிரம் மக்கள் நகர வீதிகளின் இருமருங்கிலும் கூடிநின்று, பட்டினிப் பட்டாளத்தை வரவேற்றார்கள். பட்டினிப் பட்டாளத்தாரின் கோஷங்களை தாமும் கோஷித்தார்கள். பலர் அந்த பட்டாள அணிகளோடு கலந்து கொண்டார்கள்…..

தமிழின் முற்போக்கு இலக்கியத்தின் முகமாக இன்றுவரையிலும் இருந்து வருகிற பஞ்சும் பசியும் நாவலில் வருகிற உணர்ச்சி மிகு காட்சியிது. தொ.மு.சி ரகுநாதனின் நாவலான பஞ்சும் பசியும் நாவல் தமிழில் எழுதப்பட்ட முதல் சோசலிச யதார்த்தவாத நாவல் என்று மதிப்பிடப்படுகிறது. 1951 ஆம் ஆண்டு வெளியான பஞ்சும் பசியும் . வெளியான நாட்களில் இருந்து இன்றுவரையிலும் தமிழ் நாவல் இலக்கியப் பரப்பில் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வரும் நாவல்.ஒரு கதையை நாவலாக மாற்றித் தருவது களமும் காலமும் என்பதே ஆய்வாளர்களின் முடிபு. பஞ்சும் பசியும் நாவலின் புலம் தாமிரபரணி சுழித்தோடும் ஆற்றோரத்து சிற்றூரான அம்பா சமுத்திரமும், புனைவுப் பெரு நகரமான மதுரையும். அம்பையின் எளிய கைத்தறி நெசவுத் தொழிலாளிகளின் ஏற்ற இறக்கங்களே நாவல் புரளும் களம். நிலபுரத்துவ மனமும் முதாளித்துவ குருரமும் கொண்ட மனிதர்களாலும் அவர்களுக்கு அனுசரனையாக இருக்கும் அரசாங்கத்தினாலும் தொழிலாளர்கள் வாழ்வினில் நிகழ்ந்த மாற்றங்களையே நாவலுக்குள் எழுந்தாக்கியிருக்கிறார் தொ.மு.சி.ரகுநாதன்.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை | தொ.மு.சி.ரகுநாதன் - பஞ்சும் பசியும்

அது மனிதர்கள் எப்போதும் வாழ்கை தங்களுக்கு நடத்தும் பாடங்களில் இருந்தே எல்லாவற்றையும் கற்கிறார்கள். கற்று முன்னேறுகிறார்கள் என்பதை வாசகனுக்கு அறியத் தருகிறது. நாவலின் கதை அம்பையில் துவங்கி அம்பையிலேயே நிறைவுபெறுகிறது. நாவலின் கதாபாத்திரங்களின் சட்டையைப் பிடித்துக்கொண்டு நாம் அருகாமை நகரமான நெல்லைக்குப் போகிறோம். தூரத்து மலையை மிரட்டிக் கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்நிலையை அறிகிறோம். வெள்ளைப் பஞ்சாலை முதலாளி தமிழகமெங்கும் கட்டியெழுப்பிய ஹார்வி மில் உருவாக்கத்தையும், அதற்குள் தங்களை அமைப்பாகத் திரட்டி கூலி பேர உரிமைக்காக சங்கம் கட்டிய தொழிலாளி வர்க்க அரசியலின் சுவடையும் காண்கிறோம். வாழ்க்கை தந்த உள நெருக்கடியிலிருந்து தப்பி வெளியேறிய மணி எனும் மனிதன் நம்மை நெல்லையிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து மதுரைக்கும் அழைத்துப் போகிறான்.அவனையும், அவனோடு அம்பையைச் சேர்ந்த சக தோழனையும் வாழ்க்கைதான் மறுபடியும் அம்பைக்கே அழைத்து வருகிறது. மணி எனும் கதாபாத்திர வார்ப்பே பஞ்சும் பசியை உலகத் தரத்திலானதாக உருமாற்றுகிறது.

யார் இந்த மணி?. ஐம்பதுகளில் விட்டேத்தியாக அலைந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்களின் வகை மாதிரி அவன்.. ஆகஸ்ட் சுதந்திரம் நம் தேசத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கவில்லை. வெள்ளைக்காரர்களின் இடத்தில் பெரும் கொள்ளைக்காரர்களாக முன்னாள் ராவ் பகதூர்களான இந்நாளைய உள்ளூர் முதலாளிகள் அமர்ந்து விட்டனர் எனும் விவாதத்தை சில மாணவர்கள் கல்லூரி வளாகங்களில் நடந்து கொண்டிருந்த நேரமது. நாவலுக்குள் வருகிற சங்கர் கல்லூரிக்குள்ளும் கல்லூரிக்கு வெளியேயும் விவாதிக்கப்பட்ட சோசலிச கருத்தியலின் மீது ஈர்ப்பு கொண்டவனாக இருக்கிறார். மணியோடு உலக நடப்புகளைப் பேசுகிறவனாகவும் இருக்கிறான். சங்கரும் கமலாவும் மணியின் கல்லூரித் தோழர்கள்.

இவற்றையெல்லாம் சட்டை செய்யவில்லை அவன். தன்னைப் பற்றியும் தன் பெரும் விருப்பமான காதல் பற்றியும் பெரும் கனவினில் திளைத்த்துக் கொண்டிருப்பவன் மணி. கமலாவின் அண்ணன் என்பதற்காகவும் ஒரே ஊர்க்கரர்கள் என்பதாலேயும். மணி அவர்களுடன் தொடர்பிலிருக்கிறான். அம்பையின் கைநெசவுத் தொழிலாளிகளின் பெரும் நம்பிக்கைக்குரிய சிறு முதலாளியான கைலாச முதலியாரின் பையன் மணி. சங்கரும் கமலாவும் பெரும் முதலாளியான தானுலிங்க முதலியாரின் பிள்ளைகள். உள்ளுர் முதலாளி, அருகாமை மலைத்தொடரின் தேயிலைத் தோட்ட முதலாளி, அரசு அதிகாரிகளோடும் அரசாங்த்தோடும் கைகோர்த்து பணத்தை பணமாக மாற்றும் வித்தை கற்றவர். அப்போதைய காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களின் வகைமாதிரியவர்.

தொழிற்சூழலும், பெரும் முதலாளிகளின் வர்த்தகச்சூதும், ஹார்வி போன்ற அந்நிய முதலாளிகளின் தந்திரமும் கைலாச முதலியாரை பலி எடுக்கிறது. கைலாச முதலியாரின் தற்கொலைக்கு இவை மட்டும் காரணமில்லை. அரசாங்கம் பின்பற்றுகிற ஜவுளிக்கொள்கையும்தான் காரணம் என்பதை நாவலின் கடைசிப் பகுதியில் அறிகிறான் மணி.. அதற்கான அலைச்சலில் வாழ்கை அவனுக்கு இந்தப் புரிதலைக் கற்றுத் தருகிறது. கல்லூரி வளாகத்தில் பொறுப்பற்று திரிந்தவன். தந்தையின் மரணத்தை எதிர்கொள்ள முடியாமல் காடோ பரதேசமோ என அலைகிறான். அப்போது அவனுக்குள் பசி ஏற்படுத்திய உளவியல் மாற்றமே அவனை கைத்தறி நெசவாளிகளின் நம்பிக்கைக்குரிய செயல் வீரனாக மாற்றுகிறது. அரசர்களுக்குத்தான் ஞானம் ஏதாவது வனாந்தரத்தின் மரத்தடிகளில் கிடைக்கும். மணி தன்னை உணர்ந்து கொண்ட இடம் ஓட்டலுக்கு வெளியே எச்சில் இலைகள் போட வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டி.

தொட்டிக்கு அருகே காத்திருக்கிறார்கள் பசித்த வயிறோடு நாயும் மனிதனும். இலையில் மீந்த உணவினை பங்கிட்டுக் கொள்ள நாயுடன் மோதுகிறான் மனிதன். இந்தக் காட்சி ஏற்படுத்திய துக்கத்தில் இருந்து வெளியேற முடியாமல் தடுமாறுகிறான் மணி. அந்த நாட்களில் எச்சில் இலை எடுக்கும் ஓட்டல் பிச்சைக்காரர்களுக்கும் சங்கம் இருந்திருக்கிறது. இந்தப் புள்ளியில்தான் பசித்துக்கிடக்கும் மனிதன் வாழ்வதற்காக மட்டும் எந்த எல்லை வரையிலும் செல்வான். பசி ஒருபோதும் மான அவமானம் பார்ப்பதில்லை. பஞ்சம் தலைவிரித்தாடிய நாட்களில் பலரும் ஊரை விட்டுப் பஞ்சம் பிழைக்க பயணித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். தன் தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. அவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம். இந்த முடிவை நோக்கி அவனை நகர்த்தியது பட்டினிப் பட்டாளமாக திரண்டு ஊர்வலம் போன கைத்தறி நெசவாளிகளின் பெரும் பயணம்தான்.

வரலாற்றுத் தகவல்களை வைத்துக்கொண்டு அதனை நாவலாக உருமாற்றுகிற வித்தை கைவரப்பெற்றவர் எழுத்த்தாளர் தொ.மு.சி. அதற்கான அர்த்தமுள்ள சாட்சியமே பஞ்சும் பசியும் நாவல். கைத்தறி நெசவாளர்களிகள் தங்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்திட்ட குரூரத்தை கேள்வி கேட்க தங்களை பட்டினிப் பட்டாளம் என அறிவித்துக்கொண்டு அரசாங்கம் கொழு வீற்றிருக்கும் கோட்டை நோக்கி கால்நடையாகப் போகிறார்கள். வழி நெடுக சிறு அமைப்புகளாக தங்களைத் திரட்டி சங்கம் கண்டிருந்த தொழிலாளி வர்க்கம் அவர்களை வரவேற்று வழியனுப்பி வைக்கிறது. இதுதான் தொ.மு.சி கண்ட வரலாற்றுச் சம்பவம்.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை | தொ.மு.சி.ரகுநாதன் - பஞ்சும் பசியும்

நாவலுக்குள் பட்டினிப் பட்டாளம் எங்கிருந்து கிளம்பி வருகிறது என்கிற தகவலையும் வாசகனுக்கு அறியத் தருகிறார் எழுத்தாளர். அப்போது முகவை மாவட்டத்திற்குள்ளும் இப்போதைய விருதுநகர் மாவட்டத்திற்குள்ளும் இருக்கிற சீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர் போன்ற சிறுநகரங்களின் கைத்தறி நெசவாளிகளே தங்களுடைய வாழ்க்கையில் அரசின் ஜவுளிக்கொள்கை விளைவித்த குரூரத்தைக் கேள்வி கேட்க தங்களை பட்டினிப் பட்டாளமாக அறிவித்துக் கொண்டு கோட்டை நோக்கிப் போகிறார்கள். இதுதான் எழுத்தாளருக்கு கிடைத்த வரலாற்றுத் தகவல். இங்கிருந்தே தன்னுடைய பஞ்சும் பசியும் நாவலுக்கான இன்ஸ்பிரேசன் அவருக்கு உருவாகியிருக்கிறது. தகவல்களை, ஆவணங்களை அடுக்கித் தொடர்வது நிச்சயம் நாவலாகாது. அதனை கலையாக உருமாற்ற வேண்டும். அதனை எப்படி சாத்தியமாக்கியிருக்கிறார் எழுத்தாளர் என்பதனை அறிந்திட வாசகர்கள் நிச்சயமாக பஞ்சும் பசியும் நாவலை வாசிக்க வேண்டும்.

நாவலுக்கான காலம் எளிதில் கைவந்துவிடும். ஆனால் காலத்தின் கதையை எந்தக் களத்தில் இருந்து சொல்வது என்பது மிகவும் முக்கியம். எப்போதும் எழுத்தாளர்கள் தங்களுக்கு மிகவும் பரிட்சியமான நிலத்தையே நாவல் நிகழும் களமாக வரித்துக்கொள்வார்கள். அப்போதுதான் எழுத்தில் உண்மையும் அழகும் வெளிப்படும். தான் நன்றாக அறிந்திருந்த கைத்தறி நெசவாளிகளின் சிற்றூரான அம்பை என்றழைக்கப்படும் அம்பாசமுத்திரத்தை நாவலின் களமாக உருமாற்றிக் கொள்கிறார் எழுத்தாளர். அந்த நகரம் குறித்த காட்சி சித்திரங்களால் துவங்குகிறது நாவலின் முதல் பகுதி. “ அது தாலுக்கா கச்சேரியும் பஞ்சாயத்து போர்டு ஆபிசும் அடுத்தடுத்துள்ள இரண்டும் கெட்டான் நகரம்: அதாவது வளர்ச்சியுற்ற கிராமம். சர்க்கார் கச்சேரிகள், பஸ் போக்குவரத்து, ரயில் போன்ற நிலைமைகளால் வளர்ந்த சிறு நகரம் போல காட்சியளிக்கிறது. “இது எல்லோரும் தன்னுடைய நாவல் நிகழும் ஊரினை விவரிக்கும் முறைமைதான். இங்கு தொ.மு.சி. இத்தோடு நிறுத்தவில்லை. அடுத்தடுத்த பக்கங்களில் நாவலின் நிகழ்விடத்தை விளக்குவதற்காக பயண்படுத்தும் சொற்றொடர்கள் மற்றைய எழுத்தாளர்களிடம் இருந்து தொ.மு.சியை தனித்துக்காட்டுகிறது.

“ஒருபுறம் வர்க்க போதம் பெற்று,பற்பல போராட்டங்களை நிகழ்த்தி வெற்றி கண்ட ஹார்வி மில் தொழிலாளி வர்க்கம்; இன்னொருபுறம,அகழியில் விழுந்த முதலையைப் போல தன்னுள்ளே வாழ்ந்து கொண்டு என்றோ ஒருநாள் எதிர்பாராத அதிர்ஷ்டம் பொத்துக்கொண்டு வரத்தான் போகிறது என்ற அசட்டு நம்பிக்கையின் அஸ்திவாரத்திலேயே நாட்களைக் கடத்தும் நெல்லிக்காய் மூட்டை போன்ற ஊசலாட்ட மனப்பான்மை கொண்ட சிறு முதலாளிகள்: கைத்தறி நெசவாளிகள், சிப்பந்திகள் முதலியோர் கூட்டம் ஒருபுறம். யந்திர சாதனமும், மின்சார உற்பத்யும் நிறைந்த தொழிற்சாலைகள் மறுபுறம். இதுமட்டுமில்லை ஊர். நிலபிரபுத்துவச் சுரண்டல்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் பிற்போக்கு விவசாய சமூகம் மற்றொரு புறம் என தன்னுடைய நாவல் களத்தை அதுவரைக்கும் இல்லாத புதிய முறைமையில் விளக்குகிறார். நிலப்பிரபுத்துவ சீரழிவுக்கும்,முதலாளித்துவ வளர்ச்சிக்குமான சரித்திர கதியின் பிரசவ காலத்தை நெருங்கி கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவின் ஒரு பகுதியான அம்பா சமுத்திரம். இப்படி வரலாற்றுப் பொருள்முதல்வாத கருவிகளைக் கொண்டு நாவலின் களத்தை விவரித்ததால்தான் தொ.மு.சியின் பஞ்சும் பசியும் நாவலை முதல் சோசலிச யதார்த்தவாதநாவல் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

காலத்தை எழுதும் கலையே நாவல். நாவலுக்குள் காட்சிப்படும் காலம் துல்லியமாக தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான பத்து வருடங்கள். ஆகஸ்ட் சுதந்திரம் வந்த பிறகும் மக்கள் வாழ்க்கையில் நம்பிக்கைக்குரிய மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. வெள்ளைக்கார முதலாளிகளுக்காக இயங்கும் சர்க்காராகத்தான் நம்ம சர்க்காரும் இருந்தது எனும் அந்த நாட்களை நாவலுக்குள் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். யுத்த நாட்களில் கைத்தறித் தொழில்களுக்கு பெரும் கிராக்கி இருந்திருக்கிறது. உலக நாடுகள் எங்கும் கைத்தறித்துணிகளை ஏற்றுமதி செய்திருக்கின்றனர். இரண்டாவது உலக யுத்தத்தின் நிறைவில் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் விடுதலை பெற்றபோது அந்த விடுதலை அம்பாசமுத்திரத்திற்கும் வந்து சேர்கிறது. விடுதலைக்கு முன்பாக உருவான சிறு தொழில் முனைவோர், தொழிலாளிகள் தங்கள் கண் எதிரே தொழில் நசிவதை கண்கூடாக பார்க்கின்றனர். நாவல் விவரிக்கும் காலம் துல்லியமாக இதுதான். அதற்கான காரணத்தை அப்போதிருந்த மனிதர்களின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைச் சொல்வதன் வழியே தொ.மு.சி காட்டுகிற சித்திரம் மார்க்ஸிய அழகியல் வழி நின்று படைக்கப்பட்ட படைப்பாக பஞ்சும் பசியும் நாவலை ஆக்கியிருக்கிறது.

பெரு முதலாளியாக உருவாகி, அரசாங்கத்துடன் அனுசரித்துப் போகிற. தானுலிங்க முதலியார் எனும் கதாபாத்திரம் கருணையோ இரக்கமோ அற்றவர்களாக வர்த்தகச்சூது எப்படி ஒரு மனிதனை மாற்றிவிடும் என்பதற்கான சாட்சி. அவரும் அவரது குடும்பமும் பரம்பரை பணக்காரர்கள் அல்ல. காங்கிரஸ் சர்க்கார் அதிகாரத்திற்கு வந்த பிறகும் வெள்ளைக்காரன் அளித்த ராவ்பகதூர் பட்டத்தை கைவிட முடியாமல் தடுமாறிய அந்நாளைய இந்திய முதலாளிகளின் பாத்திர வார்ப்பு அவர். இந்த நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரம் கைலாச முதலியார். நடுத்தர வர்க்க முதலாளியான இவர் தன்னுடைய இத்தனை வளர்ச்சிக்கும் காரணமாக கடவுள் முருகனையே காரணமாக காண்கிறார். தொழிலும் தொழில் சார்ந்த வாழ்வும் தலைகுப்புற கவிழ்கிற போதும் அவர் முருகனையே சரணடைகிறார். பக்தி உண்மையான காரணங்களை கண்டறிந்து தவறுகளை சரி செய்வதற்குப் பதிலாக தற்காலிகமான ஆறுதலையும், இளைப்பாறுதலையும் தரும் ஒரு கருவி என்பதையும்கூட நாவலில் கைலாச முதலியாரின் வழி வாசகனுக்குள் கடத்துகிறார் எழுத்தாளர்.

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை | தொ.மு.சி.ரகுநாதன் - பஞ்சும் பசியும்

நாவலுக்குள் நாமக்கல் ஏகாம்பர முதலியார் எனும் கதாபாத்திரம் பத்திரிகையின் ஒற்றைவரிச் செய்தியாக மட்டும் வருகிறது. முகமற்ற அந்த கதாபாத்திரத்திற்கு நிகழ்ந்த துயரமே கைலாச முதலியை தற்கொலை நோக்கித்தள்ளுகிறது. நாவலேகூட பெட்டிக்கடையின் செய்தி பத்திரிக்கையின் மூலம் உலக நிகழ்வினை அறிந்து கொள்ளும் எளிய மனிதர்களின் பெருந்திரளால்தான் கட்டித்தரப்பட்டிருக்கிறது. நாமக்கல் ஏகாம்பர முதலியார் எனும் கைத்தறி நெசவாளி பதினைந்து நாட்களுக்கு மேலாக பட்டினி கிடந்ததால் பசித்த வயிறோடு காலமானார். மனித மனம் மிகவும் குரூரமானது. தப்பித்துக்கொள்ளும் வழிக்காக ஏங்கித்தவிக்கும் காடௌசி எல்லைக்குள்சிக்கிடாது நழுவிச்செல்லும் கருப்பொருட்களின் தொகுதி அது.அதன்பிறகு அவரும் அவரது மனமும் எதிர்கொளௌளும் செய்திகள் யாவுமே பசியைத் துரத்திட இயலாத மனிதக்கூட்டத்தின் மரணத்தினையே கொண்டுவந்து சேர்க்கிறது.

“ அன்றொரு நாளள் ராசிபுரத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளியின் மனைவி பசிக்கொடுமை தாங்காது தன் இரண்டு குழந்தைகளையும் கிணத்துல போட்டுவிட்டு தானும் விழுந்து உயிரை மாய்த்துக்கௌகிறாள். இருபத்தைதைந்தே வயதான கைத்தறி நெசவாளி பசியைத்துரத்திட வழிவகை அற்றுப் போனதால் சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்கிறான். இப்படி சூழலின் குரூரமே அவரை தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது. அவர் எல்லாவற்றிற்கும் விடைதேடி திருச்செந்தூர் முருகனிடம் சரணடைபவர். கடவுளிடம் மன ஆறுதல் கிடைக்கலாம். பிரச்சனைகளைத் தீர்க்கும் மந்திரங்கள் எதுவும் அவர் கைவசம் இல்லை என்பதையும் நாவல் காட்சி காட்சியாக விவரிக்கிறது. ஒற்றைநாள் வித்தையில்லை உலகியல் மாற்றங்கள்.

தற்கொலை நிகழ்த்திய கொடூரத்திலிருந்து தப்பிக்கும் யுக்தியையும் காலச்சூழலே அவர்களுக்கு காட்டித்தருகிறது. நாவலின் துவக்கத்தில் கூலி உயர்வுக்காக முதலாளிகளின் வீடுதேடிப் போய் பேச்சு வார்த்தை நடத்திய கூட்டம் நாவல் நிறைவடையும்போது , இனி பொறுப்பதில்லை என தங்களை ஒன்றாக்கி வலிமை பெறுகிறார்கள். சங்கம் அமைக்கிறார்கள். சங்கத்தின் கூட்டங்களை நடத்திட அப்பாவின் தற்கொலையீன் துயரவலியிலிருந்து மீள முடியாது தப்பி வெளியேறிய மணி கைத்தறி நெசவுத் தொழிலாளிகளின் சங்கத் தலைவனாக ஊருக்குள் வருகிறான். அவன் மட்டும் வரவில்லை. தேயிலைக்காட்டின் தூருக்குள் உரமாகிப் போன தொழிலாளர்களின் ரத்தச்சகதியில் இருந்து வெளியேறிப்போன வீரையாவும் வருகிறான். இருவரும் அம்பையின் தொழிலாளிகளையும் விவசாயத் தோழர்களையும் அணி திரட்டுகிறார்கள். அம்பையின் வெளிகளில் பொங்கிப் பிரவகிக்கும் போர் முழக்கத்தோடு நாவலை நிறைவு செய்கிறார். தொ.மு.சி..

“வாழப் பிறந்தோம் நாங்கள்
சாக மாட்டோம்.
வேலை கொடு அல்லது சோறு கொடு…”

( எழுத்தாளரும், ஆய்வாளரும், இடதுசாரி இலக்கியத்தின் தனித்த முகமுமான தோழர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்களின் ஒப்பில்லா படைப்பான பஞ்சும் பசியும் நாவலுக்கு எழுதப்பட்ட வாச்சியம். )

தமிழின் முதல் தலித் நாவல் என மதிப்பிடப்படுகிற தோழர் டி.செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் நாவலைக் குறித்த வாச்சியத்திற்காக அடுத்த வாரம் சனிக்கிழமை வரையிலும் காத்திருங்கள் தோழமைகளே….

கட்டுரையாளர்:

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) - 2 | சர்வதேசத் தாயான நீலவ்னா (International Mother Nilovna) | கார்க்கியின் தாய்

ம.மணிமாறன்

முந்தைய தொடரை வாசிக்க: பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2 : சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன்

 

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *