சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) - 15 | வீட்டுக்குள் சாதிய அநீதி கண்டு கொந்தளித்தால் நீங்கள் எம் தோழரே - https://bookday.in/

சாதிய அநீதி கண்டு கொந்தளித்தால் நீங்கள் எம் தோழரே

சாதிய அநீதி கண்டு கொந்தளித்தால் நீங்கள் எம் தோழரே

சாதி இருக்கும் வரை -15

– அ. குமரேசன்

“ஒழிப்பது என்றால் எதிர்மறைச் சொல்லாக இருக்கிறதே? சமத்துவத்திற்காகத்தான் வாதாடுகிறோம் என்பதால் நேர்மறையான வேறு சொற்களைப் பயன்படுத்தலாமே.”

சாதிய ஒழிப்பு பற்றிய ஓர் உரையாடலில் ஒரு பங்கேற்பாளர் இவ்வாறு கேட்டார். சாதியை ஏற்றுக்கொண்டவர்களும் வரவேற்கும் வகையில் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்றார். அடிப்படையில் அவரது நோக்கம் சிறப்பானது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெற்றிகரமாகச் செயல்பட்டுவருவதற்கு அடிப்படையான ஒரு காரணம், அது தலித் மக்களுக்கான இயக்கம்தான் என்றாலும், தலித் மக்களின் அமைப்பு மட்டுமே அல்ல. தங்களுக்கிடையேயே பேதம் பார்த்தாலும், தலித்துகளைப் பின்னுக்குத் தள்ளுவதில் சேர்ந்துகொள்ளும் சாதிகளைச் சேர்ந்தோரும் பங்கேற்பதால்தான் அதுவொரு முன்னணி இயக்கமாகத் திகழ்கிறது. இத்தகைய பல இயக்கங்கள் இருக்கின்றன.

சாதியம் கடந்த காலத்தின் ஒரு பெரும் அவலம். நிகழ்காலத்தின் ஒரு பெருங்கேடு. எதிர்காலத்திலும் தொடரும் வரை ஒரு பெரும் அவமானம். ஆணவக் கொலைகளால் மட்டுமல்லாமல், தன்னை உயர்த்தி வைத்துக்கொண்டு சக மனிதர்களைப் பாகுபடுத்தும் கண்ணோட்டங்களாலும் சமுதாய வளர்ச்சியின் அனைத்து முன்னேற்றங்களையும் பரிகாசத்திற்கு உள்ளாக்கும் இழிவுதான் சாதியம். ஆகவே, மருத்துவத்தில் கிருமி ஒழிப்பு, அறுவை என்ற சொற்களெல்லாம் எப்படியோ அப்படியே சமூக சிகிச்சையிலும் நேர்மறையான சொற்றொடர்தான் ‘சாதி ஒழிப்பு’.

Caste Based Discrimination | Monad University

பேச்சால் எழுத்தால் மாறிவிடுமா?

எவ்வளவோ பேசப்பட்டுவிட்டது, எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டது, ஆனாலும் சாதியத்தை ஒழிக்க முடியவில்லை. சமுதாயத்தை இவ்வளவு இறுக்கமாகக் கவ்வியிருக்கிற சாதியத்தை பேச்சுகளாலும் எழுத்துகளாலும் ஒழிக்க முடியுமா? –இந்தத் தொடரைப் படித்துவரும் அன்பர்கள் சிலர் இவ்வாறு கேட்டிருக்கிறார்கள். உண்மைதான், சாதி ஒழிப்பு பற்றி நிறையவே பேசப்பட்டிருக்கிறது, விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. ஆயினும் சாதியம் கெட்டியாக நீடிக்கிறது. இதை ஒப்புக்கொள்கிறபோது, “சாதி இயற்கையானது, அதை ஒழிக்க முடியாது என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்,” எனக்கூறிச் சிரிப்பவர்களும் இருக்கிறார்கள். இதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன்,

18. பாவேந்தர் பாரதிதாசன் 2. | வேதாவின் வலை..

இருட்டறையில் உள்ளதடா உலகம் –சாதி
இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே

என்று ஆற்றாமையோடும் ஆவேசத்தோடும் பாடினார்.

ஆனால், சாதியத்தின் கனத்தோடு ஒப்பிட்டால் இதுவரை பேசப்பட்டிருப்பதும், எழுதப்பட்டிருப்பதும் போதாது. இன்னும் ஏராளமாகப் பேசவும் எழுதவும் வேண்டும். கேட்பவர், வாசிப்பவர் மனம் குறுகுறுக்கும் வரையில் பேசிக்கொண்டே, எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உரைகளைக் கேட்டதாலும் படித்ததாலும் உள்ளத்திலிருந்து சாதியைத் துடைத்தெறிந்த தனி மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள். குடும்பத்தாரும் உறவினர்களும் சாதிப் பிடிப்போடு இருக்க, தன்னை மட்டும் அதன் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டவர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

அதேவேளையில், பேசுவதாலும் எழுதுவதாலும் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுவிடாது. பேச்சும் எழுத்தும் செயலாகப் பரிணமிக்க வேண்டும். மனச்செயல் களச்செயலாக வேண்டும். அரசின் சட்டங்கள், நேர்மையான கறாரான சட்டச் செயலாக்கங்கள், இதனைப் படிப்போடு புகட்டும் கல்வித் திட்டங்கள், அலுவலக நடைமுறைகளில் சீர்திருத்தங்கள், அரசியல் இயக்கங்களில் இதற்கு முன்னுரிமைகள் என்று தேவைப்படுகின்றன. கொள்கைகளை உருவாக்கிச் சட்டங்களை இயற்றுகிற இடங்கள் முதல், பணிகளை மேற்கொள்ளும் ஊராட்சிகள் வரையில் முடிவுகள் எடுப்பதில் அனைத்து சமூகத்தினரின் பங்கேற்பும் பங்களிப்பும் இருப்பது சீரான சுமுகமான செயல்பாடுகளுக்கு இட்டுச் செல்லும்.

பொருளாதாரப் பங்கீடு

சாதிப்பாகுபாடுகளுக்கு எதிரான தற்போதைய சட்டங்களை சமரசமின்றிச் செயல்படுத்துவதுடன், மறு ஆய்வுக்கு உட்படுத்தி, குறைபாடுகளை நீக்கி, வலுவான புதிய சட்டங்களாக இயற்றுவது காலத்தின் தேவை. சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டங்களை ஒன்றிய, மாநில அரசாங்கங்கள் தொடங்குவது முக்கியம். சாதி மறுப்புத் திருமணங்கள் பெரும்பாலும் காதல் மணங்களாக இருக்கின்றன. அந்த இணையர்களுக்குப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்கான நிதியுதவி, அவர்களது பிள்ளைகளுக்குக் கல்வியிலும் வேலை நியமனங்களிலும் இட ஒதுக்கீடு – இவையெல்லாம் நடைமுறைக் கொள்கையாகட்டும். அரசாங்கக் கல்வி நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் சட்டப்படி பின்பற்றப்படுகிற இட ஒதுக்கீடு கொள்கை தனியார் நடத்தும் கல்வி/தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்த வேண்டும். இடது சாரிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், தொழிலாளர் சங்கங்களும் வலியுறுத்தும் இந்தக் கோரிக்கை அரசின் செவிகளில் நுழைந்து சட்டமியற்றும் நாடாளுமன்றம்–மாநில சட்டமன்றங்களில் எதிரொலித்து செயல்வடிவம் பெற வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில், நகர்ப்புற–ஊரகத் தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டுப் பங்குகளில் அந்தந்த வட்டாரத்தின் சமூகங்களுக்குப் பிரதிநிதித்துவம் என்றோர் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. மூலதனத்துவத்தோடு இணைந்த இந்த ஆலோசனை நடைமுறைக்கு வருமானால், பொருளாதாரத் தளத்தில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, அரசு நிதியுதவியுடன் இயக்கப்படும் நிறுவனங்கள் எப்படி தகவல் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டுத் தகவல்களை அளிக்க வேண்டியிருக்கிறதோ அதே போல பங்குதாரர் சேர்க்கைகளிலும் வேலை நியமனங்களிலும் சமூகப் பங்கீட்டிற்கு உட்படுவதைக் கட்டாயமாக்கலாம். உடனடியாக இது சாத்தியமில்லாமல் போகலாம், ஆனால் தொடர்ந்து வலியுறுத்த வலியுறுத்த, தொடர்ந்து விவாதிக்க விவாதிக்க, பொருத்தமான அமைப்புமுறைகளை உருவாக்க முடியும் என்றே தோன்றுகிறது.

குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்த சமூகங்களில் பங்குகளை வாங்கக்கூடியவர்கள் இல்லையெனில் என்ன செய்வது? முன்வருகிறவர்களுக்கு அரசு நிதி உதவி அளிக்கலாம். அது இன்றைய அரசுகளின் தனியார்துறை ஊக்குவிப்புக் கொள்கைக்கும் ஆதரவாக இருக்கும், அவர்கள் அறிவிக்கிற சமத்துவ நோக்கங்களை எட்டுவதற்கும் உதவியாக இருக்கும். பொருளாதாரக் களத்தில் சமூக உட்சேர்ப்பு சாதியத் தகர்ப்பில் ஒரு மையமான பங்கு வகிக்கும்.

சமூக ஏற்புக்கு

சமூக உட்சேர்ப்புடன் இணைந்ததாக, சமூக ஏற்புக்கான சிறப்பு முகாம்களுக்குத் திட்டமிடப்பட வேண்டும். இளைஞர்களுக்கான பயிலரங்குகளும், புத்தாக்க நிகழ்ச்சிகளோடு இணைந்த உள்ளூர்க் கலந்துரையாடல்களும் சாதிப்பெருமை குறித்து ஊட்டப்பட்டு வந்துள்ள தவறான கருத்தியல்களைக் களையும் வகையில் நடத்தப்பட வேண்டும்.

திரையுலக விவகாரங்களைச் சுவைபட வெளியிடுவதை ஒரு விரதமாகக் கடைப்பிடிக்கும் ஊடகங்கள் சாதி ஒழிப்புக் கருத்தாக்கங்களை வெளியிடுவதையும் ஒரு விரதமாக்கிக்கொள்ள வேண்டாமா? சாதிக் கலப்பால் வேற்றுமை ஒழிவதோடு, அடுத்தடுத்த தலைமுறைகளின் உடல் வலிமை பெருகும், அறிவாற்றல் மிகும், அனைத்துப் பிரிவினரின் சமமான பங்களிப்பில் ஒட்டுமொத்த சமுதாயம் பல மடங்கு முன்னேற்றம் காணும் – இந்தச் சிந்தனைகளைப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் மின்னிதழ்களும் சிறப்பாகக் கொண்டுசெல்ல முடியும். ஊடக நிறுவனங்களில் சமூகப் பிரதிநிதித்துவத்தை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோரின் பங்கேற்பு இதை உறுதிப்படுத்தும்.

இப்படிப்பட்ட பன்முக முயற்சிகளைத் தொடங்கினால், இன்னும் விரிவான, இவற்றை விடவும் நடைமுறை சாத்தியமான வழிகள் திறக்கும். பெரிய திட்டங்களும் பல முனைகளில் சிறுசிறு முயற்சிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பேசுவதும் எழுதுவதும் கூட அந்த முயற்சிகளின் ஒரு பகுதிதான்.

மகத்தான இயக்கங்கள், அவற்றின் தாக்கத்தால் விளைந்த கட்டாயங்களாலும் உருவான சட்டங்கள், பொதுவெளியில் கருத்துப் பரப்புரைகள், கலை இலக்கிய ஆக்கங்கள், அரசியல் கட்சிகளின் பணிகள் இவற்றால் பலனே இல்லை, எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று சொல்ல முடியுமா? கல்விக் கூடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் பல பிரிவினரையும் காண முடிவது முக்கியமான மாற்றம் அல்லவா? எடுத்துக்காட்டாக பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் (வன்கொடுமை தடுப்பு) சட்டம். காவல்துறையினர் அந்தச் சட்டத்தின் கீழ் வரக்கூடிய குற்றங்களை வழக்கமான குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்கிறார்கள், வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன, தண்டனை விகிதம் குறைவாக இருக்கிறது என்பன போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. அத்தகைய நிலைமைகளில் அமைப்புகள் தலையிட்டு, இந்தச் சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யவைக்க முடிகிறது. இப்போதும் வன்முறைகள் ஆங்காங்கே நிகழ்கின்றன. ஆனால், பொது இடங்களில் இந்த மக்களை இழிவுபடுத்துவது முன்பிருந்த அளவுக்கு இல்லை, வெளிப்படையாக இல்லை, சட்டம் பாயும் என்ற எச்சரிக்கையுடன் நடந்துகொள்கிறார்கள் என்ற மாற்றங்களைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. இந்த மாற்றங்களை நிலைப்படுத்துவதும், பரவலாக்குவதும்தான் தேவைப்படுகிறது.

சமத்துவ லட்சியத்துடன் இயங்கும் அரசியல் கட்சிகள், சிந்தனையாளர் (அவற்றில் மூலதனத்தார் உள்பட பல தரப்பினரும் இருக்கக்கூடும்) அரங்குகள், அனைத்துத் துறைகளிலும் கரத்தாலும் கருத்தாலும் உழைப்போர் சங்கங்கள், வேளாண் மக்கள் கூடல்கள், வணிகர் அவைகள், மாதர் அமைப்புகள், இளையோர் – மாணவர் கூட்டுகள், பாலினச் சிறுபான்மையினர் சபைகள், அவரவர் இறை நம்பிக்கையோடு இணக்கமாக வாழ்வதில் நாட்டமுள்ள அன்பர்களின் மன்றங்கள் என எல்லோருமே தங்களது இயக்கச் செயல்பாடுகளுக்கான நிகழ்ச்சி நிரலில் தலித் விடுதலைக்கும் தீண்டாமை–சாதி ஒழிப்புக்குமான பங்களிப்பைச் சேர்க்க வேண்டும்.

தலித் விடுதலை என்பது

தலித் விடுதலை என்றால் அது தலித் மக்களின் விடுதலை மட்டுமல்ல. தலித் விடுதலையில்தான் அனைத்து சமூகங்களின் விடுதலையும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் விடுதலையும் இருக்கிறது என்ற வரலாற்று அறிவியல் உண்மையை அந்த நிகழ்ச்சி நிரலில் பேச வேண்டும். இது எப்படியென்றால், பெண்ணின் விடுதலையில்தான் உண்மையில் ஆணின் விடுதலையும் இருக்கிறது – அதைப் போன்றதே.

“எவரோ ஒருவர் அடிமையாக இருக்கிற காலம் வரையில் எவரொருவரும் சுதந்திரமானவர் இல்லை.”

“உன்னுடைய சுதந்திரம் உன்னை அடுத்திருப்பவரின் அடிமைத்தனத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.”

“உண்மையான, முழுமையான விடுதலை என்பது அனைவரின் சுதந்திரம்தான்.”

“மற்றவர்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகள் உன் சொந்தச் சுதந்திரத்தையும் கட்டிப்போடுகின்றன.”

“மற்றவர்கள் விலங்கிடப்பட்டிருக்க நீ மட்டும் சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் கூறிக்கொள்வது ஓர் வெறுமையான வெற்றிதான்.”

உலகின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றிவருகிற இந்தப் பொன்மொழிகள் சக மனிதர்களின் விடுதலைக்காகப் போராடுவதில்தான் ஒவ்வொருவரின் விடுதலையும் இருக்கிறது என்ற செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்கின்றன.

See related image detail. The Offending King | The Village Church | The Village Church

இதையெல்லாம் தொகுத்துச் சொல்வது போல, குடிமக்கள் உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறிய சொற்கள் உலகெங்கும் ஒலித்தன: “எங்கே அநீதி இருந்தாலும் அது எங்கேயும் நீதிக்கு அச்சுறுத்தல்தான்.”

உலக நேயப் புரட்சி நாயகர் சே குவேரா இவ்வாறு அறிவித்தார்: “எந்தவொரு அநீதி கண்டும் கொதித்தெழுவீர்களானால் நீங்கள் என் தோழரே.”

HK PRINTS Che Guevara Poster with FRAME (14X20 Inch, Synthetic Wood, Without Glass) F-4 : Amazon.in: Home & Kitchen

நம் கண் முன்னால் கோரமாக ஆடிக்கொண்டிருக்கிறது, மக்களை ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது சாதியம் – தீண்டாமை எனும் அநீதி. அந்த வரலாற்று அநீதி தொடர்கிற வரையில் இந்திய மண்ணில் நீதிக்கு அச்சுறுத்தல்தான். நியாய உள்ளங்கள் கொதித்தெழுவதில்தான் அந்த அச்சுறுத்தல் அடியோடு தொலையும்.

சாதியத்தின் மைய முடிச்சே தீண்டாமைதான் என்று ஏற்கெனவே பார்த்தோம். தீண்டாமை என்றால், உயர்சாதிகள் என்பதாகச் சொல்லிக்கொள்ளும் பிரிவினர், ஒதுக்கி ஒடுக்கி வைத்துள்ள பிரிவினருக்கு எதிராகக் கடைப்பிடிக்கும் ஒவ்வாமை மட்டுமே அல்ல. அந்த “மேல்” பிரிவுகளிலேயே உயர்ந்தது, அதை விட உயர்ந்தது, அதை விடக் குறைந்தது என்ற ஒவ்வாமைகளும் இருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் தீண்டாமைக்கு இனி இடமில்லை என்றாக்கினால், சாதிக் கூண்டுகள் நிச்சயம் ஒரு நாள் உயிரற்ற கூடுகளாகிவிடும்.

நமது இடம்

இந்தக் கனவு கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எந்த அளவுக்கு நாட்டு நடப்பிலும் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் நிலை ஏற்படும்? இதையெல்லாம் செய்வதில், ஆட்சிப் பொறுப்புக்கு வருகிற அரசியல் கட்சிகள்தான் முன்னுதாரணைமாகவும் முதலிடத்திலும் நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால், பல கட்சிகள் சாதியக் கட்டமைப்பையே சார்ந்திருக்கின்றன, சாதியவாதிகளோடு நீக்குப் போக்காக நடந்துகொள்கின்றன, சாதிகளின் வாக்கு வங்கிகளை நம்பியிருக்கின்றன. சாதிச் செல்வாக்கின் அடிப்படையில்தான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன, பதவிகளைத் தருகின்றன. அத்தகைய கட்சிகள் தங்களுக்குள்ளேயே இத்தகைய அணுகுமுறைகளைக் கொண்டுவருவார்களா? ஆட்சியில் அமரும்போது இந்த அக்கறைகளோடு நடவடிக்கைகள் எடுப்பார்களா? அதையெல்லாம் எதிர்பார்ப்பது பகல்கனவாகிவிடாதா?

அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்துவிட முடியாத இந்தக் கேள்வியையும் வெவ்வேறு சொற்களில் அன்பர்கள் கவலையோடு முன்னால் நிறுத்துகிறார்கள். அவர்களின் கவலையில் நியாயம் இருக்கிறது. ஏனென்றால் அவர்களின் கேள்வியில் உண்மை இருக்கிறது. இப்படிப்பட்ட கட்சிகள் உடனே மாறிவிட மாட்டார்கள், மாறவும் விட மாட்டார்கள்தான். ஆனால் அதைச் சொல்லி, முயற்சிகளை மேற்கொள்ளாமல் விட்டுவிட முடியாது. தீண்டாமை ஒழிப்பிலும சாதித் தகர்ப்பிலும் உண்மையான அக்கறை உள்ள அரசியல் கட்சிகள் உடனடிப் பலன் பற்றிக் கவலைப்படாமல், ஆனால் உடனடிப் பலனுக்காக உழைப்பது போல முனைப்போடு தொடர்ச்சியாகச் செயல்படுவார்கள், செயல்பட வேண்டும். அந்தச் செயல்பாட்டில் ஆக்கப்பூர்வமான வழிமுறையும் கடைப்பிடிக்கப்படும், சாதிய சமரசங்களை அம்பலப்படுத்துகிற கடமையும் நிறைவேற்றப்படும். தங்களுடைய தலைமைகள் செய்வது சரிதானா என்ற நியாய சிந்தனையை தொண்டர்களிடம் கொண்டுசேர்ப்பதும் நடக்கும். மிக அடிப்படையாக மக்களிடையே சாதியம் பற்றிய சுயசோதனையை ஊக்குவிக்கும் பரப்புரை நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

ஒரு கட்டத்தில், மாற்றத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் சமுதாயத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது என்ற புரிதலுடன், இதுவரை சாதியத்தைத் தூக்கிப் பிடித்த கட்சிகள் அந்தப் போக்கை மாற்றிக்கொள்ளும் அல்லது தனிமைப்படும். ஒரு தனி மனிதர் சாதியத்திற்கு எதிராகத் தன்னை மாற்றிக்கொள்வது, ஒரு இயக்கம் தன்னை மாற்றிக்கொள்வது, அரசு அமைப்பு தன்னை மாற்றிக்கொள்வது, ஒட்டுமொத்த சமுதாயம் தன்னை மாற்றிக்கொள்வது –இவையெல்லாம் ஏதோ ஒரே இரவில், பொழுது புலர்வது போல நிகழ்ந்துவிடாது. இவையெல்லாமே போராட்டங்கள்தான்.

போராட்டங்களை இன்றைய சமூக அறிவியல் அடிப்படையில் புரிந்துகொண்டால், பிராமணியம் என்பது ஒரு சாதிப் பிரிவின் அடையாளமல்ல. அது மனிதர்களைப் பிறப்பால் பாகுபடுத்துகிற ஒரு சித்தாந்தம். அது எவரிடத்திலும் ஊடுருவியிருக்கக்கூடும். ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஒடுக்கப்பட்ட இன்னொரு பிரிவைச் சேர்ந்தவரைத் தாழ்வாகக் கருதுவாரானால் அவருடைய புத்தியில் ஏறியிருப்பது பிராமணியம்தான். அதே சமூக அறிவியல் அடிப்படையில் புரிந்துகொண்டால், தலித்தியம் என்பது ஒரு சாதிப்பிரிவின் அடையாளமல்ல. சாதியத்திற்கு எதிராகப் போராடுவதற்கு ஒன்றுபடுத்துகிற ஒரு சித்தாந்தம். அது எவரிடத்திலும் வேர்விட்டிருக்கக்கூடும். சாதியக் கோபுரத்தில் மேல் தட்டில் வைத்துக்கொண்ட ஒரு பிரிவைச் சேர்ந்த ஒருவர் தள்ளிவைக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களை சமமாகக் கருதுவாரானால் அவரது சிந்தனையில் தழைத்திருப்பது தலித்தியம்தான். இந்தத் தெளிவோடு போராட்டம் உருப்பெற வேண்டும்.

அந்த மாபெரும் வரலாற்றுப் போராட்டத்தில் நமது இடம் எங்கே, நாம் என்ன செய்யப்போகிறோம் – இந்த வினாக்களுக்கான விடை நம்மிடம்தான் இருக்கிறது.

[0]

(போராட்டம் தொடர்கிறது, தொடர் நிறைவடைகிறது)

முந்தைய தொடரை படிக்க – சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai)  – 14 | வீட்டுக்குள் ஆக்கிரமித்திருக்கும் ஆணவத்தை வெளியேற்ற – அ. குமரேசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *