இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம்

நாம் அனைவருமே ஓரே மாதிரியாகச் சிந்திப்பதில்லை செயல்படுவதும் இல்லை. நம் ஒவ்வொருவருக்கும் சிலத் தனிப்பட்ட திறமைகள் உண்டு. நம்முடைய தனிப்பட்ட திறமைகள் அதற்கான சூழ்நிலையில் தான் வெளிப்படும். ஆனால் நாம் அனைவருமே நம்முடையத் தனித்தனி திறமைகளைப் பற்றிச் சிந்திப்பதும் சுய மதிப்பீடு செய்வதும் இல்லை. சமூகத்தில் பொதுவான நியமனங்களின் அடிப்படையில் நம்மை நாமே சுயமதிப்பீடு செய்து அதற்குத் தக்கவாறு நமது நடவடிக்கைகளைச் செய்கின்றோம். நம்முடைய இந்த சுய மதிப்ப்பீடுகள்நம் அடிமனதின் ஆழத்திலிருந்து நம்மை அறியாமலே நமக்குள் இருக்கின்றது. நம்முடைய தன்னம்பிக்கை வளரவும் இந்த சுய மதிப்பீடு காரணமாக உள்ளது. மாணவர்களும் அப்படியே..

பொதுவாக நாம் அனைவருமே சுய மதிப்பீட்டை நமக்குள்ளே யே செய்து நம்மை நாமே எடைபோடவும் செய்கின்றோம். மாணவர்களும் அப்படியே. அவர்களின் மனதிற்குள் இருக்கும் சுய மதிப்பீட்டை வெளிக் கொணர்ந்து அவற்றைச் சீர் தூக்கி மேன்மைப் படுத்துவது இணைய வகுப்பறையில் ஒரு முக்கியமான அங்கம் ஆகும். சுய மதிப்பீடு என்பது பெரும்பாலும் உணர்வுகளோடு சம்பந்தப்படுத்தி விடுவதால், அவற்றை அலகுகள் வைத்து அளப்பது மிகச் சிரமம். ஒரு வகுப்பறை சூழல் இந்த சுயமதிப்பீட்டுத் திறனை மானவர்களுக்குக் கற்றுக் கொடுக்க ஏற்ற இடமாகும். அதுவும் இணைய வகுப்பறையில் மானவர்கள் தங்களின் உள்ளதில் உள்ளவற்றை வெளிப்படையாக மனம் திறந்து பேச வாய்ப்புக்கள் குறைவு. இணைய வகுப்பு மாணவர்களுக்குள் ஒரு தனிமை உணர்வை ஏற்படுத்துகின்றது. அதனால் அவர்கள் தங்களைப் பற்றிக் குறைவாக மதிப்பீடு செய்து ஒரு தாழ்வு மனப்பான்மையில் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளலாம்.அதனால் இணைய வகுப்பில் சுய மதிப்பீட்டுக் கலையை மாணவர்களுக்குப் பாடத்தின் ஒரு பகுதியாக்க கற்றுக் கொடுப்பது அவசியமாகின்றது.

மாணவர்கள் தங்கள் கற்றல் திறனையும் தங்களுடையத் தனித் திறனையும் சுயமாக மதிப்பீடு செய்து கொள்ளும் போது அவர்களின் கற்றல் கற்பித்தல் மேம் படுத்தப்பட்டு, அவர்களுடைய வாழ்வியல் கல்வியும் மெருகூட்டப்படுகின்றது. ஏட்டுக் கல்வியோடு மாணவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியையும் கொடுப்பது தான் இணையக்கல்வியின் ஒரு முக்கியமான கூறாகும். தங்களுடைய சுய மதிப்பீட்டை உயர்த்தி மாணவர்கள் அடையும் வெற்றி இணைய வகுப்பறையின் வெற்றி என்றே நாம் சொல்ல வேண்டும்.

ஒரு மாணவர் வகுப்பில் வெற்றி பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர் தனக்குத் தானே ஒரு சுய மதிப்பீட்டை நடத்திக் கொள்ளும் வகையில் கற்றல் கற்பித்தல் ஒரு வகுப்பில் இருக்க வேண்டும். நேரடி வகுப்பிலுமே மாணவர்களுக்கான சுய மதிப்பீடு அவசியம் என்றாலும், இணைய வகுப்பில் நடத்தப்படும் பாடத்தின் ஒரு அங்கமாக மானவர்களின் சுயமதிப்பீடு இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இணைய வகுப்பறையின் பாடத்தின் ஒரு அங்கமாக்க சுய மதிப்பீடு நடக்கும் போது மானவர்கள் பாடத்தில் உள்ள சந்தேகங்களை உடனுனுக்குடன அடையாளப்படுத்திக் கொள்ள அது உதவுகின்றது மாணவர்களின் சுயமதிப்பீடு அவர்களின் கற்றல் திறனையும் கற்கும் முறைகளையும் மேம்படுத்த உதவுகின்றது.சுய மதிப்பீடு என்பது என்ன?

கற்றல் கற்பித்தலின் ஒவ்வோரு பகுதியையும் ஒரு மாணவர் எவ்வாறு தன்னம்பிக்கையோடு செயல்படுத்துகின்றார் என்பதைப் பொறுத்து அவரது செயல்திறன்கள் இருக்கும். சுயமதிப்பீடு என்பது ஒரு மாணவர் தன்னைப் பற்றி , தனது கற்றல் திறன்களைப் பற்றிருந்த அளவு புரிந்து வைத்து இருக்கின்றார் என்பதைத் துல்லியமாக அளவிட உதவுவதாகும்.

எனக்குக் கணக்கு சரியாக வராதென்பது ஒரு பொதுவான கருத்து.

ஆனால்

கணக்கில் எது சரியாகச் செய்ய வராது?

கூட்டலா? கழித்தலா? பெருக்கலா? எண்ணின் அடிப்படைகளா ? என்று கணிதப் பாடத்தைத் தரம் பிரித்துக் கேள்விகள் கேட்கப்படும் போது, மாணவர்களும் கணக்கில் படும் சிரமங்களை வகைப் பிரித்துக் காண முடியும். கற்றல் கற்பித்தல் சூழலில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை அடையத் தேவையான திறன்கள் தன்னிடத்தில் உள்ளனவா என்பதை அலசி ஆராய்வது தான் சுய மதிப்பீட்டிற்கான முதல் அடிப்படை.

மாணவர்கள் தேர்விற்குத் தயாராவதாக இருக்கட்டும் அல்லது வகுப்பிற்குத் தயார் நிலையில் வருவதாகட்டும் மாணவர்களோடு சேர்ந்து ஒரு அணியாகச் செயல்படும் திறனாகட்டும் நேர மேலாண்மை ஊடக மேலாண்மை கல்விக்கான வளங்களின் மேலாண்மை என்று பலவித திறன்களை மாணவர்கள் தனித்தனியாக சுயமதிப்பீடு செய்யத் தெரிந்து இருக்க வேண்டும். சிலருக்கு வகுப்பில் குறிப்பு எடுப்பது, புத்தகங்களிலிருந்து குறிப்பு எடுப்பது கூட பிரச்சனையாக இருக்கலாம் சில மாணவர்களும் தேர்வு எழுதுவதில் பயம் இருக்கலாம். பல மாணவர்களுக்குப் படித்ததைப் புரிந்து கொள்ளவோ அல்லது நினைவு கூறுவதிலோ சிரமங்கள் இருக்கலாம்.

நாம் இன்னும் ஆழமாக யோசித்தோமேயானால் பல மாணவர்களுக்கு நான்கு புலன்களையும் பயன்படுத்திப் படிப்பது எவ்வாறு என்றே தெரிவதில்லை. கண்கள் வழி பாடஙளை மீண்டும் மீண்டும் படிப்பதையும் எழுதிப் பார்ப்பதையும் தவிர அவர்களுக்கு வேறு கற்றல் முறைகள் தெரியாமலே இருக்கலாம். மாணவர்களால் சுயமாகச் செய்ய முடியாத செயல்களையோ அல்லது அவர்கள் செய்யச் சிரமப்படும் காரியங்களையும் பற்றிய சுயமதிப்பீடு மாணவர்களுக்கு அவசிய.ம் நமது கலாச்சார சூழலில் ஒரு மாணவனோ மாணவியோ தன்னுடைய சுய மதிப்பீட்டை ஒரு பாதுகாப்பு உணர்வோடு செயல்படுத்தக் கூடிய இடம் வகுப்பறை மட்டுமே.நம் கலாச்சாரத்தில் வீட்டுச்சூழல் மாணவர்களை சுய மதிப்பீடு செய்வதற்குச் சரியான வாய்ப்புக்களை அமைத்துத் தருவதில்லை.. அவர்கள் தானாக முடிவெடுக்கும் வசதி மாணவர்களுக்கு பெரும்பாலும் மறுக்கப்படுகின்றது என்றே சொல்லலாம். பெற்றோர் சொல்வதைச் செய்ய மட்டுமே நம் மாணவர்களுக்கு அனுமதி உண்டு.இச்சூழலில் மாணவர்களின் சுய மதிப்பீட்டிற்கு என்று வகுப்பறையில் குறிப்பாக இணைய வகுப்பறையில் நேரம் ஒதுக்குவது அவசியம். மாணவர்களின் சுய மதிப்பீட்டிற்காக ஆசிரியர்கள் நேரம் ஒதுக்கும் போது, அந்த வகுப்பறையில் ஒரு நல்லிணக்கச் சூழல் ஏற்படுகின்றது. மானவர்களிடையே ஒத்துழைப்பு பெருகுகின்றது. மாணவர்கள் படிப்பிலும் வகுப்பிலும் ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்கின்றனர்.வகுப்பில் நடத்தக் கூடிய சுய மதிப்பீடு வழிகள்:

மாணவர்களின் மன நிலை: மாணவர்கள் பொதுவாக தங்கள் பெற்றோர் ஆசிரியர் சக மாணவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கின்றனரோ அதையே பிரதிபலிக்கின்றனர். அதனால் வகுப்பறையில் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்குதல் அவசியம். கணினியிலிருந்தும் அலைபேசிகளிலிருந்தும் விடுதலையேக் கிடைக்காத ஒரு சமுகச் சூழலுக்கு மாணவர்கள் இன்று தள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் கணினிகளையும் அலைபேசிகளையும் கல்விக்காக மட்டுமே பயன்படுத்தல் என்ற ஒரு சிறு கட்டுப்பாடே அவர்களுக்கு ஒரு வெற்றிகரமான மனநிலையைத் தரும்.எனவே அதற்கான ஒரு கல்விக் கொள்கையை ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து தயாரிக்கலாம்.அதே போல வகுப்பிற்குத் தயார் நிலையில் வருதல் என்பது மாணவர்களின் மனநிலையை உற்சாகமாக வைத்து இருக்கும். எனவே வகுப்பின் ஆரம்பத்திலாவது, நிறைவிலாவது மாணவர்களுக்குப் பாடப் பொருண்மை சார்ந்த கேள்விகள், சந்தேகங்களுக்குக் கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும். பாடப் பொருண்மையில் வரும் விவரங்களை மானவர்களின் திறன் வாரியாகப் பிரித்துக் கொடுத்தல் மாணவர்கள் வகுப்பிற்குத் தயார் நிலையில் வர அவர்களுக்கு உதவி செய்யும்.

சக மாணவர்களின் அனுபவம்; பொதுவாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் நமது கலாச்சாரத்தில் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதில் முன்னணியில் உள்ளன. அவை மட்டுமே போதாது.மாணவர்கள் எப்போதுமே மற்ற மாணவர்களிடமிருந்து மிக விரைவாகக் கற்றுக் கொள்கின்றனர். சக மாணவர்கள் அவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்க வாய்ப்புக்களை வகுப்பறையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முதலில் மாணவர்களின் எந்தெந்த திறன்கள் சுய மதிப்பீடு செய்ய வேண்டும் என்று தரம் பிரித்து மதிப்பீடு அலகீடுகளை நாம் கொடுக்க வேண்டும். அலகீடுகள் 1,2,3 என்று எண்களாகவோ, அலைபேசியிலும் உலாவியிலும் பயன்படுத்தப்படும் emoji-களாகவோ இருக்கலாம். பாடப் பொருண்மையில் கேள்வி கேட்காமல், அவர்கள் பாடத்தைப் பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொண்ட விதம், பாடப்பொருண்மையைப் புரிந்து கொண்ட விதம் பாடப் பொருண்மையின் தன்மை பற்றி மாணவர்களிடம் பின்னூட்டம் கேட்கலாம். 

பாட வகுப்பு வாரத்தில் மூன்று நாட்கள் என்றால் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையும் பாட வகுப்பு வாரத்தில் இரண்டு நாட்கள் என்றால் வாரத்திற்கு ஒரு முறையும் மாணவர்களுக்கு சுய மதிப்பீடு செய்ய வழி வகை செய்ய வேண்டும்.பல மாணவர்கள் தங்களைப் பற்றிய சுய மதிப்பீட்டைப் பொதுவில் வைக்கத் தயங்குவர். எனவே சுயமதிப்பீட்டு பின்னூட்டத்தை மின்னஞ்சல் மூலம் பெறலாம். சுய மதிப்பீட்டுப் பின்னூட்டங்களை புலனக் குழு வடிவில் பெறுவது ஒரு மாணவரின் அந்தரங்க மனநிலையை பொதுவில் பகிரச்செய்வது போல ஆகும் எனவே சுய மதிப்பீடு புலனக்குழுக்கள் வழி செய்வது சரியாக வராது. மின்னஞ்சலில் மூலம் பெறப்படும் சுய மதிப்பீடுகளின் இரகசியம் காக்கப்பட வேண்டும். 

ஏற்கனவே படித்து வெளி வந்த முன்னாள்  மாணவர்களை புதிய மாணவர்களோடு கலந்துரையாடல் செய்ய வைக்கலாம். ஏற்கனவே படித்து முடித்து வெளியேறிய மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்னோடியாக அமைவதோடு  சிறந்த வழிகாட்டியாகவும் ஆகலாம்..சிறுசிறு வெற்றியைத் தரக் கூடிய அனுபவங்கள் சமூகப் பொறுப்புணர்வு தரும் அனுபவங்கள் பாடப் பொருண்மையை ஒட்டிய அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை அலசுதல். ஆகியவற்றை மாணவர்களிடம் சுய மதிப்பீட்டுக்காக எடுத்துச்செல்லலாம்.. பாடப்பொருண்மையையும் தேர்வையும் தாண்டி யோசிக்கவும் தங்களுடைய சிரமங்களைச் சீர் தூக்கிப் பார்க்கவும் இத்தகையைச்செயல்கள் மாணவர்களுக்கு உதவும். அணி விளையாட்டுக்கள் மூலமாக நாம் எளிதாக சுய மதிப்பீட்டுப் பயிற்சியை மாணவர்களுடன் சேர்ந்து செய்யலாம், 

பாடப் பொருண்மையை மட்டும் சோதிக்காது,அடிப்படைத் திறன்களான, வாசித்தல் புரிந்து கொள்ளுதல், எழுதுதல் பேசுதல் எடுத்துச் சொல்லுதல், நேர மேலாண்மை ஊடக மேலாண்மை ஆகிய திறன்களை சுயமதிப்பீடு செய்ய வழி செய்ய வேண்டும்.. சுயமதிப்பீட்டின் அடுத்த கட்டமாக மாணவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளவும், முன்னேற்றிக் கொள்ளவும் வழிவகைகளைத் தேடித் தருவது ஆசிரியர்களின் பொறுப்பாகும். மாணவர்களுக்குத் தனித்தனியாக நேரம் ஒதுக்குவது ஒரு சிரமமாக இருக்கும் பட்சத்தில் மாணவர்களின் சுய மதிப்பீடு அவர்களுக்குச் சிறப்பாக உதவி புரியும்

தேர்வின் அடிப்படையில் நடத்தப்படும் பாடங்களுக்கு மத்தியில் இந்த சுய மதிப்பீட்டு வழிகள் தெரியாத காரணத்தால் பல மாணவர்கள் வகுப்பு முடிந்தவுடன் மாலையில் தனிப் போதனை நிலையங்களுக்குச் செல்கின்றனர். அங்குமே பாடங்கள் மீண்டும் நடத்தப்பட்டு கேள்விகள் கொடுக்கப்பட்டுத் தேர்விற்குத் தயாராகின்றனர் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாகப் படிப்பதனால் அவர்களின் நினைவுத் திறன் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாணவர்களின் திறனில் முன்னேற்றம் காணப்படுகின்றதா?

ஒருவர் ஒரு இசைக்கருவியைக் கற்றுக் கொள்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் என்று ஒருவருடம் பயிற்சி செய்தார் என்றால் ஒரு வருடம் கழித்து அவருடைய இசைத் திறமையையும், இசைக்கருவியைக் கையாளும் தன்மையும் எவ்வளவு மெருகு ஏறி இருக்கும் நம்முடைய மூளையும் ஒரு இசைக் கருவிப் போலத்தானே? பின் ஏன் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் செலவு செய்து படிக்கும் மாணவர்கள் அனைவருமே தேர்வுகளில் நூற்றுக்கு நூறு வாங்குவதில்லை.? காரணம் அவர்களுடைய சுய மதிப்பீட்டிற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.தொடர் 1: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்

 தொடர் 2: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்தொடர் 3: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்தொடர் 4

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்தொடர் 5

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்
தொடர் 6: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்தொடர் 7: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்தொடர் 8: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்தொடர் 9: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்

 தொடர் 10: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்தொடர் 11: 

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்