பாகுபாட்டு தர்மங்களும் வேறுபடுத்தும் விதிகளும் கேள்வியின்றி ஏற்கப்பட்டது ஏன்?
சாதி இருக்கும் வரை – 4
– அ. குமரேசன்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். எவ்வளவு பெரிய ஆளானாலும், எத்தனை உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டவரானாலும் அவர் ஆகாய உச்சியிலிருந்து வந்துவிடவில்லை. எவ்வளவு எளிய ஆளானாலும், எத்தனை தாழ்வான இடத்தில் வைக்கப்பட்டவரானாலும் அவர் மண்ணுக்கு அடியிலிருந்து வந்துவிடவில்லை. இயற்கையான உறவில் கருவாகி உருவாகி வந்தவர்கள்தான் ஒவ்வொருவரும்.
நிலம் தனிமனிதர்களின் உடைமையாக்கப்பட்டு, ஊர்கள் உருவாக்கப்பட்டு, ஆட்சி முறைகள் நிறுவப்பட்டதோடு இணைந்து, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் சமூகப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டார்கள். அவ்வாறு வகைப்படுத்துகிற வேலை கிட்டத்தட்ட 3,500 – 3.000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.அத்துடன் இணைந்ததாக இந்தியாவின் தொன்மையான பகுதிகளில், மனிதர்களுக்கு இரண்டு பிறவிகள் இருக்கின்றன, ஒரு பிறவி தாயின் வயிற்றிலிருந்து நிகழ்கிறது, இன்னொரு பிறவி, அனைத்தையும் படைத்த ஆண்டவனோடு ஐக்கியமாகி மோட்சத்தை அடைவதற்கான சடங்கைச் செய்கிறபோது நிகழ்கிறது என்ற கருத்துகள் புகுத்தப்பட்டன. அந்தச் சடங்கு நடந்ததற்கான சான்றாக மார்பில் பூணூல் அணிவிக்கப்பட்டது. அவர்கள் இருபிறப்பாளர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.
அந்தச் சடங்கை எல்லோரும் செய்துகொண்டு இரண்டாவது பிறவியை அடைய முடியுமா? முடியாது. தலைவர்களாகப் பொறுப்பேற்று, எதிரிகளோடு போரிட்டு நாட்டைக் காப்பாற்றுகிற வேலைகளைச் செய்கிறவர்களாகிய சத்திரியர்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, வணிகம் ஆகிய வேலைகளைச் செய்கிறவர்களாகிய வைசியர்கள், அந்த இரு பிரிவினருக்குமே ஆட்சி நிர்வாக நுட்பங்களையும் தொழில் சார்ந்த நுட்பங்களையும் கற்றுக்கொடுக்கிற, அந்தச் சடங்குகளைச் செய்துவைக்கிற வேலைகளைச் செய்கிறவர்களாகிய பிராமணர்கள் – ஆகிய இந்த மூன்று வகையினருக்கு மட்டுமே அந்தத் தகுதி உண்டு என்று நிறுவப்பட்டது. இந்த மூன்று பிரிவினருக்கும் தேவையான அடிமட்டப் பணிகளைச் செய்கிறவர்களாகிய சூத்திரர்களுக்கு ஒரே பிறவிதான் –அதாவது ஒற்றைப் பிறப்பாளர்களான அவர்கள் அடுத்த பிறவியில், முந்தைய மூன்று வகையினரின் வேலைகளைச் செய்வார்களானால், அவர்களுக்கும் இரட்டைப் பிறவி வாய்க்கும்.
இந்த ஏற்பாட்டை இறுதிப்படுத்தும் வகைப்பாடாக ‘வர்ணாஸ்ரம தர்மம்’ வகுக்கப்பட்டது. அந்தத் தர்மத்தின்படி, சமுதாயக் கோபுர அமைப்பின் முதல் அடுக்கில் பிராமணர்கள் தங்களை வைத்துக்கொண்டார்கள். இறைவனோடு தொடர்புகொள்ளும் அருள் பெற்றவர்கள், இரண்டாவது பிறவிக்கான சடங்குகளைச் செய்யும் தகுதி உடையவர்கள் தாங்களே என்று அறிவித்தார்கள். இரண்டாவது அடுக்கில் சத்திரியர்களும் மூன்றாவது அடுக்கில் வைசியர்களும இருந்துகொள்ள உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது . அரசை நிர்வகிப்பது, போர்க்களம் செல்வது, எதிரிகளோடு மோதுவது சத்திரியர் வேலை. பயிர் விளைவிப்பது, கால்நடைகளை மேய்ப்பது, வணிகம் செய்து பொருள் சேர்ப்பது வைசியர் வேலை.
தங்களுக்கு முதலடுக்கில் இடமில்லை என்ற போதிலும், தங்களின் அரசாங்க அதிகார ஆளுமைக்கோ, வணிக ஆதாயக் குவிப்புக்கோ தடையில்லை என்ற காரணத்தால் இந்த ஏற்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த ஏற்பாட்டைத் தொடர்வதற்கான உத்தரவாதம் அந்த அடுக்குகளில் இருப்பதாலும் இதை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
நான்காவது அடுக்கில் வைக்கப்பட்ட சூத்திரர்களுக்கு அந்தச் சடங்குகளைச் செய்துகொள்ளும் உரிமை இல்லை. அவர்கள் பூணூல் அணிய அனுமதியில்லை. மாறாக, ஒட்டுமொத்த சமுதாயத்தின் முதுகெலும்பாகிய பொருளாதாரத்தை உறுதிப்படுத்த உழைப்பதே அவர்களுடைய கடமை என்றாக்கப்பட்டது. அந்தக் கடமையை முறையாக நிறைவேற்றினால் அடுத்த பிறவியில் தகுதி கிடைக்கும்! அந்த நம்பிக்கையோடும் கனவோடும் அவர்கள் சத்திரியர்களின் அரண்மனையில் வேலைக்காரர்களாக, வைசியர்களின் நிலத்தில் உழுகிறவர்களாக, அந்த வேலைகளுக்கான கருவிகளைத் தயாரிப்பவர்களாக உழைத்தார்கள்.
இதிகாசங்களின் இன்னொரு பக்கம்
இந்த ஏற்பாட்டை ஏற்காவிட்டால் தண்டனைகள் விதிக்கப்பட்டன. அந்தத் தண்டனைகளை உறுதிப்படுத்தும் சட்டங்கள் வகுக்கப்பட்டன. மனமுவந்து அந்த வேலைகளைச் செய்கிறபோது மோட்சத்திற்கான பாதை திறக்கப்படும் என்ற கதைகள் புனையப்பட்டன. அத்தகைய கதைகளோடும், சடங்குகளுக்கான மந்திரச் செய்யுள்களோடும் வேதங்கள் வகுக்கப்பட்டன. உலக அளவிலேயே ஒப்பிட முடியாத பெருமைகள் வாய்ந்த இந்திய இலக்கிய வளங்களாக உள்ளவை மகாபாரதம், ராமாயணம். அந்த இதிகாசங்களில் எந்த அளவுக்கு அரசியல், சமூக, வாழ்க்கை நிலைகள் நுணுக்கமாகச் சொல்லப்பட்டுள்ளனவோ (இன்றளவும் மகாபாரதத்திலிருந்தும் ராமாயணத்திலிருந்தும் வழிகாட்டல் கதைகள் எடுத்துக்காட்டப்படுகின்றன அல்லவா?), அதே அளவுக்கு இந்த விதிகளைக் கேள்வி கேட்காமல் ஒப்புக்கொள்ள வேண்டுமென்ற போதனைகளும் இருக்கின்றன. மகாபாரதத்தில் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட ஏகலைவன் கதையும், ராமாயணத்தில் தலையே வெட்டப்பட்ட சம்புகன் கதையும் இந்தப் போதனைகளைப் புகட்டுபவைதான்.
இது தொடர்பாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது: தொடக்கத்தில் இப்படிப்பட்ட வேலைப் பிரிவினைகள் மட்டுமேதான் வர்ணப் பிரிவினைகளாக இருந்தன, அதில் உயர்வு தாழ்வு இல்லை. ஆகவே ஒருவர் தான் தேர்ந்தெடுக்கும் வேலைகளின் அடிப்படையில் அதற்குரிய வர்ணத்தோடு இணைந்துகொள்ளலாம். அதாவது, பிறந்து வளர்ந்த பிறகு ஒருவர் சடங்கு முறைகளைக் கற்றுக்கொண்டு செய்துவைப்பார் என்றால் அவர் பிராமணராகிவிடுவார், எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவார் என்றால் சத்திரியராகிவிடுவார், வணிகத்தில் ஈடுபடுவார் என்றால் வைசியராகிவிடுவார், அரண்மனையிலும் நிலத்திலும் வேலை செய்வார் என்றால் சூத்திரராகிவிடுவார் – இப்படித்தான் அப்போது இருந்தது.
காலப்போக்கில், பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாக இது மாறியது. பிராமணருக்குப் பிறந்தவர் பிராமணர், சத்திரியருக்குப் பிறந்தவர் சத்திரியர், வைசியருக்குப் பிறந்தவர் வைசியர், சூத்திரருக்குப் பிறந்தவர் சூத்திரர் என்று கட்டமைக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்பிலிருந்து, அந்தந்த வட்டாரத்தையும் வாழ்க்கைச் சூழலையும் பொறுத்து குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாகப் பெயர்கள் சூட்டப்பட்டன.
இந்தக் கருத்தை மறுத்து, வர்ணப் பிரிவினையே பிறப்பின் அடிப்படையில் தகுதிகளையும் கடமைகளையும் வரையறுப்பதற்காகச் செய்யப்பட்ட சமூகப் பிரிவினை ஏற்பாடுதான் என்ற வாதமும் வலுவாக முன்வைக்கப்படுகிறது. இந்த வாதங்களை முன்வைக்கிற இரு தரப்பினருமே, வர்ண வகைப்பாட்டோடு சாதியப் பாகுபாடு கலந்திருப்பதை மறுக்கவில்லை. தொடரும் ஆய்வுகள் இதுதொடர்பான உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கலாம்.
வர்ணக் கோபுரத்தில் சேர்க்கப்படாதவர்கள்
எவ்வாறாயினும், சாதியில் உயர்வு தாழ்வுக் கோட்பாடுகளை இடைநிலை, அடிநிலைப் பிரிவுகள் ஏற்றுக்கொண்டதன் பின்னணியில் அரசியல் அதிகாரமும், ஆன்மீகச் சதிகளும் இருந்தது புலனாகிறது. பிராமணிய விதிகளை சத்திரியர்களும் வைசியர்களும், சூத்திரர்களும் ஏற்றுக்கொண்டது இப்படித்தான் என்று புரிகிறது.
வர்ணக் கோபுரத்தின் இந்த நான்கு அடுக்குகளிலும் சேர்க்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். இந்த நான்கு பிரிவினருக்கும் தேவைப்படும் பணிகளை அவர்கள் செய்ய வைக்கப்பட்டார்கள். ஏற்கெனவே பார்த்தது போல, கழிவுகளை அகற்றுவது, ஊரைத் துப்புரவு செய்வது, துணிகளை வெளுப்பது, முடி வெட்டுவது உள்ளிட்ட வேலைகள் அவர்களின் மீது சுமத்தப்பட்டன. நிலங்கள் கைப்பற்றப்பட்டபோது அந்தப் பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பூர்வகுடிகள், இப்போது இந்த வேலைகளுக்காகத் திரும்பவும் வரவழைக்கப்பட்டார்கள். காடுகளில் சுதந்திரமாகத் திரிந்தவர்களும், சண்டைகளில் தோல்வியடைந்தவர்களும் அடிமைகளாகப் பிடித்துவரப்பட்டு இந்த வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
இந்த வேலைகள் எல்லாம் தூய்மைக்கேடானவை, ஆகவே புனிதம் இல்லாதவை, ஆகவே இந்த வேலைகளைச் செய்கிறவர்களும் புனிதமற்றவர்கள் என்று விதிக்கப்பட்டது. புனிதமற்றவர்களின் கைகள் உயர்பிறவியினரின் மீது பட்டுவிட்டால் அவர்களுடைய தூய்மையும் புனிதமும் மாற்றுக் குறைந்துவிடும், எனவே தூய்மையற்றவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற கோட்பாடுகளால் ஒதுக்கப்பட்டார்கள். ஏற்க மறுத்தால் கசையடி உள்ளிட்ட தண்டனைகளால் ஒடுக்கப்பட்டார்கள்.
கலகங்களும் சமரசங்களும்
காலங்காலமாக இப்படிப்பட்ட பிரிவினைகளையும் பாகுபாடுகளையும் கேள்வி கேட்காமல ஏற்றுக்கொள்வார்களா என்ன? கேள்வி கேட்டவர்கள் வந்தார்கள்.. ஏற்க மறுத்தார்கள். எதிர்த்துக் கிளம்பினார்கள். பாகுபாடுகளைப் பாடங்களாகப் போதித்த, இன்றைய இந்து மதத்தின் முன்னாள் அவதாரங்களான சனாதனம், வைதீகம், ஆரியம், பிராமணியம் ஆகிய தத்துவங்களையும் அமைப்புகளையும் எதிர்த்து புத்தரின் பௌத்தம், தீர்த்தங்கரரின் சமணம் உள்ளிட்ட இயக்கங்கள் தோன்றின. பின்னாளில் அந்த இயக்கங்களே மதங்களாக நிறுவப்பட்டன.
துணைக்கண்டத்தின் தென்பகுதியில் – ஆம், தமிழ் மண்ணில்தான் – வேற்றுமைகள் இருந்தாலும் பாகுபடுத்தி வைக்காத மக்கள் வாழ்ந்தார்கள். பேரரசர்களின் ஆட்சிகளில் வைதீகக் கோட்பாடுகள் அரண்மனை ஆதரவோடு ஊன்றப்பட்டன.
வரலாற்றின் இந்த நிகழ்ச்சிப் போக்குகளுக்கு இடையே, பல்வேறு பிரிவினரின் எதிர்ப்பைச் சமாளிக்கும் நோக்கத்துடன் அவர்களது வழிபாடுகளையும் வாழ்க்கை முறைகளையும் இணைத்துக்கொள்வது உள்ளிட்ட சமரச முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்து என அடையாளப்படுத்தப்படும் மக்களுக்கிடையே காணப்படும் பன்முகத் தன்மைக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.
இந்து என்ற பெயர்
இந்தியத் துணைக்கண்டத்திற்கு வணிகத்திற்காக வந்த பிரிட்டிஷ்காரர்கள் இங்கே பரவியிருந்த பாகுபாட்டு அவலங்களைப் புரிந்துகொண்டு சிரித்தார்கள். பல மன்னர்களைத் தங்கள் பக்கம் இழுத்தார்கள். மசியாத மன்னர்களை வீழ்த்தினார்கள். தனித்தனி நாடுகளாக வெவ்வேறு ஆட்சிப் பகுதிகளாக இருந்தவற்றையெல்லாம் இந்தியா என ஒரே நாடாக, ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமான ஆட்சியாளர்களாகவே மாறினார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்தான், முந்தைய மதப் பிரிவுகளுக்கு இந்து என்று பெயர் சூட்டினார்கள்.
இந்து என்ற பெயர் எப்படி வந்தது? பாரசீகத்திலிருந்தும் கிரேக்கத்திலிருந்தும் ஆய்வு நோக்கங்களுடன் வந்த பயணிகள், இங்கே இருப்பவர்கள் சிந்து நதிக்கு அப்பால் வாழும் மக்கள் என்ற பொருளில், அவர்களுடைய மொழியில் ஹிந்து மக்கள் என்று குறிப்பிட்டார்கள். நாளடைவில் ஹிந்து என்பது மதத்தின் பெயரானது. முந்தைய தத்துவங்களும் சமூக விதிகளும் வாழ்க்கை முறைகளும் சேர்ந்து ஹிந்துத்துவம் என அடையாளம் பெற்றன. தமிழ் மொழி மரபுப்படி இந்து என்றும் இந்துத்துவம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஆக, இந்து என்றால், இந்துத்துவம் என்றால் மக்களைப் பிறப்பால் பாகுபடுத்தும் கோட்பாடு உள்ளடங்கியிருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு இங்கே முன்பு பல விரிவான பேரரசுகள் இருந்திருக்கின்றன, முகலாய ஆட்சி நடந்திருக்கிறது, பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியும், புதுச்சேரி உள்ளிட்ட பகுதியில் பிரெஞ்சு ஆட்சியும், கோவா பகுதியில் டச்சு ஆட்சியும் நடந்திருக்கின்றன. அத்தனை ஆட்சிகளிலும், ஏற்கெனவே அரண்மனைத் தொடர்புகளோடும் கல்வியறிவோடும் இருந்தவர்களான பிராமண சமூகத்திலிருந்து வந்தவர்கள் தங்களின் இடங்களைத் தக்க வைத்துக்கொண்டார்கள்.
ஒரு திரைப்படம் நினைவுக்கு வருகிறது. ஊரில் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிற பல்வேறு சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடன், மக்களிடமிருந்து நிதி திரட்டி ஒரு கோவில் கட்டப்படுகிறது. கோவில் கட்டுமான வேலைகள் அனைத்திலும் அந்த ஊரின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தங்களின் உடல் உழைப்பை வழங்குவார்கள். கட்டுமானம் முடிந்து கோவில் திறப்பு விழா நடக்கிறது. அதற்கான சடங்குகளையும், கோவில் கருவறைப் பூசையையும், அதுவரையில் காட்சிகளில் வராத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய உடல்–உடை தோற்றங்களுடன் செய்துகொண்டிருப்பார்கள். “இவர்கள் எங்கேயிருந்தப்பா வந்தார்கள்,” என்று கேட்டார் என்னோடு சேர்ந்து படம் பார்த்த நண்பர். அவர் பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவர். அந்தச் சமூகத்திற்குள் நிகழும் அசைவுகளுக்கு ஒரு சாட்சி.
முகங்களின் கலவை
ஆலயங்கள் மட்டுமில்லாமல், அரசு அலுவலகங்கள், வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் ஆகியவற்றிலும் அலுவலர்களாகக் குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்தவர்களை மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை இருந்தது.
விடுதலைப் போராட்டக் காலத்தில் சுயமரியாதை இயக்கங்களும் பொதுவுடைமை இயக்கங்களும் ஒதுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களும் தேசிய இயக்கத்திலேயே கணிசமான பிரிவினரும் கொடுத்த அழுத்தங்களால், பிரிட்டிஷ் அரசுக்கு ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்கான வேலைவாய்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆட்சியதிகாரிகளில் ஒரு பகுதியினருக்கு இருந்த கண்ணோட்டமும் கூட இதற்கொரு காரணம்தான். மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வந்த கிறிஸ்துவ ஊழியர்களில் ஒரு பகுதியினர், இங்கிருந்த சமூகப் பாகுபாடுகளுக்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களின் திருச்சபை செல்வாக்கைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் ஆட்சியை வலியுறுத்திய அத்தியாயமும் வரலாற்றில் உண்டு.
விடுதலை பெற்ற இந்தியாவில், தொடக்கத்தில் பட்டியல் சாதியினருக்கும் பட்டியல் பழங்குடியினருக்கும், பின்னர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. சமூக நீதியை நிலைநாட்டுவதன் ஒரு பகுதியான இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக, முதலில் கூறிய அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களின் முகங்களை – எளிமையாகச் சொல்வதென்றால் கறுப்பு முகங்களை – இன்று இயல்பாகக் காண முடிகிறது. கோவில்களில், பிற சாதியினர் அர்ச்சனை செய்ய முடியும் என்ற மாற்றத்தைத் தமிழகமும் கேரளமும் சாதித்துக் காட்டியுள்ளன.
இத்தனைக்குப் பிறகும் தலை விரித்தாடுகிறது சாதி. கொலை விரித்தாடுகிறது என்று சொல்லக்கூடிய அளவுக்கு சாதி ஆணவம் வெறியேறிக் கிடக்கிறது. சமூக வாழ்வின் எல்லாக் கூறுகளிலும் சாதி இழையோடுகிறது. நன்கு படித்து வெளிநாட்டில் மிகப் பெரிய சம்பளத்தில் வேலை செய்கிறவர் தனக்கான வாழ்க்கை இணை தனது சாதிப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று தேடுகிறார். “உங்கள் சாதியிலேயே வரன் பார்த்துத் தரப்படும்” என்று கல்யாண மார்க்கெட் குழுமங்கள் விளம்பரம் செய்கின்றன. சாதிச் சங்கங்களின் முக்கியமான பணிகளில் ஒன்று, அந்தந்தச் சாதிக்குள்ளேயே மணமக்களைச் சேர்த்துவைப்பதுதான். கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அவ்வளவு அக்கறை!
இதற்கெல்லாம் முடிவு வருமா? எப்போது வரும்? எப்படி வரும்? இவற்றைப் பற்றிப் பேச மீண்டும் சந்திப்போம்.
முந்தைய தொடரை படிக்க – சாதி இருக்கும் வரை (Sathi Irukkum Varai) – 3 | இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதி பற்றிப் பேசுவீர்கள்? – அ. குமரேசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.