தோழர்கள் கற்க வேண்டிய எட்டு புத்தகங்கள்-ச.வீரமணி
அக்டோபர் புரட்சி குறித்து தெரிந்துகொள்வது இன்றைக்கும் அவசியமாகும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்:ச.வீரமணி)
சீத்தாராம் யெச்சூரி
(தமிழில்:ச.வீரமணி)
இந்த ஆண்டும் இஎம்எஸ் நினைவு கருத்தரங்கைத் துவக்கி வைத்திட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 19 ஆண்டுகளாக, எவ்விதத் தொய்வுமின்றி தொடர்ந்து ஒவ்வோராண்டும் இக்கருத்தரங்கை நடத்தி வருவதற்காக இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு முதற்கண் என் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2017ஆம் ஆண்டு, மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்ற நூற்றாண்டாக அனுசரித்து வருகிறோம். இப்புரட்சியானது 20ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றில் ஆழமான செல்வாக்கினை ஏற்படுத்திய ஒன்றாகும், மனிதகுல விடுதலை மற்றும் முன்னேற்றத்தில் பாய்ச்சல் வேக மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். மனிதனை மனிதன்சுரண்டுவதை ஒழித்துக்கட்டி ஒரு சமூக அமைப்பை நிறுவுவதை நோக்கி மனிதகுல நாகரிகத்தை முன்னோக்கி உந்தித்தள்ளிய ஒன்றாகும். மார்க்சியம் என்பது ஓர் ஆக்கப்பூர்வமான அறிவியல் என்பதை சந்தேகமின்றி மெய்ப்பித்த ஒரு சகாப்த நிகழ்வாகும். நவம்பர் புரட்சி என்றென்றைக்கும் பொருந்தக்கூடியதே என்பது இதில்தான் அடங்கி இருக்கிறது.
காரல் மார்க்ஸ் மறைவிற்குப்பின் 1883இல் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஜெர்மன் பதிப்புக்கு பிரடெரிக் ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரையில் அவர் குறிப்பிட்டதாவது: ‘‘அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன. ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து போனகாலம் தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளிவர்க்கம்) சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப்போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாய் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.’’ (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.)
மிகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால், நவம்பர் புரட்சியின் சாதனை என்பது இதுதான்: ‘…சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்து விடுவிக்க வேண்டும், …’ மார்க்சியத்தின் இத்தகைய தீர்க்கமான முடிவுகளை எதார்த்தமற்றது என்று கண்டித்து, சர்வதேச பிற்போக்குவாதிகள் தாக்குதல் தொடுப்பது இயற்கையேயாகும். மார்க்சிசம் என்பது அறிவியல் உண்மையின் அடிப்படையிலான ஓர் ஆக்கபூர்வ அறிவியல் என்பதை ருஷ்யப்புரட்சியும், அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியன் அமைந்ததும் மிகவும் அழுத்தமாக உறுதிசெய்தது.
நவம்பர் புரட்சியின் முக்கியத்துவம் எண்ணற்றவைகளாகும். சுரண்டலற்ற ஒரு சமூகஅமைப்பை எதார்த்தமாக்கிய அதே சமயத்தில், உழைக்கும் மக்களின் படைப்பாற்றலையும் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது. சோசலிசத்தின் மூலமாக எண்ணற்ற சாதனைகளை மிக வேகமாக அடைய முடிந்தது. அதற்கு முன் மிகவும் பிற்போக்குப் பொருளாதார நாடாக இருந்ததை , ஒரு பலமிக்க பொருளாதார மற்றும் ராணுவ வல்லமை கொண்ட நாடாக, ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை எதிர்க்கும் திறன் கொண்ட நாடாக மாற்றி, சோசலிச அமைப்புமுறையின் மேன்மையை உறுதி செய்தது. சோவியத் யூனியனில் சோசலிசம் கட்டி எழுப்பப்பட்டதானது மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வீரகாவியமாகும். 20ஆம் நூற்றாண்டின் வரலாறு, நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து சோசலிசம் நிறுவப்பட்டதால் பிரதானமான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பாசிசத்தை முறியடிப்பதில் சோசலிச சோவியத் யூனியன் குடியரசு மேற்கொண்ட தீர்மானகரமான பங்கும், அதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல சோசலிச நாடுகளாக உருவானதும் உலக வளர்ச்சிப்போக்கில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் மீதான வெற்றிக்கு சோவியத் செஞ்சேனை ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பே பிரதான காரணமாகும். இது, காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளில் அதற்கு எதிராகப் போராடி வந்த இயக்கங்களுக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்து, பின்னர் அந்நாடுகள் காலனியாதிக்க சுரண்டலிலிருந்து விடுதலை அடைந்ததைப் பார்த்தோம்.
சீனப் புரட்சியின் வரலாறு படைத்திட்ட வெற்றி, வீரம் செறிந்த வியட்நாம் மக்கள் போராட்டம், கொரிய மக்கள் போராட்டம், கியூபா புரட்சி வெற்றிவாகை சூடியது ஆகியவை உலக வளர்ச்சிப்போக்கின் மீது மகத்தான செல்வாக்கைச் செலுத்தின.சோசலிச நாடுகளின் சாதனைகள் அளவிடற்கரியனவாக இருந்தன. வறுமை மற்றும் எழுத்தறிவின்மை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியது ஆகியவை உலகம் முழுதும் போராடி வந்த உழைக்கும் மக்களுக்கு வலுவான முறையில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.
முதலாளித்துவத்துக்கு பெரும் சவால்
சோசலிசத்தின் சாதனைகள் உலக முதலாளித்துவத்திற்குப் பெரும் சவால்களாக அமைந்தன. எனவே அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சோசலிச நாடுகள் கடைப்பிடித்த மக்கள் நலத் திட்டங்களில் சிலவற்றைக் கடைப்பிடித்தன. உழைக்கும் மக்களுக்கு முன்னெப்போதும் அளிக்க மறுத்திட்ட உரிமைகளைத் தற்போது அளிக்க முன்வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதலாளித்துவ நாடுகள் நலத்திட்ட அரசுகளாக அமைந்து பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தியதற்கு, சோவியத் யூனியனில் சோசலிசத்தின் சாதனைகளால் உத்வேகம் அடைந்த தொழிலாளி வர்க்கம் இந்நாடுகளில் நடத்திய போராட்டங்களின் விளைவுகளேயாகும். இன்றைய தினம் உலகின் பல நாடுகளில் ஜனநாயக உரிமைகளும், குடிமை உரிமைகளும் மனிதகுல நாகரிகத்தின் பிரிக்கமுடியாத பகுதிகளாக மாறி இருக்கின்றன எனில் அதற்கு சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்கள்தான் காரணமே தவிர, முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருணை அல்ல.
இத்தகைய புரட்சிகர மாற்றங்கள் தரமான விதத்தில் மனிதகுலத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்றன. நவீன நாகரிக வாழ்க்கையில் அழிக்கமுடியாத வகையில் பங்களிப்பினைச் செய்தன. இவை, பண்பாடு, அறிவியல், அழகியல் என பல்வேறு துறைகளிலும் பிரதிபலித்தன. திரைப்படத்துறையின் இலக்கணத்தில் ஐசன்ஸ்டீன் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்த அதே சமயத்தில், ஸ்புட்னிக் நவீன அறிவியலின் எல்லையை விண்ணில் உள்ள கோள்களை ஆராயும் அளவிற்கு விரிவுபடுத்தியது.
அக்டோபர் புரட்சியின் பாரம்பர்ய மாண்புகள்
அக்டோபர் புரட்சியின் விளைவாகத் தோன்றிய சோவியத் யூனியன் இன்றில்லை. அது சிதைந்து சிதறுண்டு போனதற்கான காரணங்களைத் தனியே விவாதித்திருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1992இல் 14ஆவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானத்தில் ஆய்வு செய்திருக்கிறோம். சோவியத் யூனியன் இன்றில்லை என்ற போதிலும், அக்டோபர் புரட்சியின் புரட்சிகர பாரம்பர்யத்தின் முக்கியமான நான்கு அம்சங்கள், மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்தை நோக்கி செல்வதற்கு இடையிலான இடைப்பட்ட மாறுதல் காலத்தில் அச்சாணியாக விளங்கக்கூடிய நான்கு அம்சங்களை அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும்.
(1) தோழர் லெனின் அவர் காலத்திய உலக நிலைமைகளுடன் முதலாளித்துவ வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் மார்க்சிய சிந்தனையை வளர்த்தெடுக்கையில், மூலதனக் குவியல் ஏகபோக மூலதனத்தினை உருவாக்கும் என்று மார்க்ஸ் கூறியதானது, அடுத்து ஏகாதிபத்தியக் கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றார். மேலும் தோழர் லெனின் ஏகாதிபத்தியத்தின் சங்கிலியின் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து அதனைத் தகர்க்கும் விதத்தில் மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகளில் முதல் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் அந்தப் பலவீனமான கண்ணியைக் கண்டறிந்து, தகர்த்திட்டார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தத்தை தங்கள் விடுதலைக்கான உள்நாட்டு யுத்தமாக மாற்றிட ருஷ்யத் தொழிலாளர் வர்க்கத்திற்கு வாய்ப்பினை அளித்தது. எனவே, இன்றைய சூழ்நிலையில், எந்தவொரு நாடும் ஏகாதிபத்தியத்தினை உறுதியுடன் எதிர்த்திடாமல் தங்கள் நாட்டில் புரட்சிகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்திட முடியாது என்பது தெளிவாகும்.
இன்றைய ஏகாதிபத்திய உலகமயக் காலத்திலும்கூட அக்டோபர் புரட்சியின் இந்த அம்சம் இப்போதும் செல்லத்தக்கதாகவே தொடர்கிறது. ஏகாதிபத்திய உலகமயம் என்னும் சங்கிலியின் பலவீனமான கண்ணிகளால் உருவாக்கப்பட்டுள்ள மூலதனத்தின் வர்க்க ஆட்சியின்மீதான அரசியல் தாக்குதல் அழுத்தமாகத் தொடரப்பட வேண்டும்.
இங்கே அடிக்கோடிட்டு பார்க்க வேண்டிய விஷயம் என்னவெனில், மனிதகுலம் இதற்குமுன் கண்டிராத ஒரு பாதையில்தான் சோசலிசத்தைக் கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது. சோசலிசக் கட்டுமானத்திற்கென்று குறிப்பிட்ட அனுபவ வரையறையோ அல்லது இதுதான் இதற்கான சூத்திரம் என்று குறிப்பிட்ட எதுவுமோ கிடையாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு, சோவியத் யூனியனில் நடைபெற்ற குறைபாடுகள் என்று கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் குறித்து ஆய்வினை மேற்கொண்டது. அதாவது, சோசலிச அரசின் வர்க்க குணம், சோசலிச ஜனநாயகம் நிறுவப்படுதல், சோசலிசப் பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் சோசலிசத்தின் கீழ் மக்களின் தத்துவார்த்த சமூக உணர்வினை உயர்த்தத் தவறியமை ஆகிய நான்கினை அது சுட்டிக்காட்டி இருந்தது. ஆகவே, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சிந்தனைகளில் இருந்த குறைபாடுகளினால் அல்ல என்கிற முடிவிற்கு ஒருவர் நிச்சயமாக வர முடியும். மாறாக, மார்க்சிய-லெனினியத்தின் அறிவியல் மற்றும் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து நழுவிச் சென்றதே பின்னடைவுக்குப் பிரதானமான காரணமாகும். எனவே, இந்தப் பின்னடைவுகள் மார்க்சிய-லெனினியத்தை மறுதலித்ததாலோ அல்லது சோசலிசச் சிந்தனையாலோ அல்ல.
சரியற்ற மதிப்பீடுகள்: 20ஆம் நூற்றாண்டில் சோசலிம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஈடிணையற்ற விதத்தில் முன்னேற்றங்களைக் கண்டபோதிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஒருசிலவற்றைத்தவிர பல நாடுகளில் ஏற்பட்ட அனைத்து சோசலிசப் புரட்சிகளும் ருஷ்யாவில் இருந்ததைப்போன்ற ஒரு பிற்போக்கு முதலாளித்துவ நாடுகள் அல்ல. இந் நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் கண்ணி, லெனினிசத்தின் புரிதல்படி பலவீனமான ஒன்று அல்ல. இந்நாடுகளில் உலக முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் மீது தன்னுடைய பிடிப்பை வலுவாகப் பற்றிக்கொண்டிருந்தது. அதன் காரணமாக எதிர்காலத்தில் அதனால் வளரவும் முடிந்தது. சோசலிச நாடுகள் உலகச் சந்தையின் மூன்றில் ஒரு பகுதியை முதலாளித்துவத்திடமிருந்து நீக்கியது. எனினும், இதன்மூலம் அதனால், உலக முதலாளித்துவம் தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அடிப்படையில் தன்னுடைய உற்பத்தி சக்திகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கான கொள்திறனை நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்க முடியவில்லை. இதன்காரணமாக ஏகாதிபத்தியம் நவீன காலனியாதிக்கத்தின் மூலமாக உலகச் சந்தையை விரிவாக்கிக்கொள்வதை சாத்தியமாக்கிக் கொண்டுள்ளது.
முன்னூறு ஆண்டுகளில் முதலாளித்துவத்தால் சாதிக்கமுடியாததை, சோசலிசத்தின் மூலம் முப்பது ஆண்டுகளில் சோவியத் யூனியன் சாதித்துக் காட்டியது. இது, எதிர்காலத்தில் சோசலிச முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது என்கிற எண்ணத்திற்கு இட்டுச்சென்றது. சோசலிசத்தால் தோல்விக்கு ஆளாகியுள்ள முதலாளிகள் முன்னிலும் பன்மடங்கு மூர்க்கத்தனத்துடன் திருப்பித்தாக்குவார்கள் என்கிற லெனினிஸ்ட் எச்சரிக்கை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
தவிர்க்கமுடியாதபடி முதலாளித்துவம் நிர்மூலமாகிவிடும் என்பது தானாய் நடக்கக் கூடிய ஒன்று அல்ல. முதலாளித்துவத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் எதுவும் அதனை சுரண்டலற்ற ஒன்றாகவோ அல்லது நெருக்கடியற்ற ஒன்றாகவோ மாற்றிட முடியாது. முதலாளித்துவம் தூக்கி எறியப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் அதன் பலம் என்ன என்பது குறித்து சரியான மதிப்பீடு அவசியமாகும். அப்போதுதான் அதனைத் தூக்கி எறியக்கூடிய விதத்தில், மார்க்சிய – லெனினியத்தை ஏற்றுக்கொண்டுள்ள கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரமான தத்துவார்த்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கூர்மைப்படுத்திக் கொண்டும் வலுப்படுத்திக்கொண்டும் இருப்பது அவசியம் என்பதை உணர்ந்திட முடியும். இவ்வாறு ஒரு புரட்சிகரமான கட்சி இல்லாமல் புரட்சிகரமான மாற்றம் சாத்தியமில்லை.
சோசலிசத்தின் வல்லமை குறித்து அதீத மதிப்பீடும் கூடாது. முதலாளித்துவத்தின் வல்லமை குறித்து குறைந்த மதிப்பீடும் கூடாது. இவை இரண்டும் ஒரு சரியான ஆய்வினை மேற்கொள்வதற்கும், அதன் காரணமாக இன்றைய உலக நிலைமை குறித்த ஒரு முறையான மதிப்பீட்டை உருவாக்குவதற்கும் அனுமதித்திடாது.
சோசலிசம் – ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம்: மேலும், சோசலிசம் என்பது முன்னேற்றத்தின் முதல்படி என்பதுபோல கருதப்பட்டது. ஒருதடவை சோசலிசத்தை அடைந்துவிட்டோமானால், அதன்பின்னர் எதிர்காலத்தில் எவ்விதத்தடையுமின்றி ஒரு வர்க்கமற்ற, கம்யூனிச சமூகத்தை எய்தும்வரை எவ்விதமானத் தடையும் இல்லாமல் மிகவும் நேரான பாதையாக இருந்திடும் என்று கருதப்பட்டது. இது ஒரு பிழையான சிந்தனையாகும்.
அனுபவமும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. சோசலிசம் என்பது ஓர் இடைநிலை மாறுபாட்டுக்காலம், அல்லது, மார்க்ஸ் கூறியதேபோன்று, கம்யூனிசத்தின் முதல் கட்டம் — அதாவது ஒரு வர்க்கப் பிரிவினையுடனனான சுரண்டும் முதலாளித்துவ ஒழுங்கிற்கும், வர்க்கமற்ற கம்யூனிச ஒழுங்கிற்கும் இடையேயான இடைநிலை மாறுபாட்டுக் காலமாகும். எனவே, இந்த இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில், வர்க்க மோதல்களை ஒழித்துக்கட்டிவிட முடியாது. மாறாக உலக முதலாளித்துவம் தான் இழந்த ஆட்சிப்பரப்பை மீளவும் பெறுவதற்கு முயற்சித்திடும் விதத்தில் அவை உக்கிரமடையும். எனவே இக்காலகட்டம் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இருந்திடும். அதிலும் குறிப்பாக முதலாளித்துவரீதியாக பின்னடைந்திருந்த புரட்சி நடைபெற்ற நாடுகளில் இந்த நிலைமை இருந்திடும்.
உலக சோசலிசத்தின் சக்திகளின் வெற்றியோ அல்லது தோல்வியோ, சோசலிசக் கட்டுமானத்தில் எய்தப்பட்ட வெற்றிகளைக் கொண்டும் அதனை ஈட்டிய வர்க்க சக்திகளைச் சரியாக மதிப்பீடு செய்வதைக் கொண்டும் தீர்மானிக்கப்படும். இதனைச் சரியாகச் செய்திடாவிடில், எதிரி குறித்து, குறைத்து மதிப்பீடு செய்வதற்கே இட்டுச் செல்லும். அந்த எதிரி சோசலிச நாடுகளில் இருப்பினும் சரி, அல்லது வெளியே இருந்தாலும் சரி. சோசலிசம் குறித்த அதீத மதிப்பீடு என்பதும் சோசலிச நாடுகளில் உருவான பிரச்சனைகள் குறித்து கண்டுகொள்ளாது விடுவதற்கும், உலக முதலாளித்துவம் தன்னை ஒருமுகப்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லும்.
துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்தல் என்பதே இயக்கவியலின் உயிரோட்டமான சாராம்சம் என்று மாமேதை லெனின் நமக்கு எப்போதும் நினைவுபடுத்தி வந்துள்ளார். இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வு தடுமாற்றம் அடைந்தால், அல்லது எதார்த்த நிலைமை குறித்து சரியான புரிதல் இல்லாமல் தவறிழைத்தோமானால், பின், பிழையான புரிதல்களும் நெறிபிறழ்வுகளும் உண்டாகும்.
இத்தகைய நெறிபிறழ்வுகள்தான், முக்கியமாக, சோவியத் யூனியனின் பிந்தைய ஆண்டுகளில் மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சாராம்சத்திலிருந்து விலகல்களும், குறிப்பாக, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசுக்குப் பின்னர் சோசலிசக் கட்டுமானத்தின்போது தீர்க்கப்படாதிருந்த பிரச்சனைகள் இத்தகைய பின்னடைவுகளுக்கு இட்டுச் சென்றன.
சோசலிசக் கட்டுமானத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய குறைபாடுகள்
சோசலிசக் கட்டுமானத்தின்போது நான்கு முக்கியமான அம்சங்களில் குறைபாடுகள் நடந்துள்ளன. இதனை விவாதிப்பதற்கு முன்பாக, சோசலிசம் என்பதைக் கட்டும் பணி, மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத ஒரு பாதையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை, மீண்டும் ஒருமுறை நாம் அடிக்கோடிட்டுக்கொள்வது அவசியமாகும். இதற்கென்ற எந்தவிதமான குறிப்பிட்ட சூத்திரமோ அல்லது வரைபடமோ கிடையாது. இத்தகு எதார்த்த உண்மைகளையும் நாம் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்திடும்போது கணக்கில் கொண்டிட வேண்டும்.
அரசின் வர்க்க குணம்
மேற்கண்ட நான்கு குறைபாடுகளில், முதலாவது, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணம் சம்பந்தமானதாகும். முந்தைய முதலாளித்துவ அரசமைப்பில் சுரண்டும் சிறுபான்மை வர்க்கங்களுக்கு எதிராக, பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரமே, அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணமாகும்.
எனினும், இந்த வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருந்தது. தோழர் ஸ்டாலின் இதற்கான ஓர் அரசியல் அறிக்கையை 1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது காங்கிரசில் சமர்ப்பித்தார். ஆயினும், சோசலிசம் பல்வேறு கட்டங்களைக் கடந்தசெல்ல வேண்டியிருந்ததால், இத்தகு வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் இருந்தது. சோவியத் யூனியன், முதலாளித்துவ நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த சூழலில், அல்லது உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், சோவியத் யூனியனில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கால கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த வடிவத்திலேயே தொடர்ந்து நீடித்திருந்துவிட வேண்டிய அவசியம் தேவையாய் இருக்கவில்லை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் பல்வேறு கட்டங்களையும், சோசலிச அரசின் பல்வேறு வடிவங்களையும், மிகவும் விரிவானமுறையில் 1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது காங்கிரசின் அரசியல் அறிக்கையில் தோழர் ஸ்டாலின் சமர்ப்பித்தார். இதற்கு “சித்தாந்தம் குறித்த கேள்விகள்” (“Questions of theory”) என்று தலைப்பிட்டிருந்தார். எனினும், இவ்வாறு வடிவங்களை மாற்றியமைத்ததை நடைமுறைப்படுத்தும்போது, இதற்கான இயக்கங்களை அரசு அறிவிக்கும்போது அதில் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்பு தேவைப்பட்டது. இதனை மக்கள் தாமாக முன்வந்து மேற்கொள்வதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தாததன் காரணமாக, அவர்கள் அரசிடமிருந்து தனிமைப்படுவதற்கும், அரசின் மீது அதிருப்தி கொள்வதற்கும் இட்டுச் சென்றது. மேலும், இதே வடிவம் சோசலிச நாடுகள் அனைத்திற்கும் ஒரே சீரான முறையில் அமல்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அந்தந்த நாட்டின் வரலாறு மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வுசெய்வதன் பின்னணியில் தீர்மானிக்கப்பட வேண்டியதாகும்.
தோழர் லெனின் இதுகுறித்து தன்னுடைய அரசும் புரட்சியும் என்னும் நூலில் மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்று தோழர் லெனின் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது என்றும் அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டிருந்தார். “முதலாளித்துவ அரசுகளின் வடிவங்கள் மிகவும் தீவிரமானமுறையில் வேறுபட்டிருக் கின்றன, எனினும் அவற்றின் வடிவங்கள் வேறுபட்டிருந்தபோதிலும், இறுதி ஆய்வில் தவிர்க்கமுடியாதவகையில் அவை முதலாளிவர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருந்திடும். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் எண்ணற்ற அரசியல் வடிவங்களை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும், வடிவங்கள் வேறுபடலாம் என்ற போதிலும், அவற்றின் சாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது தவிர்க்கமுடியாது.”
இரண்டாம் உலகப் போருக்குப்பின் உருவான கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள், சோவியத் யூனியனில் இருந்தைப்போன்ற சோவியத் வடிவத்தை கையகப்படுத்திக் கொண்டன. அவை தங்கள் நாடுகளின் துல்லியமான சமூகப் பொருளாதார நிலைமைகளையோ மற்றும் வரலாற்றுப் பின்னணியையோ கணக்கில் கொள்ளவில்லை. இவற்றின் விளைவாக இந்நாட்டின் அரசுகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டன. இவற்றுக்கு எதிராக மக்களின் இடையேயான அதிருப்தியும் வளர்ந்துகொண்டிருந்தன.
சோசலிஸ்ட் ஜனநாயகம்: இரண்டாவதாக மிகப் பெரிய குறைபாடு, சோசலிஸ்ட் ஜனநாயகம் சம்பந்தப்பட்டதாகும். ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தின் கீழ் இருந்ததை விட சோசலிசத்தின்கீழ் ஆழமானதாகவும், வளமானதாகவும் இருந்திட வேண்டியது அவசியம். முதலாளித்துவம் பெயரளவில் ஜனநாயக உரிமைகளை வழங்கும் அதே சமயத்தில், அது மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அதனை உண்மையில் அளித்திடாது. (முதலாளித்துவத்தின்கீழ் ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பும் எதனையும் வாங்குவதற்கு உரிமை படைத்தவன்தான். எனினும் அவ்வாறு வாங்குவதற்கான சக்தியை பெரும்பாலானவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்.) ஆனால் சோசலிசம் எதனையும் வாங்கும் உரிமையையும், அதற்கான சக்தியையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கும்.
எனினும், பல நாடுகளில் சோசலிஸ்ட் கட்டுமானம் நடைபெற்ற சமயத்தில், இரு விதமான குறைபாடுகள் நடைபெற்றுள்ளன. முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையின் சர்வாதிகாரமாக, அதாவது கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரமாக, மாற்றப்பட்டிருந்தது. இதுவும் சிறிது காலத்திற்கப்பின் கட்சித் தலைமையின் சர்வாதிகாரமாக மாற்றப்பட்டது. இவ்வாறு சோசலிச அரசு என்பது, ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சோசலிச அரசு என்பது, நடைமுறையில் கட்சியின் ஒரு சிறு பிரிவால், அதாவது கட்சியின் அரசியல் தலைமைக்குழுவால், மேற்கொள்ளப்படும் ஒரு விசித்திரமான நிலைமை ஏற்பட்டது.
அரசு அறிவிக்கும் ஆணைகள் பெரும்பான்மையான மக்கள் ஏற்கக்கூடிய விதத்தில் அமைந்திடவில்லை. அவை சோவியத்துகள் போன்ற அடிப்படையான ஜனநாயக அமைப்புகளின் மூலம் மக்களிடம் எடுத்துச்செல்லப்படவில்லை. மாறாக அரசின் கட்டளைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன. இவை இயற்கையாக மக்களை அரசிடமிருந்து தனிமைப்படுத்திட இட்டுச்சென்றது.
இரண்டாவதாக, ஜனநாயக மத்தியத்துவத்தை அமல்படுத்தும் சமயங்களில், உள்கட்சி ஜனநாயகம் என்பது அடிக்கடி பலிகிடாவாக மாறியது. சோவியத் யூனியனின் வரலாற்றில் சில சமயங்களில் இருந்ததைப்போல மத்தியத்துவம் முன்னுக்கு வந்தது. இது, அதிகாரத்துவம் வளர்வதற்கு இட்டுச் சென்றது. இவ்வாறு அதிகாரத்துவம் வளர்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். இவற்றின் காரணமாக சோசலிசத்திற்கு விரோதமான போக்குகள், ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்குச் சலுகை போன்றவை தலை தூக்கின. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல நாடுகளில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த பெரும்பாலானவர்கள் சலுகைகள் அனுபவித்தது இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன்காரணமாக கட்சியின் புரட்சிகரத் தன்மை கொள்ளை போய்விட்டது, கட்சி மக்களிடமிருந்து தனிமைப்பட்டது, கட்சித் தலைமையிடமிருந்து கட்சி அணிகளும் தனிமைப்பட்டன.
இதுபோன்ற திரிபுகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக, கோர்பசேவ் தலைமையானது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தையும், ஜனநாயக மத்தியத்துவத்தையும் கைவிடும் நிலைக்குச் சென்றது. நடைமுறையில் அது புரட்சிகரமான கட்சியையே நிராயுதபாணியாக்கியது, அவசியமான திருத்தங்கள் மேற்கொள்வதைத் தடுத்தது. இவை அனைத்தும் சோசலிசத்தையே கைவிடும் நிலைக்கு இறுதியில் இட்டுச் சென்றது.
சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானம்: சில குறைபாடுகள் காணப்பட்ட மூன்றாவதான பகுதி என்பது சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டுமானமாகும். அக்டோபர் புரட்சி வெற்றிபெற்றபின் முதலில் அது தேர்ந்தெடுத்த பாதை தொழிலாளர்-விவசாயிக் கூட்டணியின் அடிப்படையில் வெற்றிகரமாக ஜனநாயகப் புரட்சியை நிறுவியதாகும். இதுவே புதிய சவால்களை எதிர்கொண்டது. ஜனநாயகப் புரட்சியிலிருந்து சோசலிஸ்ட் புரட்சிக்குத் மாறுவதற்கான இடைநிலை மாறுபாட்டுக்காலத்தில் தேவைப்பட்டது, எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதார அடிப்படையில் சொத்து உறவுகளில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிறுவ வேண்டியிருந்தது. தொழிலாளி – விவசாயிக் கூட்டணிதான் ஜனநாயகப் புரட்சிக்கான முதுகெலும்பு என்கிற உண்மை, விவசாயத்தில் சொத்து உறவுகளில் மாற்றம் ஏற்பட்டது என்பது விவசாயிகளில் சில பிரிவினரது அந்தஸ்தைக் கடுமையாகப் பாதித்தது என்று பொருளாகும். இவர்கள்தான் ஜனநாயகப் புரட்சியை எய்துவதற்குத் தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டாளியாக இருந்தவர்கள். உள்நாட்டு யுத்தம் மற்றும் சோவியத் யூனியன் முதலாளித்துவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இந்த சிக்கலான பிரச்சனை மேலும் சிக்கலானது. ஆனாலும், சோசலிஸ்ட் அரசை நிலைநிறுத்துவதற்கும், சோசலிஸ்ட் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் கட்டி எழுப்புவதற்கும் அபரிமிதமான தொழில்மயம் அவசியமாக இருந்தது. ‘யுத்த கம்யூனிசம்’ (‘war communism’), ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ (new economic policy) காலங்களின்போது, தோழர் லெனின் இந்தப் பிரச்சனையை இறுகப்பற்றிக் கொண்டிருந்தார்.
தோழர் லெனின் முன்னதாகவே இறந்ததை அடுத்து, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சோசலிஸ்ட் தொழில் மற்றும் விவசாயிகளின் விவசாயம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு குறித்து ஒரு விவாதம் எழுந்தது. விவசாய உற்பத்தி அபரிமிதமாக இருந்ததன் காரணமாக, அதன்மூலம் ஏற்பட்ட உபரியை தொழிற்துறை செயல்பாடுகளுக்கு எந்த அளவிற்குப் போடுவது என்பது தொடர்பாகவும், இதனை எப்படி தீர்மானிப்பது என்பது தொடர்பாகவும் விவாதங்கள் முன்னுக்கு வந்தன. தொழில்துறை நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கு விவசாய உற்பத்தியின் உபரியை வெகுவாகப் பயன்படுத்தப்பட வேண்டியிருந்தது. இதனை எப்படிச் செய்வது? இதில் பிரச்சனைகள் எழுந்தன. விவசாயத்துறையில் புதிதாக உருவான பணக்கார விவசாயிகள் (குலாக்குகள்) வர்க்கம் அக்டோபர் புரட்சிக்கு ஒரு வித்தியாசமான விதத்தில் அச்சுறுத்தலாக அமைந்தனர்.
எனினும், உலகம் முழுதும் சோவியத் யூனியனுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் தொடர்ந்து இருந்த சூழ்நிலையில், இப்பிரச்சனையை தோழர் ஸ்டாலின் மிகவும் வெற்றிகரமாக சமாளித்தார். அவ்வாறு சமாளிக்காமல் மட்டும் இருந்திருந்தால் சோவியத் யூனியன் நாஜிக்கள் சோவியத் யூனியன் மீது மேற்கொண்ட தாக்குதலை வெற்றிகரமானமுறையில் முறியடித்திருக்க முடியாது. அப்போது தோழர் ஸ்டாலின் மக்களுக்கு விடுத்த அறைகூவல்களை நினைவுகூருங்கள். நாஜிக்களுக்கு எதிராகப் போர்முனையில் போராடுவதால் மட்டும் வென்றுவிடமுடியாது, மாறாக அதனை தொழிற்சாலைகளிலும், வயல்களிலும் நாம் வெற்றிபெறுவதன் மூலமே சாத்தியமாக்கிட முடியும். சோசலிசத்தைக் காப்பதற்காகவும், உலகை பாசிசத்திலிருந்து காப்பதற்காகவும், போர்முனையில் சோவியத் செஞ்சேனை வீரஞ்செறிந்த முறையில் போராடுவதற்கு, எவ்விதத் தொய்வுமின்றி அவர்களின் தேவைகள் எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்யப்பட்டதே அடிப்படைக் காரணமாகும்.
ஆனால் “சந்தைப் பொருளாதாரம் என்கிற முதலாளிகளின் கடவுள்”, செல்வாக்கு செலுத்தியதன் காரணமாகவும், இத்தகைய சோசலிஸ்ட் பொருளாதார அடித்தளங்களை, கோர்பசேவ் படிப்படியாகக் கைவிட்டதன் காரணமாக, சோசலிசமே கைவிடப்படக்கூடிய நிலைக்கு கொண்டுசென்றது.
தத்துவார்த்த உணர்வினை உதாசீனம் செய்தல் (Neglect of Ideological Consciousness): அடுத்து மாபெரும் குறைபாடு காணப்பட்ட பகுதி, மக்களின் கூட்டு தத்துவார்த்த உணர்வினை (collective ideological consciousness of the people) வலுப்படுத்தத் தவறியமையாகும். மக்களிடம் இத்தகைய கூட்டு தத்துவார்த்த உணர்வு உயர்ந்தோங்கி இருப்பதன்மூலமாகத்தான் சோசலிசம் நிலைத்து நிற்கமுடியும் மற்றும் அதனை மேலும் வளர்த்தெடுக்க முடியும். இதனை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த உறுதிப்பாடு இல்லாமல் மேற்கொண்டிட முடியாது. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசின் திருத்தல்வாதி திரிபுக்கு (revisionist deviation)ப் பின்னர் இது மிகப்பெரிய ஆபத்தாக (casualty-ஆக) மாறியது.
இக்குறைபாடுகளின் காரணமாக, சோவியத் யூனியனிலும் இதர சோசலிச நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்புரட்சி சக்திகள் முன்னுக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டு, சோசலிசம் கைவிடப்பட்டது.
இவ்வாறு இந்நாடுகளில் சோசலிசம் கைவிடப்பட்டதற்கு, மார்க்சிசம்-லெனினிசத்தின் அடிப்படைக் கொள்கைகள் காரணமல்ல. மாறாக, மார்க்சியம்-லெனினியத்தின் அறிவியல் மேற்றும் புரட்சிகர சாராம்சத்திலிருந்து நழுவிச் சென்றதே காரணமாகும். உலக முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் குறித்து சரியற்ற மதிப்பீடுகளும் காரணமாகும். மார்க்சியத்தின் ஆக்கபூர்வ அறிவியலை வறட்டுத் தனமான முறையில் வியாக்கியானம் செய்ததும் காரணமாகும். மேலும் சோசலிசக் கட்டுமானத்தின்போது மேலே கூறியவாறு மேற்கொண்ட குறைபாடுகளும் காரணமாகும்.
நடப்பு முதலாளித்துவ நெருக்கடி – சோசலிச மாற்று
மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட இன்றைக்கும் ஒரே வழி, சோசலிசம்தான். இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் இன்றைய நிலைமைகளிலிருந்து மீள்வதற்கும் ஒரே மாற்று சோசலிசம்தான். 2008இல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்திலிருந்தே, உலக முதலாளித்துவம் ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக முதலாளித்துவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதனை மேலும் ஆழமான முறையில் புதிய நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றுவதன் மூலம் இதனை நன்கு உணர முடியும். இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்திருக்கின்றன. முதலாளித்துவ அமைப்பின்கீழ் இருந்துகொண்டு கொண்டுவரப்படுகிற எந்தவொரு சீர்திருத்தமும் மனிதகுலத்தை சுரண்டலிலிருந்து விடுவித்திட முடியாது. சோசலிசம் என்கிற அரசியல் மாற்று ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும். சுரண்டலிலிருந்து மனிதகுலத்தை விடுவித்திட வேண்டுமானால், மனிதகுலத்தின்மீது முதலாளித்துவத்தால் ஏவப்பட்டுள்ள கொடுங்கோன்மையாட்சிக்க எதிராக சோசலிசத்திற்கான அரசியல் மாற்று தன் தாக்குதலை உக்கிரப்படுத்திட வேண்டும்.
முதலாளித்துவத்தின் மீதான நெருக்கடி எவ்வளவுதான் உக்கிரமானதாக இருந்தபோதிலும், நாம் முன்பே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப்போல, எந்தக் காலத்திலும் அது தானாக வீழ்ந்துவிடாது. முதலாளித்துவத்திற்கு சவால் விடக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் மாற்று உருவாகாதவரை, மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவம் எப்படியாவது தன்னைத் தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கும். எனவே, சோசலிஸ்ட் அரசியல் மாற்று அதனை எதிர்கொள்ளக் கூடிய விதத்தில் வெகுவாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தற்போதைய முதலாளித்துவத் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுதும் மக்கள் மத்தியில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிற போதிலும், இன்றையநிலையில் இவை அனைத்தும் தற்காப்புநிலையில்தான் இருந்து வருகின்றன. தற்காப்புநிலையில்தான் என்று ஏன் கூறுகிறேன் என்றால், மக்கள் தங்கள் போராட்டங்களின் மூலமாகத் தாங்கள் இதுநாள்வரை பெற்றிருந்த ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் பறிக்கப்படும்போது அவற்றைத் தக்க வைத்துக்கொள்ளக்கூடிய விதத்தில்தான் இன்றைய போராட்டங்கள் இருந்துவருகின்றன. இத்தகு போராட்டங்கள் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக தாக்குதலைத் தொடுக்கக்கூடிய அளவிற்கு அதிகரித்திட வேண்டும். இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் மீதான தீர்மானத்தில் அலசி ஆராய்ந்திருப்பதைப்போல, லெனினிஸ்ட் அகநிலைக் காரணியை வலுப்படுத்திட வேண்டும். அதாவது, மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு புரட்சிக் கட்சியின் வல்லமையை வலுப்படுத்திட வேண்டும்.
இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப்பணியைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறது. நமது கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடும், ஸ்தாபனத்தின் மீதான பிளீனமும் இந்தியாவின் நிலைமைகளில் அகக்காரணியை (கட்சியை) வலுப்படுத்தும் குறிக்கோளை எய்தக்கூடிய விதத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.
அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டங்கள்
அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்றைய தினம் தன் நிலையை சர்வதேச அளவில் வலுவாக்கிக்கொண்டுள்ள நிலையில், தன்னுடைய உலக அளவிலான மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காக மூன்று முக்கிய குறிக்கோள்களை எய்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
முதலாவதாக அது இப்போது மீதம் இருந்துவரும் சோசலிஸ்ட் நாடுகளைக் கலைத்திட விரும்புகிறது. இரண்டாவதாக, அணிசேரா இயக்கத்தின்கீழ் முக்கியமாக இருந்த மூன்றாம் உலக நாடுகளை வலுவிழக்கச்செய்வதன்மூலம் எதற்கும் இலாயக் கற்றவைகளாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இறுதியாக, உலகத்தின்மீது பொதுவாகவும், குறிப்பாகத் தனக்குப் போட்டியாக வருபவர்கள் யார் என்று கருதுகிறதோ அவர்களை அழித்து ஒழித்து, தன்னுடைய ராணுவ மற்றும் பொருளாதார மேன்மையை நிலைநிறுத்திட முயற்சிக்கிறது.
ஏகாதிபத்தியத்தின் ஒருதுருவ உலகக் கோட்பாட்டைத் திணிக்கும் முயற்சிக்கு எதிராக வலுவானத் தத்துவார்த்த தாக்குதலால் வெற்றிபெற முடியவில்லை. ஏகாதிபத்தியம், ஜனநாயகத்தை சுதந்திர சந்தையுடன் சமமாக்கப் பார்க்கிறது. இத்தகைய நிலைப்பாட்டுடன், தன்னுடைய மேலாதிக்கத்தையும் மற்றும் நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ‘சுதந்திர சந்தைகளை’த் திணிப்பதை எதிர்த்திடும் ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல்ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தலையிடுகிறது.
ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகள்’ மற்றும் ‘மண்ணின் மாண்புகள்’ ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கிறோம் என்ற பெயரில் சுயேச்சையான இறையாண்மை நாடுகளுக்கு எதிராக ராணுவரீதியாகத் தலையிடுகிறது. இவ்வாறு ராணுவத் தலையீடுகளின் மூலமடாக அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுவருகிறது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ந்துவந்த முதலாளிவர்க்கம் தங்கள் வர்க்க ஆட்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, தேசிய இறையாண்மையை மிகவும் புனிதமானதாக உயர்த்திப்பிடித்தது. இன்றையதினம், ஏகாதிபத்தியம், ‘மனித உரிமைகளை’ப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அந்த நாடுகளின் தேசிய இறையாண்மையை மறுதலித்து, ராணுவ ரீதியாகத் தலையிட்டுக் கொண்டிருக்கிறது.
ஏகாதிபத்தியம், வெறித்தனமாக கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. கம்யூனிசத்தை, சர்வாதிகாரத்துடனும் பாசிசத்துடனும் சமப்படுத்திக் கூறிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் கம்யூனிசத்தை பாசிசத்துடன் இணைத்து சமப்படுத்தி, அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று சட்டங்களை இயற்றி இருக்கிறது. செக் குடியரசு, போலந்து போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கம்யூனிச அடையாளங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் சட்டபூர்வமாகத் தடை விதித்திருக்கின்றன.
கடந்த இருபதாண்டுகளில் இந்தப் போக்குகள் மேலும் உக்கிரமடைந்திருக்கின்றன. சோவியத் யூனியன் தகர்ந்ததற்குப்பின்னர் மார்க்சியத்தை மக்கள் மத்தியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன. எனவேதான் மார்க்சியத்தைப் பல்வேறுவிதமாக திரித்திடும் சித்தாந்தங்கள் அறிவுஜீவிகள் மத்தியில் வலம் வருவது வாடிக்கையாகிவிட்டன. இவற்றின்மூலம் மக்களைக் குழப்பிடும் பணி வெகுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.
பின்-நவீனத்துவம் (Post-Modernism): ஏகாதிபத்தியமும், உலக நிதி மூலதனமும் எண்ணற்ற மார்க்சிஸ்ட் எதிர்ப்பு சித்தாந்தங்களை உருவாக்கி வெளித்தள்ளிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் அனைத்து முற்போக்கு சித்தாந்தங்களையும் மறுதலித்திட முனைகின்றன. வர்க்கப் போராட்டம் மறைந்துவிட்டது, தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் பங்களிப்பு மறுதலிக்கப்பட்டுவிட்டது போன்ற சிந்தனைகள் முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியிலிருந்து வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ள சித்தாந்தம்தான், பின்-நவீனத்துவம் என்பதாகும்.
பின்-நவீனத்துவம் என்பது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாளித்துவம் வெற்றிபெற்று, சோசலிசத்திற்குப் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் உருவான முதலாளித்துவ தத்துவார்த்தக் கண்ணோட்டமாகும். இத்தத்துவமானது மார்க்சியம் உட்பட எந்தவொரு தத்துவமோ, அரசியலோ உலகளாவிய அளவில் இருந்திடமுடியாது என்று நிராகரிக்கிறது. பின்-நவீனத்துவம் என்பது முதலாளித்துவத்தையோ அல்லது சோசலிசத்தையோ ஒரு கட்டமைப்பு (a structure) அல்லது ஒரு முறை (a system) என்கிற விதத்தில் அங்கீகரித்திடவில்லை. இவ்வாறு, இது, உலக நிதி மூலதனத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு தத்துவமாகும். ஏனெனில் இது வர்க்கங்கள் இருப்பதை மறுதலிக்கிறது. எனவே, வர்க்கம் மற்றும் வர்க்கப் போராட்டம் என்பனவற்றையும் மறுதலிக்கிறது. மேலும் இது, அடையாள அரசியலை உந்தித்தள்ளுவதற்கும், மக்களை அரசியலற்றவர்களாக ஆக்குவதற்கும் மிகவும் பொருத்தமான ஒரு தத்துவமுமாகும்.
கலாச்சாரா மேலாதிக்கம் (Cultural Hegemony): இந்தக் கால கட்டத்தில் ஏகாதிபத்தியமும், நவீன தாராளமயமும் தங்களுடைய கலாச்சார மேலாதிக்கத்தை வலுவாக நிறுவியுள்ளன. இவை மக்களைத் தங்களுடைய தகவல் (Information), தொடர்பு (Communication) மற்றும் பொழுதுபோக்கு (Entertainment) என்கிற மூன்று ஐசிஇ (ICE) ஆகியவற்றைத் தங்களுடைய மெகா கார்ப்பரேஷன்கள் மூலமாக மக்களிடையே கொண்டுசெல்வதில் மூர்க்கத்தனமாக இறங்கியிருக்கின்றன. தங்களுடைய கார்ப்பரேட் ஊடகங்கள் மூலமாக செய்திகளைத் திரித்துக்கூறுதல் என்பதும், மக்களிடம் கூறப்படும் தகவல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதும் இவற்றின் ஏகபோகமாக மாறியிருக்கின்றன. கலாச்சாரத்தை வணிகமயமாக்குவது உலகமயத்தின் ஒரு பகுதியாகும்.
வர்க்க மேலாதிக்கத்தின் காரணமாக, உலகமயக் கலாச்சாரம் மக்களை தங்களுடைய எதார்த்தமான வாழ்க்கை நிலைமைகளிலிருந்து கத்தரித்துவிட முயல்கிறது. இவர்களின் கலாச்சாரம் என்பது அழகியலை மேம்படச் செய்வதற்கானது அல்ல, மாறாக மக்கள் மத்தியில் காணப்படும் வறுமை மற்றும் ஏழ்மை ஆகியவற்றால் உண்டாகும் பிரச்சனைகளிலிருந்து அவர்களை திசைதிருப்புவதற்கானதாகும்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை ஏகாதிபத்தியம் தன் ஆளுகையை அதிகரித்துக் கொள்வதற்கும், மக்கள் இயக்கங்களை நசுக்குவதற்கும் நன்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.
பின்-உண்மை (Post-Truth): மார்க்சியத்திற்கும், சோசலிசத்திற்கும் எதிராக, முதலாளித்துவ சித்தாந்தக் கொட்டடியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சொற்றொடர்தான், பின்-உண்மை (Post-Truth) என்பதாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தன்னுடைய 2016ஆம் ஆண்டின் அகராதியில் ‘இந்த ஆண்டின் புதிய வார்த்தை’ என இதனைக் குறிப்பிட்டு, இதன் பொருளை வரையறுக்கும்போது, உணர்ச்சிக்கும் தனிப்பட்ட நம்பிக்கை அடிப்படையில் எழுப்பப்படும் வேண்டுகோள் அளவிற்கு மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு செலுத்தாத சொற்றொடர் என்று கூறுகிறது.
டொனால்டு டரம்ப் மற்றம் நரேந்திர மோடி அரசோச்சும் இக்காலத்தில் இதனைப் புரிந்துகொள்வது எளிதாகும். ஈராக்கில் யுத்தத்தைத் தொடங்குவதற்காக அமெரிக்க புஷ் நிர்வாகம் அவிழ்த்துவிட்ட பொய்கள் மற்றும் ஏகாதிபத்திய அரசியல் மற்றம் ராணுவ ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்திட அவிழ்த்துவிடப்படும் பொய்களும் இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
இந்தியாவிலும் இதேபோன்றே முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரங்கள் அவிழ்த்துவிடப்படுவதிலிருந்து இதனை நோம் அறிந்துகொள்ள முடியும். மக்கள் மத்தியில் மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதற்காக தலித்துகள் மற்றம் முஸ்லீம்கள் மீது பசுப்பாதுகாப்புப் படை போன்ற தனியார் ராணுவத்தினர் கொலைபாதகத் தாக்குதல்கள் தொடுப்பதிலிருந்து இதனைத் தெரிந்துகொள்ள முடியும்.
பின்-உண்மை என்கிற சொற்றொடரும் மனிதகுல வரலாற்றில் புதிதான ஒன்றல்ல. ஹிட்லரின் கொள்கைப் பரப்பு அமைச்சராக இருந்த கோயபல்ஸ், “ஒரு பெரிய பொய்யைக் கூறுங்கள், திருப்பித் திருப்பி அதனைக் கூறுங்கள், அது உண்மையாகிவிடும்,” என்று கூறிவந்தான் அல்லவா? அதுதான் இது. இதுதான் அன்றைக்கு நாஜி பாசிஸ்ட்டுகளின் பிரச்சாரத்திற்கு ஆணிவேராக இருந்தது. இன்றைக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் இந்துத்துவா வெறியர்களுக்கும் முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு ஹிட்லரின் பேச்சுகள் வானொலியில் ஒலிபரப்பப்படும் போது எப்படி மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டினார்கள் என்று ஒலிபரப்பப்பட்டதோ அதேபோன்றுதான் இன்றைக்கு மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியும் நடைபெற்றுக் கொண்டிதுருக்கிறது. எனவே, பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி என்பது புதிய உருவாக்கம் ஒன்றுமல்ல.
இவ்வாறு ‘பின்-உண்மை’ என்பதும் மக்களை தாங்கள் சுரண்டப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் எதிரான போராட்டங்களிலிருந்து திசைதிருப்புவதற்கான ஒன்றே தவிர, வேறல்ல.
மார்க்சியம் ஒரு வறட்டு சூத்திரம் அல்ல. மாறாக, அது ஓர் ‘ஆக்கபூர்வமான அறிவியல்’ ஆகும். அது, “துல்லியமான நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வு செய்வதன்” அடிப்படையில் அமைந்த ஒன்று. மார்க்சியம், வரலாற்றைப் பொதுவாகவும், முதலாளித்துவத்தைக் குறிப்பாகவும் ஆய்வுசெய்திடும் ஓர் அணுகுமுறையாகும். மாமேதை மார்க்ஸ் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள இந்த அடித்தளத்தில் நின்றுகொண்டுதான், நாம் இன்றைய சூழ்நிலையைச் சரியான முறையில் புரிந்துகொண்டு, நம் தத்துவார்த்த சிந்தனையை வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம்.
இந்த அடிப்படையில் நான் சரியானமுறையில் நின்றுகொண்டு, வர்க்க ஒற்றுமையையும், தொழிலாளர் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் விதத்தில், நமக்கு எதிராகத் தற்போதும், எதிர்காலத்திலும் கட்டவிழ்த்துவிடப்படும் மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தங்களை முறியடித்திட வேண்டியது அவசியமாகும்.
இந்திய நிலைமைகளில் சோசலிசம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன்னுடைய 20ஆவது கட்சி காங்கிரஸ் தத்துவார்த்தப்பிரச்னைகள் தொடர்பான தீர்மானத்தில், இந்தியாவில் சோசலிசம் என்பதன் கருத்தாக்கம் என்ன என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் சோசலிசம் எப்படி இருக்கும் என்பதை, இந்தியப்புரட்சியின் ஜனநாயகக் கட்டம் நிறைவடைந்தபின்புதான், அதாவது மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிபெற்ற பின்னர்தான் கெட்டிப்படுத்திட முடியும்.
எனினும், சோசலிசத்தின்கீழ் இந்தியாவில் உள்ள மக்களுக்கு எவை எவை தேவை என்பதை நம்மால் எதிர்பார்த்திட முடியும். எனவே, இந்தியாவில் சோசலிசம் என்றால் அதன் பொருள் என்ன?
அதன்பொருள், அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, முழு வேலைவாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி.
அதன் பொருள்,தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நலிந்த பிரிவினர் என அனைத்து மக்களுக்கும் வாழ்வாதாரநிலைமைகளை மேம்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மேம்பாடு.
அதன்பொருள், மக்கள் அதிகாரமே உயர்வானது. ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் சமூகத்தின் அனைத்து அரசியல் மற்றும் சமூக ஒழுங்கிலும் பிரிக்கமுடியாதபடி பின்னிப்பிணைந்தவைகளாகும். முதலாளித்துவ ஜனநாயகத்தில் இதுபோன்ற உரிமைகள் தரப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் அவை மாயை. இவ்வுரிமைகளைப் பயன்படுத்தி பெரும்பாலான மக்களுக்கு அதற்கான வல்லமை கிடையாது. சோசலிசத்தின் கீழ், அனைத்து மக்களுக்கும் பொருளாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தி இருப்பதன் காரணமாக மனிதகுல வாழ்வின் தரம் உயர்ந்து, அங்கே சோசலிஸ்ட் ஜனநாயகத்தின் அடித்தளங்கள் செழுமையுடன் காணப்படும்.
அதன் பொருள், சாதி அமைப்புமுறை ஒழிக்கப்படுவதால் சாதி ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அனைத்து மொழிப்பிரிவினரும் சமமாக நடத்தப்படுவார்கள். அனைத்து மொழிகளும் சமமான முறையில் வளர்த்தெடுக்கப்படும். அனைத்து சிறுபான்மையினருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் உண்மையான சமத்துவம் அளிக்கப்படும், பாலின ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அதன் பொருள், சோசலிஸ்ட் பொருளாதாரக் கட்டமைப்பு, சோசலிச உற்பத்திச் சாதனங்கள் மற்றும் மத்திய திட்டமிடல் அடிப்படையில் அமைந்திடும். சந்தை சக்திகள், மத்திய திட்டமிடலின் வழிகாட்டுதலின்கீழ் இயங்கிடும். சொத்தின் அனைத்துவிதமான வடிவங்களும் இருக்கும் அதே சமயத்தில், உற்பத்திச் சாதனங்களின் சமூக உடைமையை தீர்மானகரமான வடிவமாக இருந்திடும். இவ்வாறு கூறுவதால் அது அரசின்கீழான பொதுத்துறை என்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்திடும் அதே சமயத்தில், கூட்டு(collective) மேற்றும் கூட்டுறவு அமைப்புகள், அரசுக் கட்டப்பாட்டில் உள்ள பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் பொருளாதார வாழ்வாதாரங்களை இயக்கி முறைப்படுத்திடும்.
அக்டோபர் புரட்சி : உலகத்தை மாற்ற முடியும்
மாமேதை காரல் மார்க்ஸ் ஒரு சமயம் கூறிய பொருள்பொதிந்த வார்த்தைகள்: “தத்துவ ஞானிகள் உலகை பல்வேறு வழிகளில் வியாக்கியானம் மட்டுமே செய்திருக்கிறார்கள். பிரச்சனை என்னவெனில், அதனை மாற்றுவதே ஆகும்.” அக்டோபர் புரட்சி உலகை மாற்றுவது சாத்தியமே என்று உலகுக்கு காட்டியிருக்கிறது. அது இன்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்றேயாகும். பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தபோதிலும், அக்டோபர் புரட்சி மற்றம் அதன் பங்களிப்புகள் மனிதகுல நாகரிகத்தை முன்னேற்றுவதற்கு இன்றளவும் உதவிக்கொண்டு இருக்கிறது. நம் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுத்துச்சென்றிட வீர சகாப்தம் படைத்திட்ட அக்டோபர்புரட்சி தொடர்ந்து நமக்கு உத்வேகத்தை அளித்துவரும். அக்டோபர் புரட்சி உலகை மாற்றியதைப்போல, இந்தியப் புரட்சியும் இந்தியாவை மாற்றி அமைத்திடும். இதனை எதார்த்தமாக்கிடக்கூடிய விதத்தில் நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியதே இன்றைய தேவையாகும்.
(கேரள மாநிலம், திருச்சூரில், 2017 ஜூன் 13 அன்று இஎம்எஸ் நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று துவக்கவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதிலிருந்து சில அம்சங்கள்.)
பகத்சிங்கின் முக்கியமான பங்களிப்புகள் கட்டுரை சீத்தாராம் யெச்சூரி – தமிழில்:ச.வீரமணி
சீத்தாராம் யெச்சூரி
தமிழில்: ச.வீரமணி
அனைவருக்குமான நவீன இந்தியாவை உருவாக்குவதில் பகத்சிங்கின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவைகளாகும். 1920-21 ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி திடீரென்று கைவிட்டதைத் தொடர்ந்து, இந்திய தேசிய இயக்கத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இந்த இயக்கத்தின்போது நடைபெற்ற சௌரி சௌரா நிகழ்வு காந்திஜியையும், எதிர்கால ஆளும் வர்க்கங்களையும் அலற வைத்தது. மக்கள் மத்தியில் புரட்சிகர உணர்வு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தாவிட்டால் ஆபத்தாக முடியும் என்று அவர்கள் கருதினார்கள். மக்களிடையே எழுந்துவரும் புரட்சி அலை, நாட்டை பிரிட்டிஷ் காலனிய கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டிற்குள்ளேயே இருந்துவரும் சுரண்டல்பேர்வழிகளையும் விழுங்கிவிடும் என்று கருதினார்கள். இதனால்தான் காந்திஜி, தான் ஒரு பெரிய “இமாலயத் தவறு” (“Himalayan blunder”) செய்துவிட்டேன் என்று கூறி இந்த இயக்கதை விலக்கிக் கொண்டார். காந்திஜி, இவ்வாறு இயக்கத்தை விலக்கிக்கொண்டது தொடர்பாக, அந்த சமயத்தில் செயல்பட்டு வந்த புரட்சியாளர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்த முக்கியமான தலைவர்களே ஆச்சரியப்பட்டு, காந்திஜியிடம் இது குறித்துக் கேட்கவும் செய்தனர். ஜவஹர்லால் நேரு, சிறையிலிருந்து, இந்த இயக்கம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது என்றும், அதனை விலக்கிக் கொண்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்றும் எழுதினார்.
மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், இருந்த பொதுவான விரக்தி நிலை, பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான மார்க்கத்தையும், திசைவழியையும் தேடியது. இந்தப் பின்னணியில்தான் பகத்சிங் மற்றும் அவருடைய தோழர்கள் ஒரு தெளிவான திசைவழியை அளித்திடும் விதத்தில் எழுந்தார்கள். அது மக்கள் மத்தியில் ஓர் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தியது. நாடு சுதந்திரம் பெற்றபின்னரும் கூட இன்று வரையிலும் அது தொடர்கிறது.
பகத்சிங்கும், அவருடைய தோழர்களும் அவருக்கு 24 வயது ஆவதற்கு முன்பாகவே தூக்கிலிடப்பட்டார்கள். இவ்வாறு அவர் வாழ்ந்தகாலம் மிகவும் குறுகியதே என்றாலும், அதற்குள்ளாகவே அவர் எண்ணற்ற வீரதீரச் செயல்களைப் புரிந்துள்ளார். லாலா லஜபதி ராய் மீது கொடூரமானமுறையில் குண்டாந்தடி நடத்திய சாண்டர்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டது, தில்லி பாராளுமன்றத்தில் வெடிகுண்டுகளை வீசியது (தில்லி வெடிகுண்டு வழக்கு) முதலியவை, எப்படி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் பகத்சிங்கிற்கு இருந்த சிந்தனைத் தெளிவையும், அதன் அடிப்படையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் காட்டின. மார்க்சியம் குறித்தும், இந்திய மக்களை விடுவிப்பதற்கான புரட்சியின் குறிக்கோள் குறித்தும் அவர் கொண்டிருந்த தெளிவான பார்வையுடன் இவற்றை அவர் மேற்கொண்டார்.
சிந்தனைகளுக்கு இடையேயான போராட்டம்
சுதந்திரப் போராட்டக் காலத்தில், சுதந்திர இந்தியாவின் குணாம்சம் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து, பல்வேறு சிந்தனைகளுக்கு இடையேயும் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட சிந்தனையோட்டம் என்பது, தேசிய இயக்கத்தின் குறிக்கோள் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை நிறுவுவது என்பதாக இருந்தது. இடதுசாரிகள் இதனை மறுக்காத அதே சமயத்தில் இத்துடன், மேலும் ஓரடி முன்னே சென்று, இவ்வாறு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நிலைத்திருக்க வேண்டுமானால், அவ்வாறு நாம் பெற்ற அரசியல் சுதந்திரத்தை ஒவ்வோர் இந்தியனின் பொருளாதார சுதந்திரமாகவும் மாற்றுவதில் நாம் எய்துகிற வெற்றியைச் சார்ந்திருக்கிறது, அதாவது, சுரண்டலற்ற ஒரு சமூகத்தை, சோசலிச சமூகத்தை, அமைப்பதில் அடங்கி இருக்கிறது என்றார்கள்.
இவ்விருவிதமான சிந்தனையோட்டங்களுடனும் நேரடியாகவே முரண்படக்கூடிய விதத்தில் ஒரு சிந்தனையோட்டமும் இருந்தது. அதாவது, சுதந்திர இந்தியாவின் குணாம்சம் மக்களின் மத அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே அந்தச் சிந்தனையாகும். இது மேலும் இருவிதமான சிந்தனைகளுக்கு வழிவகுத்தது. ஆர்எஸ்எஸ்-ஆல் முன்னெடுக்கப்பட்ட “இந்து ராஷ்ட்ரா” என்கிற சிந்தனைக்கும், முஸ்லீம் லீக்கால் முன்னெடுக்கப்பட்ட “இஸ்லாமிய அரசு” என்கிற சிந்தனைக்கும் வழிவகுத்தது. வி-டி. சாவர்க்கரால் முன்னெடுக்கப்பட்ட இந்த இரு தேசக் கோட்பாட்டை, பின்னர் முகமது அலி ஜின்னாவும் பின்பற்றினார்.
தேசிய இயக்கத்தின் பிந்தைய நடவடிக்கைகள், துரதிர்ஷ்டவசமான முறையில் நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கும், பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசு நிறுவப்படுவதற்கும் இட்டுச் சென்றது. எனினும், இந்தியாவின் இதர பகுதி, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு கருத்தாக்கத்தையே தேர்வு செய்தது. அப்போது இந்து ராஷ்ட்ரம் என்னும் சிந்தனையை நிராகரித்ததுதான், அவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி, காந்திஜி படுகொலை செய்யப்படுவதற்கான உடனடிக் காரணமாக அமைந்தது. ஆயினும், ஆர்எஸ்எஸ்-இன் சிந்தனையோட்டமான “இந்து(த்துவா) ராஷ்ட்ரத்தை” அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தன. இந்த முயற்சிகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, தங்களுடைய “இந்துத்துவா ராஷ்ட்ரமாக” மாற்றுவதற்கான முயற்சிகளில் பிரதிபலிக்கிறது.
இதன் தொடர்ச்சிதான் இன்று நாம் ஈடுபட்டுள்ள போர்க்களமாகும். சுதந்திரத்திற்குப் பின் கடந்த எழுபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள அனுபவம், இடதுசாரிகள் அன்றைய தினம் கூறிய கருத்துக்களை, அதாவது, மக்கள் போராட்டம் சோசலிசத்தை நோக்கி முன்னேறவில்லை என்றால், மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நிலைத்திருக்க முடியாது என்று கூறியதை, மீண்டும் நிரூபித்திருக்கிறது. இதைத்தான் பகத்சிங் உயர்த்திப்பிடித்து, நடைமுறைப்படுத்தி வந்தார்.
பகத்சிங்கின் சிந்தனைத் தெளிவு தொடர்கிறது
பகத்சிங்கின் சிந்தனைத் தெளிவு, இன்றும் நம் போராட்டங்களில் செல்வாக்கு செலுத்துவது தொடர்கிறது. பகத்சிங்கின் நவஜவான் பாரத் சபையின் ஆறு விதிகளில், இரண்டு பின்வருமாறு: “1. வகுப்புவாத அமைப்புகளுடன் அல்லது வகுப்புவாத சிந்தனைகளைப் பரப்புகின்ற அமைப்புகளுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை. 2. மதம் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை என்று கருதும் விதத்தில் மக்கள் மத்தியில் பொது சகிப்புத்தன்மையை உருவாக்குவது, அதன் அடிப்படையில் முழுமையாகச் செயல்படுவது.”
பகத்சிங், தங்களுடைய இந்துஸ்தான் குடியரசு சேனை என்னும் பெயரை, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனை
(HSRA-Hindustan Socialist Republican Army) என்று மாற்றியமைத்தபின்னர் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரிலேயே, அனைத்துவிதமான மத வகுப்புவாதங்களுக்கும், சமயச் சடங்குகளுக்கும் தடையைப் பிறப்பித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, (பிறப்பால் சர்தார் ஆக விளங்கிய) பகத்சிங், தன் தலைமுடிக்கும், தாடிக்கும் விடை கொடுத்தார். இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் அறிக்கை (manifesto), “இளைஞர்களைப் பீடித்திருக்கக்கூடிய, கொத்தடிமை சிந்தனைகளிலிருந்தும், மத மூடநம்பிக்கைகளிலிருந்தும் விடுபடுவதற்கான விருப்பத்தில், இளைஞர்களின் அமைதியின்மையில் புரட்சியின் வருகையைப் பார்த்தது.”
பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் அந்நிய மற்றும் உள்நாட்டு சுரண்டல்காரர்களுக்கு இடையேயான தொடர்பினை அறிந்திருந்தார்கள். இவ்வாறு அவர்கள், சுதந்திரத்தை மனிதனுக்கு மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் இணைத்தார்கள். பகத்சிங், சிறையிலிருந்து எழுதிய செய்தியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்: “விவசாயிகள் தங்களை, அந்நிய நுகத்தடியிலிருந்து மட்டுமல்ல, நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் நுகத்தடிகளிலிருந்தும் விடுவித்தக் கொள்ள வேண்டியிருக்கிறது.”
தில்லி வெடிகுண்டு வழக்கு
தில்லி வெடிகுண்டு வழக்கு விசாரணையின்போது, பகத்சிங்கும், படுகேஸ்வர் தத்தும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் போதும், நீதிமன்றத்திலிருந்து வெளியேறும்போதும், “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டார்கள். இந்த முழக்கத்தின் பொருள் என்ன என்று நீதித்துறை நடுவர் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் எழுத்துபூர்வமான பதிலை அவருக்குச் சமர்ப்பித்தார்கள். 7 மற்றும் 8 என்று எண்ணிடப்பட்ட, அதன் கடைசி இரண்டு பத்திகளை, இங்கே கீழே இணைத்திருக்கிறோம். இதில் அவர்கள், சுதந்திரத்திற்கான போராட்டத்தையும், சோசலிசத்திற்கான போராட்டத்தையும் அற்புதமான தெளிவுடன் இணைத்திருக்கிறார்கள். இவை, அனைவருக்குமான நவீன இந்தியா குறித்து பகத்சிங்கிற்கும் அவருடைய புரட்சித் தோழர்களுக்கும் இருந்த தொலைநோக்குப் பார்வையை உயர்த்திப்பிடிக்கிறது. (இந்தப் பதில், 1929 ஜுன் 9 அன்று மாவட்ட அமர்வு நீதிபதியின் உத்தரவின்படி பதிவுருக்களிலிருந்து நீக்கப்பட்டது. அவர்கள் தியாகிகளான பின் ஐம்பதாண்டுகள் கழித்து, 1981 மார்ச்சில் தேசிய ஆவணக் காப்பகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.)
(7) பகத்சிங் ஆகிய என்னிடம், ‘புரட்சி’ (இன்குலாப்) என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கீழமை நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், புரட்சி என்பது ரத்தம் சிந்தும் போராட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அங்கே தனிநபர் பழிதீர்க்கும் பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சி என்பதற்கு ‘வெளிப்படையான அநீதியின் அடிப்படையில் இப்போது இருக்கிற அமைப்பு மாற்றப்பட வேண்டும்’ என்றே நாங்கள் பொருள் கொள்கிறோம். உற்பத்தி செய்பவர்கள் அல்லது தொழிலாளர்கள் சமூகத்தின் அடிப்படை மூலக்கூறாக இருந்த போதிலும்கூட, அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன. அவர்களின் அடிப்படை உரிமைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன. ஒரு பக்கத்தில் அனைவருக்கும் உணவை உற்பத்தி செய்து அளித்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறார், உலகத்தில் உள்ள அனைவருக்கம் நவீன ஆடைகளை அணிவதற்கு உலகச் சந்தைக்கு துணிகளை விநியோகித்திடும் நெசவாளர் தன்னையோ, தன் குழந்தைகளையோ முழுமையாகப் போர்த்திக்கொள்ளும் அளவிற்கு ஆடைகளின்றி இருக்கிறார். அற்புதமான அரண்மனைகளைக் கட்டி எழுப்புகின்ற கொத்தனார்கள், கருமான்கள்(smiths), ஆசாரிகள் (carpenters), சேரிகளில் உழன்றுகொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில், சமூகத்தின் ஒட்டுண்ணிகளாக விளங்கும் முதலாளித்துவ சுரண்டல்காரர்கள், தங்கள் விருப்பத்திற்கிணங்க லட்சக்கணக்கில் விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பயங்கரமான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வாய்ப்புகள் அளிக்கப்படுவதில் வலிந்துதிணிக்கப்படும் பாரபட்சம், பெருங்குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமை என்றென்றும் நீடித்திருக்க முடியாது. எரிமலையின் விளிம்பின்மீது சுரண்டல்காரர்களின் அப்பாவிக் குழந்தைகளும், சுரண்டப்படுபவர்களின் பல லட்சக்கணக்கான குழந்தைகளும் ஓர் ஆபத்தான செங்குத்துச் சரிவில் நடந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் இன்றைய சமூக அமைப்பு சந்தோஷமாக ஆடிப்பாடிக்கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகும். இந்த நாகரிகத்தின் (civilization) ஒட்டுமொத்த கம்பீரமான கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், நொறுங்கி வீழ்ந்துவிடும். எனவே, ஒரு புரட்சிகர மாற்றம் அவசியம். சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டியது, இதனை உணர்ந்த ஒவ்வொருவரின் கடமையுமாகும். இதனைச் செய்யாவிட்டால், மற்றும் மனிதனை மனிதன் சுரண்டுவதற்கும், ஏகாதிபத்தியமாக முகமூடி அணிந்துகொண்டு தேசங்களை தேசங்கள் சுரண்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், மனிதகுலம் இன்றையதினம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பதுயரங்கள் மற்றும் படுகொலைகள் தடுக்கப்பட முடியாவிட்டால், யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் உலகளாவிய அமைதிக்குக் கட்டியங்கூற வேண்டும் என்றும் கூறுவதெல்லாம் சந்தேகத்திற்கு இடமில்லாதவகையில் பாசாங்குத்தனமாகும். புரட்சி என்பதன் மூலம் நாங்கள் புரிந்துகொண்டிருப்பது, தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்பதும், இது எவராலும் அச்சுறுத்தப்பட முடியாத அளவிற்கு அமைந்திடும் என்பதுமாகும். இதன் விளைவாக அமைந்திடும் உலக சம்மேளனம் மனித குலத்தை முதலாளித்துவத்தின் அடிமைத்தளையிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்களின் துன்ப துயரங்களிலிருந்தும் மீட்டிடும்.
(8) இதுவே எங்கள் சித்தாந்தம். எங்கள் உத்வேகத்திற்கான இந்த சித்தாந்தத்துடன், நாங்கள் ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கை விடுக்கிறோம். எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால் மற்றும் இப்போதைய அரசமைப்பு முட்டுக்கட்டையாக இருப்பது தொடருமானால், அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியும் விதத்தில், நன்றாக இருக்கின்ற இயற்கையான சக்திகள், ஒரு கடுமையான போராட்டத்தை நடத்தி, புரட்சியின் லட்சியங்களை நிறைவேற்றும் விதத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவிடும்.
புரட்சி, மனிதகுலத்தின் தவிர்க்கமுடியாத உரிமை. சுதந்திரம் அனைவரின் விவரிக்கமுடியாத பிறப்புரிமை. தொழிலாளர்கள்தான் சமூகத்தின் உண்மையான பராமரிப்பாளர்கள். மக்களின் இறையாண்மை தொழிலாளர்களின் இறுதி விதியாக இருந்திடும்.
இந்த லட்சியங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக எவ்வளவு துன்பங்கள் எங்கள் மீது ஏவப்பட்டாலும் அவற்றை நாங்கள் வரவேற்போம். புரட்சியின் பலிபீடத்திற்கு நாங்கள் எங்கள் இளைஞர்களைத் தூபமாகக் கொண்டு வந்திருக்கிறோம். அற்புதமான லட்சியத்திற்காக அர்ப்பணித்துக்கொள்வதைவிட உயர்ந்த தியாகம் எதுவுமில்லை. நாங்கள் திருப்தி மனப்பான்மையுடனேயே இருக்கிறோம். புரட்சியின் வருகையை எதிர்பார்க்கிறோம்.
“புரட்சி நீடூழி வாழ்க.”
இன்றைய சூழல்
இவ்வாறு, இன்றைய சூழலில், குடியுரிமைத் திருத்தச் சட்டம்/தேசிய மக்கள்தொகைப் பதிவேடு/தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம், ஆழமாகவும், அகலமாகவும் வளர்ந்திருக்கிற நிலையில், மோடி அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் துன்ப துயரங்கள் அதிகரிக்கும் விதத்தில் சுரண்டல் கொள்கைகளை அதீதமான முறையில் பின்பற்றி வருகிறது. பொருளாதார மந்தம் நாட்டின் சொத்துக்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும், வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பணத்தை அந்நிய மற்றும் உள்ளூர் கார்ப்பரேட்டுகளின் ஆதாயத்திற்குத் திருப்பிவிடும் விதத்திலும் சூறையாடுவதுடன் இணைத்திருக்கிறது.
இவை அனைத்தும், தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றும்விதத்தில் தொழிலாளர் சீர்திருத்தங்கள் மூலமாக உழைக்கும் மக்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதுடனும், ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கூறும் அனைவரையும் “தேசத் துரோகிகள்” என்று முத்திரை குத்தி அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள்மீது தாக்குதல் தொடுப்பதுடனும், பகுத்தறிவாளர்கள் மீது தாக்குதல் தொடுப்பதுடனும் இணைந்திருக்கிறது. இன்றைய தாக்குதல்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்களை வலுப்படுத்த அனுமதிப்பதற்கான உரிமைகளைப் பாதுகாத்திட, இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களுடன், இந்தப் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திட, மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதகாத்திட, நாட்டிலுள்ள பல்வேறு சமூகத்தினருக்கும் மத்தியில் நிலவும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்திட, இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதகாப்பது மிகவும் அவசியமாகும்.
இவ்வாறு, பகத்சிங், தூக்கிலிடப்பட்ட தியாக தினம் 90 ஆண்டுகள் கழிந்த பின்னரும், அவருடைய வாழ்வும் பணியும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தச் செல்லவும், வலுப்படுத்தவும் நமக்கு உத்வேகம் அளித்து, வழிகாட்டும் ஒளிவிளக்காக இருப்பது தொடர்கிறது.
(தமிழில்: ச. வீரமணி)
புரட்சியாளர் பகத்சிங் கட்டுரை சிவவர்மா – தமிழில்: ச.வீரமணி
சிவவர்மா
(தமிழில்:ச.வீரமணி)
(பகத் சிங் பற்றி தோழர் சிவவர்மா எழுதிய கட்டுரை இங்கு தரப்படுகிறது. சிவவர்மா, பகத்சிங்கின் தோழர். அவருடன் இணைந்து வெள்ளையருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். பகத்சிங் கைதான வழக்கில் குற்றவாளியாக இணைக்கப்பட்ட சிவவர்மா வயதில் இளையவர் என்பதற்காக ஆயுள் தண்டனை பெற்றவர். பகத்சிங் வரலாறு குறித்து ஒரு நூலும் எழுதியுள்ளார்.)
1980களில் ஒரு நாள், நான் கான்பூரிலிருந்து லக்னோவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், நான் அப் போதுதான் படித்து முடித்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அது, பகத்சிங் எழுதிய ‘‘நான் ஏன் நாத்திகன்?’’ ஆகும். ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘‘இந்த அளவிற்கு ஆழமான விஷயங்களை எழுதக்கூடிய அள விற்கு, உண்மையில் அவன் திறமை படைத்தவனா?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் தத்துவத்துறை விரிவுரையாள ராகப் பணியாற்றுகிறாராம். ஒரு புரட்சியாளன் பற்றி அவர் வைத்திருந்த மதிப்பீடே அலாதியானது. உயரமாக, உறுதிமிக்கவனாக இருப்பான், அவன் மண்டையில் ஒன்றும் இருக்காது, நிறைய வெடிகுண்டுகளும், ரிவால்வர்களும் வைத்திருப்பான், தன்னல மறுப்பும் தைரியமும் கொண்டிருந்தாலும் மனிதர்களைக் கொல்வதில் இன்பம் காணும் பேர்வழி, ரத்த தாகம் எடுத்த அதிதீவிரவாதி. ஆயினும் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த இளைஞர்கள் அவ்வளவு அறிவு பெற்றிருக்க மாட்டார்கள். இதேபோன்று பலர் புரட்சியாளர்கள் குறித்துச் சொல்லும் கதைகளையே இவரும் இதுவரை கேட்டிருந் திருக்கிறார். இத்தகைய மனிதர்கள் குறித்து இரக்கப்படுவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்? ஆனாலும் நம் வீரத்தியாகிகள் குறித்து வேண்டும் என்றே சீர்குலைவுப் பிரச்சாரம் மேற்கொள்வோர் குறித்து நாம் என்ன நிலை எடுப்பது?
ஒரு சமயம், 1950களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடப் புத்தகம் ஒன்றைப் புரட்டிப் பார்த்தேன். அதில் ஆசாத் குறித்து ஓர் ஐந்தாறு பத்திகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ‘‘சந்திரசேகர் ஆசாத்’ என்னும் உள் தலைப்பில், ஆசாத் ரத்தம் சிந்துவதிலும், கொள்ளையடிப்பதிலும் நம்பிக்கை கொண் டவன் என்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக நாடு அவனது போராட்டப் பாதையை ஏற்றுக் கொள்ளாமல் காந்திஜியின் பாதையைத் தேர்ந்தெடுத்தது என்றும் அதை எழுதிய நபர் குறிப்பிட்டிருந்தார். ஏ.எல். ஸ்ரீவஸ்தவா என்கிற அந்த நபர், புரட்சியாளர்கள் குறித்து இவ்வளவு இழிவாக எழுதியிருந்ததை என் னால் நம்புவதற்கே மிகவும் கடினமாக இருந் தது. இந்த நபர் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் தயவால், புகழ் பெற்ற வரலாற்றாசிரியராகக் கருதப்பட்டவர். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று விட்டாலும், அவர்கள் உருவாக்கிய அடிமை கள் அடிமைப்புத்தியுடன் இன்னும் இருந்து வருகிறார்கள் என்பதும், வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய அடிமைப்புத்தி இன்றும் அவர்களை விட்டு நீங்கிடவில்லை என் பதும் இதிலிருந்து தெளிவாகிறது. அதனால் தான் இப்பேர்வழி, புரட்சியாளர்களை ரத்த தாகம் எடுத்த பேய்கள் என்றும், இவர் களுக்கு வாழ்க்கையில் எவ்விதமான கொள் கையும் லட்சியமும் குறிக்கோளும் கிடை யாது என்றும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள்.
இதேபோன்ற கருத்துக்கள் பரப்பப்படு வதற்கு நம்முடைய பழைய புரட்சியாளர்கள் சிலரும் காரணமாவார்கள். நம் மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக நம் இளைஞர் களில் சிலர், நம் வீரத் தியாகிகளின் வீரத்தையும், அவர்கள் நாட்டிற்காகப் புரிந்திட்ட வீரசாகசங்களையும் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காக, நம் பழைய புரட்சியாளர்கள் குறித்து மிகைப் படுத்தி – பல சமயங்களில் மிகவும் அபத்தமான அளவிற்கு – கதைகளை அளக்கத் தொடங்கினார்கள். உண்மையில் நடந்த நிகழ்வுகளுக்கும் இவர்கள் விட்ட சரடு களுக்கும் சம்பந்தமே இருக்காது. எனவே, ஒட்டுமொத்த விளைவு என்பது, அநேகமாக அதே போன்றதுதான். பகத்சிங் உண்மையில் எப்படிப்பட்ட நபர் என்பதை சாமானிய மக்கள் அறிய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, பகத்சிங், நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவர் என்றும், லாலாஜியைக் கொன்றதற்காக, சாண்டர்ஸ் என்கிற வெள்ளை அதிகாரியைப் பழிக்குப்பழி வாங்கிய வீரர் என்றும்தான் அறி வார்கள். அதே பகத்சிங், பல்வேறு திறமைகள் பெற்றிருந்த ஒரு மாபெரும் அறிவுஜீவி என்பது பலருக்குத் தெரியாது. அதன் காரணமாகத்தான் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த் தப் பகுதியை – அதிலும் குறிப்பாக பகத்சிங் நிலையினைச் சீர்குலைப்பது என்பது பல ருக்கு எளிதாக இருக்கிறது. தங்களுக்கேற்ற வகையில் புரட்சி இயக்கத்திற்கு உருவம் கொடுப்பதற்கு இறங்கியிருக்கிறார்கள். எனவே அத்தகைய சீர்குலைவு நடவடிக் கைகளை எதிர்த்துப் போராடுவதென்பது இன்று நம்முன் உள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. நம் அனைவரையும் விட பகத்சிங் ஒரு மாபெரும் அறிவுஜீவியாவார். தூக்குக் கயிற்றில் ஏற்றுபவன் அவர் வாழும் உரிமையைப் பறித்தெடுக்க வந்த சமயத்தில் வாழ்வின் 24ஆவது வசந்தத்தை அனுபவிக்கக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. ஆயினும், வாழ்வின் அந்தக் குறுகிய காலத்திற்குள்ளேயே, அரசியல், கடவுள், மதம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், அழகு, தற்கொலை, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஆய்வுப் பொருள்களிலும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்து விட்டார். அவர் புரட்சி இயக்கத்தின் வரலாற்றை, அதனுடைய தத்துவார்த்தப் போராட்டம் மற்றும் வளர்ச்சிப் போக்குகள் ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்து, அவற்றிலிருந்து சரியான முடிவுகளுக்கு வந்திருந்தார். பகத்சிங்கை முறையாகப் புரிந்து கொண்டு, சரியாகப் பாராட்ட வேண்டுமானால், அவர் வாழ்ந்த பின்னணியையும் நாம் சற்றே ஆழ்ந்து பரிசீலித்துப் பார்க்க வேண்டியது அவசியம். இதற்கு நாம், புரட்சி இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி வரலாறு குறித்து குறைந்தபட்சமாவது தெரிந்து கொள்வது அவசியம்.
புரட்சி இயக்கத்தை, புரட்சியாளர்களை எவ்வாறு விளிப்பது? பலவிதமான கட்டுரையாளர்கள் பல பெயர்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பயங்கரவாதிகள், புரட்சிகரப் பயங்கரவாதிகள், பயங்கரவாதப் புரட்சியாளர்கள், தேசியப் புரட்சியாளர்கள், அராஜகவாதிகள் – இப்படி எண்ணற்ற பெயர்களில் விளித்திருக்கிறார்கள். இவை எதுவுமே பொருத்தமான சொற்றொடராக நான் கருதவில்லை. புரட்சியாளர்கள் மிகவும் பரவலாக ‘பயங்கரவாதிகள்’ என்றே விளிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது வேண்டும் என்றே கறை பூச வேண்டும் என்று நினைத்தவர்கள் மட்டுமல்ல, அவர்கள் மீது உளமார மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர்கள் கூட அவ்வாறு விளித்தார்கள். ஓர் இயக்கம் என்பது, தான் ஏற்றுக் கொண்டிருக்கிற அடிப்படைக் கொள்கை மற்றும் போராட்டங்களின் அடிப்படையிலேயே அழைக்கப்பட வேண்டும். மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அது மேற்கொண்ட நடவடிக் கைகளின் அடிப்படையில் அழைக்கப்படக் கூடாது. சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல் நடவடிக்கைகளும் மாறுபடும். ஆனால் அடிப்படைக் கொள்கை மாறாது. மேலும், பயங்கரவாதம் என்பது புரட்சியாளர்களின் இலக்காக எப்போதும் இருந்தது கிடையாது. பயங்கரவாதத்தின் மூலமாக மட்டுமே சுதந்திரத்தை அடைந்துவிட முடியும் என்று அவர்கள் எப்போதும் நம்பியதுமில்லை. ஓர் இடைக்கால ஏற்பாடாகத்தான் எதிர்-பயங்கரவாத நடவடிக்கையை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
டாக்டர் ஜி. அதிகாரி மற்றும் சிலர் அவர்களை ‘தேசியப் புரட்சியாளர்கள்’ என்று விளிக்கிறார்கள். இந்தச் சொற்றொடரும் தவறான பொருளைத் தருவதாகவே கருதுகிறேன். இந்தியப் புரட்சியாளர்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் தேசியவாதிகளாக மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் சர்வதேசியத்திற்கும் சம்பந்தமே இல்லை என்ற கருத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கு இத்தகைய சொற்றொடர் ஓர் எளிய ஆயுதமாகக் கிடைத்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது. அராஜகவாதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் எந்தவிதமான அரசமைப்பையும் ஏற்கவில்லை. புரட்சியாளர்கள், இவர்களின் பார்வையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருபதுகளில், புரட்சியாளர்கள் ‘வெடிகுண் டின் தத்துவம்’ என்று அழைக்கப்பட்ட அவர்களுடைய அறிக்கையின் மூலமாக, தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரத்துக்காக நிற்கிறோம் என்று பிரகடனம் செய்தார்கள். மேலே குறிப் பிட்ட அனைத்துக் காரணங்களினாலும், இன்னும் சரியான சொற்றொடர் கிடைக்காதத னாலும், நாம் அவர்களை மிக எளிய வார்த்தைகளில் ‘புரட்சியாளர்கள்’ அல்லது ‘இந் தியப் புரட்சியாளர்கள்’ என்றே அழைத்திடலாம்.
அரசமைப்புச்சட்டம் எதிர்கொள்ளும் சவால்கள் கட்டுரை – தமிழில்: ச. வீரமணி
எச்.என். நாகமோகன் தாஸ்,
ஓய்வூபெற்ற நீதிபதி
(தமிழில்: ச. வீரமணி)
சுதந்திரம் பெற்ற நாடுகள் அனைத்தும் குடியரசு நாடுகள் அல்ல. ஆனால் அனைத்துக் குடியரசுகளும் சுதந்திரம் பெற்ற நாடுகளாகும். ஒரு சுதந்திர நாடு எழுத்துபூர்வமாக ஓர் அரசமைப்புச்சட்டத்தை நிறைவேற்றும்போது, பின் அது குடியரசு நாடாக மாறுகிறது. இந்தியா 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர நாடாக மாறியது. ஆயினும் இந்தியா, அது 1950 ஜனவரி 26 அன்று உலகின் மிகப்பெரிய அரசமைப்புச்சட்டத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, அன்றுமுதல் குடியரசு நாடாக மாறியது. எனவே, இந்தியா என்பது சுதந்திர நாடுமாகும், குடியரசு நாடுமாகும்.
நம் அரசமைப்புச்சட்டத்தில் என்ன இருக்கிறது?
நம் இந்திய அரசமைப்புச்சட்டம் 22 பாகங்களையும் (parts) 12 அட்டவணைகளையும் (schedules) 448 பிரிவுகளையும் (articles) உள்ளடக்கியதாகும். இந்திய அரசமைப்புச்சட்டத்தின் சிறப்பு அம்சம் அதன் முகப்புரையாகும். முகப்புரையானது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றும் நாடாளுமன்ற அமைப்பு முறையைக் கொண்டுள்ள இறையாண்மை, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசுடன் உள்ள அரசாங்க அமைப்பு முறையைக் கொண்டுள்ளது என்றும் விவரிக்கிறது. அரசமைப்புச்சட்டம் உணர்வில் ஒன்றுபட்டும், அதே சமயத்தில் ஒரு கூட்டாட்சி அமைப்புமுறையையும் நிறுவுகிறது. அரசமைப்புச்சட்டமானது நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள்(legislative), ஆட்சிபுரிவோர் (executive) மற்றும் நீதித்துறை(judiciary) என்று அழைக்கப்படும் மூன்று அங்கங்களுக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நீதி வழங்குவதற்கான பொறுப்பையும், அவர்களுக்குச் சிந்தனை சுதந்திரத்தையும், பேச்சு சுதந்திரத்தையும், எந்தக் கடவுளையும் நம்பும் சுதந்திரத்தையும், வணங்கும் சுதந்திரத்தையும், அந்தஸ்திலும், வாய்ப்பிலும் சமத்துவத்தையும், அவர்கள் மத்தியில் சகோதரத்துவத்தை மேம்படுத்திடவும், தனிநபர் கண்ணியத்தை எய்திடவும், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்திடும் பொறுப்பையும் கூட்டாக அளித்திருக்கிறது. அரசமைப்புச்சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கும், தனியாகவும், கூட்டாகவும் சில அடிப்படை சுதந்திரங்களையும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், சம அளவில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் பொது வேலை வாய்ப்பில் சம அளவில் வாய்ப்புகள் அளிக்கிறது.
அரசமைப்புச்சட்டம் மதத்தின் பேராலும், இனத்தின் பேராலும், சாதியின் பேராலும், பாலினத்தின் பேராலும், பிறப்பிடத்தின் பேராலும் பாகுபாடு காட்டப்படுவதற்குத் தடை விதிக்கிறது. பேச்சுரிமை, கருத்தை வெளிப்படுத்தும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் வைக்கும் உரிமை, எந்தத் தொழிலையும் மேற்கொள்ளும் உரிமை அளிக்கிறது. சுரண்டலுக்கு எதிராக உரிமை அளிக்கிறது. அனைத்துவிதமான கட்டாய ஓய்வுக்கும், குழந்தைகளைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும், பெண்டிர் பரத்தமையில் ஈடுபடுத்தப்படுவதற்கும் தடை விதிக்கிறது. மனசாட்சி சுதந்திரம் அளிக்கிறது, எவரும் எம்மதத்தையும் பின்பற்ற, பிரச்சாரம் செய்திட சுதந்திரம் அளிக்கிறது. குடிமக்கள் தங்கள் கலாச்சாரத்தை, மொழியை மற்றும் எழுத்துக்களைப் பேணிப்பாதுகாத்திட உரிமை அளிக்கிறது.
அரசமைப்புச்சட்டத்தின் 42ஆவது திருத்தத்தின்கீழ் நாம் அரசமைப்புச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைப் பின்பற்றி நடக்கவும், நம் சுதந்திரப் போராட்டத்திற்கு நமக்கு உத்வேகம் அளித்திட்ட உயர்ந்த சிந்தனைகளைப் பின்பற்றவும், நம் நாட்டைப் பாதுகாத்திடவும், நாடு கோரும் பட்சத்தில் நாட்டிற்குச் சேவை செய்திடவும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தைப் பேணவும், சகோதர உணர்வை ஏற்படுத்தவும், பல்வேறு மதத்தினரிடையேயும், மொழியினரிடையேயும், பிராந்திய மக்களிடையேயும் உள்ள வேறுபாடுகளையெல்லாம் கடந்த அவர்களிடையே அறிவியல் மனப்பான்மையைப் பரப்பிடவும் வகை செய்கிறது.
மாநில அரசாங்கம், தன்னுடைய கொள்கையை அனைத்து மக்களுக்கும் போதுமான அளவிற்கு வாழ்வாதாரங்களை அளிக்கக்கூடிய விதத்திலும், சம வேலைக்கு சம ஊதியம் அளிக்கக்கூடிய விதத்திலும் கொள்கைகளை வகுத்திடக்கூடிய விதத்திலும் அரசமைப்புச்சட்டம் அமைந்திருக்கிறது. மேலும் தனக்கிருக்கின்ற பொருளாதாரத் திறனுக்கேற்ப மாநில அரசாங்கம் அனைவருக்கும் வேலை உரிமையைப் பெற்றுத்தரவும், வேலையின்மை, வயது முதிர்ச்சி, நலிவடைதல், இயலாமை மற்றும் தகுதியற்ற தேவை (undeserved want) போன்ற சமயங்களிலும், அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுத்தர வலுவான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடிய விதத்திலும் அரசமைப்புச்சட்டம் கொள்கைகளை வகுத்திருக்கிறது. மேலும் மாநில அரசாங்கங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஊதியம் (living wage) பெற்றுத்தரவும், வேலைபுரியும் இடங்களில் மனிதர்கள் வாழக்கூடிய விதத்தில் நிலைமைகளை உருவாக்கித்தருவதற்கும் மற்றும் நாகரிகமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதற்கும் அரசாங்கங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசமைப்புச்சட்டம் கூறுகிறது.
நாட்டின் சொத்துக்கள் அனைத்துக் குடிமக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் விதத்தில் அரசாங்கத்தின் கொள்கைகள் இருந்திட வேண்டும் என்றும் கூறுகிறது. நாட்டின் செல்வமும் உற்பத்திச் சாதனங்களும் பொதுவாகத் தீங்கு பயக்கக்கூடிய விதத்தில் ஒருசிலரிடம் குவிவதற்கும் வழிவகுக்கக்கூடாது என்றும் கூறுகிறது.
அரசமைப்புச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள மற்றும் சில முக்கியமான கட்டளைகள், குழந்தைகளின் சுகாதார வளர்ச்சிக்கு வசதியும் வாய்ப்பும் அளித்திட வேண்டும் என்றும், 14 வயது வரையிலும் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்றும், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் நலிவடைந்த இதர பிரிவினருக்கான கல்வி மற்றும் பொருளாதார நலன்களையும் மேம்படுத்திட வேண்டும் என்றும் கூறுகின்றன.
அரசமைப்புச் சட்டத்தில், அரசமைப்புச்சட்டத்தின் மேலாதிக்கம் (supremacy of the constitution), நாட்டின் இறையாண்மை, நாடாளுமன்ற ஜனநாயகம், க்ஷேமநல அரசு (welfare state), மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற சில அடிப்படை அம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
சாதனைகள் (achievements)
இந்தியக் குடியரசு சில சாதனைகளையும் ஈட்டி இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் ஒட்டுமொத்த பரப்பளவும் ஒரே அரசியல் ஆட்சியின் கீழ் எப்போதுமே கொண்டுவரப்படவில்லை. அது குப்தர்களின் இந்தியாவாக இருந்தாலும் சரி, மௌர்யர்களின் இந்தியாவாக இருந்தாலும் சரி, மொகலாயர்களின் இந்தியாவாக இருந்தாலும் சரி அல்லது பிரிட்டிஷ் இந்தியாவாக இருந்தாலும் சரி. நாம் சுதந்திரம் பெற்ற சமயத்திலும் கூட, இந்தியாவில் சுமார் 600 மன்னர் சமஸ்தானங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் ஆட்சி செய்து வந்தன. சுதந்திரம் பெற்றபின் நாம் மன்னராட்சியை, நிலப்பிரபுத்துவத்தை மற்றும் காலனித்துவ ஆட்சியை ஒழித்துக்கட்டியிருக்கிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மக்களையும் ஒரே அரசியல் ஆட்சியின் கீழ், ஒரே எல்லைக்குள், ஒரே அரசமைப்புச்சட்டத்திற்குள், ஒரே தேசிய கீதத்தின்கீழ், ஒரே தேசியக் கொடியின் கீழ், ஒரே தேசிய அடையாளத்தின்கீழ் கொண்டு வந்திருக்கிறோம். அரசமைப்புச்சட்டம் வந்தபின்னர்தான் உண்மையான இந்தியா அமலுக்கு வந்திருக்கிறது.
நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்டியபின்னர் நாம் ஒன்றியத்தின்கீழ் மக்களவை மற்றும் மாநிலங்களவை போன்ற ஜனநாயக அமைப்புகளையும், மாநிலங்களில் சட்டமன்ற பேரவை மற்றும் மேலவைகளையும், குடியரசுத் தலைவர், ஒன்றிய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள், மாவட்ட பஞ்சாயத்துகள், வட்ட/வட்டாரப் பஞ்சாயத்துக்கள், கிராமப் பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் வட்ட அளவிலான நீதிமன்றங்கள் போன்று நீதித்துறை அமைப்புகளையும் உருவாக்கி இருக்கிறோம்.
நாம், நிலச் சீர்திருத்தங்கள், வேளாண் சீர்திருத்தங்கள், தொழில்துறை சீர்திருத்தங்கள், கல்வி சீர்திருத்தங்கள், சுகாதார சீர்திருத்தங்கள் போன்று எண்ணற்ற சீர்திருத்தங்களையும் கொண்டு வந்திருக்கிறோம்.
நாம் 1947இல் சுதந்திரம் பெற்ற சமயத்தில் எழுத்தறிவு விகிதம் என்பது வெறும் 15 முதல் 16 விழுக்காடு அளவிற்கே இருந்தது. இதனை இப்போது சுமார் 79 விழுக்காடு அளவிற்கு மேம்படுத்தி இருக்கிறோம். சுமார் 70 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்தார்கள். இதனை இப்போது 21 விழுக்காட்டிற்குக் கீழ் என்ற அளவிற்குக் கொண்டுவந்திருக்கிறோம். மக்களின் சராசரி ஆயுள் என்பது 32 வயதாக இருந்ததை இப்போது சுமார் 69 வயதாக உயர்த்தி இருக்கிறோம். ஆண்டின் உணவு உற்பத்தி 50 மில்லியன் டன்களாக இருந்ததை இன்றைய தினம் 295 மில்லியன் டன்களாக உயர்த்தி இருக்கிறோம். வேலைவாய்ப்பு, தங்குமிடம், சுகாதாரம், குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. வறுமை, பசி-பட்டினி, பஞ்சம், வெள்ளம் மற்றும் தொத்துநோய்கள் முதலானவை மிக விரிவான அளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. விண்வெளி தொழில்நுட்பத்திலும், தகவல் தொழில்நுட்பத்திலும், அணுமின் எரிசக்தி, சேவைத் துறை முதலானவற்றில் இந்தியா உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக மிளிர்கிறது.
பெண்கள், பிற்பட்டோர், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் வாழ்நிலைமைகளில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இப்பிரிவினர் இப்போது நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள், அரசு எந்திரம் மற்றும் நீதித்துறையிலும் நுழைந்திருக்கிறார்கள். கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், விளையாட்டு, இதழியல் முதலான துறைகளிலும் அவர்கள் நல்ல பெயர் எடுத்திருக்கிறார்கள்.
நாட்டில் பல்வேறு மாறுபட்ட மதங்கள், சாதிகள், மொழிகள், கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் இருந்தபோதிலும், பல்வேறு அணுகுமுறைகளுடனான, பல்வேறு சிந்தனைகளுடனான பல்வேறு அரசியல் கட்சிகள் இயங்கிவந்தாலும், நம் அரசமைப்புச்சட்டத்தின் உதவியுடன் அரசாங்கங்கள் அமைத்து, செயல்பட்டு வருகிறோம், குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல்கள் நடத்தி அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்களையும் செய்து வருகிறோம்.
தொடரும் பிரச்சனைகள்
இவ்வாறு எண்ணற்ற சாதனைகளை நாம் பெற்றிருந்தபோதிலும், இப்போதும் நாம் எழுத்தறிவற்றவர்களாக, வேலையில்லாதவர்களாக, வீடற்றவர்களாக மற்றும் ஆதரவற்றர்களாக ஒருசிலரைப் பெற்றிருக்கிறோம். சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதிகள், மின்சாரம் போன்றவற்றை இன்னமும் அனைவருக்கும் வழங்கமுடியாத நிலை இருந்து வருகிறது. நாடு வேளாண்மை மற்றும் தொழில் நெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. நான் ஒரு அவநம்பிக்கையுள்ள நபர் (pessimistic) அல்ல, நான் ஒரு நம்பிக்கைவாதி (optimistic) தான். நம் கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று இன்னும் சற்றே உழைத்தோமானால், நவீன அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளைப் பயன்படுத்தி ஆட்சி புரிந்து, சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தோமானால், நாம் ஒருசில ஆண்டுகளிலேயே நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.
எதிர்கொண்டிருக்கும் சவால்கள்
ஆனாலும், இன்றையதினம் நம் முன் எண்ணற்ற சவால்களை நாம் எதிர் கொண்டிருக்கிறோம். இந்த சவால்களை நாம் எதிர்த்து நின்று முறியடிக்காவிட்டால், நாம் நம் அரசமைப்புச்சட்டத்தைக் காப்பாற்றுவது என்பது சாத்தியமில்லை. எனவே, இந்த சவால்களை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். சிறிதுகாலத்திற்கு முன் நான், அரசியலற்றமயமாக்கல் (depoliticalisation), பயங்கரவாதம், மதவெறி/மதவாதம்/வகுப்புவாதம் (communalism), கிரிமினல்மயம் (criminalisation), ஊழல் (corruption), வணிகமயம்(commercialisation), கலாச்சாரச் சீரழிவு (cultural degeration) போன்ற முக்கிய சவால்களை எழுதியிருந்தேன். இப்போதும்கூட இந்தச் சவால்கள் நம்மை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. இப்போது நாம் புதிய சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம். இவற்றை நாம் சரிசெய்யாவிட்டால், பின் நம் ஒட்டுமொத்த நாடும் அழிந்துவிடும்.
அவையாவன:
தேர்தல்கள்:
இன்றையதினம் ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் வரையிலும் வாக்களிப்பவர்கள் மதம், சாதி, பண பலம், புஜ பலம் போன்றவற்றிற்கு இறையாகும் பாதிப்புகள் அதிகமாகி இருக்கின்றன. பண பலமும், மிகவும் கொடூரமான கிரிமினல் குற்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் கூட பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதும், நேர்மையான, உண்மையான வேட்பாளர்கள் தங்கள் பிணைத்தொகையைக் கூட இழப்பது என்பதும் சர்வசாதாரணமாகி விட்டன. பண பலம் மிக்கவர்களும், கிரிமினல்களும் வெற்றி பெறும் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மறுபக்கத்தில் கல்வியாளர்கள், நன்னெறி மிக்கவர்கள், வல்லுநர்கள், மதிப்புமிக்கவர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடுவது என்பது குறைந்துகொண்டிருக்கிறது. கிரிமினல் பேர்வழிகளும், அரசியல்வாதிகளின் குழந்தைகளும், உறவினர்களும், வர்த்தகர்களும், ரியல் எஸ்டேட் பேர்வழிகளும் தேர்தல் களத்திற்கு வருவது அதிகமாகி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் சட்டமுன்வடிவுகள் எவ்விதமான விவாதமுமின்றி நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சியினரின் கருத்துக்களை மதியாதிருக்கும் போக்கு, சகிப்பின்மை, ஊழல், மோதல்கள் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளில் நாளும் நடைபெறும் சங்கதிகளாக மாறியிருக்கின்றன. நாடு சம்பந்தப்பட்ட அல்லது சாமானியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மீது விவாதம் நடைபெறுவது என்பது அநேகமாக இல்லை. சில சமயங்களில் சாமானிய மக்களின் கோடானுகோடி ரூபாய் வரிப் பணம் வீணாவதுடன், நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த அமர்வே எவ்வித விவாதமும் இன்றி முடிந்துவிடுகின்றன.
அரசமைப்புச்சட்டம் என்னதான் நல்லவிதமானதாக இருந்தபோதிலும், அதனை அமல்படுத்திட வேண்டியவர்கள் மோசமானவர்களாக இருந்தாட்ல அதுவும் மோசமாகிவிடும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறிய எச்சரிக்கையை நினைவு கூர்வது அவசியமாகும்.
உரிமைகள் நசுக்கப்படுதல்
இன்றையதினம் நாம் கடந்த 75 ஆண்டுகளாக அனுபவித்து வந்த உரிமைகளை இழந்து கொண்டிருக்கும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அரசாங்கங்கள் தூர்தர்ஷன் மற்றும் ஆகாஷ்வாணி போன்ற பொது ஊடகங்களைத் தங்களின் ஊதுகுழல்களாக மாற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கின்றன. தனியார் ஊடகங்களுக்கு விளம்பரங்களை வாரி இறைப்பதன் மூலம் அவற்றையும் தங்கள் செல்வாக்கிற்குக் கீழ் கொண்டுவந்துள்ளன. அரசாங்கம் தன்னுடைய அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்து புத்தகங்களை, சினிமாக்களை, ஓவியங்களை, இசை நிகழ்ச்சிகளைத் தடை செய்கின்றன. கலைஞர்களை, சமூகச் செயற்பாட்டாளர்களை, மாணவர்களை, எழுத்தாளர்களை, இதழாளர்களை தேசத் துரோகக் குற்றப்பிரிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், தடுப்புக் காவல் சட்டங்களைத் துஷ்பிரயோகம் செய்து கைது செய்து, சிறையில் தள்ளுகின்றனர். ஜனநாயகரீதியாக போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளை புல்டோசர்களைக் கொண்டு இடித்துத்தரைமட்டமாக்குகின்றனர். இந்த நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும் ஒரு கடுமையான சவாலாக மாறி இருக்கின்றன.
சட்டத்தின் ஆட்சியே நெருக்கடியில்
நாட்டின் குடிமக்கள் அனைவருமே இப்போதுள்ள அரசமைப்புச்சட்டத்திற்கும், நாட்டின் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டவர்களாவார்கள். எவரும் நம் அரசமைப்புச்சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. அதாவது ராஜா சட்டமாக இருக்க முடியாது. ஆனால் சட்டம்தான் ராஜாவாகும். (King is not law, law is the King.)
இன்றையதினம் நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் குண்டர்களின் மாஃபியா கும்பல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. சந்தையில் காய்கறிகளுக்கு ஒருவர் விலை நிர்ணயிப்பதுபோல் இந்த மாஃபியா கும்பல் கிரிமினல் நடவடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்து வைத்திருக்கின்றன. இவ்வாறு விலை நிர்ணயம் செய்வதில் ஒளிவுமறைவு என்பதே கிடையாது. இவற்றை இக்கும்பல்கள் ஒரு தொழிலாகவே செய்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் சட்டத்தின் ஆட்சிக்கு என்ன வேலை இருக்கிறது?
தேசியக் குற்றஆவணப் பணியகம் (NCRB-National Crime Records Bureau), வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் தீண்டத்தகாதவர்கள் மீது 27 கொடுமைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் தீண்டத்தகாதவர்களின் ஐந்து வீடுகள் தீக்கிரையாகின்றன, மூன்று பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர், 11 பேர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு வாரமும் தீண்டத்தகாதவர்களில் 13 பேர் கொல்லப்படுகின்றனர் என்றும், அவர்களுக்கெதிராக நூற்றுக்கணக்கான கொடுமைகள் புரியப்படுகின்றன என்றும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கொடுமைகளில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படுவதே இல்லை. இதன்காரணமாக இவற்றைச் செய்த கயவர்கள் தண்டிக்கப்படுவதுமில்லை.
தேசியக் குற்றஆவணப் பணியகத்தின் 2016ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஒரு பெண் 77 நிமிடங்களுக்கொரு முறை சித்திரவதைக்கு ஆளாகிறாள், ஆறு மணி நேரத்திற்கொருமுறை உயிருடன் கொளுத்தப்படுகிறாள் அல்லது அடித்தே கொல்லப்படுகிறாள், திருமணம் செய்யப்பட்ட நூறு பெண்களில் 20 பேர் கணவனாலோ அல்லது அவனுடைய குடும்பத்தினராலோ தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். 47 நிமிடங்களுக்கொருமுறை பாலியல்ரீதியாக பலியாகிறார். சராசரியாக பெண் தொழிலாளர்களில் 96 விழுக்காட்டினர் தங்கள் வாழ்நாளில் ஒருதடவையாவது பாலியல் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். நாளுக்கு நாள், சிறுமிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதும், அமில தாக்குதலுக்கு (acid attack) ஆளாவதும், அவர்கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும் கொடுமைக்கு உள்ளாவதும், மற்றும் இதுபோன்ற கொடுமைகளுக்கு உள்ளாவதும் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் பல நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வருவதே இல்லை.
காவல்நிலையங்களில் லாக்-அப் மரணங்கள் என்பவை அநேகமாக நாளும் நடக்கும் செய்திகளாகும். தேசியக் குற்றஆவணப் பணியகத்தின் 2013, 2014, 2015, 2016 அறிக்கைகள் முறையே 118, 93, 97, 93 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளதாகக் கூறுகின்றன. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளும்கூட சித்திரவதை மற்றும் பல்வேறு காரணங்களால் இறந்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வேலியே பயிரை மேயும் நிலை இருக்கிறது. சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அமைப்புகள் அனைத்தும் விடுமறை எடுத்துக்கொண்டிருப்பதுபோன்றே தோன்றுகிறது.
ஜனநாயகபூர்வமான அமைப்புகளின் சுதந்திரம் ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது
சமீபகாலத்தில் ஏற்பட்ட சில நிகழ்ச்சிப் போக்குகள் நீதித்துறையின் சுதந்திரத்திலும் ஓர் ஆழமான பள்ளத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒன்றிய அரசாங்கத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நீதிபதிகள் நியமனம், மாற்றல் மற்றும் பதவி உயர்வு போன்றவை சம்பந்தமாக முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. நீதித்துறையின் மீது ஆதிக்கம் செலுத்த ஆட்சியாளர்கள் அனைத்துவிதமான முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள். நீதிபதிகள் நியமனம் தொடர்பாகவுள்ள அனைத்து ஒழுங்குமுறைகளையும் ஒன்றிய அரசாங்கம் உதாசீனம் செய்துவிட்டு, உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளின் பட்டியலையே திருப்பி அனுப்பியது. சில சமயங்களில் எவ்விதமான முகாந்திரமும் இல்லாமல் தாமதம் செய்தது. உச்சநீதிமன்றத்தை ஓரங்கட்டிவைத்துவிட்டு உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசாங்கம் நேரடியாகவே தலையிடுகிறது. தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியமைக்காக நீதிபதிகள் ஓய்வுபெற்றபின் நன்கு கவனிக்கப்படுகிறார்கள். தங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் மாற்றல் செய்யப்படும் அச்சுறுத்தல்களும் மேற்கொள்ளப்படுகிறது. இவையனைத்தும் நீதித்துறையின் சுதந்திரத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி, குற்றப் புலனாய்வுக் கழகம், தேர்தல் ஆணையம், பல்கலைக் கழகங்கள், அமலாக்கத்துறை, திரைப்படத் தணிக்கைத்துறை போன்ற சுயேச்சையான அமைப்புகளின் விவகாரங்களிலும் ஊடுருவுவதன் மூலம் இந்நிறுவனங்களின் சுயாட்சித்தன்மையையும் ஒன்றிய அரசாங்கம் நாசம் செய்து கொண்டிருக்கிறது.
மதவெறி மற்றும் அடிப்படைவாத சக்திகள் தலைதூக்கி இருக்கின்றன
சமீபநாட்களில் மத அடிப்படைவாதமும், மதவெறியும் மிகவும் சிக்கலான வழிகளில் தலைதூக்கி இருக்கின்றன. இந்த சக்திகள் மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கின்றன. இவை மக்களிடையே சுவர்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றன, அவநம்பிக்கை, சந்தேகம், பொறாமை மற்றும் வன்முறை உணர்வுகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. மிகவும் சங்கடத்தை உண்டாக்கும் விஷயம் என்னவென்றால் இந்த சக்திகள், அதாவது அரசியல், நிர்வாகம், கல்வி, காவல்துறை, சினிமா, விளையாட்டு, இசை, கலை போன்று அனைத்திலும் ஊடுருவியிருக்கின்றன. இந்த சக்திகள் அநேகமாக நம்முடைய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், அதாவது நாம் என்ன உண்ண வேண்டும், நாம் என்ன உடுத்த வேண்டும், நான் என்ன பேச வேண்டும், நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், நாம் யாரைக் காதலிக்க வேண்டும், நாம் யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும், நாம் யாருடன் பரிவர்த்தனைகள் செய்துகொள்ள வேண்டும், நாம் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என நம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் கட்டளையிடுவதன் மூலம் நம் பன்முகக் கலாச்சாரத்தை அழித்திட முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. பல சாமியார்கள் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். அரசியல் அதிகாரம் மதத்தலைவர்களின் கைகளுக்கு மாறிக்கொண்டிருப்பது ஓர் ஆபத்தான அடையாளமாகும். இந்த சக்திகள் மதச்சார்பின்மைக்கும் பன்முகக் கலாச்சாரத்திற்கும் ஓர் ஆழமான அச்சுறுத்தலாகும். இதன் விளைவாக, நாட்டின் அமைதி சங்கடத்திற்குள்ளாகி இருக்கிறது, நாட்டின் முன்னேற்றம் முடங்கிக் கொண்டிருக்கிறது.
சேமநல அரசு (welfare state) காணாமல் போய்க்கொண்டிருக்கிறது
சேமநல அரசு (welfare state) என்பதன் பொருள் அரசாங்கம் மக்களுக்கு உணவு, கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, வேலைவாய்ப்பு முதலான அடிப்படை வசதிகளை அளித்திடும் பொறுப்புக்களை தங்கள் தோள்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பதாகும். ஆனால் இன்றைய அரசாங்கங்கள் இவ்வாறான அரசமைப்புச்சட்டக் கடப்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் வேலைகளில் இறங்கியிருக்கின்றன. அரசாங்கங்கள் மக்களுக்குக் குடிநீர் வசதி செய்து கொடுத்தல், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, போக்குவரத்து, வேலைவாய்ப்பு முதலானவற்றைத் தனியார் கைகளில் சரண் செய்துகொண்டிருக்கின்றன.
இன்றைய இந்தியா முன்னிருந்ததைக் காட்டிலும் செல்வாதாரமான ஒன்றாகும். ஆனாலும், இந்த செல்வாதாரங்களை வைத்திருப்போர் யார் என்பதுதான் கேள்வி. நம் நாட்டின் மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டினர் நம் நாட்டின் செல்வாதாரங்களில் 60 விழுக்காட்டை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொகையில் 9 விழுக்காட்டினர் நாட்டின் செல்வாதாரங்களில் 20 விழுக்காட்டைத் தங்கள் வசம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொகையில் மீதம் உள்ள 90 விழுக்காட்டினர் வசம் வெறும் 20 விழுக்காடு செல்வாதாரமே மிஞ்சி இருக்கின்றன. இவ்வாறு செல்வ விநியோகம் சமமின்றி விநியோகிக்கப்பட்டிருப்பது மக்களில் பெரும்பகுதியினரை பசி-பட்டினி, வறுமை, எழுத்தறிவின்மை, மருத்துவ வசதி கிடைக்காத நிலைமை, வேலையின்மை, பாதுகாப்பின்மை போன்றவற்றிற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது.
சமூக நீதி பொருத்தமின்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது
நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின் மாபெரும் பங்களிப்புகளில் ஒன்று நம் சமூகநீதிக் கொள்கையாகும். சமூக நீதி என்பதன் பொருள் அனைத்து அம்சங்களிலும் சமத்துவ சமூகத்தை உருவாக்குவதாகும். சமூகநீதி என்பதன் பொருள் பாகுபாடற்ற வளச்சி என்பதாகும். இதன் பொருள் வளர்ச்சியின் பயன்கள் இதுநாள்வரையிலும் உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த சமூகத்தினருக்கும் சென்றடையக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும் என்பதாகும். இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியின் ஒரு சிறிய அங்கமேயாகும். இட ஒதுக்கீடு மட்டுமே சமூக நீதியாகிவிடாது.
ஒன்றிய அரசாங்கத்தின் கீழும் மற்றும் பல்வேறு மாநில அரசாங்கங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கீழும் 60 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்று கூறப்பட்டிருக்கிறது. இன்றைய அரசாங்கங்களின் கொள்கை, பொதுத்துறையை இல்லாமல் செய்வது என்பதாகும். முதலீடுகளை விலக்கிக்கொள்ளுதல் என்னும் கொள்கை (policy of disinvestment) இப்போது பணமாற்றுக் கொள்கை (monetisation) என்று அழைக்கப்படுகிறது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைக் குறைத்திடும். கொஞ்ச காலத்தில் வேலைகளையே இல்லாது ஒழித்துக்கட்டும். முதலீடுகளை விலக்கிக்கொள்ளுதல் என்னும் கொள்கை காரணமாக பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் தாரைவார்க்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக சமூக நீதி என்பதே நம் சமூகத்தில் பொருத்தமற்ற ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.
சமூக நீதியின் விழுமியங்களுக்கு ஊறு விளைவித்திடும் மற்றொரு நிகழ்ச்சிப்போக்கு, ஒப்பந்தத் தொழிலாளர் அமைப்புமுறை மற்றும் அவுட்சோர்சிங் (outsourcing) முறைகளாகும். தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளும் இன்றைய முறையில், இடஒதுக்கீடுகள் பின்பற்றப்பட வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டன.
கூட்டாட்சி அமைப்புமுறைக்கு அச்சுறுத்தல்
உச்சநீதிமன்றம், கேசவானந்தா பாரதி வழக்கில், கூட்டாட்சி அமைப்புமுறை நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்று என்கிற தீர்முடிவினை அளித்திருக்கிறது. மேலும் நீதிமன்றம், இந்த அடிப்படைக் கட்டமைப்பு திருத்தப்பட முடியாதது (unamendable) என்றும் தீர்முடிவினைச் செய்திருக்கிறது. இன்றைய தினம் இந்தக் கூட்டாட்சி அமைப்புமுறை ஏராளமான சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒரே நாடு, ஒரே வரி என்ற பெயரில் ஜிஎஸ்டி அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பொருளாதார அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவிந்துகொண்டிருக்கிறது. மாநில அரசாங்கங்கள் இப்போது நகராட்சிகளின் நிலைக்கு சுருக்கப்பட்டிருக்கின்றன. மாநில அரசாங்கங்கள் இப்போது ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. அரசியல் அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற/சட்டமன்ற பிரதிநிதிகள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து வேறு அரசியல் கட்சிகளுக்குத் தாவுவது என்பது நாளும் நடைபெறும் நிகழ்வுகளாக மாறி இருக்கின்றன. பெரும்பான்மையாக இருந்த அரசாங்கங்கள் சிறுபான்மை அரசாங்கமாக குறைக்கப்பட்டிருக்கின்றன, சிறுபான்மையாக இருந்த அரசியல் கட்சிகள் இவ்வாறான கட்சித் தாவல்கள் மூலம் பெரும்பான்மையாக மாறியிருக்கின்றன. கட்சித் தாவல்கள் என்பதும் ராஜினாமாக்கள் செய்வதென்பதும் நாட்டில் பல மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.
ஒன்றிய அரசாங்கம், மாநில அரசாங்கங்களின் அதிகாரவரம்பெல்லைகளுக்குள் மூக்கை நுழைத்துக்கொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்கள், திருத்தப்பட்ட பண மோசடித் தடைச்சட்டம், தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மின்சாரத் திருத்தச் சட்டம் முதலானவை சில எடுத்துக்காட்டுகளாகும். மாநில அரசாங்கங்களை ஓரங்கட்டிவிட்டு, ஒன்றிய அரசாங்கம் மாநிலங்களின் அரசாங்க அதிகாரிகளுக்கு நேரடியாகவே அறிவுறுத்தல்களைக் கூறுவது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான மற்றுமொரு அச்சுறுத்தலாகும்.
சில ஆளுநர்கள் ஒன்றிய அரசாங்கத்தின் முகவர்களாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மகாராஷ்ட்ரா, கேரளம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் போன்று மாநிலங்களில் நடைபெற்ற சமீபத்திய நிகழ்ச்சிப்போக்குகள் இதனை வெளிப்படுத்துகின்றன. மாநில அரசாங்கங்களுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல் போக்குகள் கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரே நாட்டினம் என்ற பெயரில், நாட்டின் பன்முகத்தன்மை அச்சுறுத்தப் பட்டிருக்கிறது. ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே மின்சாரம் (grid), ஒரே மதம் போன்று மதவெறி சக்திகளால் எழுப்பப்படும் சில முழக்கங்கள் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது ஏவப்பட்டுள்ள மற்றுமொரு அச்சுறுத்தலாகும். இந்த சவால்களை எதிர்த்துநின்று நாம் முறியடிக்காதுபோனால், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைந்திடும்.
முடிவுரை
நம் அரசமைப்புச்சட்டமானது, நாட்டிலுள்ள பல்வேறு மதநம்பிக்கையாளர்களையும், சாதியினரையும், கலாச்சாரங்களைப் பின்பற்றுவோரையும், பல்வேறு மொழி பேசுவோரையும், பல்வேறுவிதமான நம்பிக்கையுடையவர்களையும், பழக்கவழக்கங்கள் உள்ளவர்களையும், சிந்தனாவாதிகளையும், உணவுப் பழக்கங்கள் உள்ளவர்களையும், ஒருங்கிணைத்து, ஒன்றுபட்டு முன்னேற வழிவகுத்துத் தந்திருக்கிறது. இந்த அரசமைப்புச்சட்டம்தான் நாம் அனைவரும் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி என்றழைக்கப்படும் சித்தாந்தங்களை வேரூன்றச் செய்து, வளர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசமைப்புச்சட்டம்தான் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதத்தை அளித்திருக்கிறது.
நம் இந்திய அரசமைப்புச்சட்டம் மதம், இனம், சாதி, பாலினம், மொழி அல்லது பிறப்பிடம் என்னும் அடிப்படையிலான அனைத்துப் பாகுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு நாட்டிலுள்ள அனைவருக்கும் சம அளவில் பாதுகாப்பையும், சம அளவில் வாய்ப்புகளையும் உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. எனவே, நமக்கும் நம் சந்ததியினருக்கும் பாதுகாப்பாக வாழ்வதற்கு உன்னதக் கொள்கைகளை வகுத்துத்தந்துள்ள நம் அரசமைப்புச் சட்டத்தை நாம் பேணிப் பாதுகாத்திட வேண்டும்.
(கட்டுரையாளர், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி)
தமிழில்: ச. வீரமணி
தொடர் 10 : கவிதை உலா – நா.வே.அருள்
வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
இரவும் நிலவும் மனிதர்களைத் தூங்க வைக்கும் மகத்தான சொரூபங்கள். ஆனால் அந்த இரவையே உறங்க வைக்கிறான் ஒரு கவிஞன். அவன் தனியாக எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் இரவு உறங்குவதற்கு ஒரு தொட்டில் இருப்பதை அவனது கவிதைக் கண்களால் கண்டுபிடிக்கிறான்….ஆனால் விஷயம் என்னவென்றால் அது தூக்கத்தைத் தொலைய வைக்கும் சுவாரசியமான தொட்டில்!
என்ன முடியும் சிறு பிறையால்?
இரவை உறங்க வைக்கும்
சிறு தொட்டிலென மாறி…
அன்பழகன்.ஜி
ஒரு மீனின் மரணம் மனிதனின் மனசில் கல்லறைப் பெட்டியின் மீது ஆணியைப் போல அறையப்படுகிறது. அமைதியான நீர்ப் பரப்பு தகதகக்கும் தகன மேடையாக மாறுகிறது. யாருமே அஞ்சலி செலுத்தாத மரணமாக ஒரு மீனின் மரணம் நிகழ்ந்துவிடுகிறது. கவிஞனின் வார்த்தைத் தூண்டிலில் வசமாக சிக்கிக் கொள்கிறது ஒரு கவிதை மீன். அது நம் இதயத் தொட்டியில் இசைபாடும் மீன்!
தூண்டிலைச் சுண்ட
வானம் கிழியத் துடிக்கும்
கெண்டை மீன்
நீலச் சங்கியாள் சுகந்தி
தேநீரின் கதை சுவாரசியமானது. தலை வலித்தால் தேநீர். தன்னிச்சையாய்த் தேநீர்.. ஒருவரைச் சந்தித்தால் தேநீர். பிரிவென்றால் தேநீர். தேநீர் இல்லையென்றால் தேசமே இல்லை எனலாம். தேநீர் ஒரு தேசிய பானம். ஒரு தேநீருக்குள் சோகங்களைத் துடைத்தெறியும் சுவை இருக்கிறதாம். ஆனால் ஒரு கவிஞரின் கண்ணுக்குத்தான் தேநீரின் நிறம் தென்படுகிறது. அது ரத்தத்தின் சுவை என்கிற ரகசியம் புரிகிறது.
எத்துணை மோசமான சோகத்தையும்
தேயிலைத்தூளின் மணம்
துடைத்தெறிந்துவிடுகிறது
நினைவில் தேயிலைக்காடுள்ள மிருகமல்ல
தேயிலைக்காக ரத்தம்
சிந்தியவர்களின் ரத்தம் யான்
வீரமணி
இயற்கையைப் படைப்பின் கண்கொண்டு பார்க்கிறான் ஒரு கவிஞன். துன்பம் செய்த அதே இயற்கை இன்பம் செய்வதைக் காண்கிறான். எப்படி இதயத் துடிப்பில் “லப்” உண்டோ அப்படி “டப்” பும் உண்டு. லப் மட்டுமோ, அல்லது டப் மட்டுமோ இல்லை… லப் டப் சேர்ந்தால்தான் இதயத் துடிப்பு. புயல் அடிக்கிற அதே வானிலைதான் மழையையும் கொண்டு வருகிறது. .
நேற்று
வாரித் தூற்றிவிட்டுப்போன
அதே காற்றுதான்
இன்று
என் தோட்டத்திற்கு
மழையை
அழைத்து
வந்திருக்கிறது
முந்தைய தொடர்களை படிக்க:
தொடர் 1 : கவிதை உலா – நா.வே.அருள்
தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்
தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்
தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்
தொடர் 5 : கவிதை உலா 5 – நா.வே.அருள்
தொடர் 6 : கவிதை உலா 6 – நா.வே.அருள்
தொடர் 7 : கவிதை உலா 7 (சிலுவை ஆணிகள்) நா.வே.அருள்
தொடர் 8: கவிதை உலா 8: மன ஊரின் கவிதைக் குடிசைகள்- நா.வே.அருள்
இலங்கை நெருக்கடியும் மக்களின் போராட்டமும் கட்டுரை – தமிழில் : ச.வீரமணி
இலங்கையில் மே 9 அன்று நடைபெற்ற வன்முறை நிகழ்வுகள், நாடு மிகவும் ஆழமான பொருளாதார நெருக்கடியால் சீர்கேடு அடைந்துகொண்டிருந்த நிலையில் அதற்கு ஒரு கூர்மையான நிவாரணத்தை அளித்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடி இப்போது அரசியல் அமைப்பு முறை மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் முழுமையாகக் கவ்விப்பிடித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குப் பிரதான காரணமாக ராஜபக்சே குடும்பத்தின் ஆட்சி அமைந்திருக்கிறது. ஜனாதிபதியான கோட்டபய ராஜபக்சே தன்னுடைய நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி, தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆட்சிக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு முயற்சியாக தன் மூத்த சகோதரர் மகிந்தா ராஜபக்சேயை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யக் கோரியிருக்கிறார். முன்னதாக, ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்திருந்தது. அதனைத்தொடர்ந்து மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்பட்டிருந்தது.
ராஜபக்சே அரசு மேற்கொண்ட பேரழிவு தரத்தக்க முடிவுகள்தான் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும். வரிகளை வெட்டியது, வேளாண்மைக்குப் பயன்படுத்துவதற்கான ரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது, வெற்று ஆரவாரத் திட்டங்களுக்கு அதிக அளவில் முதலீடுகளைச் செய்தது, எதேச்சாதிகார ராஜபக்சே ஆட்சி மேற்கொண்ட இந்நடவடிக்கைகள் அனைத்தும் அரசின் வருவாயைக் குறைத்தது, வேளாண் உற்பத்தியைச் சீர்குலைத்தது, கடன் சுமை அதிகரிப்புக்கு இட்டுச் சென்றது.
கோவிட் பெருந்தொற்று பொருளாதார நெருக்கடியை மேலும் விரைவுபடுத்துவதற்கே இட்டுச் சென்றது. இதன் காரணமாகச் சுற்றுலா முற்றிலுமாக நின்றதால் அந்நியச் செலாவணி வருமானங்களில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இத்துடன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இலங்கைத் தொழிலாளர்கள் பணம் அனுப்புவதும் நின்றுவிட்டது.
பொருளாதாரம் நிலைகுலைந்ததைத் தொடர்ந்து, மக்கள் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் கிடைக்காமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். விலைவாசிகளும் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தாங்கமுடியாத அளவிற்கு நிலைமைகள் சென்றபின்னர் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் துவங்கிவிட்டார்கள். மார்ச் 31இலிருந்து கிளர்ச்சியாளர்கள் மத்திய கொழும்பு, காலிமுகத்திடல் பூங்கா பகுதியிலும், பிரதமரின் இல்லத்திற்கு வெளியேயும் அணிதிரண்டு, முகாமிட்டிருக்கிறார்கள். அமைதியான முறையில் நடந்து வந்த இந்தக் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தப் போராட்டமானது, ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்துத்தரப்பினரின் ஆதரவையும் பெற்றிருக்கிறது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களின் இக்கிளர்ச்சி இயக்கத்தில் தொழிலாளர் வர்க்கம் முக்கியமான பங்களிப்பினைச் செய்திருக்கிறது. தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 28 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றார்கள். பின்னர் மீண்டும் மே 5 அன்று இரண்டாவது ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் மற்றும் ஹர்த்தால் நடைபெற்றன. இதிலும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர அலுவலர்கள் உட்பட ஏராளமானவர்கள் பெரிய அளவில் பங்கேற்றார்கள். இந்த வேலை நிறுத்தங்களின்போது ஜனாதிபதியும் அவருடைய அரசாங்கமும் ராஜினாமா செய்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டன.
இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டங்கள் வீறுகொண்டு நடைபெற்றதைத் தொடர்ந்து பீதியடைந்த ஜனாதிபதி கோட்டபயா, இரண்டாவது முறையாக ஒரு மாத கால அளவில், மீண்டும் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. எனினும் போராட்டக்காரர்கள் அதனை மீறினார்கள். உண்மையில் ஆட்சியாளர்கள் விழிபிதுங்கி நின்றனர். அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மே 9 அன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் என்பவவை, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தைச் சீர்குலைப்பதற்காக, ராஜபக்சே தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சியாகும்.
மகிந்த ராஜபக்சே, போராடுவோரின் கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்வதற்குப் பதிலாக, தன் கட்சி (எஸ்எல்பிபி) ஆதரவாளர்களை தன் இல்லத்திற்கு அழைத்து, அவர்கள் மத்தியில் ஆத்திரமூட்டும் விதத்தில் பேசிய பின்னர், அவருடைய ஆதரவாளர்கள் வெளியே வந்து, அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், அவர்களின் தற்காலிக பந்தல்களை நாசமாக்கி இருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து காலி ஃபேஸ் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த முகாம்கள் மீது தாக்குதல்கள் தொடுத்தனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தார்கள். அங்கே நின்றிருந்த காவல்துறையினர் இவர்களை அடக்குவதற்குத் தவறிவிட்டனர்.
ஆளும் கட்சித் தரப்பு ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய கேவலமான வன்முறை நடவடிக்கைகள்தான் கொழும்புவுக்கு வெளியிலும் போராட்ட உணர்வைக் கொண்டு சென்று, இதற்குப் பதிலடி கொடுக்கும் நிலையை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமரின் இல்லம், டெம்பிள் ட்ரீஸ் முன் (Temple Trees) கூடி, அதனைத் தாக்க முற்பட்டார்கள். இறுதியாக, பிரதமர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்ட மகிந்த ராஜபக்சேயும் அவருடைய குடும்பத்தினரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பிற்காகக் கடற்படைத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இதன் பின்னர் ராஜபக்சே குடும்பத்தினரின் அனைத்து வீடுகளும், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளும் குறிவைத்துத் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன.
இதற்கிடையில், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும், சமாஜி ஜன பாலவெகயா கூட்டணி (SJB alliance), ஜனாதிபதி கோட்டபயா தலைமையின்கீழ் அமையும் எவ்விதமான அனைத்துக் கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்திலும் இணைய மாட்டோம் என அறிவித்தது. கோட்டபயாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். இடதுசாரிக் கட்சிகளும், ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) ஆகியவையும் புதிய தேர்தல்கள் நடைபெறும் வரையிலும் இடைக்கால ஜனாதிபதியும், இடைக்கால அரசாங்கமுமே வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
நாட்டில் அளவிடற்கரிய அதிகாரங்களைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி கோட்டபயா வெளியேற வேண்டும் என்று கோருவது நியாயமே. ஏனெனில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் குளறுபடிகளுக்குப் பிரதான காரணமே இவர்தான். இவரால் உருவாக்கப்பட்டதுதான் இப்போதிருந்துவரும் எதேச்சாதிகார தேசியப் பாதுகாப்பு அரசு. பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் பின்னிப்பிணைந்தவைகளாகும்.
ராஜபக்சே ஆட்சி அகற்றப்படுவதுடன், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளில் ஜனநாயக பூர்வமான முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி ஆட்சி ஒழித்துக்கட்டப்பட வேண்டும். மத்தியத்துவப்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்பு அரசும் கலைக்கப்பட வேண்டும். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக மக்கள் ஆதரவு வளர்ச்சிப் பாதைக்கான கொள்கை ஏற்படுத்தப்பட வேண்டும். ராஜபக்சே குலத்தினரின் மீதான மாயை காணாமல் போயிருப்பதன் காரணமாக அது சிங்கள பெளத்தமத தேசியவாதம் மங்குவதற்கும் இட்டுச் செல்வதுடன், அதற்குப் பதிலாக மொழி மற்றும் மத சிறுபான்மையினர் மீது ஜனநாயக பூர்வமான அணுகுமுறையுடன் கூடிய அனைத்து மக்களின் ஒற்றுமைக்கான அடித்தளம் அமைக்கப்படும் என நம்புவோம்.
இலங்கை அரசாங்கம், கடன் பெறுவதற்காக, சர்வதேச நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு சர்வதேச நிதியம் அளிக்கும் நிபந்தனைகள் என்பவை, சமூக நலத்திட்டங்களில் வெட்டு, சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் தனியார்மயத்தை மேலும் விரிவுபடுத்திட வேண்டும் என்பவைகளாகும். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் இவற்றுக்கு உட்படுவதைத் தவிர வேறு வழியில்லை.. ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆழமான கட்டமைப்பு நெருக்கடிக்கு இது தீர்வாகாது.
இதற்கு எதிராக மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் விதத்திலும், நிதிமூலதனத்தின் இழிவுகளிலிருந்து இலங்கையைப் பாதுகாத்திடும் விதத்திலும் ஒரு மாற்றுப்பாதை அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் உள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு ஓர் அபூர்வமான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறைகளில் மறுகட்டமைப்பை ஏற்படுத்திடவும், அத்தகைய மாற்றத்திற்கான போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டிடவும் அவர்கள் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
(மே 11, 2022)
(நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி)
வகுப்புவாதங்கள் – அய்ஜாஸ் அகமது | தமிழில்:ச.வீரமணி
வகுப்புவாதங்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக இடது சாரிகளும் நிறையவே எழுதி இருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் குறித்தும், வகுப்புவாத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் வரலாறுகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் பின்பற்றிய வகுப்புவாதக் கொள்கைகள் குறித்தும் மிகவும் விரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்பொருள் குறித்து நானும் மிகவும் விரிவாகவே எழுதியிருக்கிறேன். அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக இங்கே அடுக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் சில உண்மைகள் அவ்வப்போது நம் நெஞ்சில் வந்து மோதத்தான் செய்கின்றன.
வகுப்புவாதம், மதச்சார்பின்மை, தேசியம் அல்லது தேசியவாதம் போன்றவை குறித்து நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்? இது தொடர்பாக என் அடிப்படை நிலைப்பாட்டை மிகவும் கடுமையான வார்த்தைகளுடனேயே தொடங்கிட விரும்புகிறேன்.
அனைத்துவிதமான வகுப்புவாதங்களும் ஓர் ஆரோக்கியமான அரசியலில் தீர்க்கப்பட முடி யாத நோயல்ல. ஆர்எஸ்எஸ், சிவசேனை வகையறாக்கள் பரப்பிடும் வகுப்புவாத வெறி உணர்வுகளுக்கு எதிராக அதைவிட அதிகமான அளவில் மதச்சார்பின்மை, நாட்டுப்பற்று உணர்ச்சிகளைக் கொடுப்பதன் மூலம் இந்நோயைக் குணப்படுத்திட முடியும். வகுப்புவாத நடவடிக்கைகள் என்று நாம் அழைத்திடும் – தற்போது மக்கள் பின்பற்றி வரும் – சில நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் மிகவும் சிக்கலான வரலாற்று வேர்களைக் கொண்டிருக்கின்றன. இந்திய சமூகத்தின் கட்டமைப்பிலும், நாள்தோறும் நாம் பின்பற்றும் நடைமுறை அரசியலிலும் நன்கு ஆழமாக வேரூன்றி இருக்கின்றன.
நாம் பின்பற்றிவரும் தத்துவங்களை விமர்சனத்திற்குள்ளாக்குவது சந்தேகமற மிகவும் முக்கியமானதுதான். ஆனால், எண்ணற்றோர் உயிர்கள் சூறையாடப்படுவதற்குக் காரணமாக விளங்கும் வகுப்புவாத வன்முறை சம்பந்தமான உண்மைகளையும், விவரங்களையும் திரட்டுவது அதைவிட மிகவும் முக்கியமானதாகும்.
அதுமட்டுமல்ல, வகுப்புவாத சிந்தனைகளும் நடைமுறைகளும் மிகவும் போற்றுதலுக்குரியவை என்றும், இவை நியாயமானவை மட்டுமல்ல, அவசியமானவையும், பயனளிக்கக் கூடியதும் என்றும் நாட்டில் உள்ள மக்களில் மிகப் பெரும் பாலானோர் நம்பிக்கொண்டும் இருக்கிறார்களே, இவர்களின் நம்பிக்கைகளை இவர்கள் மனம் கோணாதவாறு எவ்வாறு விமர்சிக்கப் போகிறோம் என்பது குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.
நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. குஜராத் மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட நரேந்திர மோடி பாஜக சார்பில் இந்தியாவின் பிரதம வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதவெறி உணர்ச்சியை மக்கள் மத்தியில் கிளப்பி விசிறிவிடுவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதற்குச் சரியான அடையாளம் நரேந்திர மோடி என்று நான் துணிந்து கூறுவேன்.
அவர் பிரதமராகிவிட்டால், வகுப்புவாதத் திற்கு எதிராக நாம் மேற்கொள்ளும் பயணம் மேலும் சிறிது காலத்திற்கு நீடித்திடும். இதனை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தோழர் ரோசா லுக்சம்பர்க் ஒருமுறை கூறுகையில், முதலாளித்துவம், சோசலிசத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும் மாறாக காட்டுமிராண்டித் தனத்திற்கும் கூட இட்டுச் செல்லலாம் என்றும் சொன்னார். இந்தியாவில் மக்களின் நலன்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது கொள்ளை அடிக்கும் கும்பலின் தலைமையில் அமைந்துள்ள முதலாளித்துவத்திற்கு லுக்சம்பர்க்கின் கூற்று மிகவும் சரியாகவே பொருந்துகிறது. ஏனெனில், நம்நாட்டில் செயல்பட்டுவரும் வகுப்புவாதங்கள் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்கு வளர்வதுடன், ஒருபக்கம் இத்தகைய முதலாளித்துவக் கொள்ளைக் கும்பலை உருவாக்கிடவும், மிகப்பெரிய அளவில் மக்களை பலிகிடா ஆக்கிடவும் இட்டுச் செல்கின்றன.
இவ்வாறு ஓர் இனவெறியால் கொடுமைகளுக்கு ஆளாகி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மக்கள், தங்கள் சொத்து சுகங்களை மட்டுமல்ல, தங்கள் அறநெறிப் பண்புகளையும் தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் இருக்கக்கூடிய நிலையில் பாசிஸ்ட்டுகள் அவர்களை மிக எளிதாகத் தூண்டிவிட்டு, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள்.
“பாசிசம்” தலைதூக்குவது என்பது புரட்சியை நம்மால் கொண்டுவர முடியாமல் நாம் தோல்வி கண்டதற்கான தண்டனை என்று கிளாரா ஜெட்கின் கூறினார். அது மிகவும் சரி யான கூற்று என்பதை வரலாறு மெய்ப்பித்திருக்கிறது.
முதலாவதாக, உலக அளவில் இடதுசாரி சக்திகள் தோற்கடிக்கப்பட்டிருப்பது, உலகின் பல பகுதிகளில் வலதுசாரி சக்திகள் வலுவடைவதற்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இதன் காரணமாக, (1) 1989க்கு முன் வலுவாக இருந்த சோசலிச முகாம் உலகின் பல பகுதிகளிலும் வலுவிழந்தது. இன்றைய தினம் உலகில் மிகச் சிறிய பூப்பந்தில் தான் (global space) மார்க்சிசமும், கம்யூனிசமும் கோலோச்சுகிறது. (2) அதிதீவிர முதலாளித்துவம் (extreme capitalism) என நான் அழைத்திடும் நவீன தாராளமயம் உலகில் பல நாடுகளில் மிகவும் விரிவான முறையில் நுழைந்து வெற்றி பெற்றுள்ளது. உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் பெரிய அளவில் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பு என்பது ஏற்படவில்லை. (3) ஆசிய மற்றும் ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள பல நாடுகள் நவீன தாராளமய உலகமயக் கொள்கைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்நாடுகளில் மேலோங்கியிருந்த தேசிய உணர்வு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு தற்போது முற்றிலுமாக இல்லாது ஒழிந்துவிட்டன. இதற்குச் சரியான எடுத்துக்காட்டு நரேந்திர மோடி. மதவெறியைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர் – நம்மால் இந்து மதவெறியன் என்றும் அவரது சகாக்களால் இந்து தேசியவாதி என்றும் அழைக்கப்படும் ஒருவர் – பிரதமராக முன்னிறுத்தப்படுவது சரியான எடுத்துக் காட்டாகும்.
இன்றைய தினம் நாட்டில் உள்ள அம்பானிகளும், டாட்டாக்களும், உலகம் முழுவதும் விரவிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான இந்தியக் கோடீஸ்வரர்களும் நரேந்திர மோடியைச் சூழ்ந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இதற்குமுன் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும் இப்போது அவரிடம் மன்னிப்பு கோரி அவரை வரவேற்று, அவருடன் கூடிக் கூலாவிக் கொண்டிருக்கின்றனர். எகிப்து நாட்டில் உள்ள முஸ்லீம் பிரதர்ஹூட் கட்சியின் தலைவரும் எகிப்தின் அதிபருமான மோர்சியைப் போன்று மோடி சிறப்பான முறையில் சித்தரிக்கப்படுகிறார்.
கிளாரா ஜெட்கின் கூற்றின் அடிப்படையில் ஆராய்கையில் இந்தியாவில் இவ்வாறு பல்வேறு வகுப்புவாதங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இடதுசாரிகளின் தோல்வியேயாகும். வகுப்புவாதத்திற்கு உண்மையான மாற்று என்பது கம்யூனிசம் அல்லது சோசலிசமேயாகும். (The real alternative to communalism is communism or socialism). நிச்சயமாக மதச்சார்பின்மையோ (secularism) அல்லது தேசியவாதமோ (nationalism) கிடையாது. கடந்த கால் நூற்றாண்டில் இடதுசாரிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளராததன் காரணமாகத்தான் இத்தகைய மதவெறி, இனவெறி மற்றும் பிராந்திய வெறி சக்திகள் நாட்டின் பல பகுதிகளிலும் வளர்ந்துள்ளன. நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் அயல்துறைக் கொள்கையைப் பொறுத்த அளவில் இத்தகைய சக்திகள் அவற்றுடன் முழுமையாகக் கருத்தொற்றுமை கொண்டு ஒத்துப்போகின்றன.
நாட்டில் இவ்வாறு பத்து விழுக்காட்டு அளவிற்கு கட்சிகள் இருக்கின்றன என்பதே என் கருத்து. அவை ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சரி, அல்லது தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சரி, இவை மக்கள் தொகையில் உயர் பத்து விழுக்காட்டினர் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இத்தகைய சக்திகள் வளர்ந்துள்ள இடங்களில் இடதுசாரிகள் தேர்தல் களத்தில் கிட்டத்தட்ட மிகப்பெரிய அளவிற்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வகுப்புவாத அரசியலைப் பொறுத்தவரை, இடதுசாரி அல்லாத அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சியும் பாஜகவுடன் தீவிரமாக ஒத்துப்போகாதவை அல்ல. ஒருசில கட்சிகள் காங்கிரசுடன் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் காங்கிரசும் பாஜகவும் ஆள்வதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதுதான். பாஜக, வகுப்பு வாதத் துருப்புச் சீட்டைத் திட்டமிட்டு பயன்படுத்தும் அளவிற்கு காங்கிரஸ் பயன்படுத்தவில்லை என்ற போதிலும், காங்கிரஸ் கட்சியும் தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்தத் தயங்குவதில்லை.
முன்னுரை
இவை அனைத்து குறித்தும் மீளவும் நாம் விவாதிப்போம். முதற்கண் வகுப்புவாதம், மதச் சார்பின்மை மற்றும் தேசியவாதம் என்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் மூன்று முக்கிய சொற் றொடர்கள் குறித்து வழக்கத்துக்கு மாறான வழிகளில் ஆய்வு செய்திடுவோம்.
வகுப்புவாதம் (Communalism), மதச்சார்பின்மை (Secularism) மற்றும் தேசியவாதம் (Nationalism) ஆகிய சொற்றொடர்களுக்கு ஆங்கில அகராதியில் இருக்கும் அர்த்தத்தில் நம் நாட்டில் அவை உபயோகப்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக வகுப்புவாதம் என்ற சொல் நம் நாட்டில் ஓர் இனம் அல்லது ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மற்ற இனத்தினர் மீது அல்லது மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பை உமிழக்கூடிய சித்தாந்தத்தைப் பிரயோகிப்பதற்கும், வன்முறையை ஏவுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒருவகையிலான பாசிச வடிவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. வகுப்புக் கலவரம் என்ற நிகழ்வே உலகில் இந்தியாவில்தான் நடைபெறுகிறது.
உதாரணமாக, எகிப்தில் கிறித்துவ சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நேரடியாகவே இஸ்லாமிஸ்ட் (Islamist), ஜிஹாதி (Jihadi), சலாஃபிஸ்ட் (Salafist) அல்லது வேறெந்த சொற்றொடர் மூலமோதான் அழைக்கிறார்கள். அவர்கள் அதனைத் வகுப்புவாரி (“communal”) தாக்குதல் என்று கூறுவதில்லை.
உண்மையிலேயே மிகவும் சரியாகச் சொல்வதென்றால், வரலாற்று ரீதியாக வகுப்புவாரி என்ற சொல் கம்யூனிஸ்ட் என்ற சொல்லிற்கு மிகவும் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தது. இவ்விரு வார்த்தைகளுமே பொது, (‘common’), நெருங்கிய தொடர்பு (‘commune’), சமூகஇனம் (‘community’) என்ற பொருள்களுடன் தொடர்பு கொண்டிருந்தவைதான்.
உதாரணமாக, சமூகத்தினருக்கான சொத்து (‘communal’ property) என்பது தனிச் சொத் துரிமைக்கு (private property) எதிரான சொற்றொடராக இருந்தது.
நம் நாட்டில் மேலும் இரு சிக்கல்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, பெரும்பான்மையினர் சமூகம், சிறு பான்மையினர் சமூகம் என்று பேசுவதில் எதுவும் சிரமம் இருப்பதில்லை. மிகவும் சரியாகச் சொல்வதென்றால், இந்து சமூகத்தினர், முஸ்லீம் சமூகத்தினர், சீக்கிய சமூகத்தினர் போன்று பேசுவதில் சிரமம் இல்லை. ஆனால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மற்ற சமூகத்தினர் மீது வகுப்புவாத உணர்வுடன் நடந்து கொள்ளாது, இந்தியாவின் பிரஜைகள் என்ற முறையில் மட்டுமே, அதாவது மதச்சார்பற்ற தேசிய இனத்தினர் (secular nationalists) என்ற உணர்வோடு மட்டும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே உண்மையில் நம்முடைய விருப்பமாகும். நாடும் அரசாங்கமும் மதச்சார்பற்ற அறநெறியை (secular moralism) உயர்த்திப் பிடித்திருப்பதால், மத ரீதியான வகுப்புவாத அடையாளம் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தனிநபர் பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கிறது.
நாட்டில் உள்ள மக்களில் அறுதிப் பெரும்பான்மையினர், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பதைத் தவிர வேறெந்த பிரஜா உரிமையையும் அனுபவிக்காத சூழ்நிலையில், இம்மக்கள் மத்தியில் தேசிய உணர்வு குறித்த பிரச்சாரங்கள் (nationalist discourses) போய்ச் சேருவதை விட, அவர்களின் சொந்த மத நம்பிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் மிக எளிதாக அவர்களை சென்று அடைந்துவிடுகின்றன. அவை பிற மதத்தினருடனான உறவுகள் மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறு மக்கள் தங்கள் சொந்த மதத்தின் அடிப்படையில் தங்கள் சமூக மற்றும் பொருளி யல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், அத்தகைய மத அடையாளங்களுடைய மோசமான பக்கத்தை எப்போது அவர்கள் மீறி வெளிவருவார்கள் என்பது குறித்து என்னால் தெளிவாகக் கணிக்க முடியவில்லை.
முஸ்லீமாக இருக்கும் ஒருவரால் தன்னுடைய மத அடையாளத்தைத் துறந்து, சிந்தனை செய்வது சாத்தியமா? வீரஞ்செறிந்த அளப்பரிய துணிவுள்ள ஒருசிலருக்கு வேண்டுமானால் அது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை முஸ்லீம்களுக்கு அது சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது.
அடுத்து, “இந்து சமூகத்தினர்” என்றும் “முஸ்லீம் சமூகத்தினர்” என்றும் கூறுவதுகூட கற்பனையான ஒன்று என்றே நான் கருதுகிறேன். ஒருசில மதம்சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களைத் தவிர காஷ்மீரில் உள்ள முஸ்லீம்களும் கேரளாவில் உள்ள முஸ்லீம்களும் தங்களுக்கு இடையே உறவுகளைப் பகிர்ந்து கொள்வார்களா என்பது சந்தேகமே.
அதேபோன்றுதான் நாகாலாந்தில் உள்ள கிறித்துவர்களுக்கும், கேரளாவில் உள்ள கிறித்துவர்களுக்கும் இடையே உள்ள உறவுமாகும். அதேபோன்றதுதான் இந்தியா முழுதும் உள்ள இந்துக்களும் தங்கள் பிராந்தியங்கள், சாதிகள், தொழில்களைக் கடந்து ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைப்பதும் மிகவும் அபத்தமான ஒன்றேயாகும்.
ஆயினும், நம்முடைய அரசியல் பிரச்சாரங்கள் அனைத்திலும், நாடு முழுவதுமுள்ள மதச் சமூகத்தினர் அனைவரும் ஒரேமாதிரிதான் என்கிற முறையிலேயே நம்முடைய அரசியல் பிரச்சாரங்களும், கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய கற்பனையான அடையாளம், உண்மையான சமூகத்தினர் மீது அனைத்து மதங்களைச் சார்ந்த சுயநல அரசியல் வாதிகளாலும் மேலிருந்து திணிக்கப்படுகின்றன. அரசுகளும், முந்தைய காலனிய அரசு விரும்பியதைப்போலவே, வர்க்க அரசியலுக்குப் பதிலாக இத்தகைய இனம் சார்ந்த பிரதிநிதிகளையே விரும்புகின்றன.
இரண்டாவதாக, அனைத்து மத நம்பிக்கைகளும், அவை நம்பிக்கையாக இருந்தாலும் சரி அல்லது செயலாக இருந்தாலும் சரி, வகுப்பு வாதத்தை நோக்கி இட்டுச் செல்வதில்லை. ஆனால் இந்தியாவில் அனைத்துவிதமான வகுப்புவாதங்களும் மத அடையாள உணர்வு டன், வேண்டுமென்றே தங்கள் அரசியல் ஆதா யங்களுக்காக அரசியலாக்கப்படுகின்றன. இதற்கு மதங்களையே குறை சொல்லக்கூடாது. ஆயினும், சில வகையான மத உணர்வுகள் மறுக்கமுடியாத விதத்தில் பிற மதத்தினர் மீது மதவெறித் தீயை உசுப்பிவிடும் விதத்தில் தூண்டப்படுகின்றன. உதிரிப்பாட்டாளியாக (lumpen proletariat) இருக்கிற ஒரு கரசேவகரை, மூளைச் சலவை செய்து, ராமபிரானின் ஜன்மபூமியை விடுவித்திட ஆயுதம் ஏந்து, ராமரின் படையில் அனுமானைப் போல பாபர் மசூதியின் குவிமாடத்தின் (dome) மீது தாவி ஏறி அதனைத் தகர்த்திடு, இந்துவாக இருந்து உன் வீரத்தைக் காண்பி என்று சொல்லும்போது அது அந்த கரசேவகருக்கு நியாயமாகவே தோன்றுகிறது. இதற்கு மதம் பொறுப்பாகாது, அதேபோன்று இத்தகைய செயல் அப்பாவித்தனமான ஒன்றும் கிடையாது.
மதம், அரசியல் வாழ்க்கையின் அனைத்துவிதமான வடிவங்களிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டால், மதத்தால் வன்முறை நிகழ்வுகள் நடைபெறுவது என்பது மிகவும் குறைந்த அளவிலேயே இருந்திடும். மதவெறியைத் தூண்டிவிடுவது என்பதும் அநேகமாக இருக்காது.
அடுத்து, நாம் விவாதத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள மதச்சார்பின்மை (“secularism”) என்ற சொல்லிற்கு வருகிறேன். மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களுக்கும் சம அளவில் மரியாதை செய்தல் என்பது மிகவும் விசித்திரமான இந்தியக் கண்டுபிடிப்பாகும், காலங்காலமாக இருந்து வந்த மத சகிப்புத்தன்மை என்பதைப் படிப்படியாக ஒழித்துக் கட்டுவதற்கான வேலையே இது. உண்மையிலேயே மத நம்பிக்கை உள்ள ஒருவனுக்கு அவனுடைய சொந்த மதம்தான் உயர்வானது. எனவே அவன் மற்ற மதங்களுக்கும் சமமாக மரியாதை கொடுப்பது என்பது சாத்தியமே இல்லை. மத நம்பிக்கையுள்ள ஒரு முஸ்லீமுக்கு, இந்து மதம் என்பது இயல்பாகவே மட்டமானது தான்.
அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறுவது, அரசின் விவகாரங்களை அமல்படுத்துவதில், லஞ்ச ஊழல் மிகுந்த தாராளமய ஜனநாயக அரசியலில், பெரும்பான்மையினர் மதத்தினரைப் பெரிய அளவிற்கு மரியாதை செலுத்துவதற்கே இட்டுச் செல்லும். ஏனெனில் எண்ணிக்கையில் அவர்கள் வாக்குகள்தான் அதிகம். பெரும்பான்மையினரின் பண பலமும், அதிகார பலமும்தான் ஆதிக்கம் செலுத்தும், பெரும்பான்மை மதத்தினரில் உள்ள மத்திய வர்க்கத்தினரின் மத்தியிலும் மூர்க்கத்தனமான முறையில் புதிய வகையிலான மதச் சிந்தனைகள் உருவாகி ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்தியாவில், எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மதச்சார்பின்மையைக் கடைப் பிடிப்பதாக அவை சொல்லிக்கொண்டாலும், பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்துக் களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. பாஜக விற்கும் காங்கிரசுக்கும் சற்றே வித்தியாசம் இருக் கும் எனில் அது அவர்கள் பின்பற்றும் தத்துவங்க ளால் அல்ல, மாறாக அவர்கள் சார்ந்திருக்கிற நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மக்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே அமைந்திருக்கும்.
இது தொடர்பாக, பெர்ரி ஆண்டர்சன் குறிப்பிடுகையில், இந்திய அரசு ஒரு இந்து வகுப்புவாத அரசுதான் என்கிறார். அது மதச்சார்பின்மை என்கிற சொல்லை தன் தத்துவத்தை நியாயப்படுத்துவதற்கானதாக உபயோகித்துக் கொண்டிருக்கிறது என்கிறார். ஆயினும், இதனை நான் வேறு விதமாகக் கூற விரும்புகிறேன். இந்து மதம் குறித்து காந்தி, நேரு மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கம் வெவ்வேறான அளவுகோல்களை வைத்திருந்தன. அவற்றை ஒரேமாதிரி பார்ப்பதென்பது சரியல்ல. மேலும் இந்தியா என்பது பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு. இங்கே முஸ்லீம்கள் உட்பட அனைத்து வகையான மதத்தினரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனை இந்து நாடு என்று இந்து மதவெறியர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்து மதத்தினர்தான் நாட்டில் பெரும்பான்மையினர் மற்றும் வல்லமைபடைத்தவர்கள். மற்ற அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைத்தால் கூட அவர்களை விடப் பெரும்பான்மையினராவார்கள்.
அல்லது, இதனை வேறுவிதமாகவும் கூறலாம். இந்தியாவில் மதவெறி வன்முறை நிகழ்வுகள் இல்லாதவரை அல்லது மிகமிகக் குறைவாக நிகழும் வரை அது பல்வேறு மதங்களுடன் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அவ்வாறு மிகவும் சிறிய அளவில் மத வன்முறை நிகழ்வுகள் நடைபெறுகையில், மற்ற வன்முறை நிகழ்வுகள் போன்றே அதுவும் ஒரு சட்டம் – ஒழுங்கு பிரச் சனைதான். மதச்சார்பின்மையை ஒரு நியாயமான தத்துவமாகக் கருதுவது எந்தவிதத்திலும் சரிதான்.
மதச்சார்பின்மை என்பது நவீனகால ஒழுக்கப் பண்பாகும். பண்டைக் காலங்களில் இது கிடையாது. அதாவது, அரசின் அதிகார வரம்புக்குள்ளிருந்து மதத்தை வெளியேற்றுதல் என்பதாகும். இது ஒரு ஐரோப்பிய ஒழுக்கப் பண்பாகும். இது தொடர்பாக மிக அதிக நாட்டுப்பற்றுடன் இதனை அணுகுவதற்கு முன்பு, மார்க்சிசமும் ஓர் ஐரோப்பிய ஒழுக்கப் பண்புதான் என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும். இத்தகைய ஒழுக்கப் பண்புகள் அந்நாட்டின் வரலாற்றுத் தேவைகளின் அடிப்படையில் அங்கே உருவாயின என்பதையும், பின்னர் வரலாற்று நிலைகளின் காரணமாக படிப்படியாக அவை உலகம் முழுவதும் பரவின என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய முதலாளித்துவ வர்க்கம் நவீனத்துவத்தைக் கிரகித்துக் கொள்ளாமல் தன்னுடைய சமூகக் கண்ணோட்டத்தில் மிகவும் பிற்போக்குத் தனமாக இருந்ததால், நவீன மதச்சார்பின்மை ஒழுக்கப் பண்பினை சிதைத்து சின்னாபின்னமாக்கி, மதம் சார்ந்த சொற்றொடர்களுடன் மாற்றி வடிவமைத்துக் கொண்டது.
ஐரோப்பாவிலேயே பல நாடுகள் தற்போது கலாச்சாரக் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டுள்ளன. ஏனெனில், பல்வேறு இனத்தைச் சேர்ந்த, பல்வேறு நிறத்தைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பாவிற்குள் குடியேறி வந்துள்ள நிலையில் அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாமல் அது திணறுகிறது.
மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதில் இந்தியா அளவிற்குக் கூட அமெரிக்கா இருக்கிறதா என்பது சந்தேகமே. இரு முதலாளித்துவ அரசுகள்தான் உண்மையில் முறையான மதச்சார் பின்மையை – அங்குள்ள முதலாளிகள் இளைஞர்களாக இருந்த காலத்தில் – பெற்றிருந்தன. அவை புரட்சிகர பிரான்சும் கேமாலிஸ்ட் துருக்கியும் மட்டுமேயாகும். அவைகூட இன்று அவ்வாறு உரிமை கொண்டாட முடியாது. ஆட்சி அதிகாரத்திலிருந்து மதச்சார்பின்மை அடிப்படையில் தேவாலயங்களைப் பிரித்த நாடுகள் என்று சொல்வது என்றால், மதம் ஒருவரின் தனிப்பட்டவரின் உரிமை, அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன நாடுகள் என்றால் அவை கம்யூனிஸ்ட் நாடுகள் மட்டுமேயாகும்.
சோவியத் யூனியன் தகர்ந்த பின்பு, தேச அளவிலும் சர்வதேச அளவிலும் இயங்கும் மதவாத அமைப்புகள் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டதை நம்மால் பார்க்க முடிந்தது. இறுதியாக, இம்மூன்று சொற்களிலும் மிகவும் கடினமான வார்த்தை தேசியவாதம் என்னும் சொல்தான்.
ரஷ்யப் புரட்சியைத் தவிர, சீனா, கியூபா உட்பட மற்ற அனைத்து நாடுகளிலும் ஏற்பட்ட சமூகப் புரட்சிகளும் காலனிய மற்றும் அரைக் காலனிய நாடுகளில் நடைபெற்றவைகள்தான். எனவே, சோசலிசத்திற்கான இயக்கங்கள் தேச விடுதலைக்கான யுத்தங்களுடன் இணைக்கப்பட்டன. மேலும், மூன்றாம் உலக நாடுகளில் இருந்த மிகவும் முற்போக்கான முதலாளித்துவ அரசுகள் தேசப்பற்றுடன் கூடிய பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றின. பாண்டுங் திட்டக் காலத்தில் நேருவின் இந்தியா, நாசரின் எகிப்து மற்றும் பாதிஸ்ட் அரபு நாடுகளை இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இப்போது வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வேடார் நாடுகளை இவ்வாறு கூற முடியும். இவ்வரலாறுகள் நம்மை இன்றைய தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று உணர்வை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுடன் பொருத்திப் பார்க்கும் போக்கிற்கும் இட்டுச் சென்றுள்ளது.
காலனிய நாடுகளில் உருவான தேசியவாத அல்லது நாட்டுப்பற்று சித்தாந்தம் காலனியத்திற்கு எதிரான ஒன்றுதான். ஆனால் இது பல சமயங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சித்தாந்தமாக தவறான முறையில் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு காலனியத்திற்கு எதிராக உருவான பல இயக்கங்கள் சோசலிஸ்ட் உள்ளடக்கங்களைக் கொண்டவை என்று சொல்ல முடியாது. இத்தகைய இயக்கங்களில் பல ஏகாதிபத்திய மூலதனத்தின் நவீன காலனிய வடிவங்களுடன் மிக வேகமாகத் தங்களை இணைத்துக் கொண்டு, மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கின்றன.
ஆப்ரிக்காவில் உள்ள நாடுகள் பல இத்தகைய வரலாற்றால் நிரப்பப்பட்டுள்ளன. ஏன், நம் அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் குறித்து கூறத் தேவையே இல்லை. இதில் மிகவும் சிக்கல் நிறைந்த வழக்குகள் எவை எனில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக மூர்க்கமான முறையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தாலிபான்களாகும். ஆயினும் இவர்கள் மக்களுக்கான சோசலிச முற்போக்கு சக்தியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய பாசிஸ்ட் இயக்கங்கள் அனைத்தும் நடைமுறையில் ஒரு விஷயத்தில் ஒத்துப்போயின. முழுமையான தேசியவாதம் என்று தங்களை அழைத்துக் கொண்ட அவைகள் வலதுசாரி தேசியவாதங்களின் அனைத்து விதமான நச்சுத்தன்மை வாய்ந்த வடிவங்களையும் தம்முள் கொண்டிருந்தன. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் 19 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சித்தாந்தமாக தேசியவாதம் இருந்தது என்பது மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில் தான் ஐரோப்பாவில் தேசம் என்கிற வடிவம் உருவானது. இவ்வாறு கடுஞ்சிக்கல்கள் நிறைந்த நிலையில் தேசியவாதம் என்ற சொல்லை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுடன் சமமாய்ப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்றே எனக்குத் தோன்றுகிறது.
தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று என்ற சொல்லின் பின்னணியில் எந்தவித வர்க்க உள்ளடக்கமும் இல்லை என்பதே என் சொந்தக்கருத்தாகும். எல்லா நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் தங்கள் வர்க்க உள்ளடக்கத்தை அவற்றின் மீது ஏற்றுகின்றன என்பதே என் கருத்தாகும்.
லெனின், தொழிலாளி வர்க்கத்தின் கட்சியின் தலைவர் என்ற முறையில் காலனிய நாடுகளில் இருந்த நிலைமைகளை ஆராய்ந்து அவற்றின் அடிப்படயில் தேசிய இனப்பிரச்சனைக்கு அதிக அழுத்தம் கொடுத்தார். காலனிய எதிர்ப்பு தேசியவாதத்தின் தலைமையை முதலாளித்துவ வர்க்கம் தமதாக்கிக் கொள்வதற்கு முன்பு தேசிய இனப்பிரச்சனை மீது மேலாதிக்கத்தை நிறுவிட விவசாய வர்க்கத்தின் கூட்டணியுடன் தொழிலாளி வர்க்கத்தால் சாத்தியமாகலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே லெனின் அவ்வாறு கூறினார்.
காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் தேசிய முதலாளிகளில் நாட்டுப்பற்று கொண்ட பிரிவினர் தலைமைப் பாத்திரம் வகிப்பதை ஏற்றுக் கொள்வது என்பது விரும்பத்தக்க ஒன்று அல்ல. இது கம்யூனிய இயக்கத்தின் ஒரு பலவீனமேயாகும்.
தேசியவாத சித்தாந்தம் என்பது அடிப்படையில் தேசிய-அரசு (Nation-State) வடிவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இணைக்கப்பட்டதாகும். தேசிய-அரசு என்ற வடிவம் இருக்கும் வரை, ஏதாவது ஒரு வகையிலான தேசியவாதம் ஒரு மெய்யான அவசியமாகும். நாஜி ஜெர்மனியின் பாசிஸ்ட் தேசியவாதம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய தேசியவாதம், வியட்நாம் அல்லது அங்கோலா போன்ற நாடுகளில் விடுதலை இயக்கங்களுக்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சிகர தேசியவாதம், மதச்சார்பற்ற அரசு தேசியவாதம், ஈரான் நாட்டின் சமயகுரு மார்களின் தேசியவாதம் என்று எண்ணற்ற தேசியவாதங்கள்.
எங்கெல்லாம் தேசியவாதங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் தேசியவாதம் குறித்த பொருள் குறித்தும் எண்ணற்ற சண்டை சச்சரவுகளும் உண்டு. தேசியவாதத்தின் ஒரு வகை, மற்றோர் வகையால் தோற்கடிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்படுவதும் ஒரே நாட்டில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இப்போதெல்லாம், உலகில் பலநாடுகளில், நாட்டின் குணாம்சத்தை வடிவமைப்பதில் அந்நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள மதத்தையும் இணைத்துக் கொள்வது என்பதும் புதுப்பாணியாக மாறி இருக்கிறது. யூத சமயத்தை ஒரு நாட்டினர் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால், சில நாடுகளில் இஸ்லாமை தூக்கிப் பிடிக்கிறார்கள், இங்கே இந்துயிசத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். வேறொரு நாட்டில் கத்தோலிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.
ஒரு காரணத்திற்காகவே இவை அனைத்தையும் நான் கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஏகாதிபத்திய எதிர்ப்பு மட்டுமே இந்திய தேசியவாதத்திற்கான உண்மையான உள்ளடக்கமாக இருக்க முடியும் என்று நம்பக் கூடிய அளவிற்கு இடதுசாரிகளாகிய நீங்கள் ஏற்கனவே முடிவுக்கு வந்திருப்பீர்கள். நான் அவ்வாறுதான் நம்புகிறேன். ஏனெனில் நான் ஒரு மார்க்சிஸ்ட். துரதிர்ஷ்டவசமாக, மார்க்சிசம் நம் நாட்டில் மிகவும் சிறுபான்மையினர் மத்தியிலேயே இருந்து வருகிறது.
அதேசமயத்தில் இந்துத்துவா கொள்கையையும் புறத்தூண்டுதல் எதுவுமின்றி நகர்ப்புற, உயர்சாதி, மத்தியதர, சமூகத்தில் பத்தாம் பசலியாகவுள்ள இந்துக்கள் எவரும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. இந்தியாவில் இந்துக்கள்தான் அதிகம். எனவே இந்துக் கலாச்சாரத்தை தேசியக் கலாச்சாரமாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் நடை முறையில் அவ்வாறில்லை.
ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925 இல் துவக்கப்பட் டது. ஒவ்வோராண்டும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு உயர்ந்து வந்திருக்கிறது. ஆனாலும் 1948க்கும் 1962க்கும் இடையே மட்டும் விதிவிலக்காக அதன் உறுப்பினர் எண்ணிக்கை தேக்க நிலையில் இருந்தது. இவ்வாறு தேக்கநிலை ஏற்பட்டது என்பது காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கும், நேரு இறந்ததற்கும் இடையிலான காலகட்டம் என்பதை நீங்கள் நினைவுகூர முடியும். 1962 இல் இந்திய – சீன யுத்தம் துவங்கியபின் இதனை, இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளை அவமானப்படுத்திட, அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்திட, மிகவும் விரிவான அளவில் பயன்படுத்திக் கொள்ளப்பட் டது. அதன் பின்னர் வலதுசாரிகளும் தங்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டிக் கொள்ள முடிந்தது.
ஆயினும், 1948க்கும் 1962க்கும் இடையே ஆர்எஸ்எஸ் வளராமல் தேக்க நிலையில் இருந்ததற்கு மகாத்மா காந்தியின் படுகொலை ஒரு காரணியாக இருந்த போதிலும், அந்த சமயத்தில் காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் வழிவந்த ஜவஹர்லால் நேருவால் தலைமை தாங்கப்பட்ட அரசியல் மற்றும் கலாச்சார மூலதனம்தான் அதற்கு மிகவும் முக்கியமான காரணி என்பது என் கருத்தாகும். மேலும் அந்த சமயத்தில் நாடாளுமன்றத்தில் நேருவுக்கு எதிர்ப்பைப் பிரதானமாக வழங்கியது கம்யூனிஸ்ட்டுகளும், சோசலிஸ்ட்டுகளும்தான் என்பதையும் நாம் நினைவு கூர்தல் வேண்டும். இவ்வாறு அந்த சமயத்தில் ஒட்டுமொத்த இந்திய அரசியலுமே வகுப்புவாதத்தை எதிர்த்த அரசியல் சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ஆளும் கட்சி மட்டுமல்ல, ஹாப்ஸ்வாம் ஒருமுறை சொன்னது போல அறிவிற் சிறந்த இடதுசாரிகளும் (“The Enlightenment Left”) பிரதான எதிர்க்கட்சி சக்திகளாக இருந்து மண்ணின் மாண்புகளை உயர்த்திப் பிடித்தார்கள். ஜவஹர்லால் நேரு முதலமைச்சர்களுடன் கொண்டிருந்த எண்ணற்ற கடிதப் போக்குவரத்துகளிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குள்ளும் வகுப்புவாதம் புரையோடிப் போயிருந்ததை அவர் கூர்மையாகக் கண்டறிந்திருந்தார் என்பதைக் காண முடியும்.
ஆயினும், அந்த சமயத்தில் இடதுசாரிகளின் மேலாதிக்கம் இருந்தது பற்றி நான்கு அம்சங்களைக் கூற வேண்டியது அவசியம். முதலாவது, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், காங்கிரசிலிருந்த வலதுசாரிகள் சூழ்ச்சி செய்தபோதிலும் கூட அவற்றைப் புறந்தள்ளிவிட்டு நாட்டில் பல மாநிலங்களில் ஆட்சியிலிருந்தாலும் சரி மற்றும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, இடதுசாரிகள் வகுப்புவாதத்திற்கு எதிராக முன்னின்று போராடினார்கள்.
இரண்டாவதாக, முதலாளிகளுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் அளிக்கப்பட்ட போதிலும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் துறைக்கு சேவகம் செய்யக் கூடிய விதத்தில் செயல்பட்ட அதே சமயத்தில், அவர்களின் அளவுக்கு மீறிய பேராசையை ஒரு சமயத்தில் தடுத்து நிறுத்தவும் முடிந்தது. இந்தியப் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டு நெருக்கடிக்கு உள்ளான போது இந்திராகாந்தியுடைய வங்கிகள் தேசியமய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மூன்றாவதாக, அந்த சமயத்தில்தான் இந்திய அரசு மிகவும் உறுதியுடன் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மிகவும் குளறுபடியாக இருந்த சமூக ஒழுங்கில் நவீன, மதச்சார்பற்ற, முற்போக்கு மாண்புகளை சமூகத்தில் ஆழப் பதித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இவை அனைத்தையும் அப்போது வெளியான புதிய பாடப் புத்தகங்களில் காண முடியும். மேலும் ஆட்சியிலிருந்தவர்களால் மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியினராலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அரசியல் பேச்சுக்கள் அமைந்திருந்தன. ஏற்கனவே காலனிய எதிர்ப்பு இயக்கத்தில் அரசியலாக்கப்பட்டிருந்த மக்கள் மத்தியில் இவை மேலும் பெரிய அளவில் பக்குவத்தை உருவாக்கின.
இறுதியாக, மதச்சார்பின்மை என்பது தனிப்பட்ட ஒன்றாக பார்க்கப்படவில்லை. மாறாக அது அனைத்து மாண்புகளின் தொகுப்பாகவும், கூட்டுச் செயல்பாடாகவும் கருதப்பட்டது.
நாட்டில் வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் எழுதப்படிக்கத் தெரியாத தற்குறிகளான ஒரு சமூகத்தை நாம் கொண்டிருந்தோம். நாடு சுதந்திரம் பெற்றபின் அயல்துறைக் கொள்கையில் அணிசேராக் கொள்கையை உறுதிபட பற்றி நின்றோம். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தைப் பாதுகாத்தோம். பொருளாதார விவகாரங்களில் சோசலிச வளர்ச்சிப் (“socialistic development”) பாதை முக்கிய பங்கு வகித்தது. இவ்வாறு பல முற்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆட்சியாளர்கள் நடைமுறையில் செய்தார்களோ இல்லையோ வாக்குறுதிகள் தாராளமாகவே அளிக்கப்பட்டன. அத்தகைய வாக்குறுதிகளும் கூட மக்களின் அரசியல் செயல்பாட்டுக்கு சேவை செய்தன.
நேருவினுடைய ஆட்சிக்கு பிரதானமான எதிர்ப்பு என்பது வலதுசாரிகளிடமிருந்து கிடையாது, மாறாக இடதுசாரிகள்தான் பிரதானமான எதிர்ப்பினை மேற்கொண்டிருந்தார்கள். அவை மிகவும் ஆக்கபூர்வமானதாகவும், மதச்சார்பின்மை மாண்புடன் பின்னிப்பிணைந்த சோசலிச சமுதாயத்தை உருவாக்கும் விதத்தில் அது அமைந்திருந்தது. இப்போது அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டுவிட்டன. இடதுசாரிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு.
நவீன தாராளமய மற்றும் வலதுசாரிகளின் கொள்கைகளில் மதச்சார்பின்மையின் மாண்பு எந்த அளவிற்கு பின்னிப் பிணைந்திருக்கிறது என்று கூறுவது மிகவும் கடினம். உலகின் பல பகுதிகளிலும் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன? அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக இருந்தாலும் சரி மற்றும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளாக இருந்தாலும் சரி, நவீன தாராளமயக் கொள்கைகள் எந்த நாடுகளில் அமல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் வலதுசாரிகள் வெற்றிக் களிப்பில் மிதப்பதைப் பார்க்கலாம். இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா, என்ன?
வகுப்புவாதம் தொடர்பாக நான் இதுவரை மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளேன். 1993 இல் அயோத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிகள் குறித்து (“On the Ruins of Ayodhya) ஒரு நூலும், அதன் பின்னர் பத்தாண்டுகள் கழித்து 2003 இல், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நடைபெற்ற சமயத்தில், இரு கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். ஆயினும் மதவெறியர்களைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாற்றம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை.
இப்போது கார்ப்பரேட்டு மூலதனம் ஒன்றாக இணைந்து, மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கிறது. இதன் மூலம் அரசியல் பொருளாதாரத்தின் ஆட்சிப் பரப்பிற்குள் மூலதனத்தின் நவீன தாராளமய எதேச்சாதிகாரம், தத்துவார்த்த ரீதியாக வகுப்புவாத எதேச்சாதிகாரமும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கைகோர்த்துக் கொண்டுள்ளன.
கார்ப்பரேட்டுகளும் அரசாங்கமும் ஒன்றாக இருந்த முசோலினியின் இத்தாலியப் பாசிசத்தின் வடிவம் குறித்து இங்கே நினைவுகூர்தல் நலம் பயக்கும். சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தியப் பின் நவீனத்துவம் குறித்த பிரச்சனையில், சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்டின் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம் என்று கூறியிருந்தேன். 1947இலிருந்து 1975 வரை முதல் கட்டம். நேருவின் ஆட்சி தொடங்கி, இறுதியில் நெருக்கடிக்க ஆளாகி, அவசரநிலைக் காலத்தில் சிதைந்தது. அடுத்த இருபது ஆண்டுகள் இரண்டாவது கட்டமாகும். இக்கால கட்டம் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டவர்களை இணைத்த ஜேபி இயக்கத்தால் துவங்கப்பட்டு, அவசரநிலைக் காலத்திற்குப் பின் ஆட்சி செய்த ஜனதா அரசாங்கத்தின் காலம்.
இக்கால கட்டத்தில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்திய அரசியலில் ஒரு மரியாதைக்குரிய மதித்துப் போற்றக்கூடிய ஓர் இயக்கமாகவும் சட்ட ரீதியாக இயங்கக் கூடிய ஓர் இயக்கமாகவும் மாற்றப்பட்டது. இதன் அரசியல் அங்கமான ஜனசங்கம் கட்சிக்கும் அதன் தலைவர்கள் வாஜ்பாபி மற்றும் அத்வானிக்கும் ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்திய அரசியலில் இது அவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஒட்டுமொத்தத்தில், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ அரசின் அரசியல் நெருக்கடி காரணமாக மேலும் தொடர்ந்து ஆட்சி செலுத்தும் வல்லமையை இழந்தது. ஆயினும் அதற்கு மாற்றாக வேறொருவரும் தோன்றவில்லை.
இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவுக்கு வந்து, இரண்டாவது வாஜ்பாயி அரசாங்கம் 1998 இல் ஆட்சிக்கு வந்தது. இது புதியதொரு கட்டத்தைத் தொடங்கி வைத்தது. இடதுசாரிகள் அல்லாத அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி ஓர் அரசியல் கட்சிகளின் கூட்டணி உருவானது. இது முதலாளித்துவ ஆட்சிக்கு புதியதொரு ஸ்திரத்தன்மையைக் கொடுத்தது. எந்தக் கூட்டணியில் நின்று தேர்தலில் போட்டியிட்டாலும், வெற்றி பெற்ற பின் கூட்டணியை மாற்றிக் கொள்வது என்பதும் இக்காலகட்டத்தில் நடந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான் 1989இலிருந்து 1992 வரை மூன்றாண்டுகளில் சர்வதேச அளவிலும், தேச அளவிலும் முக்கிய சம்பவங்கள் பல நிகழ்ந்தன. சர்வதேச அளவில் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் வரலாற்றுச் சிறப்பு கொண்ட கம்யூனிஸ்ட் அமைப்பு முறை முடிவுக்கு வந்தது. அமெரிக்கா உலக மேலாதிக்கப் போலிஸ்காரனாக (Hegemon) உருவெடுத்தது. இதனுடன் போட்டிபோடக் கூடிய அளவிற்கு எவரும் இல்லை. இந்திய ஆளும் வர்க்கமும் அதன் அரசும் இப்போது வெளிப்படையாகவே புதிய ஏகாதிபத்திய வல்லரசுக்குப் பின்னால் எவ்விதமான கருத்து வேறுபாடுமின்றி அணிதிரண்டன.
நம் நாட்டிற்குள்ளும் நவீனதாராளமயக் கொள்கைகள் நரசிம்மராவ்-மன்மோகன்சிங் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் களமிறங்கின. வகுப்புவாதத்தின் அமைப்புகளுக்கும், காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கும் இடையே அதிகார பூர்வமாக அறிவிக்காமல் குறிப்பறிந்து ஒன்றாய் செயல்படும் விதத்தில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இதனை 1989 இல் சிலாநியாஸிலும், மிகவும் மோசமான முறையில் 1998 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் பார்க்க முடிந்தது. இக்கால கட்டம் 1998 இல் முடிவுக்கு வந்தது.
அதன்பின் புதிதாக பாஜக தலைமையிலான வலதுசாரிகளின் அரசாங்கம் அமைந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய ஆளும் வர்க்கத்தின் எண்ணப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டது. அது நாட்டிற்கு வெளியே ஏகாதிபத்தியத்துடன் மிகவும் நெருக்கமாகக் கூட்டணி வைத்துக் கொண்டது, நாட்டிற்கு உள்ளே நவீன தாராளமயக் கொள்கையை (இதனை நான் அதிதீவிர முதலாளித்துவம் என்று அழைப்பேன்) பின்பற்றியது.
ஆளும் வர்க்கத்துக்கு மதச்சார்பின்மை முகத்துடன் காங்கிரஸ் சேவகம் செய்தது, பாஜகவோ வகுப்புவாத முகத்துடன் சேவகம் செய்தது. பாஜக தன்னுடைய ஆட்சிக்கு வேறு பல கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டியிருந்ததால் அது தன்னுடைய சொந்தத் திட்டத்தின் ஆத்திரமூட்டல் அம்சங்களைச் சற்றே நிறுத்தி வைத்திருந்தது.
இப்போது மோடி, தன்னுடைய பிரதமர் பதவிக்கான கனவிற்கு இந்துத்துவாக் கொள்கையை இலக்காக முன்வைக்கவில்லை, மாறாக மன்மோகன்சிங்கிற்கு சேவை செய்த அதே வளர்ச்சிக் கொள்கையைத்தான் முன்வைத்திருக்கிறார்.
வகுப்புவாதப் பிரச்சனையைப் பொறுத்த வரை, அரசியல் அரங்கில் மிக முக்கியமான அம்சம், 1998க்குப் பின், பாஜகவுடன் இடதுசாரிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏதோ ஒரு சமயத்தில் அல்லது பிறிதொரு சமயத்தில் உறவு கொண்டுள்ளன என்பதாகும்.
மக்கள் மத்தியில் மதவெறி சிந்தனைகளை வளர்த்தெடுப்பதென்பது இரு விதங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளும் மக்கள் மத்தியில் இவ்வேலையை மிகவும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கின்றன. கடந்த 80 ஆண்டுகளில் தங்கள் பக்கம் ஆதரவர்களை அதிக அளவில் இவர்கள் பெற்றுள்ளனர். கிராம்சி கூறியதைப்போல சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்கள் மத்தியில் நாள்தோறும் சிறுசிறு இயக்கங்கள் மூலம் இவர்கள் தங்கள் வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இப்போது இத்தகைய வேலைகளை தாங்கள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் ஆட்சியாளர்கள் மூலமாகவும், அதன் அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்கள், அடக்குமுறை கருவிகள் மற்றும் பல சமயங்களில் நீதித்துறை மூலமாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.
வகுப்புவாதம் குறித்த நம்முடைய ஆய்வுகள், சங்பரிவாரக் கூட்டத்தின் வேலைகள் குறித்தே அதிக அளவில் கவனம் செலுத்தி இருக்கின்றன. ஏனெனில் நாட்டில் மிகவும் பெரிய அளவில் ஸ்தாபன ரீதியாக செயல்படும் வகுப்புவாத சக்தி இதுதான். ஆயினும் இது ஒன்று மட்டும் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. எடுத்துக்காட்டுக்காக நான் மேலும் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். அவை முறையே முஸ்லீம் வகுப்புவாதம் மற்றும் சிவசேனை ஆகியவைகளாகும்.
பொதுவாக இந்திய முஸ்லீம்களைப் பொறுத்த வரை, ஒரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில், நாடு சுதந்திரம் அடைந்த பின் முஸ்லீம்களுக்கு என்று அகில இந்திய அளவில் ஒரு கட்சி உருவாகவில்லை. வட்டார அளவிலும் மாநில அளவிலும் ஏராளமாக இருந்தாலும், அகில இந்திய அளவில் அப்படி ஒரு கட்சி இல்லை.
தேசிய அரசியலிலும், ஏன் மாநில அளவிலான அரசியலிலும் கூட, முஸ்லீம்களில் பெரும்பாலோர் ஒரு மதச்சார்பற்ற தேர்தல் மாற்றைத்தான் (secular electoral alternative) கோருகின்றனர். இதற்கு அவர்கள் மதச்சார்பின்மை கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக மதச்சார்பற்ற அரசு மூலம்தான் தாங்கள் பெரும் அளவில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு மதச்சார்பின்மை என்பது இவ்வாறு சமூக நவீனமயத்தை (social modernization) அல்லது ஓர் அரசியல் கண்ணோட்டத்தை அல்லது ஒரு தத்துவார்த்த வாழ்நிலையை வெளிப்படுத்தும் ஒன்றாக மட்டுமல்ல, தங்கள் இனத்தின் நலனுக்கு மிகவும் உகந்த ஒன்றாகவும் இது இருப்பதால்தான் அவ்வாறு அவர்கள் கோருகிறார்கள்.
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில், முஸ்லீம் வகுப்புவாதத் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகரீதியாக பத்தாம் பசலித்தனமான சக்திகள் முஸ்லீம்கள் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய விதத்தில்தான் பொதுவாக இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பின்பு, வருமானம், கல்வியின் நிலைகள், காவல்துறை மற்றும் ராணுவம் போன்ற அரசு நிறுவனங்களில் வேலைக்கு எடுத்தல் என அனைத்திலும் முஸ்லீம்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையேயான இடைவெளி விரிவடைந்திருப்பதாகத்தான் அனைத்துப் புள்ளி விவரங்களும் கூறுகின்றன. அரசின் நிறுவனங்கள் அனைத்திலும் வகுப்புவாதமயப்படுத்தப்பட்டிருப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் நன்கு ஸ்தாபனப்படுத்தப்பட்ட வன்முறை அவர்களுக்கு எதிராக ஏவப்படுதலும், முஸ்லீம்கள் மத்தியில், எந்த நிமிடத்திலும் தாங்கள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுத் தாக்கப்படலாம் என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன.
காஷ்மீரில் அரசுப் பயங்கரவாதத்தை, ஜிகாத் பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, சாமானிய மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் எழுச்சிகளுக்கு எதிராகவும் பயன்படுத்துவது மக்களை ஆட்சியாளர்களிடமிருந்து அந்நியப்படுத்தியுள்ளது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள அந்த மாநிலத்தில் அவர்கள் சுயாட்சி கோருவது என்பதையே மதச்சார்பற்ற குடியரசு என்று சொல்லப்படுகின்ற ஆட்சியாளர்களால் ஏற்க முடியவில்லை. முஸ்லீம்களில் உயர்ந்தோர் குழாமைத் தவிர மற்ற சாமானிய முஸ்லீம்கள் அனைவரும் ஆட்சியாளர்களைத் தங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காது ஒதுக்கி வைத்திருப்பதாகவும், ஆடுமாடுகளைப் போலவே சமூக ரீதியாக, கலாச்சார ரீதியாக, குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்படுவதாகவும் கருதுகிறார்கள்.
இத்தகைய நிலைமைகள் அவர்களை பிற்போக்கான முஸ்லீம் மதத் தலைவர்களிடமும், படுபிற்போக்கு முஸ்லீம் சிந்தனையாளர்களிடமும் மிக எளிதாகத் தள்ளிவிட்டுள்ளது. இவற்றின் விளைவுகளில் ஒன்று, இவர்களை மிகவும் பயபக்தி உடைய கடவுள் நம்பிக்கையாளர்களாக மாற்றி இருப்பதாகும். சாதி இந்துக்களில் உள்ள வளர்ச்சியைவிட இது அதிகம் என்றே கூறலாம். வகுப்புவாத சக்திகள் இவர்களை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. பயபக்தியுடன் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் படிப்படியாக அரசியலின் வகுப்புவாத வடிவங்களைப் போதிப்பதுடன் வன்முறையை ஏவிடும் வகுப்புவாதக் கட்டமைப்புகளுக்குள்ளும் அவர்களைத் தள்ளிவிடுகின்றன.
பாபர் மசூதி இடிப்பு, அதனைத் தொடர்ந்து குறிப்பாக குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீது நடந்த இனப்படுகொலைகள், நகர்ப்புற முஸ்லீம்களில் ஒரு சிலர் மத்தியில் இந்து வகுப்புவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லீம் ஜிகாதி பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கனவு காணத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு கனவு காண்பவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் உருவாகியுள்ள பற்பல ஜிகாதி குழுக்கள் உத்வேகம் அளிக்கின்றன.
இந்திய முஸ்லீம் சமூகத்தில் மதச்சார்பற்ற நீரோட்டத்துடன் எண்ணற்ற முஸ்லீம்கள் இருந்தபோதிலும், அவர்களது சுதந்திரமான எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஓர் அரசியல் ஸ்தாபனம் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் இடையே முற்போக்கான முஸ்லீம் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் ஓர் அமைப்பு இல்லாததன் காரணமாக, இவர்களை இங்கே இருக்கின்ற பல்வேறான பிற்போக்கு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
விளைவு, முஸ்லீம்கள், முற்போக்கு மேடைகளில் அணிதிரட்டப்படுவதென்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலோருக்கு, பாலஸ்தீனப் பிரச்சனை என்பது யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான மோதலாகத்தான் தெரிகிறதேயொழிய, அது காலனியாதிக்கத்தின் மிகக் கொடூரமான காட்டு மிராண்டித்தனமாகப்படவில்லை. ஆப்கானிஸ்தானத்திற்குள்ளோ அல்லது ஈராக்கிற்குள்ளோ ஊடுருவுதல் நடைபெறுவதை அவர்களால் மேற்கத்திய கிறித்தவர்கள் கிழக்கத்திய முஸ்லீம்கள் மீது தொடுத்திடும் இனப்படுகொலைகளாகத்தான் பார்க்கப்படுகிறதேயொழிய, நவீன ஏகாதிபத்தியத்தின் வரலாற்றின் அத்தியாயங்களாக அவர்களுக்குத் தெரியவில்லை.
சமீபத்தில் கூட, இந்திய முஸ்லீம்களில் பலதரப்பினர் வங்கதேச முஸ்லீம் லீகிற்கு ஆதரவாக சக்திமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதைப் பார்த்தோம். ஆனால் அவர்கள் ஷா பாக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இப்போது கடவுள் பற்றுள்ளவர்களால் கடவுள் பற்றற்றவர்கள் கொல்லப்படுவது என்பதும் சன்னி குழுவினரால் ஷியா குழுவினரும், முற்போக்கான பெண்கள் பிற்போக்கான ஜிஹாதிகளால் கொல்லப்படுவது என்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பிற்போக்காளர்களால் கொல்லப்படுபவர்களுக்கு ஆதரவாக இந்திய முஸ்லீம்கள் மத்தியில் அர்த்தமுள்ள ஆதரவு இயக்கம் எதுவும் நடைபெறவில்லை.
நாட்டில் உள்ள முஸ்லீம்களில் உயர் அடுக்கில் உள்ளவர்கள் ஆட்சியாளர்களின் கொள்கைகள் சிலவற்றைக் குறித்து அவ்வப்போது எதிர்ப்பினையோ அல்லது விமர்சனங்களையோ காட்டுவார்கள். இது எதற்கு என்றால் அவர்கள் தங்களின் பேரம்பேசும் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காகத்தானேயொழிய, வேறெதற்காகவும் அல்ல. ஆனால், முஸ்லீம்களில் கீழடுக்கில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உதிரிப் பாட்டாளிகளாகவே (Lumpen-Proletariat), சிவசேனை மற்றும் சங்பரிவாரக் கூட்டத்தில் உள்ளவர்களைப் போலவே இருக்கிறார்கள். ஆனால் நாட்டில் எங்கு வன்முறை வெடித்தாலும், அந்த சமயங்களில் காவல்துறையினராலும் இதர பாதுகாப்புப் படையினராலும் கைது செய்யப்படும்போது, இந்துக்களுக்கு உள்ளதுபோன்ற அமைப்புகள் எதுவும் இவர்களைக் காப்பாற்றுவதற்கு முன்வருவதில்லை.
பம்பாயில் சிவசேனை அமைப்பு இவ்வாறு உதிரிப் பாட்டாளிகளைக் கொண்டுதான் உருவானது. இவர்கள் உத்திகளை, தங்கள் எதிரிகளை மற்றும் வன்முறைகளை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள்? தங்களின் கீழ் திரண்ட உதிரிப் பாட்டாளிகளை வைத்து ஒரு பக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளையும், தொழிற்சங்கவாதிகளையும் வேட்டையாடினார்கள், மறுபக்கத்தில் தமிழர்களுக்கு எதிராகவும் வன்முறையை ஏவினார்கள். இவற்றிற்கு இந்துத்துவா வெறியர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.
பின்னர் பீகாரிகளுக்கு எதிரான இயக்கத்தை நடத்தியபோது இவர்கள் இந்து பீகாரி மற்றும் முஸ்லீம் பீகாரிகளுக்கு இடையே வித்தியாசம் எதையும் பார்க்கவில்லை. இங்கே நான் சிவசேனையைப் பற்றி ஆய்வு செய்திடவில்லை. எனினும் ஒருசில விஷயங்களைக் குறிப்பிட வேண்டியிருந்தது.
தாக்கரேயின் சித்தாந்தத்தின் முக்கிய கூறு என்னவெனில் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வது என்பதுதான்.
1966 இல் உருவான சிவசேனை 1980களில்தான் இந்துத்துவாவின் சித்தாந்தத்தை முழுமையாகத் தழுவிக் கொண்டது. ஒரு சமயத்தில், தாக்கரே அவசரநிலைப் பிரகடனத்தைக் கூட ஆதரித்தார், வடஇந்தியர்களுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற பிரச்சாரங்களின் போது அது இந்துக்களுக்கும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. அனைவருமே வெளியாட்கள் போன்று தான் சித்தரிக்கப்பட்டார்கள். இவர்கள் பம்பாயில் இருப்பதால்தான் மராத்தியர்களின் துன்பதுயரங்களுக்குக் காரணமாம். நாட்டின் நிதி மையமாக விளங்கும் பம்பாயில் சூறையாடும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட துன்ப துயரங்களுக்கெல்லாம் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்த, மிக அற்பக் கூலி பெற்ற வட இந்தியர்கள்தான் காரணமாம்.
சிவசேனை தன் கீழ் இருந்த உதிரிப் பாட்டாளிகளைக் கொண்டு, வன்முறை வெறியாட்டங்களை தமிழர்கள், முஸ்லீம்கள், பீகாரிகள் என்று நடத்தியது. பின்னர் வங்காளிகள் மீது இவர்கள் எல்லாம் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அவர்களின் சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்தார்கள், அவர்களின் சிறிய வியாபார நிறுவனங்களை எல்லாம் அபகரித்துக் கொண்டார்கள்.
தாக்கரே ஆரம்பத்தில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாகத்தான் தன் வேலையைத் தொடங்கினார். பின்னர் சிவசேனையின் தலைவராக உயர்ந்தபின் அவர் இறக்கும் தருவாயில் அவரது சொத்தின் மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.
இவ்வாறு வகுப்புவாத வன்முறை என்பது ஸ்தாபன ரீதியாகக் குற்றங்கள் புரிவதற்கான வடிவங்களை எடுத்துக் கொள்கின்றன. இவ்வாறு கிரிமினலாகக் குற்றம் புரியும் அமைப்புகளோடு இவை சிண்டிகேட்டுகள் அமைத்துக் கொள்கின்றன. வகுப்புவாதத்தில் சரியான அம்சம் என்பது பொதுவாக இதுதான். சிவசேனையின் ஆட்கள் உதிரிப் பாட்டாளி வர்க்கத்திலிருந்தே பொறுக்கி எடுக்கப்பட்டார்கள்.
மரபு ரீதியான முடிவுரை கூறி இந்த உரையை நான் முடிக்க முயற்சிக்கப் போவதில்லை. ஆயினும், ஒருசில முக்கிய அம்சங்களை மட்டும் கூறி முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.
முதலாவதாக, இந்தியாவில் வகுப்புவாதக் கட்டமைப்பிற்கு உதிரிப்பாட்டாளிகள்தான் (lumpen proletariat and the lumpenised petty bourgeoisie) குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அது சங்பரிவாரக் கூட்டமாக இருந்தாலும் சரி, அல்லது முஸ்லீம்களாக இருந்தாலும் சரி அல்லது சிவசேனை போன்ற அமைப்புகளாக இருந்தாலும் சரி. ஏனெனில், நவீன தாராளமய கட்டத்தில் இந்திய முதலாளித்துவத்தின் கட்டமைப்பு அம்சம் அதுதான். நாட்டில் தொழிலாளர் வர்க்கச் சேனையை விட வேலையில்லாத இளைஞர்களின் சேனை மிகவும் பெரிதாக இருக்கிறது. இத்தகு நிலையில் சமூகத்தில் ஒரு முறையான தொழிலாளர் வர்க்கக் கலாச்சாரத்தை நிறுவுவது என்பது மிகவும் சிரமம். தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே கூட உதிரிப் பாட்டாளிகளை உருவாக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. முறையான ஊதியம் கிடையாது, எந்த நிமிடமும் வேலையைவிட்டு விரட்டி அடிக்கப்படலாம் என்ற நிலை. எல்லாவற்றையும் விட மோசம், வேலையில்லாதோர் பட்டாளம் மிகவும் பெரிது, நிரந்தரமானது.
ஆக்கபூர்வமான உழைப்பில் ஈடுபட்டிருப்பவரின் நிலையான வாழ்க்கை ஒருவருக்கு மதிப்பையும் மரியாதையையும் அளிக்கிறது அல்லது குறைந்தபட்சம் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரத்தை அளிக்கிறது. அவ்வாறு ஆக்கபூர்வமான உழைப்பில் ஈடுபடாதவர்களின் நிலை? காலப்போக்கில் மற்றவர்களைத் துன்புறுத்துவதைப் பற்றிக் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாது கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய நபர்களை வகுப்புவாதம் தன்னுடைய வன்முறைச் செயல்களுக்கு நன்கு பயன்படுத்திக் கொள்கிறது.
ஆக்கபூர்வமான உற்பத்தியில் ஈடுபட்டிருப்போர் வாழ்க்கை என்பது அவரைப் போலவே ஆக்கபூர்வமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மற்றவர்களோடும் இணைந்து ஓர் இனமாக, ஒரு சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உதிரிப்பாட்டாளிகள் என்று சொல்லப்படுகிற ரவுடிகள், கிரிமினல்கள், திருடர்கள், பொறுக்கிகள் மற்றும் இதுபோன்று சமுதாயத்திற்குக் கேடு பயக்கும் தொழில்களில் ஈடுபட்டிருப்போர் வாழ்க்கை என்பது இயற்கையாகவே குறிப்பிட்ட குணாம்சங்களுடன் கூடிய எவ்விதமான இனத்தையும் (The life of the lumpenproletariat is by its nature one that creates no community out of any shared conditions of labour) உருவாக்குவதில்லை, தற்காலிகமாக சேர்ந்து கொள்வார்கள், வேலை முடிந்தபின் கலைந்து சென்று விடுவார்கள். தொழிலாளர் வர்க்கக் குணம் பறிக்கப்பட்ட இவர்கள், சாதி, மதம் அல்லது வேறு எந்த விதத்திலாவது வெறியூட்டப்பட்டால் அதற்கு மிக எளிதாக மயங்கிவிடுவார்கள். வகுப்புவாத அரசியல் இத்தகைய உதிரிப் பாட்டாளிகளுக்கு வெகுவாகவே தீனி போடுகிறது.
இத்தகைய உதிரிப் பாட்டாளிகளை வகுப்பு வாத/பாசிஸ்ட் வகையிலான வன்முறை இயக்கங்கள் மிகவும் எளிதாக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
மிகவும் பொதுவாகக் கூறுவதென்றால், வகுப்புவாதத்தின் அனைத்து வடிவங்களும் நவீன தாராளமயம் அல்லது அதிதீவிர முதலாளித்துவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாகும். அதாவது, முதலாளித்துவத்தின் பணப் பேராசை பிடித்தலைகிற, கொள்ளையிடும் வடிவமாகும். அனைத்து முதலாளித்துவமும் கொள்ளையடிக்கும் குணம் கொண்டவைதான். ஒவ்வொன்றுக்கும் இடையே கொஞ்சம் கூட குறைச்சல் இருக்கலாம், அவ்வளவுதான்.
இத்தகைய முதலாளித்துவ மனப்பாங்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆயினும் நவீனதாராளமய தீவிரவாதம் தலை தூக்குவதற்கு முன் சில கட்டுப்பாடுகளுடன் இருந்தது. இப்போது அத்தகைய கட்டுப்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டுவிட்டன. அரசின் தலையீடு என்பதும் அநேகமாக இல்லை. எப்போதாவது மதவன்முறை வெறியாட்டங்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்சனையாக மாறும்போதுதான் அரசு தலையிடுகிறது.
நாடு சுதந்திரம் பெற்ற பின் முதல் கட்டத்தின் போது, அரசு ஒரு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசாக இருந்த போதிலும், ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தங்களுக்கு எல்லாம் இடம் தராது அதனை எதிர்த்து நின்று இந்தியப் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய முதலாளித்துவம் வலுவானதாகவும், அதிகம் கொள்ளையடிக்கக் கூடியதாகவும் மாறியதால், ஏகாதிபத்தியக் கொள்ளையர்களோடு கூடிக்குலாவுவது என்பதும் அதிகமாகியது. பொதுச் சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்க்கவும் முன்வந்தது. இந்தியப் பொருளாதாரத்தையும் மேலும்மேலும் அந்நியர்களுக்குத் திறந்துவிட வழிவகுத்தது. இவற்றின் மூலமாக ஒரு சிலரை மட்டும் நிரந்தர வேலையில் வைத்துக் கொண்டு, மற்றவர்களை வேலையில்லாதோர் பட்டாளத்தில் தள்ளியது.
இவற்றின் மூலமாக அரசின் குணாம்சமும் அரசின் பங்கும் மிகவும் மோசமாக மாறியது. நாட்டிற்குள்ளே, இது ஒட்டுமொத்த இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல், அநேகமாக முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை மட்டுமே, அதிலும் குறிப்பாக கார்ப்பரேட்டுகள் நலன்களை மட்டுமே காக்கும் ஒன்றாக மாறியது. உலகப் பொருளாதாரத்துடனான உறவுகளைப் பொறுத்தவரை, அரசு, உலகத்தின் முன்னே இந்திய மக்கள் மற்றும் அவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக, நவீன தாராளமயக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் இந்த அரசின் முக்கியமான வேலை என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களையும் கட்டளைகளையும் இந்திய மக்களுக்கு கைமாற்றிக் கொடுப்பதாகும். இத்தகைய சூழ்நிலையில் அரசு மதச்சார்பற்ற தேசியம் (secular nationalism) என்னும் கொள்கையை – நம்முடைய காலனிய எதிர்ப்பு இயக்கங்களின்போது நமக்கு அடிப்படையாக அமைந்திருந்த கொள்கையை – நடைமுறையில் கைவிட்டாக வேண்டும்.
இந்த இடத்தில் வலுவாக உள்ள வலதுசாரிகள் இந்திய தேசியத்தை (Indian nationalism) மதரீதியான, அறிவு பெருகுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிற (obscurantist), உயர் பிராமணத்துவத்திற்கு வக்காலத்து வாங்குகிற மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத விதத்தில் மாற்றியமைக்கும் பணியை வேகம் வேகமாகச் செய்து வருகின்றன. நாட்டு மக்கள் இன ரீதியாக, பிராந்திய ரீதியாக, மத ரீதியாக மோதவிடப்பட்டு இந்திய மக்களின் ஒற்றுமை கூட கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கின்றன.
நவீனதாராளமயக் கொள்கை கொடூரமான சுரண்டலுக்கு மட்டுமல்ல தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுகளை மழுங்கடிக்கக் கூடிய விதத்தில் மிக அற்பக் கூலி தரும் ஒன்றாகவும் அமைந்துள்ளது. மக்களில் பெரும்பான்மையினருக்கு வேலை அளிப்பதற்கோ அல்லது பாதுகாப்பான வேலையை அளிப்பதற்கோ அது மறுக்கிறது.
இவ்வாறு இந்த அமைப்பு முறையானது சுரண்டல் தன்மை கொண்டது மட்டுமல்ல, சமூகத்தையே வேருடன் பிடுங்கி எறியக் கூடியதாகும். மக்களின் சமூக அமைப்பு முறையையும் குழி தோண்டிப் புதைக்கக் கூடியதாகும். இவ்வாறு அதிதீவிர முதலாளித்துவம் சமூகத்தையே அழுகச் செய்துவிட்டது. மக்களில் பெரும்பாலானவர்கள் மத்தியில் நஞ்சை விதைத்திருக்கிறது. ஏன், தொழிலாளர் வர்க்கத்தில் ஒருசில பிரிவினரிடம் கூட இதனை அது செய்திருக்கிறது.
வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அனைத்து வடிவங்களும் மிகவும் அவசியமானவைகளாகும். ஆயினும் அதே சமயத்தில், எவ்வளவு காலத்திற்கு மற்றும் எவ்வளவு கடுமையாக இப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது குறித்து எவ்விதமான மாயையும் நமக்கு இருக்கக் கூடாது.
வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மதச்சார்பின்மைக்கு ஆதரவான தத்துவார்த்த போராட்டம் மட்டுமல்ல, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியுமாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், வகுப்புவாதத்திற்கு (Communalism) மாற்று, கம்யூனிசம் (Communism) அல்லது சோசலிசம்தான். இன்றைய தினம் நாட்டில் வகுப்புவாத சிந்தனைகள் மிகப்பெரிய அளவில் ஊட்டி வளர்க்கப்படுவதை முறியடிக்கக் கூடிய விதத்தில் மதச்சார்பின்மையையும் கம்யூனிஸ்ட்டுகளின் குணங்களில் ஒன்றாக முன்னெடுத்துச் சென்றிட வேண்டும்.